மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/012
11. சங்க காலத்து நகரங்கள்[1]
1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினம்
கடைச்சங்க காலத்தில் சோழநாட்டின் தலைநகரம் உறையூராகவும் அதன் முக்கிய துறைமுகப்பட்டினம் காவிரிப்பூம்பட்டினமாகவும் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் எவ்வாறு இருந்தது என்பதை இங்கு ஆராய்வோம்.
காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர்கள் உள்ளன. காகந்தி என்றும் சம்பாபதி என்றும் வேறு பெயர்களும் உண்டு. பாலி மொழியில் எழுதப்பட்ட மிகப் பழமையான புத்த ஜாதகக் கதைகளிலே அகித்தி ஜாதகத்தில் இந்தப் பட்டினம் டமிள நாட்டுக் கவீரபட்டணம் என்று கூறப்படுகிறது. (டமிள நாடு - தமிழ் நாடு) போதிசத்துவராகிய புத்தர், தமது பழம் பிறப்பிலே அகித்தி முனிவராகப் பிறந்து காவிரிப்பூம் பட்டினத்திலே ஒரு தோட்டத்திலே தங்கித் தவஞ் செய்திருந்தார் என்று அதில் கூறப்படுகிறார். கி.மு. முதல் நூற்றாண்டிலே இலங்கையை அரசாண்ட கமுனு (துட்டகைமுனு) என்னும் அரசனுடைய மனைவி, அவளுடைய முற்பிறப்பிலே காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு கப்பல் தலைவனுடைய குடுத்பத்தில் பிறந்திருந்தாள் என்று கூறப்படுகிறாள். இலங்கை நாட்டிலே வழங்குகிற இரசவாகினி என்னும் நூலிலே, காவிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்தப் பள்ளிகள் கூறப்படுகின்றன. பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலாசிரியர் காவிரிப்பூம்பட்டினத்தைக் 'கமரா' என்று கூறுகிறார். டாலமி என்னும் யவனர் இப்பட்டினத்தை 'கபேரிஸ் எம்போரியன்' என்று எழுதியிருக்கிறார்.
இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு, காவிரிப்பூம் பட்டினம் உலகப் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று. கீழ் நாடுகளிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்த அயல் நாட்டுக் கப்பல் வாணிகர் சந்திக்கும் இடமாக இப்பட்டினம் இருந்தது. அவர்களில் குறிப்பிடத் தக்கவர் யவனர் எனப்படும் கிரேக்கர் ஆவர். புகார் நகரத்துக் கப்பல் வாணிகர் இங்கிருந்து கப்பல்களில் பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஈழம் (இலங்கை), சாவகம் (ஜாவா முதலிய கிழக்கிந்தியத் தீவுகள்), காழகம் (பர்மா தேசம்), கடாரம் (மலாய தேசம்) முதலிய நாடுகளில் சென்று வாணிகம் புரிந்தனர்.
சீகாழிக்குத் தென்கிழக்கே ஒன்பது மைல்தூரத்திலே காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்திலே பேர்போன காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. அப்பட்டினம் இப்போது சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது.
கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் காவிரிப்பூம்பட்டினம் எவ்வாறு இருந்தது என்பதைச் சங்ககாலத்து நூல்களில் இருந்து ஆராய்வோம்.
கீழ்க்கடல் என்றும் குணகடல் என்றும் தொடுகடல் என்றும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த இப்போதைய வங்காள குடாக்கடலில், காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர்முகத்தில், காவிரி ஆற்றுக்கு வடகரையில் புகார்ப் பட்டினம் அமைந்திருந்தது. காவிரி ஆற்றின் புகர் முகத்தில் அமைந்திருந்தபடியால், இப்பட்டினத்துக்குப் புகார்ப்பட்டினம் என்றும் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர்கள் அமைந்தன.
இந்த நகரத்தின் சுற்றளவு நான்கு காதம் என்று கூறப்படுகிறது.
'பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்'.
என்று சிலப்பதிகாரம் (5ஆம் காதை 131 - 134) கூறுவதிலிருந்து இப்பட்டினம் நான்கு காத சுற்றளவிருந்தது என்பது பெறப்படுகின்றது.
('காத நான்கும் -ஊர் சூழ்ந்த நாற்காத வட்டகையும்' என்பது அரும்பதவுரையாசிரியர் உரை. 'காத நான்கும் என முற்றும்மை கொடுத்தலானே ஊர் நாற்காத வட்டகை என்பது உணர்க்’. அடியார்க்கு நல்லார் உரை.)
காதம் என்பது ஏறக்குறை பத்து மைல். புகார் நகரம் நாற்காத வட்டகையாக இருந்தது என்பதனாலே அது நாற்பது மைல் சுற்றளவுள்ளது என்பது பெறப்படுகிறது. இப்பட்டினம் நீண்ட சதுரமாக அமைந்திருந்தது என்பதைச் சிலப்பதிகாரம், 5வது காதையிலிருந்து குறிப்பாக அறிகிறோம். கிழக்கு மேற்காக நீண்டும், வடக்குத் தெற்காக அகன்றும் இப்பட்டினம் அமைந்திருந்தது.
மணல் பரந்த கடற்கரை, நெய்தலங்கானல் என்று பெயர் பெற்றிருந்தது. நெய்தலங்கானலுக்கு மேற்கே காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. இப்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு கூறாக இருந்தது. மருவூர்ப் பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் இடை நடுவே ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இந்தத் தோட்டத்தில் பகல் வேளையில் பண்டங்கள் விற்கப்பட்டன. ஆகவே இந்த இடம் நாளங்காடி என்று பெயர் பெற்றிருந்தது.
இனி, இப்பட்டினத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே பார்ப்போம்.
நெய்தலங்கானல்
இது கடற்கரையைச் சார்ந்த மணல் பரந்த இடம். நெய்தலங்கானலில் சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் இரண்டு குளங்களும் காமவேள் கோவிலும் இருந்தன. இந்தக் குளங்களில் நீராடிக் காமவேளை வழிபடும் மங்கையர் இம்மையில் கணவனைப் பெற்று இன்பந் துய்த்துப் பின்னர் மறுமையில் போகபூமியில் போய்ப் பிறப்பார்கள் என்று அக்காலத்துப் புகார்ப் பட்டினத்து மக்கள் நம்பினார்கள்.
'கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள
சோம குண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியிலும் போய்ப் பிறப்பர்'
என்று சிலம்பு (9ஆம் காதை 57-62) கூறுகிறது.
நெய்தலங்கானலில் இருந்த சோமகுண்டம் சூரிய குண்டங்களை, 'இருகாமத்து இணை ஏரி' என்று பட்டினப்பாலை கூறுகிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதை இவ்வாறு விளக்குகிறார்.'இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காமவின்பத்தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகள். இனி, வளகாமரேரி, வணிகாமரேரி என்றும் சங்கிராமகாமம் வணிக்கிராமகாமம் என்றும் உரைப்ப”.
காவிரிப்பூம் பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நிகழ்ந்த இந்திர விழாவின் இறுதியில் நகர மக்கள் இந்த நெய்தலங்கானலுக்கு வந்து எழினிகளால் அமைந்த கூடாரங்களில் தங்கிக் கடலில் நீராடிச் செல்வது வழக்கம் என்று சிலம்பு, கடலாடு காதையினால் அறிகிறோம்.
மருவூர்ப்பாக்கம்
கடற்கரையாகிய நெய்தலங்கானலை அடுத்துப் புகார்ப்பட்டினத்தின் ஒரு பகுதியாகிய மருவூர்ப்பாக்கம் இருந்தது. மருவூர்ப்பாக்கத்தின் தெற்கே காவிரிக் கரையில், துறைமுகமும் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களை வைக்கும் பண்டகசாலையும் இருந்தன.
மருவூர்ப்பாக்கத்தில் மீன் பிடிக்கும் பரதவர், கப்பலோட்டிகள், உப்பு வாணிகர், தச்சர், கருமார், கன்னார், பொற்கொல்லர்; பாணர், கூல வாணிகர் முதலியோர் குடியிருந்தனர். அக்காலத்தில் தமிழ்ச் சமூகம் சிறுகுடி என்றும் பெருங்குடி என்றும் இது பெரும் பிரிவாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இப்பிரிவு, நகரங்களிலே சிறப்பாக இருந்தது. சிறுகுடி என்பது செல்வந்தர் அல்லாத சாதாரண மக்களும் தொழிலாளரும் அடங்கிய பிரிவு. மருவூர்ப்பாக்கத்தில் வசித்தவர் சிறுகுடி மக்களாகிய தொழிலாளரும் சாதாரண மக்களுமாவர்.
