மருதநில மங்கை/புல்லல் எம் புதல்வனை!

14


புல்லல் எம் புதல்வனை!

செந்நெல் வளம் சிறந்த மருத நில மகள் அவள். அவள் கணவன், அவளையும், அவள் மகனையும் மறந்து, ஊரில் உள்ள பரத்தையர் பின்செய்று, அவர் ஆடல் பாடல்களால் அறிவிழந்து திரிந்தான். அதனால் வருந்தியிருக்கும் அவள், ஒரு நாள், தன் வயலைப் பார்க்கச் சென்றிருந்தாள். பறவைகள் பல கூடிப் பெரிய ஆரவாரம் செய்து கொண்டிருந்த வயலில், செந்நெல் செழிக்க வளர்ந்து, கதிர் முற்றிக் காட்சி அளித்தது. அவ்வயலைச் சுற்றி நோக்கினாள். வயலிடையே ஒரு தாமரை மலர் மலர்ந்திருந்தது. அதன் தண்டு முள் நிறைந்தது என்பதையும் பாராமல், ஒரு கதிர், அதன் மீது படிந்து, அதை அடியோடு சாய்த்து, அம்மலர்மீது கிடந்து உயர்ந்து தோன்றிற்று. அவ்வழகிய காட்சியைக் கண் குளிரக் கண்டிருந்தாள். அக்காட்சியைக் கண்டுகளிக்கக் கணவன் தன்னுடன் இல்லையே என்று கலங்கினாள். இந்நேரம், அவன், பல்லோர் புகழ, அரங்கின்மீது ஆடி மகிழ்விக்கும் அழகிய பரத்தையையும், அவள் தலைக் கோலத்தில் பிணிக்கப் பெற்று, அவள் நெற்றியில் வந்து தாழும் வயந்தகம் எனும் அணியால், அவள் அழகு, முன்னினும் அதிகமாகித் தோன்றுவதையும் கண்டு களித்திருப்பான் எனக் கருதிக் கலங்கினாள். அந்நிலையே, தன்னை அணுகும் உயிர்களைத் தன் முட்களால் ஊறு செய்யும் தாமரை போல், தன்னை அடைந்தாரைத் தன் காதல் கொடுமையால் துன்புறுத்தும் இயல்புடையான் என்பதை அறிந்தும், அவனையும் தன் வயத்தனாக்கிக் கொண்டு அவனுக்கு அழகு செய்து கிடப்பாளும் ஒருத்தி உள்ளனளே என அவன் விரும்பும் பரத்தையை நினைத்து வருந்தினாள்.

அந்நினைவு அலைக்க, மேலும் அங்கு நில்லாது. தன் வீடடைந்தாள். அவள் மகன், தெருவில் நடைதேர் உருட்டி ஆடிக் கொண்டிருந்தான். அந்நிலையில், மார்பில் மணம் நாறும் சந்தனம் பூசி, கழுத்தில் முத்தாரம் அணிந்து, தலையில் பன்னிற மலர்களால் ஆன கண்ணி சூடித் தன்னை ஒப்பனை செய்து கொண்டு, தான் விரும்பும் பரத்தை வீடு நோக்கிச் செல்லும் அவள் கணவன், தெருவில் ஆடி மகிழும் மகனைக் கண்டான். மகன் மேல் உண்டான காதலால், பரத்தையை மறந்தான். அவனை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

மகனோடு வந்து நிற்கும் கணவன் கோலத்தைக் கண்டாள் அவள். அவன் கோலம், அவன் பரத்தை வீடு செல்லும் கருத்தோடு பண்ணிக் கொண்டது என்பதைத் தெளிவாக உணர்த்திற்று. அதனால், கணவன், ‘என்மீது கொண்ட காதலால் வந்திலன். மகனைக் கண்டவன், அவனைக் காணான்போல் செல்வது கூடாது. அவனை மனையின் சேர்த்துப் போதல் வேண்டும் எனும் கருத்தால், ஈங்கு வந்துளான்!” என்று கருதினாள்.

