மருதநில மங்கை/உன்னைக் கழறுதல் வேண்டுமோ?

35


உன்னைக் கழறுதல் வேண்டுமோ?

ரசர் குடியில் வந்தவன் அவன். பணியாத பகைவர்களைப் பாழ் செய்யவல்ல பேராற்றலும், தன்னை அடைந்து, தன் ஆட்சிக் கீழ் வாழ்வார்களைப் பேணிக் காக்கும் பேரருளும் ஒருங்கே உடையவன். அவன் பகைவர், ஞாயிற்றின் ஒளி கண்டு ஓடி மறையும் இருளே போல், அவனை எதிர்த்து வாழ மாட்டாது இறந்து மறைவர். அவன் குடை நிழல் வாழ்வார், முழுமதி கண்டு மகிழ்ச்சிக் கடலுள் மூழ்குவார்போல், அவன் அருளால், அன்பால் அகம் மகிழ்ந்து வாழ்வர்.

அடங்காதாரை அழிக்கும் ஆற்றலும், அடைந்தாரை ஆட்கொள்ளும் அருளும் கொண்டு, ஆட்சி புரிந்து வந்த அவன், உலகத்து உயர்ந்தோர் அனைவரும் ஒருங்கே புகழ் தற்கேற்ற, வேறு பல பண்புகளுக்கும் நிலைக்களமாய் விளங்கினான். அவன் வாய்மையில் வழுவான். ஆலின்கீழ் அமர்ந்து, தன்யால் அறம் கேட்டு நிற்பார்க்கு, உண்மைப் பொருளல்லது பொய்ப் பொருளைக் கூறி அறியாக் சிவ பரம்பொருள் போல், அவன் எவரிடத்தும், எக்காலத்தும், மெய்யே பேசுவன். பொய் பேசி அறியான், இவ்வியல்புண்மையை ஐயமற உணர்ந்த உலகப் பெரியார்கள், அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். வரையாது வழங்கும் வள்ளன்மைக் குணம் வாய்க்கப் பெற்றவன் அவன். கடல் நீர் உண்டு கருத்து, உண்ட அந்நீரைத் தப்பாது பெய்து உலகத்து உயிர்களை உய்விக்கும் மேகம்போல், தன்னைச் சுற்றி வாழ்ந்து தன் அருள் வேண்டி நிற்பார்க்கு இல்லை எனக் கூறியறியாது, தான் ஈட்டிய பெரும் பொருளை, அவர் அனைவர்க்கும் வாரி வாரி வழங்கும் அவனை, உலகம் வாயார வாழ்த்திற்று. செங்கோல் நெறி நிற்கும் செம்மையுள்ளம் அவன் உள்ளம். ‘இவர் வேண்டாதார். ஆகவே, இவரை, இவர் வாழ்நாள் முடியா முன்பே, அழித்துக் கொணர்க. இவர் வேண்டியவர். ஆகவே, இவர் வாழ்நாள் முடியினும், மேலும் சிலநாள் வாழவிடுக!’ என்று கருதாது, விருப்பு வெறுப்பு அற்று, அவரவர்க்கு வகுத்த வாழ்நாளிற் கேற்ப, அவர் உயிரைக் கைப்பற்றிக் கடமை நெறி நிற்கும் காலக் கடவுள்போல், தன் ஆட்சிக்கீழ் வாழ்வார் அனைவரையும் ஒப்ப மதித்து, அவரவர் தம் குற்றம் குணங்களுக்கு ஏற்ப, அவர்களை ஒறுத்தும், ஒறுக்காது விடுத்தும் நல்லாட்சி மேற்கொண்ட அவனை, உலகம் நாவார வாழ்த்திற்று.