மருவூர்ப்பாக்கத்தில் வசித்திருந்தவர்களைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது:
'பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த வூன்மலி இருக்கையும்
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொஃறச்சருங் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்
துன்ன காரரும் தோலின் றுன்னரும்
கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினுங் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன்மரபில் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்’(இந்திரவிழவூரெடுத்த காதை, 22-39)
இதனால் மருவூர்ப்பாக்கத்தில் தொழிலாளர் முதலிய சிறுகுடி மக்கள் இருந்தனர் என்பது தெரிகின்றது. மருவூர்ப்பாக்கத்திலேதான் சோழமன்னனுடைய படை வீரர்களும் இருந்தார்கள். இதனை, 'மருவூர் மருங்கின் மறங்கொள் வீரர்' என்று சிலம்பு 5ஆம் காதை 76ஆம் அடியினால் அறிகிறோம்.
அன்றியும் வெளிநாடுகளில் இருந்து கப்பல் ஓட்டிக்கொண்டு புகார்த் துறைமுகத்துக்குவந்த மாலுமிகள் - யவனர் முதலியோர், மருவூர்ப் பாக்கத்தின் தென் பகுதியில் துறைமுகத்துக்கு அருகில் தங்கியிருந்தனர் என்பதும் தெரிகின்றது. இதனை,
'கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’
என்றும், (சிலம்பு - இந்திரவிழவூர் 9-12)
‘மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும்
என்றும், (சிலம்பு -கடலாடு 143ஆம் அடி) கூறுவதிலிருந்து அறிகிறோம். இதனையே,
'மொழிபல பெருகிய பழிதீர் தேஏத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்'
என்று பட்டினப்பாலை (216-218) கூறுகின்றது.
பட்டினப்பாக்கம்
மருவூர்ப்பாக்கத்துக்கு மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் முக்கிய பகுதி இதுவே. இப் பட்டினப்பாக்கத்தைச் சூழ்ந்து நாற்புறமும் நன்னீர் அகழி இருந்தது. பட்டினப்பாக்கத்தின் தெற்கே காவிரி ஆறும், மற்ற மூன்று பக்கங்களிலும் அகழியாகிய கிடங்கும் இருந்தன. அகழிக்கு உட்புறத்தில் கோட்டை மதிலும், சோழ மன்னனுடைய அரண்மனையும், நகர மக்கள் வாழ்ந்த வீதிகளும், அரண்மனைக்கு எதிரிலே இரண்டு பக்கத்திலும் தருநிலை, வச்சிர நிலை என்னும் இரண்டு கோட்டங்களும் இருந்தன.
இதனை மணிமேகலை (5ஆம் காதை 109-118 அடிகள்) நன்கு விளக்குகின்றது.
'புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நன்னீர் அகழிப்
புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை
வாயின் மருங்கியன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனவிரு கோட்டம்
எதிரெதிர் ஓங்கிய கதிரிள வனமுலை
ஆர்புனை வேத்தற்குப் பேரள வியற்றி
யூழி யெண்ணி நீடுநின் றோங்கிய
ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி’
என்னும் அடிகளினால் இதனை அறிகிறோம்.
இதனால், சோழ மன்னனுடைய அரண்மனை உயரமான பெரிய கட்டடமாகவும், அதற்கு எதிரிலே இரண்டு பக்கத்திலும் இருந்த தருநிலை, வச்சிரநிலை என்னும் கோட்டங்கள் அரண்மனையைவிடச் சிறிய கட்டடங்களாகவும் இருந்தன என்பது தெரிகின்றது. (சங்க காலத்திலே கோவில் கட்டடங்கள் அரண்மனைகளை விடச் சிறியவாக இருந்தன. பிற்காலத்திலே தான் கோவில் கட்டடங்கள் உயரமாக அமைக்கப்பட்டன.)
பூம்புகார் நகரத்தின் கோட்டை வாயில் உயரமாகவும், மேற்புறம் மகர உருவம் உள்ள சிற்பம் அமைந்ததாகவும் இருந்தது என்று பரணர் என்னும் புலவர் (அகம் 181-ஆம் செய்யுள்) கூறுகிறார்.
'மகர நெற்றி வான்றோய் புரிசைச்
சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில்
புகாஅர் நன்னாடு'
என்பது அச்செய்யுள் வாசகம்.
நகர மக்களின் போக்குவரத்துக் குரியதாக இருந்த இந்தக் கோட்டை வாயிலை, 'மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக இடைகழி' என்று சிலப்பதிகாரம் (நாடுகாண் 26-27) கூறுகிறது. கோட்டை வாயிலின் கதவிலே சோழ மன்னனுடைய அடையாளமாகிய புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததைப் பட்டினப்பாலை கூறுகிறது.
'புலிப் பொறிப் போர்க் கதவிற்
திருத் துஞ்சும் திண்காப்பு
என்று கூறுகிறது.
பட்டினப்பாக்கத்திலே, சோழ மன்னனுடைய அரண்மணை, காவிரி ஆற்றின் வடகரையிலே இருந்தது. அரண்மனையைச் சார்ந்து இராசவீதியும் பெருநிலக்கிழார் பெருங்குடி வாணிகர் தெருக்களும் பீடிகைத் தெருக்களும் அமைச்சர் படைவீரர் மறையோர் முதலியவர் வாழ்ந்திருந்த தெருக்களும் இருந்தன. பட்டினப்பாக்கத்திலே பெருங்குடி மக்களான செல்வந்தர் வாழ்ந்தனர். (மருவூர்ப்பாக்கத்தில் சிறுகுடி மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை முன்னமே கூறினோம்) கணிகையரில் சிறுதனக்கணிகையர் மருவூர்ப் பாக்கத்திலும் பெருந் தனக்கணிகையர் பட்டினப்பாக்கத்திலும் இருந்தனர். சிறுகுடியினராகிய போர்வீரர் மருவூர்ப் பாக்கத்திலும், படைத்தலைவராகிய பெருங்குடிமக்கள் பட்டினப்பாக்கத்திலும் வாழ்ந்திருந்தார்கள். இதனை,
'கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி யுழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ
டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதாளிக ரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயிறொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும்
பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கம்.'
என்று சிலம்பு (இந்திரவிழவூர் 40-58) கூறுகிறது.
பட்டினப்பாக்கத்திலே பல சமயத்தாருக்கும் கோவில்கள் இருந்தன. திருமால் கோவிலாகிய மணிவண்ணப் பெருமாள் கோவிலும், சிவ பெருமான் கோவிலாகிய ஊர்க்கோட்டமும், முருகனுடைய வேற் கோட்டமும், பௌத்தர்களின் இந்திர விகாரைகளும், ஜைனரின் சினகரமும், இந்திரன் கோட்டங்களும் ஏனைய கோவில்களும் இருந்தன.
“பிறவாயாக்கைப் பெரியோன் கோவிலும்
ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்
வாள்வளை மேனி வாலியோன் கோவிலும்
நீலமேனி நெடியோன் கோவிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோவிலும்”
(சிலம்பு - இந்திரவிழவூர் 169 - 173)
'அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்' (சிலம்பு - கனாத்திறம் 9-13)
என்று புகார்ப்பட்டினத்திலிருந்த கோவில்களைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
(அமரர் தருக்கோட்டம் - தருநிலை. கற்பக மரம் நிற்கும் கோவில். வெள்ளையானைக் கோட்டம் ஐராவதம் நிற்கும் கோவில். புகர் வெள்ளை நாகர் கோட்டம் - அழகிய பலராமர் கோவில். உச்சிக்கிழான் கோட்டம் - சூரியன் கோவில். ஊர்க்கோட்டம் - கயிலாயநாதனாகிய சிவபெருமான் கோவில். வேற்கோட்டம் - முருகன் கோவில். வச்சிரக் கோட்டம் வச்சிராயுதம் இருக்கின்ற கோவில். புறம்பணையான் கோட்டம் - மாசாத்தன் கோவில். நிக்கந்தன் கோட்டம் - அருகப் பெருமான் கோவில். நிலாக்கோட்டம் - சந்திரன் கோவில்).
