மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/020

19. வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள்[1]

முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகளில் பழனியும் முக்கியமான இடம். மற்ற படைவீடுகளைப் போலவே பழனியும் மிகப் பழமையானது. சங்க காலத்திலே பழனி, பொதினி என்று பெயர் பெற்றிருந்தது. பொதினி என்னும் பெயர் பிற்காலத்தில் பழனி என்று மருவி வழங்குகிறது. பழனி (பொதினி)யைச் சூழ்ந்திருந்த நாடு அந்தக் காலத்தில் ஆவிநாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. ஆவி நாட்டையரசாண்ட அரசர் ஆவியர் என்றும் வையாவிக்கோ என்றும் வேள் ஆவி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மாமூலனார், வேள் ஆவியரசரையும் அவர்களுடைய பொதினியையும் கூறுகிறார்.

“வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட் டியானைப் பொதினி
(அகம். 1 : 1-4)

என்றும்,

“முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி
(அகம்.61: 15-16)

என்றும் அவர் கூறுகிறார்.

ஆவி நாட்டில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை நக்கீரர், ‘ஆவினன் குடி முருகன்’ என்று கூறுகிறார். (‘ஆவினன்குடி அசைதலும் உரியன்’. திருமுருகாற்றுப்படை, 176)

பொதினி (பழனி)யும் வையாவி நாடும் இந்தக் காலத்திலே பாண்டி நாட்டிலே மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுகாவில் இணைந்திருக்கின்றன. சங்க காலத்திலே இவை கொங்கு நாட்டைச் சார்ந்திருந்தன. பழைய கொங்குநாட்டின் தென்கோடியிலே வையாவி நாடும் பொதினியும் அமைந்திருந்தன.

கடைச்சங்க காலத்திலே வையாவி நாட்டை அரசாண்ட வேள் ஆவிக் கோக்களில் பேர்போன அரசன் பேகன் என்பவன். அவனை வையாவிக் கோப் பெரும் பேகன் என்றும் கூறுவர். வையாவிக் கோப் பெரும் பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான். புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவன் பொன்னையும் பொருளையும் வழங்கினான். ஆகவே கபிலர் அவனைக் “கைவண் ஈகைக் கடுமான் பேகன்” என்று கூறுகிறார். (புறம் 144).

மேகம் சூழ்ந்து மழை பெய்கிறபோது மயில்கள் மகிழ்ச்சியினால் தோகையை விரித்து ஆடுவது இயல்பு. மேகத்தைக் கண்டால் மயில்களுக்கு மகிழ்ச்சியுண்டாகும். இந்த இயற்கையின்படி மயில் ஒன்று மழைகாலத்தில் தன் தோகையை விரித்து அசைந்து ஆடிற்று. அதனைக்கண்ட வையாவிக் கோப் பெரும்பேகன், அந்த மயில் குளிரினால் நடுங்கி வருந்துகிறது என்று கருதினான். கருதி, அந்த மயிலுக்குப் போர்வையை விரித்துப் போர்த்தினான். மகிழ்ச்சியினால் ஆடுகிற மயிலைக் குளிரினால் நடுங்குகிறது என்று கருதியது அவனுடைய அறியாமை என்று கருதுவதைவிட அவனுடைய வள்ளன்மையான அருள் உள்ளத்தைக் காட்டுகிறது என்று கருதுவது சிறப்பாகும். பாணர் அவனுடைய இந்தச் செயலைப் பாராட்டியுள்ளார்.

“மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான்பேகன்.”
(புறம் 145)

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் தாம் பாடிய சிறுபாண் ஆற்றுப் படையில், பேகன் மயிலுக்குப் போர்வையளித்ததைக் கூறுகிறார்.

“வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்.”
(சிறுபாண். 84-87)

வையாவிக் கோப்பெரும்பேகனுக்குக் கண்ணகி என்ற பெயர் கொண்ட மனைவி ஒருத்தியிருந்தாள். சங்க காலத்திலே கண்ணகி என்னும் பெயர் மகளிர்க்குப் பரவலாக வழங்கப்பட்டது. கண்ணகி என்பது கண்ணழகி என்பதன் திரிபு. மகளிரின் கண் அழகைச் சுட்டுகிற பெயர்களை மகளிர்க்குச் சூட்டுவது வழக்கம். இந்த வழக்கம் அக்காலத்திலும் இக்காலத்திலும் இருந்து வருகிறது. கண்ணகி (கண்ணழகி), நக்கண்ணை, காமக்கண்ணி, கயற்கண்ணி, மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அஞ்சனாட்சி முதலான பெயர்களைச் சூட்டுவது அக்காலத்தும் இக்காலத்தும் உள்ள மரபு. கோவலனுடைய மனைவியின் பெயரும் கண்ணழகியே.

வையாவிக் கோப் பெரும் பேகன் தன்னுடைய மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியோடு வாழ்ந்து வந்தான். இதனையறிந்த புலவர்கள் வள்ளலாகிய இவனிடஞ் சென்று இவனுடைய மனைவியோடு சேர்ந்து வாழும்படி வேண்டினார்கள். கண்ணகி காரணமாக வையாவிக் கோப் பெரும்பேகனைப் பெருங்குன்றூர் கிழார் (புறம் 146) கபிலர் (புறம் 143) பாணர் (புறம் 144, 145) அரிசில்கிழார் (புறம் 146) முதலானோர் பாடினார்கள்.

வையாவி நாட்டு அரசர்களில் பேர் போன இன்னொரு வேள் அரசன் பெயர் பதுமன் என்பது. இவனை வேள் ஆவிக் கோமான் பதுமன் என்றுங் கூறுவர். வையாவிக் கோமான் பதுமனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தேவி என்று பெயரிட்டான். அந்தப் பெண்களைச் சேர அரசர் குலத்தில் மணஞ் செய்து கொடுத்தான். மூத்த மகளைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இளைய மகளைப் பெறையர் என்னும் சேர மன்னர் மரபைச் சேர்ந்த செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். செல்வக் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டையரசாண்டான். குடக்கோ நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் தாயாமி முறைத் தமயன் தம்பியர் ஆவர். வையாவிக்கோ பதுமனுடைய மகளிரான தமக்கை தங்கையரை இந்தத் தமயன் தம்பிமார் திருமணஞ் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். எனவே இவர்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு பெண்களும் இரண்டிரண்டு மக்களைப் பெற்றெடுத்தனர். அவர்களுடைய பெயர் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் (4-ம் பத்தின் தலைவன்), ஆடுகோட்பாடுச் சேரலாதன் (6-ம் பத்தின் தலைவன்), பெருஞ்சேரல் இரும்பொறை (8-ம் பத்தின் தலைவன்) குட்டுவன் இரும்பொறை என்பவை. இவர்களுடைய வழிமுறை கீழே காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு, வேள் ஆவிக் கோமான் பதுமனுடைய இரண்டு பெண்களுக்கு நான்கு அரசகுமாரர்கள் பிறந்தனர். ஆனால், பதுமனுடைய மூத்த மகளை மணஞ் செய்திருந்த குடக்கோ நெடுஞ்சேரலாதன் இன்னொரு மனைவியையும் மணஞ் செய்திருந்தான். அந்த மனைவி சோழஅரசன் மகளான நற்கோணை என்பவள். நற்சோணைக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகவே, குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரிடத்திலும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். நற்சோணைக்குப் பிறந்த மக்கள், தமிழக வரலாற்றில் புகழ் பெற்றவனான செங்குட்டுவனும் தமிழில் ஆதிகாவியத்தை இயற்றிப் புகழ் பெற்றவரான இளங்கோவடிகளும் ஆவர். குடக்கோ நெடுஞ் சேரலாதனுடைய வழிமுறையைக் கீழே காண்க.