புல்லிதழ் பூவிற்கும் உண்டு. ஆண்மை, அருள் வாய்மை, வள்ளன்மை, நடுவு நிலைமை முதலாம் நல்ல இயல்புகளின் நிலைக்களமாய் நின்று நாடாண்டிருந்த அவனும், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு இழுக்கினான். அவன் ஆட்சி நலத்தால், அவன் நாட்டு மக்கள் மகிழ்ந்தனரேனும், அவன் ஒழுக்கக் கேட்டால், அவன் மனைவி வருந்தினாள். அவன் வாய்மை வழுவாதவன் என உலகம் புகழ்வதைக் கேட்டவள் அவள். அதனால், ‘உன்னைப் பிரியேன்!’ என உரைத்த அவன் சொல்லை நம்பி, அவனை மணந்தாள். இன்று, அவன் பரத்தையர் ஒழுக்கத்தால் தன்னைப் பிரிந்து, தான் உரைத்த உறுதிமொழியை அழித்துவிட்டது காண அவள் வருத்தம் மிகுந்தது. மலர் போன்ற அவள் கண்கள், மழைபோல் நீர் சொரியக் கலங்கினாள். ‘அவன் ஒரு கொடையாளன். தன்னை வந்தடைந்தாரை வாழ்விக்கும் வள்ளல் !’ என உலகோர் அவனைப் புகழ்வதைக் கேட்டவள் அவள். அதனால், அவன் மார்பு தனக்குப் பேரின்பம் நல்கும் என எதிர்நோக்கி அவனை மணந்தாள். இன்று, அவன் பரத்தையர் தொடர்பு கொண்டுவிட்டமையால், அம்மார்பு, தனக்கு இன்பம் அளிக்க மறுப்பது காண, அவள் மனக் கலக்கம் பெரிதாயிற்று. மனக்கவலை அவள் உடல் நலத்தைக் கெடுத்தது, கைவளைகள் தாமே கழன்றோடுமளவு, அவள் தோள்கள் தளர்ந்தன. ‘தம் உரிமை பறிபோகக் கண்டு, வருந்தி வந்து குறைகூறி நிற்பார்க்கு, முறை வழங்கும் செங்கோலன்!’ எனச் சிறந்த பெரியோர்கள் பலரும், அவனைப் புகழ்ந்துரைத்தல் கேட்டு, அவனைக் காதலித்தாள். இன்று, அவன், அவன் பிரிவால் வருந்தும் தன் துயரைப் போக்காமையோடு, அவ் வருத்தத்திற்கு அவனே காரணமாதலும் கண்டு கலங்கினாள். கலங்கிக் கண்ணீர் விட்டு அழுது அழுது, அவள் முகம் ஒளி இழந்து கெட்டது.

அரசன் ஆட்சி நலத்தையும், அவன்பால் இன்று காணலாம் ஒழுக்கக் கேட்டையும், அதனால் அவன் மனைவி அடையும் மனக்கலக்கத்தையும், அவன் நாட்டில் வாழும் நல்லார் ஒருவர் கண்டார். அவன் நல்லாட்சியால் அவனுக்குண்டாம் புகழினும், அவன் ஒழுக்கக் கேட்டால் அவனுக்குண்டாம் பழி பெரிதாமே என வருந்தினார். அரசனுக்கு அறிவுரை கூற வேண்டுவது தம் போலும் ஆன்றோர் கடமையாம் என உணர்ந்தார். உடனே, பரத்தையர் சேரி சென்று அரசனைக் கண்டார். அவன் ஆண்மைச் சிறப்பை, அருள் திறத்தைப் புகழ்ந்தார். வாய்மை, வள்ளன்மை, வழுவா நெறிமுறை இவற்றால் அவனுக்குண்டாம் புகழின் பெருமையை நினைவூட்டினார். பின்னர், அவன் சொல்லை நம்பி, அவன்பால் பெறலாம் இன்பத்தை எதிர்நோக்கி, அவன் அருளை வேண்டி, அவனை மணந்த அவன் மனைவியின் துயர்க் கொடுமைகளை எடுத்துக் கூறினார்.

இறுதியாக, “ஐய! உன் சொல்லை நம்பி உன்னை மணந்த இவள், நீ அவ்வுரை மறந்து பிரிந்து வாழ்வதால் வருந்துவதை உலகோர் காணுவரேல், ‘வாய்மை வழுவாதவன்’ எனப் பெற்ற உன் புகழ் கெட்டுவிடுமே! உன்பால் இடையறா இன்பம் பெறலாம் என நம்பி, உன்னை மணந்த இவள், உன்னால் துன்புறுவதை உலகோர் காணுவரேல், ‘வந்தோரை வாழ்விக்கும் வள்ளல்’ எனப் பெற்ற உன் புகழ் கெட்டுவிடுமே! உன் அருள் ஒன்றையே எதிர் நோக்கி உன்னை மணந்த இவள், நீ இவள் துயர் அறிந்து போக்கக் கருதாது, அத்துயர்க்கும் நீயே காரணமாதலை உலகோர் அறியின், ‘முறைபிறழா மன்னவன்’ எனப் பெற்ற உன் புகழ் பாழாமே!” என அவன் மேற்கொண்ட பரத்தையர் தொடர்பு, அவன் புகழ்க் கேட்டிற்குக் காரணமாதலை எடுத்துக்காட்டினார். காட்டிய பின்னர், “ஐய! நீயோ, உலகில் வாழ்வார் எவரே ஆயினும், எத்தகைய கொடியரே ஆயினும், அவர் துயர் துடைத்து வாழ்வளிக்கும் விழுமியோனாகுவை. அத்தகைய உன்னை, 'நீயே துணை’ என உன்னை வந்தடைந்த உன் மனைவி, தன் இயற்கை அழகும் இழந்து அழிகிறாள். அவள் அவ்வாறு வருந்த, நீ ஈங்கு வந்து வாழ்கின்றாய். இது நனி மிகக் கொடிது!’ எனக் கூறிக் கண்டித்தல் தகுமோ? அவ்வாறு நான் கடிந்து கூறித் திருத்துமாறு பிழை நெறியுடையையாதல் உனக்குப் பொருந்தாது!” என்று கூறிக் கண்டித்தார்.