இந்தக் கோவில்கள் அந்தந்தச் சமயத்தாரால் வழிபடப்பட்டன. ஆனால், எல்லாச் சமயத்தாரும் வழிபட்டது இந்திரன் கோவில்கள். புகார்ப் பட்டினத்தில் இந்திரனுக்கு மூன்று கோவில்கள் இருந்தன. அவை வச்சிரக் கோட்டம், தருநிலைக் கோட்டம், ஐராவதக் கோட்டம் என்பன. வச்சிரம் (இடி) இந்திரனுடைய ஆயுதம். தரு (கற்பக மரம்) இந்திர லோகத்தில் உள்ள இந்திரனுக்குரிய மரம். இது நினைத்த பொருள்களைத் தரும் தெய்வத் தன்மையுடையது. ஐராவதம் இந்திரனுடைய வாகனம். இது வெள்ளை யானை. இந்த மூன்று கோட்டங்களும் சோழன் அரண்மனைக்கு அருகில் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. இது சோழ மன்னனுடைய அரசாங்கத் திருவிழாவாகவும் சோழ நாட்டின் தேசியத் திருவிழாவாகவும் இருந்தது. நகர மக்கள்,
‘வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து’
(சிலம்பு-இந்திரவிழவூர் 140-147)
'ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்பரிப் புரவியர் களிற்றின் றொகுதியர்
இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி
அரசுமேம் படீஇய வகனிலை மருங்கில்
உரைசால் மன்னவன் கொற்றங் கொள்கென
மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும்
ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட
தண்ணருங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
மண்ணக மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி'(சிலம்பு-இந்திரவிழவூர் 157-168)
இந்திரவிழாக் கொண்டாடினார்கள்.
நாளங்காடி
காவிரிப்பூம்பட்டினம், மருவூர்ப்பாக்கம் என்றும் பட்டினப் பாக்கம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்று அறிந்தோம். இரண்டு பாக்கங்களும் ஒன்றையொன்று நெருங்கியிராமல் விலகியிருந்தன. இரண்டு பாக்கத்துக்கும் இடைநடுவிலே தோட்டம் ஒன்று இருந்தது. அந்தத் தோட்டத்திலே நாள்தோறும் சந்தை கூடினபடியினாலே அதற்கு நாளங்காடி என்று பெயர் கூறப்பட்டது.
‘இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபரற் பகுதியின் இடைநிலை மாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்றி நிலைஇய நாளடங்காடி'
என்று இந்த இடத்தைச் சிலம்பு (இந்திரவிழவு 59-63) கூறுகின்றது.
('பெரிய வேந்தர் இருவர் போர் குறித்து வந்துவிட்ட பாசறையிருப்புக்கு நடுப்பட்ட நிலம் போர்க்களமானற்போல முற்கூறிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமுமென இரண்டு கூறுபட்ட ஊர்க்கு நடுப்பட்ட பொதுநிலமாகிய நாளங்காடி; அஃது எத்தன்மைத்தாகிய நாளங்காடியெனின், நிரைபடச் செறிந்த சோலையின் மரங்களிற் கால்களே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய கொடுப்போர் கொள்வோரோதை இடையறாது நிலைபெற்ற நாளங்காடியென்க' அடியார்க்கு நல்லார் உரை.)
பட்டினப்பாக்கத்திலிருந்து மருவூர்ப்பாக்கத்துக்குசசென்ற பெரிய சாலை, இந்த நாளங்காடியின் ஊடே அமைந்திருந்தது. நாளங்காடியின் நடுவிடத்திலே நான்கு தெருக்கள்கூடுகின்ற நாற்சந்தியிலே சதுக்கப் பூதத்தின்கோவில் இருந்தது. சதுக்கப்பூதம், காவிரிபூம்பட்டினத்தின்காவல் தெய்வம் (மதுரைமா நகரத்தின் காவல்தெய்வம் மதுராபதி தெய்வமாகஇருந்ததுபோல)
மக்கள் சமூகத்தின் அமைப்பையும் ஒழுங்கையும் அமைதியையும் கெடுக்கும் தீயொழுக்கம் உள்ளவரைத் தண்டித்துச் சமூகத்தின் அமைப்பை காத்து வந்தது இப்பூதம்.
தவமறைந்து ஒழுகும் தன்மையிலாளர்
அவமறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக்கைப்படுவோரெனக்
காத நான்குங் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கம்
இந்தக் காவற்பூதம், இந்திரனுடைய ஆணைப்படி சோழ மன்னனுக்கு உதவியாக நகரத்தைக் காவல் செய்ததாம். இதனை,
வெற்றிவேன் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனத்
தேவர்கோமான்ஏவலிற் போந்த
காவற்பூதத்துக்கடைகெழு பீடிகை
என்றுசிலம்பு (இந்திரவிழவூ 65-77) கூறுவது காண்க.
மருவூர் மருங்கின் மறங்கொள்வீரரும்
பட்டினமருங்கிற் படைகெழு மாக்களும்
ஏனைய நகரமக்களும் சதுக்கபூதம்என்னும் தெய்வத்தைப் பயபக்தியுடன்வழிபட்டார்கள்.
நாளங்காடிக்கு வடக்கே உவவனம் என்னும் பௌத்தப்பள்ளி ஆராமம் இருந்தது அந்தஆராம உவ வனத்திலே கண்ணாடியால் அமைந்த பளிக்கறை மண்டபமும் அதனுள் புத்தபாத பீடிகையும் இருந்தன என்று 'மணிமேகலை' யினால் அறிகிறோம். (மணி 3: 62-66., 4: 87-88., 5: 95-97.)
துறைமுகம்
காவிரிபூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கத்துத் தெற்கே, காவிரி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்திலே பூம்புகார்த் துறைமுகம் இருந்தது. அந்தத் துறைமுகம் ஆழமும் அகலமும் உடையதாக, மரக்கலங்கள் பாய்களைச் சுருட்டாமலே உள்ளே வந்து தங்குவதற்கு ஏற்றதாக இருந்தது.
'கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅ
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே'
என்று (புறம் 30) உறையூர் முதுகண்ணனார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியின் புகார்த்துறை முகத்தைப் பாடுகிறார்.
(‘பாய் களையாது பரந்தோண்டாது' என்றதனால்' துறை நன்மை கூறியவாறாம். பழைய உரை.)
இந்தத் துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய் (கப்பல்)கள், கம்பங்களில் கட்டப்பட்ட யானைகள் அசைந்து கொண்டிருப்பது போல, துறைமுகத்தில் அசைந்துகொண்டிருந்தன என்று கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார்.
'வெளில் இளக்கும் களிறு போலத்
தீம்புகார்த் திரை முன் றுறைத்
தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை
மிசைக் கூம்பின் அசைக் கொடியும்'
என்று அப்புலவர் பட்டினப்பாலையில் (172-175 அடி) கூறுகிறார்.
மருவூர்ப் பாக்கத்துக்குத் தெற்கே புகார்த்துறை முகம் இருந்தது என்று கூறினோம்.
மருவூர்ப்பாக்கத்தின் தெற்கே ஆற்றங்கரையிலே, துறைமுகத்தின் அருகிலே பண்டகசாலை இருந்தது. இங்கு, ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன.
'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு' (பட்டினப்பாலை (185-193)
என்று பட்டினப்பாலை கூறுகிறது.
ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களுக்குச் சோழ மன்னனுடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்டுச் சங்கம் பெறப்பட்டது. இதை,
'நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி'
என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் (பட்டினப்பாலை 129-135) கூறுகிறார்.
துறைமுகத்துக்கு அருகிலே வெள்ளிடைமன்றம் என்னும் கோவில் இருந்தது. அம்மன்றத்துத் தெய்வம், துறைமுகத்துப் பண்டகசாலையில் இருந்த பொருள்களை ஒருவரும் களவு செய்யாதபடி காத்து வந்ததாம்.
‘வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த வெண்ணுப் பல்பொக்
கடைமுக வாயிலுங் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்
கட்போர் உளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்
கொட்பி னல்லது கொடுத்த லீயா
துள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றம்'
என்று இந்த மன்றத்தைச் சிலப்பதிகாரம் (இந்திரவிழவூர் 111-117) கூறுகிறது.
துறைமுகத்துக்கு அருகிலே கலங்கரை விளக்கம் அமைந்திருந்தது. வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் இராக்காலத்தில் கடலிலே திசைமாறிப் போகாமல் துறைமுகத்தைக் காட்டுவதற்கு இந்தக் கலங்கரை விளக்கம் உதவியாக இருந்தது. இதை 'இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்' என்று சிலம்பு (கடலாடு காதை 141) கூறுகிறது.
(‘கலங்கரை விளக்கம்' என்பதற்குத் 'திக்குத் குறி காட்டிக் கலத்தை அழைக்கிற விளக்கம்' என்று அரும்பத உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார். 'பாடை வேறு பட்டதேயத்து நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்தற்கு இட்ட விளக்கு' என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்.)
