மருதநில மங்கை/உடன்வாழ் பகை
கணவன், காதலித்து மணந்த தன்னை மறந்து, பரத்தை வீடு சென்று வாழ்கிறான் எனும் கவலையால் கலங்கினாள் ஒரு பெண், அவன் அன்பைப் பெற மாட்டாத தனக்கு அழகும் வேண்டுமோ என எண்ணினாள். அதனால், அவன் பிரிந்த பின்னர், மயிரை மாசுபோக, எண்ணெய் இட்டு நீராட்டி, அழகாக வாரி மணம் நாறும் மலர் சூட்டி மகிழ வேண்டும் எனும் நினைவற்றுப் போனாள். உறக்கத்தை மறந்தாள். கணவன் வருகையை எதிர்நோக்கி இரவு பகலாகக் காத்திருந்தாள். அதனால், பண்டு மலர் போலும் அழகுடையவாய் விளங்கிய அவள் கண்கள், தம் நீல நிறத்தை இழந்து, பொன்னிறப் பசலை பெற்று ஒளி இழந்தன. மாவின் இளந்தளிர்மீது, மகரந்தப் பொடி உதிர்ந்து கிடப்பது போல் மாமையும், கணங்கும் பெற்றுப் பேரழகுடைய அவள் மேனி, அவ்வழகு கெட்டுத் தளர்ந்தது.
அந்நிலை யுற்றும், அவள் ஒருவாறு உயிர் தாங்கியிருந்தாள். ஆனால், அந்தோ! அவ்வூரார் அவளை வாளா விடவில்லை, அவர்கள், அவளைக் காணும் போதெல்லாம், “அதோ போகும் அவள், பரத்தை வீடு சென்று வாழும் அக்கொடியோன் மனைவி!” எனச் சுட்டிக் கூறத் தொடங்கினர். அப்பழிச் சொல்லைப் பலமுறை கேட்டு வருந்தினாள். அதைக் கேட்டு வருந்தி வாழ்வதினும், உயிர் விட்டு அழிதல் நன்று என நினைத்தது அவள் நல்ல உள்ளம். அம்மட்டோ! கணவனால் முதலில் காதலிக்கப் பெற்றுப் பின்னர்க் கைவிடப் பெற்ற பரத்தையர், அவள்பால் வந்து, அவள் கணவன் செய்யும் கொடுமைகளைக் கூறிக் கண்ணீர் விட்டனர். “கணவன் என்னை அழ விடுவதோடு அமையாது, ஊர்ப் பெண்களையும் அழ விடுகின்றனனே. அவர்கள் சிந்தை நொந்து சிந்தும் கண்ணீரால், அவனுக்கும், அவனோடு உறவு கொண்ட எனக்கும் என்னென்ன கேடுகள் வந்து வாய்க்குமோ!’ என எண்ணிக் கலங்கினாள். அவள் கவலையின் எல்லை அத்துடன் முடிவுற்றிலது. கணவன், அவன் விரும்பும் அழகிகளைத் தேர்ந்து தந்து துணை புரியும் பாணனும், அறியாத பரத்தை வீடு சென்று வாழ, அப்பாணன், அவனைத் தான் அறிந்த இடங்களில் தேடியும் காணாமையால், கலங்கி, இறுதியில், அவன் அவன் வீட்டிற்குச் சென்றிருப்பான் எனும் நினைவால், அங்கு வந்து, அங்கு வருந்தியிருக்கும் அவள்பால், “அம்மையே! அவன் எங்கே? அவன் சென்ற இடம் எது?” என்று கேட்டுச் சென்றான். காணவும் வெறுக்கும் அப்பாணன், தன் மனைக்கே வந்து, தன் கணவன் சென்ற பரத்தை வீடு எது எனத் தன்னையே கேட்பதைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விட்டுக் கிடந்தாள். கணவன் பிரிவால் உண்டான வருத்தத்தோடு, ஊரார் உரைக்கும் பழிச்சொல், அவன் பரத்தையர் உரைக்கும் கொடுமை, பாணன் வருகை ஆகியவற்றால் உண்டாம் வருத்தமும் ஒன்று கூடி அவளைப் பெரிதும் வருத்தின. அவ்வாறு வருந்தியிருப்பாள் முன், ஒரு நாள், அவள் கணவன் வந்து நின்றான். வந்து வாளா இராது, “பெண்ணே! என் பிரிவால் நீ பெரிதும் வருந்தினை போலும் ! கவலையால் உன் மேனி அழகு இழந்து விட்டதே! உன் கண்கள் ஒளி இழந்து விட்டனவே! உறக்கத்தை மறந்தாயோ! கூந்தலை மாசறக் கழுவி மலர் சூட்ட வேண்டும் என்பதையும் மறந்தனையோ?” என்று கேட்கத் தொடங்கினான்.
கணவனைக் காணவும் வெறுத்த அவள், அவன் கேட்கும் கேள்விகளைக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்டாள். “அன்ப! நீ வரும் வழியில் உள்ள தாமரைப் பொய்கையில், நன்கு பருத்து, மலரும் பருவம் பெற்று விளங்கும் இரண்டு அரும்புகளுக்கிடையே, ஒரு தனி மலர் ஓங்கி மலர்ந்து நிற்க, கரைவளர் மரத்தில் வாழும் பறவை ஒன்று தாழப்பறந்து, அதை அலைக்க, அதனால், அம்மலர் சிறிதே வளைத்து தாழ, அதே நிலையில் அம்மலரின் அகத்தே படிந்திருந்த பனிநீர் தெறித்து, அவ்வரும்புகள் மீது விழும் காட்சியைக் கண்டு வந்த உன் கருத்தில், எவ்வித உணர்ச்சியும் உண்டாகவில்லையோ? அக்காட்சி, கணவன் பரத்தையர் பின் சென்று விட்டானாகச், சிந்தும் கண்ணீர் கொங்கையில் வீழ்ந்து சிதறக் கலங்கி நிற்கும் அவன் மனைவியின் துயர் நிலையை நினைப்பூட்ட வில்லையோ?” என்று கேட்டுச் சினந்தாள்.