அக் கருத்தோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள். மகன், அவன் மார்பிற் பூசிய சந்தனத்தை அழிப்பதையும், முத்து மாலையை ஈர்த்து அறுப்பதையும், மாலையைப் பிய்த்து எறிவதையும் கண்டாள். உடனே, அவனை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தன் செயல் கண்டு நாணி நிற்கும் கணவனை நோக்கி, “ஐய! இவனை எடுத்து அனைத்துக் கொள்ளாதே, இவன் நனிமிகக் கொடியவன், உன் மார்பிற் சந்தனத்தைச் சிதைப்பன். முத்தாரத்தை அறுப்பன். கண்ணியைக் கலைப்பன். சந்தனம் சிதைவுற்றதையும், மாலை அறுபட்டதையும், கண்ணிகசங்கியதையும், உன் பரத்தைக் காதலி பார்ப்பாளாயின், இது நீ வேறு ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவளைக் கூடியதால் நேர்ந்தது எனக் கொண்டு, உன்னைச் சினப்பள். புலந்து புல்லாது செல்வள். அதனால் நீ வருந்துவை. ஆகவே, இவனை விடுத்து, ஈண்டு இமைப் பொழுதும் நில்லாது, அவள்பால் விரைந்து செல்க!” எனக் கூறி வாயில் அடைத்தாள்.

“புள்இமிழ் அகல்வயல் ஒலிசெந்நெல் இடைப்பூத்த
முள்அரைத், தாமரை முழுமுதல் சாய்த்துத் தன்
வள்ளிதழ் உறநீடி வயங்கிய ஒருகதிர்,
அவைபுகழ் அரங்கின்மேல் ஆடுவாள், அணிநுதல்

வகைபெறச் செரீஇய வயந்தகம்போல் தோன்றும் 5
தகைபெறு கழனிஅம் தண்துறை ஊர! கேள்;
அணியொடு வந்துஈங்குஎம் புதல்வனைக் கொள்ளாதி;

மணிபுரை செவ்வாய் நின்மார்பகலம் நனைப்பதால்,
தோய்ந்தாரை அறிகுவேன் யான்எனக் கமழும்நின்
சாந்தினால் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ? 10

புல்லல் எம்புதல்வனைப், புகல்அகல் நின்மார்பின்,
பல்காழ்முத்து அணிஆரம் பற்றினன் பரிவானால்,
மாண்இழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ?

கண்டேனம் புதல்வனைக் கொள்ளாதி, நின்சென்னி 15
வண்டுஇமிர் வகைஇணர் வாங்கினன் பரிவானால்;
நண்ணியார்க் காட்டுவது இதுஎனக், கமழும்நின்
கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ?

என வாங்கு,
பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி 20
நீங்காய் இகவாய், நெடுங்கடை நில்லாதி,
ஆங்கே அவர்வயின் சென்றி, அணிசிதைப்பான்
ஈங்குஎம் புதல்வனைத் தந்து.”

பரத்தையிற் பிரிந்து வந்து புதல்வன் வாயிலாகப் புகுந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

1. இமிழ்–ஆரவாரிக்கும்; ஒலி–முற்றி ஒலிக்கும், 2. அரை–தண்டு, 3. வயங்கிய–விளங்கிய 5. வயந்தகம்–நெற்றியில் அணியும் ஒருவகை அணி 8. மணிபுரை–பவளமணி போன்ற; 9. தோய்ந்தார்–புணர்ந்த மகளிர்; 10. சாய்குவள்–வருந்துவள்; 11. புல்லல்– அணைத்துக் கொள்ளாதே; புகல்–பரத்தையர் புகழும்; 12. பல்காழ்–பலவிடம், பற்றினன் பரிவானால்–பற்றி அறுப்பான், 16. வாங்கினன்–பற்றி, 17. நண்ணியார்–புணர்ந்த மகளிர்; 20. பூங்கண்–அழகிய கண்: 21. இகவாய்–கடவாய், நெடுங்கடை–பெரிய வாயில்; 22. சென்றி–செல்வாயாக.