கடைச்சங்க காலத்திலே, தொண்டை நாட்டின் கடற்கரைத் துறைமுகப்பட்டினம் ஒன்றிலே இருந்த 'உரவுநீரழுவத்து ஓடுகலம் கரையும்' விளக்குக் கூண்டைக் கூறுகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில்,
'வானம் ஊன்றி மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை.'(பெரும்பாணாற்றுப்படை 346-351)
இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரை: ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக் காலாக ஊன்றிவைத்த ஒரு பற்றுக்கோடு போல விண்ணைத் தீண்டும்படி யோங்கின மாடம். தன்னிடத்துச் சாத்திய ஏணியால் ஏறுதற்கரிய தலையினையுடைய மாடம். கற்றை முதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்தை, இராக்காலத்தே கொளுத்தின விளங்குகின்ற விளக்கு, உலாவுகின்ற கடற்பரப்பிலே வந்து, நாம் சேரும் துறையன்றென்று நெகிழ்ந்து வேறோர் துறைக்கண் ஓடுங்கலங்களை இது நந்துறை என்றழைக்கின்ற துறை.')
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கலங்கரை விளக்கமும் இதுபோன்று அமைந்த செங்கற் கட்டடமாக இருந்திருக்க வேண்டும்.[2]
இதனால், கலங்கரை விளக்கக் கட்டடம் செங்கல்லினால் அமைக்கப்பட்டுச் சாந்து பூசப்பெற்ற காரைக் கட்டடம் என்பது தெரிகின்றது. எகிப்து நாட்டிலே, நீல நதி, மத்திய தரைக்கடலில் கலக்கிற இடத்திலே அமைந்திருந்த அலெக்சாந்திரியத் துறைமுகத்தில் அமைந்திருந்த கலங்கரை விளக்கம் இங்கு நினைவுறத்தக்கது.
சுடுகாடு
பிறப்பும் இறப்பும் எல்லா ஊர்களிலும் எக்காலத்திலும் நிகழ்கிற நிகழ்ச்சி. இறந்தவர்களைப் புதைக்கவும் கொளுத்தவும் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தின் சுடுகாடு நகரத்துக்கு வடக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. சுடுகாட்டின் அருகிலே காடமர் செல்வியாகிய கொற்றவையின் கோயில் இருந்தது. மேலும் சுடுகாட்டிலே, வாகை மரத்தின் அடியில் வாகை மன்றமும், விளாமரத்தின் அடியில் வெள்ளில் மன்றமும், இலந்தை மரம் இருந்த இரத்திமன்றமும் வன்னிமரம் இருந்த வன்னிமன்றமும், வெளியான இடத்தில் இருந்த வெள்ளிடை மன்றமும்[3] என ஐந்து மன்றங்கள் இருந்தன.
சம்பாபதி கோவில்
சுடுகாட்டுக்கு அருகில் சம்பாபதி கோவில் இருந்தது. இந்தக் கோவிலுக்குக் குஞ்சரக் குடிகை (குச்சரக் குடிகை) என்னும் பெயர் உண்டு. இங்குச் சம்பாபதி தெய்வம் வழிபடப்பட்டது. சம்பாபதிக்குக் கன்னி, குமரி, முதியாள் என்று பல பெயர்கள் உண்டு.
சுடுகாட்டுக்குத் தென்புறத்துச் சுவருக்குத் தென்புறத்தில் (நாளங்காடிக்கு வடக்குப் புறத்தில்) இருந்த உவவனம் என்னும் பௌத்த ஆராமத்துக்கும் சம்பாபதி கோவிலுக்கும் ஒரு வழி இருந்தது. உவவன ஆராமத்தின் மேற்குப் பக்கத்தில் கோட்டைச் சுவரைச் சார்ந்து சிறுவாயில் இருந்தது. அந்த வாயில் வழியாக மேற்குப் பக்கம் சென்றால் சம்பாபதி கோவிலை யடையலாம். உவவனத்துக்குச் சென்ற சுதமதி என்பவள், உவவனத்திலிருந்து இந்த வாயில் வழியாகச் சக்கரவாளக் கோட்டமாகிய சம்பாபதிக் கோவிலுக்கு வந்தாள் என்று 'மணிமேகலை' கூறுகிறதிலிருந்து இதனை யறியலாம்.
'பெருந்தெரு ஒழித்துப் பெருவனஞ் சூழ்ந்த
திருந்தெயில் குடபால் சிறுபுழைபோகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்காற்
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது'
என்றும், (சக்கரவாளக்கோட்டம் 21-25)
... ... ... ... ... ... ... ... ... ... ... பூம்பொழில்
திருந்தெயிற் குடபால் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த
சக்கர வாளக் கோட்டத் தாங்கட்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறிவியின் ஒருபுடை யிருத்தலும்’
என்றும் மணிமேகலை (துயிலெழுப்பிய காதை 88-93) கூறுவது காண்க.
சம்பாபதி கோவிலுக்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் சக்கர வாளக் கோட்டம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தபடியால் சுடுகாட்டுக்கோட்டம் என்று பெயர் வந்தது.
'இடுபிணக் கோட்டத்து எயிற்புற மாதலிற்
சுடுகாட்டுக்கோட்ட மென்றலது உரையார்’
என்று மணிமேகலை (சக்கரவாளக்கோட்டம் 203-204) கூறுகிறது.
சம்பாபதி கோவிலின் கோபுரவாயிலின் மேலே சக்கரவாளத்தின் சிற்ப உருவம் அமைக்கப்பட்டிருந்தபடியால், இந்த கோவிலுக்குச் சக்கரவாளக்கோட்டம் என்று பெயர் வந்தது என்று 'மணிமேகலை’ சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை கூறுகிறது.3
குஞ்சரக்குடிகை என்னும் சம்பாபதிக் கோவிலிலே இரண்டு செங்கற்றூண்களிலே கந்திற்பாவை (கந்து - தூண், பாவை - பதுவை) என்னும் இரண்டு தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. கந்திற்பாவைகளில் ஒன்றுக்குத் துவதிகன் என்றும் மற்றொன்றுக்கு ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்றும் பெயர். இந்தச் தெய்வப் பாவைகள் கடந்தகால நிகழ்ச்சிகளையும் எதிர்கால நிகழ்ச்சிகளையும் நகரமக்களுக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது.
சம்பாபதி தெய்வத்தின் திருவுருவம் ஒன்று, இப்போதைய காவிரிப்பூம்பட்டினத்தின் திருச்சாய்க்காட்டுக் கோவிலில் இருக்கிறது. இந்த உருவம், பிற்காலத்துச் சோழ அரசர் நாட்களில் பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட உருவம்.
சம்பாபதிக் கோவிலைச் சார்ந்த உலகவறவி என்னும் அம்பலம் இருந்தது. இங்குக் குருடர், செவிடர், முடவர், ஆதரவு இல்லாதார் முதலியவர்களுக்குப் பௌத்த மதத்தார் உடை, உணவு, உறையுள் கொடுத்துப் போற்றினார்கள் என்று மணிமேகலை நூல் கூறுகிறது.
ஐந்து மன்றங்கள்
காவிரிப்பூம்பட்டினத்தில் ஐந்து மன்றங்கள் இருந்தன. இந்த மன்றங்கள் இப்பட்டினத்தின் சுடுகாட்டில் இருந்த ஐந்து மன்றங்களின் வேறானவை. அவை வேறு இவைவேறு. இந்த ஐந்து மன்றங்களின் பெயர் வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதச் சதுக்கம், பாவைமன்றம் என்பன. இந்த ஐந்து மன்றங்களிலும் ஐந்து பூதங்கள் (தெய்வங்கள்) இருந்து மக்களின் ஒழுக்கம், ஒழுங்கு, நீதி, நியாயம் முதலியவைகளைக் காத்து வந்தன என்று நம்பப்பட்டது.
வெள்ளிடை மன்றம் துறைமுகத்துக்கு அருகில் இருந்ததென்பதை முன்னமே கூறினோம்.
இலஞ்சி மன்றம் இப்பட்டினத்தில் எங்கு இருந்ததென்பது தெரியவில்லை. இந்த மன்றத்தின் அருகில் இலஞ்சி (தடாகம்) இருந்தது. அதில் நீராடின தொழு நோயாளர் முதலியோர் நோய் நீங்கப்பெற்றனர் என்று கூறப்படுகிறது.
நெடுங்கல் மன்றம் இருந்த இடமும் தெரியவில்லை. மயக்கமடைந்தோர், நஞ்சுண்டோர், பேய்பிடித்தோர், பாம்பினால் கடியுண்டோர் முதலியவர்களின் நோய்களை இந்த மன்றத்திலிருந்த தெய்வம் நீக்கியருளிற்று என்று நம்பப்பட்டது.