பின்னர், “அன்ப! நீ என்னைப் பிரியாதிருக்க வேண்டும். நான் இழந்த என் நலனை மீண்டும் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஊரார் உரைக்கும் பழி ஒழிந்தால் போதும் என்றே எண்ணுகிறேன். என் கண்கள் கவலையற்று உறங்க வேண்டும். அதற்கு, நீ என்னை அகலாதிருத்தல் வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. பரத்தையர் என்பால் வந்து, உன்னைப் பற்றிக் குறை கூறுதல் ஒழிந்தால் போதும் என்றே ஆசைப்படுகிறேன். அன்ப! கூந்தலை வாரி முடித்து, மலர் சூட்டி மகிழ நான் விரும்பவில்லை. உன்னைத் தேடிப் பாணன் என் வீட்டிற்கு வாராதிருத்தல் வேண்டும் என்றே விரும்புகிறது என் உள்ளம்!” என்று கூறிப் புலந்தாள்.
அவள் அவ்வாறு கூறிப் புலந்தாளேனும், அவள் நெஞ்சு அவனை ஏற்றுக் கொள்ளத் துடித்தது. நெஞ்சின் துடிப்பையும், அதை அடக்கி ஆளுதல் தன்னால் ஆகாது என்பதையும் அறிந்தாள். அதனால் அதுகாறும் ஊடியிருந்து அவனுக்கு வாயில் விட மறுத்தவள், அவனை நேர்க்கி, “அன்ப! பரத்தை வீடு சென்று பழிகொண்டு நிற்கும் உன்னைக் கண்டும், எனக்குத் துணையாய் என்பால் தங்குவதை விடுத்து, உன்பால் வந்து உன் ஏவல் வழி நிற்கத் துடிப்பதோடு, என்னையும் உன் வயத்தளாக்க வற்புறுத்துகிறது என் நெஞ்சம். ஐய! என்னுடன் வாழ்ந்தும், எனக்கே பகையாகும் இந்நெஞ்சைத் துணையெனக் கொண்ட என்னால், உன்டால் காதல் கொள்ளப் பண்டு தூண்டிய உன்மார்ப்பைத் தழுவேன் எனக் கூறிப் புலத்தலும், புலந்த அந் நிலையிலேயே நிற்றலும் இயலுமோ?” என்று கூறி, அவனை ஏற்று இன்புற்றாள்.
“இணைஇரண்டு இயைந்து ஒத்தமுகை நாப்பண், பிறிது
துணை இன்றித், தளைவிட்ட தாமரைத் தனிமலர், [யாதும்
திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு இணைபவள்
அரிமதர் மழைக்கண்நீர், அலர்முலைமேல் தெளிப்பபோல்
தகைமலர்ப் பழனத்த புள்ஒற்ற ஒசிந்துஒல்கி 5
மிகநளிை சேர்ந்த அம்முகைமிசை அம்மலர்
அகஇதழ்த் தண்பனி உறைத்தரும் ஊர! கேள்;
தண்தளிர்த்தகை பூத்த, தாது.எழில் நலம்செலக்
கொண்டுநீ மாறிய கவின்பெறல் வேண்டேன்மன்
உண்டாதல்சாலா என்உயிர் சாதல் உணர்ந்துநின் 10
பெண்டு எனப் பிறர்கூறும் பழிமாறப்பெறு கற்பின்,
பொன்எனப் பசந்தகண், போதுஎழில் நலம்செலத்;
தொன்நலம் இழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன்;
நின் அணங்குற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
என்னுழை வந்துநொந்து உரையாமல் பெறுகற்பின்; 15
மாசற மண்ணுற்ற மணிஏசும் இருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டுஆர்க்கும் கவின்பெறல் வேண்டேன்மன்;
நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை
நீசேர்ந்த இல்வினாய் வாராமல் பெறுகற்பின்,
ஆங்க, 20
கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்
இடையும், நிறையும் எளிதோ? நிற்காணின்,
கடவுபு, கைத்தங்கா நெஞ்சு என்னும், தம்மோடு
உடன்வாழ்பகை உடையார்க்கு.”
1. முகை–அரும்பு; நாப்பண்–நடுவே; 2. தளைவிட்ட–மலர்ந்த; 3. இறைஞ்சினள்–கவிழ்ந்து; வீழ்பவர்க்கு–விரும்பிய கணவனுக்காக; இனைபவள்–வருந்துபவள்; 4. அரி–செங்கோடுகள் படர்ந்த; 5. தகை–அழகுடைய; புள்ஒற்ற–பறவை தாக்க; 7. உறைத்தரும்–துளிர்க்கும்; 8. தகைபூத்த–அழகைப் பெற்ற; செல–அழிய; 10. சாலா–அமையாத; 11. பெறுகற்பின்–பெற்றால்; 14, நின்–உன்னால்; அணங்குற்றவர்–வருந்திய பரத்தையர்; 16. மண்ணுற்ற– கழுவப்பெற்ற; மணி ஏதும்–நிறத்தால் நீல மணியை வெல்லும்; 17. வீ–மலர்; 21. கடைஇய–தூண்டிய; தோயலம்தழுவேன்; 22. இடை ஊடல் நிறை–உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிறை என்னும் குணம்; 23. கடவுபு–செலுத்தி; கைத்தங்காது–என்பால் தங்காது.