இவர்களில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் (மாற்றாந்தாய் வழித்) தமயன் தம்பியர் ஆவர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் இவர்களுக்குத் தாயாதிச் சகோதரர் ஆவர். இந்தச் சகோதரர் எல்லோரும் ஏறத்தாழச் சமகாலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்கள். இவர்களில் இளங்கோவடிகளும் குட்டுவன் இரும்பொறையும் தவிர மற்றவர் எல்லோரும் பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துக்குத் தலைவர் ஆவர். இவர்களில் அதிக காலம் அரசாண்டவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் ஐம்பத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவனுடைய மற்றச் சசோதரர்கள் எல்லோரும் இவனைவிடக் குறைந்த காலம் அரசாண்டார்கள். இவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு ஆண்டும் தாயாதித் தமயனான பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு ஆண்டும் அரசாண்டார்கள். இவர்கள் எல்லோரையும்விட அதிகக் காலம் (55 ஆண்டு) அரசாண்டவன் செங்குட்டுவன் ஒருவனே.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். அவன் விழாச் செய்தது அவனுடைய ஐம்பதாம் ஆட்சி ஆண்டில் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த விழாவைச் சிறப்புச் செய்ய அயல் நாடுகளிலிருந்து சில அரசர்கள் வந்திருந்தனர் என்றும் அவர்களில் இலங்கை அரசனான கயவாகுவும் (கஜபாகுவும்) ஒருவன் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு (கஜபாகு) வேந்தன்’ கி.பி. 171 முதல் 193 வரையில் இருபத்திரண்டு ஆண்டு இலங்கையை அரசாண்டான் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. எனவே, கஜபாகுவும் செங்குட்டுவனும் சமகாலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றனர். கஜபாகு ஏறத்தாழ கி.பி. 175-ல் வஞ்சிமா நகரத்துக்கு வந்து பத்தினி விழாவைச் சிறப்புச் செய்தான் என்று கொள்வோமானால், அந்த ஆண்டு செங்குட்டுவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டாக அமைகிறது. செங்குட்டுவன் 55-ஆண்டு ஆட்சி செய்தபடியால், அவன் கி.பி. 175க்குப் பிறகு ஐந்து ஆண்டு ஆட்சி செய்து கி.பி. 180-ல் இறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். எனவே, செங்குட்டுவன் ஏறத்தாழ கி.பி. 125 முதல் 180 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இதில் இவனுடைய இளவரசுக் காலமும் சேர்ந்தது.

செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு ஆண்டு அரசாண்டான். ஆகையால் அவன் ஏறத்தாழ கி.பி. 72 முதல் 130 வரையில் அரசாண்டிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பெண் கொடுத்த மாமனாகிய வேள் ஆவிக்கோ பதுமன் அவனைவிட மூத்தவனான படியால் அவன் ஏறத்தாழ கி.பி. 20 முதல் 80 வரையிலும் வாழ்ந்தவனாதல் வேண்டும் என்று கருதலாம். ஆகவே வேள் ஆவிக்கோ பதுமன் கி.பி. முதல் நூற்றாண்டிலும், அவனுடைய மருமகனான நெடுஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலும், அவன் மகனான சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள் எனக் கருதலாம்.

வையாவிக்கோ மன்னர்களைப் பற்றி இவ்வளவுதான் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. அவர்கள், சங்க காலத்தில் கொங்கு நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்திருந்த வையாவி நாட்டை அரசாண்டார்கள் என்றும் சேர அரசரோடும் கொங்குச் சேரரோடும் உறவு கொண்டிருந்தனர் என்றும் தெரிகின்றனர். சங்க காலத்துக்குப் பிறகு வையாவி நாடும் பொதினி நகரமும் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டுப் பாண்டிய நாட்டோடு இணைந்துவிட்டது. கடைச்சங்க காலத்தில் பொதினி என்று பெயர் பெற்றிருந்த நகரம் இப்போது பழனி என்று புகழ்பெற்று விளங்குகிறது. இந்த வரலாறுகளைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம்.

  1. பழனி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்புமலர். 2.9.1973.