சதுக்கப்பூதம் என்றும் பூதசதுக்கம் என்றும் பெயர்பெற்ற மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் நடுவிலே, நாளங்காடியின் மத்தியில் இருந்தது என்று முன்னமே அறிந்தோம். கூடாவொழுக்கமுள்ள துறவிகள், அலவைப் பெண்டிர், பிறர்மனை நயப்போர், பொய்க்கரி கூறுவோர் முதலியவர்களைத் தண்டித்துச் சமுதாயத்தின் ஒழுங்குமுறையை இப்பூதம் காத்துவந்ததாக நம்பப்பட்டது.
பாவை மன்றமும் எங்கிருந்தது என்பது தெரியவில்லை. இது நீதிமன்றத்தின் அருகில் இருந்திருக்க வேண்டும். அரசன் கொடுங் கோலாட்சியினால் தீங்கு செய்தபோதும், நீதிமன்றத்தில் அநீதி நிகழ்ந்தபோதும் இம்மன்றத்தில் இருந்த பாவை கண்ணீர் வடித்து அழுது அநீதிகளை உலகத்துக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது.
பூஞ்சோலைகள்:
காவிரிப்பூம்பட்டினத்தில் ஐந்து பூஞ்சோலைகள் இருந்தன. அவை இலவந்திகை, உய்யானம், உவவனம், சம்பாபதிவனம், கவேர வனம் என்பன. இலவந்திகைச் சோலையும், உய்யானமும் சோழ அரசனுடைய அரண்மனையைச் சேர்ந்தவை. இவைகளில் பொதுமக்கள் போவது இல்லை. காவிரிக் கரையில் அரண்மனையைச் சார்ந்து இவை இருந்தன.
'கலையி லாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற் கிறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந்தி கையின் எயிற்புறம்'(சிலம்பு : நாடுகாண் 28-31)
என்றும்,
‘பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையின் எயிற்புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்'(மணிமேகலை : மலர்வளர் 44-46)
என்றும் இலவந்திகைச் சோலை கூறப்படுகிறது. உய்யானம் என்னும் பூஞ்சோலை எங்கிருந்தது என்பதும் தெரியவில்லை.
'மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும்
வாடா மாமலர் மாலைகள் தூக்கலிற்
கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று
உய்யா னத்திடை உயர்ந்தோர் செல்லார்’(மணிமேகலை : மலர்வனம் 48-51)
என்று உய்யானத்தைப் பற்றி அறிகிறோம். உய்யானத்தில் இருந்த பூதம் (தெய்வம்), பூதச்சதுக்கத்தில் இருந்த பூதம் (தெய்வம்) அன்று. அது வேறு இது வேறு.
உவவனம்:
நாளங்காடியின் வடக்குப் பக்கத்தில் சுடுகாட்டு மதிலுக்குத் தெற்கே இது இருந்தது என்று முன்னமே கூறப்பட்டது. இது பௌத்த முனிவர்களின் ஆராமம். பௌத்த பிக்ஷுக்கள் தங்கியிருந்த விகாரை இங்கு இருந்தது. அன்றியும் புத்தருடைய பாதபீடிகை இருந்த பளிக்கறை (கண்ணாடி மண்டபம்) மண்டபம் இங்கு இருந்தது. இந்த உவவனத்தின் மேற்குப் பக்கத்தில் நகரத்து மதில் பக்கமாக இருந்த வாயில் வழியாகச் சென்றால் சம்பாபதி கோவிலுக்குப் போகலாம்.
உவவனத்தின் இயற்கை வனப்பை மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 159 - 163 அடிகளில் காண்க. இங்கிருந்த புத்தருடைய பாத பீடிகையைப் பற்றிய செய்தியை, மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 61-67 அடிகளில் காண்க.
சம்பாதிவனமும் கவேர வனமும் காவிரிப்பூம்பட்டினத்தில் எந்த இடங்களில் இருந்தன என்பது தெரியவில்லை.
‘வெங்கதில் வெம்மையின் விரிசிறை இழந்த
சம்பாதி யிருந்த சம்பாதி வனமும்
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
கவேரனாங் கிருந்த கவேர வனமும்
மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய'
என்று மணிமேகலை (மலர்வனம் 53- 57) கூறுகிறது.
புத்தருடைய பழம்பிறப்புகளைக் கூறுகிற புத்த ஜாதகத்தில், அகித்தி ஜாதகத்திலே போதிசத்துவர், அகித்தி முனிவராகப் பிறந்து டமிள (தமிழ்) நாட்டுக் கவீரபட்டினத்தில் ஒரு சோலையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது இங்கு நினைவு கொள்ளத் தக்கது. (கவீரபட்டினம் - காவிரிப்பூம்பட்டினம்.)
சிறைக்கோட்டம் :
இதுவும் நகரத்தில் எந்த இடத்தில் இருந்தது என்பது தெரியவில்லை. (நகரத்துக்கு வெளியே இருந்திருக்க வேண்டும்.) குற்றவாளிகளைச் சிறையில் அடைத்து வைத்த இடம் சிறைக்கோட்டம்.
காவிரிவாயில்:
பட்டினப்பாக்கத்துக் கோட்டையின் மேற்குப்புறத்தில் இருந்த வாயில் இது. இவ்வாயிலிருந்து உறையூருக்குச் செல்லும் பெருவழி காவிரிக்கரை வழியாக அமைந்திருந்தது. இவ்வாயிருக்குப் பக்கத்தில், கோட்டைச் சுவருக்கு வெளியே காவிரி ஆற்றில் 'திருமுகத்துறை’ இருந்தது. இத்துறையில் மக்கள் நீராடினார்கள். இந்தக் காவிரிவாயிலை, 'தாழ் பொழிலுடுத்த தண்பதப் பெருவழிக் காவிரிவாயில்' என்று சிலப்பதிகாரமும் (நாடுகாண் 32, 33) 'காவிரிவாயில்' என்று மணிமேகலையும் (சிறை செய். 43) கூறுகின்றன.
காவிரிப்பூம்பட்டினம் கடலில் முழுகியதாகக் கூறப்படுகிறது. மணிமேகலை என்னும் கடற்தெய்வத்தின் சாபத்தினால் இப்பட்டினம் கடலில் முழுகியதாக மணிமேகலை கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப்பெருக்கினால் மூழ்கியிருக்கக்கூடும். ஆனால் பட்டினம் முழுவதும் வெள்ளத்தில் முழுகி அழிந்துபோயிற்று என்பது காவியப் புலவனின் கற்பனையேயாகும். ஏனென்றால் கடைச்சங்க காலத்துக்குப் பிறகும் (கி.பி. 200-க்குப் பிறகும்) காவிரிப்பூம்பட்டினம் பேர்போன துறைமுகமாக இருந்தது. கி.பி. 9-ஆம் அல்லது 10-ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்துப் பிள்ளையார் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய கப்பல் வாணிகராக இருந்தார் என்று அறிகிறோம். ஆகவே, கடைச்சங்க காலத்திலே பூம்புகார்ப் பட்டினம் கடல்கொள்ளப்பட்டது என்று கருதுவது தவறு. மருவூர்ப்பாக்கம் மிகப்பிற்காலத்தில் கடலில் முழுகியிருக்கக் கூடும்.
தமிழ்நாட்டின் கிழக்குக்கரையூர்கள் சில, கடல் நீரோட்டத்தின் காரணமாக அழிந்தும் சிதைந்தும் போயின. அவ்வப்போது புயல் காற்றினால் வெள்ளச் சேதமும் நேரிட்டன. இப்போது சிறு தீவாக உள்ள இராமேசுவரம் 400 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்துடன் இணைந்திருந்தது. பாண்டி நாட்டில் இருந்த பேர்போன கொற்கைத் துறைமுகம், பிற்காலத்தில் உள்நாட்டு பட்டினமாக மாறிவிட்டது. அங்கிருந்து கடல் ஐந்து மைல் அகன்று போய்விட்டதால், கொற்கைத் துறைமுகம் பிற்காலத்தில் உள்நாட்டுப் பட்டினமாகிவிட்டது. இவ்வாறு பல மாறுபாடுகள் கடற்கரையோரங்களில் நிகழ்ந்து வந்தது உண்மையே.
ஆனால், கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப்பெருக்கினால் அழிந்துவிட்டது என்பது உண்மையன்று; அது காவியப் புலவனின் கற்பனையே. ஆனால் அடிக்கடி உண்டாகிற வெள்ளப் பெருக்கினால் காவிரிப்பூம்பட்டினம் துன்புற்றதுபோல, மணிமேகலை காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப் பெருக்கினால் துன்புற்றிருக்கலாம். அவ்வெள்ளப் பெருக்கினால் அதிக சேதமும் ஏற்பட்டிருக்கலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதி கடலில் மறைந்தது பிற்காலத்திலாகும். பிற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தின் கிழக்குப் பகுதி கடலில் மறைந்தது உண்மையே. பிற்காலத்தில் நிகழ்ந்த இதை மணிமேகலை காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதுவது தவறு.