“ஈண்டு நீர்மிசைத் தோன்றி இருள்சீக்கும் சுடரேபோல்,
வேண்டாதார் நெஞ்சுஉட்க வெருவந்த கொடுமையும்
நீண்டு தோன்று உயர்குடை நிழல்எனச் சேர்ந்தார்க்குக்
காண்தகு மதிஎன்னக் கதிர்விடு தண்மையும்,
மாண்டநின் ஒழுக்கத்தால் மறுவின்றி வியன் ஞாலத்து 5
யாண்டோரும் தொழுதேத்தும் இரங்குஇசை முரசினாய்!

ஐயம்தீர்ந்து ‘யார்கண்ணும், அருந்தவமுதல்வன்போல்
பொய்கூறாய்’ என நின்னைப் புகழ்வது கெடாதோதான்,
நல்கி நீ தெளித்தசொல் நசைஎனத் தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனிமல்கக் காணுங்கால்? 10

‘சுரந்தவான் பொழிந்தன்றாச் சூழநின்று யாவர்க்கும்
இரந்தது நசைவாட்டாய் என்பது கெடாதோதான்,
கலங்கு அஞர்உற்று நின்கமழ்மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர்தொடி இறைஊரக் காணுங்கால்?

‘உறைவரை நிறுத்தகோல் உயிர்திறம் பெயர்ப்பான்போல் 15
முறைசெய்தி என நின்னை மொழிவது கெடாதோதான்,
அழிபடர் வருத்த நின் அளிவேண்டிக் கலங்கியாள்
பழிதபு வாள்முகம் பசப்பு:ஊரக் காணுங்கால்?

ஆங்கு,
தொன்னலம் இழந்தோள், நீ துணைஎனப் புணர்ந்தவள் 20
இன்னுறல் வியன்மார்ப! இனையையால் கொடிது என
நின்னையான் கழறுதல் வேண்டுமோ
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?”

தலைவன் பரத்தையிற் பிரியத், தலைவி வருத்தம் கண்ட சான்றோர், தலைவனை அடுத்து, அவன் பரத்தையர் ஒழுக்கம் நீங்கக் கூறியது இது.

1. ஈண்டு – இவ்வுலகில்; நீர்மிசை – கடல்மேல்; சீக்கும் – அழிக்கும்; 2. வேண்டாதார் – பகைவர்; உட்க – நடுங்க; வெருவந்த – அச்சம் தரும்; 4. தண்மையும் – அருளும்; 5. மாண்ட– மாட்சிமைப் பட்ட; 6, யாண்டோரும் – உலகில் உள்ள அனைவரும்; இரங்கு – ஒலிக்கும்; 7. அருந்தவ முதல்வன் – ஆலின்கீழ் இருந்து அறம் உரைக்கும் தட்சிணாமூர்த்தி; 9. நல்கி – அன்புகாட்டி; தெளித்த – உறுதி கூறிய; நசை–பற்றுக்கோடு; 10. பனி – நீர்; 11. வான் – மேகம்; பொழிந்தற்றா. – பெய்தது போல; 12. நசைவாட்டாய் – வேண்டி யதைக் கொடாமல்; அவர் ஆசையை அழிக்கமாட்டாய்; 13. அஞர் – துன்பம்; 14. கோல் – வேலைப்பாடுமிக்க; இறை – முன்கை ; ஊர – கழல; 15. உயிர் திறம் பெயர்ப்பான் – உயிரைக் கவரும் காலன்; 17. அழிபடர் – மிக்க துன்பம்; 18. தபு – நீங்கிய; 21. இன்உறல் வியன்மார்பு – மணந்த மகளிர்க்கு இன்பம் தரும் அகன்ற மார்பு; இனையை–இத்தன்மையனாயினாய்; 23. என்னோர்கள் – எத்தகை யோர்; இடும்பை – துன்பத்தை; களைந்தீவாய் – போக்குகின்ற.

—x—