காவிரிப்பூம்பட்டினத்துக்குக் காகந்தி என்றும் ஒரு பெயர் உண்டு என்று கூறினோம். திருவேங்கடத்துக்கு அருகில் கிழக்குக் கரையிலே காகந்தி என்று ஒரு நாடு இருந்தது. அது பிற்காலத்திலே கடலில் மூழ்கிப் போயிற்று. அதைக் கடல் கொண்ட காகந்தி என்று சாசனங்கள் கூறு கின்றன. அப்பகுதியை தெலுகு சோடர் (தெலுங்குச் சோழர்) என்பவர் அரசாண்டிருந்ததும் அங்கும் காகந்தி இருந்ததும் ஆராய்ச்சிக்கு உரியன. அந்தக் காகந்தி பவத்திரிக் கோட்டத்தில் இருந்தது. பவத்திரிக் கோட்டத்தின் ஒரு பகுதி கடலில் முழுகி இப்போது பழவேற்காட்டு ஏரி என்று பெயர் பெற்றிருக்கிறது.
அடிக்குறிப்புகள்
1. சோழன் கரிகாற் பெருவளத்தானின் காவிரிப் பூம்பட்டினத்தைப் பட்டினப் பாலையில்பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே அச்சோழனின் உறவினனாகிய தொண்டைமான் இளந்திரையன் மீது பெரும் பாணாற்றுப்படையைப் பாடினார். தொண்டை நாட்டுத்துறைமுகத்திலிருந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பைக் கூறியது போல காவிரிப் பூம்பட்டினத்தின்கலங்கரை விளக்கின் அமைப்பை இவர் பட்டினப் பாலையில் கூறவில்லை. ஆயினும் பெரும் பாணாற்றுப்படையில் கூறப்பட்ட கலங்கரை விளக்கின் அமைப்பைப் போன்றே பூம்பூகார்ப்பட்டினத்தின் கலங்ரை விளக்கம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
2. சுடுகாட்டில் இருந்த வெள்ளிடை மன்றத்தையும் துறைமுகத்துப் பண்டகசாலைக்கு அருகில் இருந்த வெள்ளிடை மன்றத்தையும் ஒன்று எனக் கருதுவது கூடாது. இது வேறு அது வேறு சுடுகாட்டில் இருந்த,
பிணத்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றம்
வேறு பண்டகசாலைக்கு அருகில் இருந்த, பண்டங்களைக் களவாடுவோரை வெளிப்படுத்திய, ‘உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றம்’ வேறு. இதனை மணிமேகலை சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை 53, 83, 85, 87, 89, 91 அடிகளால் அறியலாம்.
3. சக்கர வாளம் என்பது பௌத்த சமயத்தாரின் ‘பிரமாண்டம்’ சக்கரவாளத்தின் விவரத்தை ‘மணிமேகலை’ சக்கரவாளக் கோட்ட முரைத்த காதை 176 – 183 அடிகளிலும், 192 – 202 அடிகளிலும் காண்க. பௌத்த நாடாகிய இலங்கைத் தீவிலே பொலநறுவை என்னும் புலத்தி நகரத்திலே ஒரு பாறைக் கல்லிலே சக்கர வாளத்தின் உருவப்படம் வரையப்பட்டிருக்கிற தென்று இலங்கை ஆர்க்கியாலஜி அறிக்கையொன்று கூறுகிறது.
2. சங்க காலத்து மதுரை
கடைச்சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், மதுரைமா நகரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பது பற்றிச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராய்வோம். மதுரை, பாண்டிய நாட்டின் தலைநகரம். அதற்கு கூடல் என்றும் நான்மாடக்கூடல் என்றும் பெயர்கள் உண்டு. கண்ணபிரான் பிறந்த வடமதுரையிலிருந்து பிரித்து அறிவதற்காக இதனைத் தென்மதுரை என்றும் தக்கிண மதுரை என்றும் கூறுவர்.
(தலைச் சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்ததும் ஒரு மதுரையே. அந்த மதுரைமா நகரம் கடல் கொண்டுவிட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய இந்த மதுரைமா நகரம் கடைச் சங்க காலத்தில் இருந்த மதுரைமா நகரமாகும். அது இப்போதைய மதுரை அன்று.)
கடைச்சங்க காலத்து மதுரைமாநகரம் வைகையாற்றின் தென்கரையில் இருந்தது. மதுரைக்கு மேற்கே பேர்போன திருப்பரங்குன்றமும், திருப்பரங்குன்றத்துக்குக் கிழக்கே மதுரை நகரமும் இருந்தன. இதனை, ‘மாடமலி மறுகிற் கூடற்குடவயிற் ... ... குன்றம்’ என்று திருமுருகாற்றுப்படை (71-77 அடிகள்) கூறுவதிலிருந்து அறியலாம்.
தாயங்கண்ணார் என்னும் புலவரும், மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்ததைக் கூறுகிறார்:
‘கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய
ஒடியா விழவின் நொடியோன் குன்றம்'}(அகம் 149-ஆம் செய்யுள்)
என்று கூறுகிறார்.
மதுரைமா நகரத்தின் தரையமைப்பு தாமரைப் பூவைப் போல அமைந்திருந்தது. தாமரைப்பூ, நந்தியாவட்டப்பூ, சுவஸ்திகம் முதலியவற்றின் உருவ அமைப்பு போல நகரங்களை அமைப்பது பழைய காலத்து வழக்கம் என்பதைச் சிற்ப சாஸ்திர நூல்களிலிருந்து அறிகிறோம். அந்தப் பழைய வழக்கப்படியே பாண்டிய அரசருடைய மதுரைமா நகரம் தாமரைப் பூவைப்போல அமைந்திருந்தது. இதைப் பரிபாடற் செய்யுள் கூறுகிறது:
'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீருர்: பூவின்
இதழகத் தனைய தெருவம் : இதழகத்து
அரும்பொகும் டனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்,
தாதுண்
பறவை யனையர் பரிசில் மாக்கள்'
என்பது அந்தச் செய்யுள்.
மாயோனாகிய திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரைப் பூவைப்போல வட்ட வடிவமாக மதுரை மாநகரம் அமைந்திருந்தது. தாமரைப் பூவின் இதழ்களைப்போல நகரத்தின் தெருவுகள் அமைந்திருந்தன. தாமரை இதழ்களின் நடுவே இருக்கிற ‘பொகுட்டு'ப் போல பாண்டிய மன்னனுடைய அரண்மனை அமைந்திருந்தது. தாமரைப் பூவிலுள்ள தாதுக்களைப்போல மதுரை மாநகரத்து மக்கள் இருந்தனர். தாமரை மலரின் தேனைக் குடித்து மகிழும் தேனீக்களைப் போல, பரிசு பெற்று வாழும் புலவரும் கலைவாணரும் இருந்தனர் என்பது இந்தப் பாட்டின் கருத்து.
(மகத நாட்டின் தலைநகரமாகிய இராசகிருகம் என்னும் நகரமும் மதுரையைப்போலவே தாமரைப் பூவின் அமைப்பாக இருந்ததாம். மகத நாட்டையரசாண்ட உதயணனுடைய தலைநகரமான இராசக்கிருகம் தாமரைப் பூவின் உருவம்போல அமைந்திருந்தது என்று பெருங்கதை' என்னும் காவியம் கூறுகின்றது.
“போகச் சேரி புறவிதழ் ஆக”
“பெருங்கடி யாளர் அருங்கடிச் சேரி
புறவிதழ் மருங்கிற் புல்லிதழ் ஆக”
“பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
புல்லிதழ் பொருந்திய நல்லிதழ் ஆக”
“தந்தொழில் திரியாத் தரும நெஞ்சின்
அந்தண் சேரி அகவிதழ் ஆக”
“கற்றுப் பொருள் தெரிந்த கண்போற் காட்சி
அருமதி யமைச்சர் திருமதிற் சேரி”
மாசில் பைந்தாது சுமந்த மத்தகத்
தாசில் பன்மலர் அல்லி யாக”
“வாயில் அணிந்த வான்கெழு முற்றத்துக்
கோயில் கொட்டை யாகத் தாமரைப்
“இன்பங் கலந்த இராச கிரியம்”
என்று பெருங்கதை (மகத காண்டம்) இராசகிரியம் புக்கது கூறுகின்றது.)
வட்டவடிமான நகரங்கள் பல பண்டைக்காலத்தில் அமைந்திருந்தன. வட்டவடிமாக இருந்த காரணத்தினாலேயே அவையெல்லாம் தாமரைப் பூவைப்போல இருந்தன என்று கருதக்கூடாது. சோழனுடைய உறந்தையும் (உறையூர்), தொண்டைமானுடைய கச்சியும் (காஞ்சீபுரம்), வட்டவடிவமான கோட்டைக்குள்ளே அமைந்திருந்தன. ஆனால், அக்கோட்டைக்குள்ளே இருந்த தெருவுகள் தாமரைப்பூவின் இதழ்களைப்போல அமைந்திருக்கவில்லை.
மதுரை மாநகரத்தின் கோட்டையின் அமைப்பும் வீதிகளின் அமைப்பும் அரண்மனையின் அமைப்பும் தாமரைப் பூவைப்போல அமைந்திருந்தன. தாமரைப் பூவின் நடுவில் உள்ள ‘கொட்டை’ (பொகுட்டு) போல பாண்டியனுடைய அரண்மனை, நகரத்தின் நடுவிலே இருந்தது. பொகுட்டைச் சூழ்ந்துள்ள தாமரைப் பூவின் இதழ்களைப் போல நகரத்தின் வீதிகள் அமைந்திருந்தன. தாமரைப்பூ வட்ட வடிவமாக இருப்பதுபோன்று, நகரத்தின் கோட்டை மதில்களும் வட்ட வடிவமாக இருந்தன. தாமரை மலர் தண்ணீரில் இருப்பதுபோல, மதுரை மாநகரமும் அகழிக்கு நடுவில் இருந்தது.
இந்த மதுரைமா நகரத்தின் சுற்றளவு எத்தனை காதம் என்பது தெரியவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தைப் போல நான்கு காத வட்டகையாக இருந்திருக்கக்கூடுமோ?
அகழி:
மதுரைமா நகரத்தின் கோட்டை மதிலுக்கு வெளிப்புறத்தில் ஆழமான அகழி, மதிலைச் சூழ்ந்திருந்தது. இது ஆழமும் நீர் நிறைந்ததுமாக இருந்தது. இந்த அகழியை ‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு’ என்று மதுரைக் காஞ்சியும் (அடி 351), ‘குண்டு நீர் வரைப்பில் கூடல்’ என்று புறநானூறும் (செய்யுள் 347) கூறுகின்றன. கோட்டைச் சுவரின் வடக்குப் பக்கத்தில் வைகையாறு, மதில் ஓரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியும் வைகையாற்றுடன் இணைந்திருந்தது. அகழியிலும் ஆற்றிலும் எப்போதும் நீர் நிறைந்து இருந்தது. இதனை,
“வந்த மதுரை மதில்பொரூஉம் வான்மலர்த்தாஅய்
அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு”
“வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்
என்று கலித்தொகையும் (67ஆம் பாடல்) கூறுவதிலிருந்து அறியலாம்.
மதுரைமாநகரத்துக்கு ஆலவாய் என்றும் பெயர் உண்டு. நீர் நிலைக்கு நடுவே இருந்தபடியால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டது. ஆல், ஆலம் என்னும் சொல்லுக்கு நீர்நிலை என்பது பொருள். இச்சொல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம் முதலிய திராவிட இனமொழிகளில் பண்டைக் காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். (இதுபற்றிய என்னுடைய விரிவான கட்டுரையைக் கலைக்கதிர், செப்டம்பர் 1960, ஆல்-நீர்) காண்க.
(பிற்காலத்தில், ஆலவாய் என்பதன் உண்மைப் பொருளை யறியாத புராணிகர், பகைவரால் ஏவப்பட்ட பாம்பு ஒன்று மதுரையை அழிக்க வந்து நஞ்சைக் கக்கியது என்றும் அதனால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும் பொருந்தாக் கதையைக் கற்பித்தார்கள்.)
காவற்காடு:
நீரரணாகிய அகழிக்கு வெளியே நகரத்தைச் சூழ்ந்து காவற்காடு அமைந்திருந்தது. காவற்காட்டுக்கு மிளை என்பது பெயர். மிளைக்காடு முட்புதர்களும் மரங்களும் அடர்ந்து பகைவர் உள்ளே வரமுடியாதபடி இருந்தது. 'மிளையும் கிடங்கும்' (சிலம்பு, அடைக்கல 207) என்றும், 'கருமிளையுடுத்த அகழி' (சிலம்பு, புறஞ்சேரி 183) என்றும்,
“இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர் பரப்பின் வலம்புணர் அகழி”
என்றும் சிலம்பு (ஊர்காண் 62-63) கூறுகிறது.
ளை - அரண்காவல். மிளை - அதனைச் சூழ்ந்த காவற்காடு.
கோட்டைச்சுவர்:
அகழிக்கு உட்புறத்தில் நகரத்தைச் சூழ்ந்து கோட்டைச்சுவர் அமைந்திருந்தது.
‘உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின்
அமைவரணாம் என்றுரைக்கும் நூல்’
என்று திருக்குறள் மதிலரணைப் பற்றிக் கூறுவது போல, இந்த மதில்கள் உயரமும் அகலமும் திண்மையும் கிட்டுதற்கு அருமையுமுடையதாக இருந்தன. இந்தக் கோட்டைச் சுவர்கள் புறமதில் என்றும் அகமதில் என்றும் இரண்டாக அமைந்திருந்தன. சுவரின் மேலே, பகைவரைத் தாக்குவதற்காகப் பலவகையான போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. ‘விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை’ என்று மதுரைக்காஞ்சி (352ஆம் அடி) கூறுகிறது. புறமதின் மேல் வைக்கப்பட்டிருந்த போர்க் கருவிகள் என்னென்ன என்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது:
‘மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிற லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில்’
என்று கூறுகிறது (அடைக்கலக் காதை 207 - 216).
நகரத்துக்குள்ளே செல்வதற்கு நான்கு வாயில்கள் இருந்தன. அவ்வாயில்களில் வடக்குப் புறவாயில் வையை யாற்றினால் அடைபட்டிருந்தது. ஆகவே கிழக்கு மேற்கு தெற்குப் புறத்து வாயில்கள் மட்டும் போக்குவரத்துக்கு உரியனவாக இருந்தன.
கோவலனுடன் மதுரைக்குச் சென்ற கண்ணகியார், கிழக்கு வாயிலில் நுழைந்து கோவலனை இழந்த பிறகு மேற்கு வாயிலின் வழியே வெளிப்போந்தார்.
‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென’
(சிலம்பு. கட்டுரை. 182 - 183)
மதுரைமாநகரத்தின் கோட்டை வாயிலின் மேலே பந்தும் பாவையும் தொங்கவிடப்பட்டிருந்தன என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது.
‘செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர் தேய்த்த போரரு வாயில்.’
(திருமுருகு 67 - 69)
"போரை வென்று விரும்பிக் கட்டின சேய் நிலத்தே சென்றுயர்ந்த நெடிய கொடிக்கருகே, நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியே விடும்படி, பொருவாரை இல்லையாக் குகையினாலே எக்காலமும் போர்த்தொழிலரிதாகிய வாயில். பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்கு தூக்கின பந்தும் பாவையும்” என்பது நச்சினார்க்கினியர் உரை.
(சேர மன்னனுடைய வஞ்சிமா நகரத்துக் கோட்டை வாயிலிலும், மதுரைக் கோட்டையிலிருந்தது போல எந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், சிலம்பும் தழையும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன என்று பதிற்றுப்பத்து 6ஆம் பத்து 3ஆம் செய்யுள் கூறுகிறது.
‘தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொடு அணிதழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
(5 - 9)
‘சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின வென்றது ஈண்டுப் பொரு வீருளீரேல் நுங்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடை யினையு மொழித்து. இச் சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவா றென்க. இனி, அவற்றை அம் மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாருமுளர்.’ பழயவுரை.) மதுரைமா நகரத்தின் கோட்டைவாயிலை யவன வீரர்கள் காவல் புரிந்தனர்.
'கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
(சிலம்பு,ஊர்காண். 66 67)
அரண்மனை:
நகரத்தின் நடுமையத்தில் பாண்டிய மன்னனுடைய அரண்மனை, தாமரைப்பூவின் நடுவில் உள்ள 'கொட்டை' அல்லது ‘பொகுட்டு’ப் போல அமைந்திருந்தது. இதனை ‘அரும் பொகுட்டனைய அண்ணல் கோவில்' என்று பரிபாடற் செய்யுள் கூறுகிறது.
வீதிகள்:
அரண்மனையிலிருந்து வீதிகள் எட்டுத் திசைகளிலும் அமைந் திருந்தன. அரண்மனையைச் சுற்றிலும் வீதிகள் அமைந்திருந்தன. வீதிகளின் அமைப்பு தாமரைப் பூவின் இதழ்களைப் போல அமைந் திருந்தது. கோட்டை வாயிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாகச் சென்ற வீதி அரண்மனைப் பக்கமாக அமைந்திருந்தது. அது போலவே தெற்கிலிருந்து வடக்குப் புறமாகச் சென்ற வீதியும் அரண்மனைப் பக்கமாகச் சென்றது. வடக்குப் பக்கத்தில் மதிலுக்கப்பால் வைகையாறு இருந்தபடியால், அவ்வீதி வடக்குவாயிலோடு நின்று விட்டது.
புறமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையில் இருந்த வீதிகள் புறஞ்சேரி என்று பெயர் பெற்றிருந்தன. அங்குப் பெரும்பாலும் ஆயர்குல மக்கள் வாழ்ந்திருந்தனர்.
வயிரம், மரகதம், முத்து, மாணிக்கம், பவழம் முதலிய நவமணிகள் விற்கும் வீதியும், வெள்ளி பொன் நகைகள் விற்கும் வீதியும், அறுவை (ஆடை) கூலம் (தானியம்) முதலியவை விற்கும் வீதிகளும் பலவகை மக்கள் வாழ்ந்த வீதிகளும் இருந்தன. நாளங்காடியும் அல்லங்காடியும் இருந்ததை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. (அடி 430 544). ‘வையங் காவலர் மகிழ்தரு வீதியும்' (ஊர்காண் 145). 'எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்' (ஷெ 167). 'அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்' (ஷை 179), 'நறுமடி செறிந்த அறுவை வீதியும்' (ஷெ 207), 'கூலங் குவித்த கூல வீதியும்' (ஷெ 211),
'பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும்'
(சிலம்பு. ஊர்காண். 211-214) அமைந்திருந்தன.
சுருங்கை:
வீடுகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீர் நகரத்துக்கு வெளியே போய் அகழியில் விழும்படி சுருங்கைகள் அமைந்திருந்தன. வீடுகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீர் சேக்கடை வழியாகத் தெருக்களில் அமைந்திருந்த சுருங்கைகளில் சென்று விழுந்தது. அந்தச் சுருங்கை நீர் பெரிய சுருங்கைகளில் கலந்தது. பெரிய சுருங்கைகளிலிருந்து நகரத்துக் கழிவு நீர் மதிலைச் சூழ்ந்திருந்த அகழியில் விழுந்தது. அகழியில் கழிவு நீர் விழும் இடம் யானையின் தும்பிக்கை போல அமைந்திருந்தது.
'நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து
கடுமா களிறணத்துக் கைவிடு நீர்போலும்
நெடுநீர் மலிபுனல் நீண்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது.'
என்று பரிபாடல் (20. 104-07) கூறுகிறது.
“நெடிய பெரிய சுருங்கை நடுவாகிய வழியைப் போந்து பெருந் தன்மை மிக்க புனலைக் கடிமதில் சொரியும்பொழுது, அப்புனல் கடுமா வாகிய களிறுகள் கையை எடுத்துவிடும் நீர்போலும்” என்பது பரிமேழலகர் உரை.
நகரத்தில் சேக்கடை நீர் செல்லும் சுருங்கை வெளியே தெரியாதபடி மேற்புறம் மூடி மறைக்கப்பட்ருந்தது. ‘சுருங்கை வீதி’ (சிலம்பு. ஊர்காண். 65) என்பதற்கு, ‘மறைத்துப் படுத்த வீதி வாய்த்தலை’) என்று அரும்பதவுரையாசிரியரும், ‘சுருங்கை - கரந்து படை’ என்று அடியார்க்கு நல்லாரும் உரை எழுதுவது காண்க. சுருங்கைகள் வீதிகளின் ஓரங்களில் அமையாமல், நடுவில் அமைந்திருந்தன போலும்.
கரந்துபடை என்னும் பொருளுள்ள சுருங்கை என்பது கிரேக்க மொழிச் சொல். கோவில்கள் : ஐயை என்னும் கொற்றவைக்கு மதுரைமா நகரத்திலே கோவில் இருந்தது. (சிலம்பு : கட்டுரை. 107-109, ஷை 125; ஷை 181).
மதுரைமா நகரத்தின் காவல் தெய்வமாகிய மதுராபதிக்கும் ஒரு கோயில் இருந்தது. (சிலம்பு : அழற்படு. 156, கட்டுரை 1-13) மதுராபதிக்கு மதுரைமா தெய்வம் என்னும் பெயர் உண்டு (சிலம்பு: கட்டுரை 177)
சிவபெருமான், திருமால், பலதேவன், முருகன் முதலிய தெய்வங்களுக்கும் மதுரையில் கோவில்கள் இருந்தன. ஜைன பௌத்தப் பள்ளிகளும் இருந்தன.
‘நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்'
என்று சிலம்பு (ஊர்காண். 7-11) கூறுகின்றது.
சிவபெருமான் கோவிலில் வெள்ளியம்பலம் இருந்தது.
'அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்'
என்று சிலம்பு (பதிகம் 39-41) கூறுகிறது.
இந்த வெள்ளியம்பலத்திலே பெருவழுதி என்னும் பாண்டியன் துஞ்சினான் என்றும், ஆனதுபற்றி அப்பாண்டியன் 'வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி' என்று பெயர் பெற்றான் என்றும் புறநானூறு (58ஆம் செய்யுள்) கூறுகிறது.
'திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியும்'
என்று மதுரைக்காஞ்சி (461-467), மதுரையில் பௌத்த பள்ளி இருந்ததைக் கூறுகின்றது. சமணப் பள்ளி (ஜைனப் பள்ளி) இருந்ததையும் கூறுகின்றது:
‘வண்டுபடப் பழுதிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவட் டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை
யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்பப் மேக்குயர்ந் தோங்கி
யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்’
(மதுரைக்காஞ்சி 475 -487)
என்று மதுரைக்காஞ்சி கூறுகின்றது.
சிந்தாதேவி கோவில் என்னும் கலைமகள் கோவிலும் மதுரையில் இருந்தது. இது பௌத்தப் பள்ளியைச் சார்ந்து இருந்தது.
'இருங்கலை நியமத்து தேவி சிந்தாவிளக்கு'
என்றும்,
'சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கு நாமிசைப் பாவை’
என்றும் மணிமேகலை (பாத்திர மரபு 10-11, 17-18) கூறுகின்றது.
ஆபுத்திரன் என்பவன்,
'தக்கிண மதுரை தான்சென் றெய்தி
சிந்தா விளக்கின் செழுங்கலை நியமம்'
சேர்ந்தான் என்று மணிமேகலை (13 ஆபுத்திரன் திறம் (105–108) கூறுகின்றது.
உய்யானம் :
உய்யானம் என்னும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. இது அரசனுக்கு உரிய பூங்கா. அரண்மனையைச் சார்ந்து இருந்தது.
பெருந்துறை :
வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகரத்துக்குப் போக ஆற்றில் பாலம் அமைந்திருக்கவில்லை. ஆற்றைக் கடக்க ஓடங்கள் இருந்தன. இந்த ஓடங்களின் முன்புறத்தில் யானை முகம், குதிரை முகம், சிங்க முகங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. ஓடங்களில் ஏறி ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு மக்கள் சென்றனர்.
'பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
அரிமுக வம்பியும் அருந்துறை இயக்கும்
பெருந்துறை’
என்று சிலம்பு (புறவஞ்சி : 176 - 78) கூறுகிறது.
புறஞ்சேரி :
கோட்டை மதிலுக்கும் காவற் காட்டுக்கும் வெளியே புறஞ்சேரி இருந்தது. புறஞ்சேரியில் தவசிகள் மட்டும் தங்கியிருந்தார்கள்.
'அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர்'
என்று சிலம்பு (புறஞ்சேரி. 195 - 196) கூறுகிறது.
மதுரை நகரம் எறிந்ததா?
மதுரைமா நகரத்தைக் கண்ணகியார் எரியூட்டி அழித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பலரும் அப்படித்தான் கருதுகிறார்கள். நகர் அல்லது நகரம் என்பதற்குப் பட்டணம் என்றும் அரண்மனை என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. நகரம் எரியுண்டது,
✽✽✽