மருதநில மங்கை/பெயரனை யாம் கொள்வேம்

16


பெயரனை யாம் கொள்வேம்

ளம் மிக்க குடியில் வாழ்க்கைப்பட்டாள் ஒருத்தி. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்ந்தனர். விருந்தோம்பல் முதலாம் இல்லறக் கடமையில் கருத்துடையவளாய் வாழ்ந்தாள் அவள். அவள் மேற்கொண்ட இல்வாழ்க்கைக்கு உற்ற துணையாய் உறுபொருள் ஈட்டி அளித்தும், அவள்பால் குறைவறியாப் பேரன்பு கொண்டும் வாழ்ந்திருந்தான் அவன். அவர் மனையறத்தை மாட்சிமைப் படுத்தும் நன்கலமாய் வந்து பிறந்தான் ஒரு மகன். தன் மனையறக் கடன்களுக்கிடையே, மகனைப் பேணி வளர்க்கும் பெரிய பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாள். மகன் நடைதேர் பயிலும் பருவம் பெற்றான். அவன் வளர வளர, அவனைப் பேணும் பொறுப்பு பெருகிற்று. அதனால் கணவனோடு கலந்து மகிழ்தல் குறைந்தது. கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டான். நாட்கள் செல்லச் செல்ல, அவன் அவ்வொழுக்கத்தில் ஆழ்ந்து போனான். மகன் வளர்ப்பிலும், மனையறக் கடமையிலும் கருத்துடையவளாய் வாழ்ந்தமையால் கணவனைப் பேணும் கடமையில் சிறிதே தளர்ந்தாளாயினும், அவன் பரத்தைமை ஒழுக்கம், அவளைப் பெருந்துயர்க்கு உள்ளாக்கிற்று. அவள் பெரிதும் கலங்கினாள்.

ஒரு நாள், கணவன் மேற்கொண்ட ஒழுக்கக் கேட்டை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கலங்கியிருந்தவள், தான் இருந்த இடம் நோக்கித், தன் மகன் நடைதேர் உருட்டி வருவதைக் கண்டாள். அவள் கலக்கம் அகன்றது. மகனைக் கண்ட மகிழ்ச்சி, கணவனைப் பற்றிய கலக்கத்தை மறக்கப் பண்ணிற்று.

மணி போன்ற அவன் வாய். அவ்வாயினின்றும் வெளிப்படும் பொருளோடு பொருந்தா மழலை. மழலை வழங்கும் வாயினின்றும் வழிந்தோடும் உமிழ்நீர். அவ்வெச்சிலால் நனைந்த மார்பணி. மணம் நாறும் தலை மயிர். அம்மயிரில் முடிக்கப் பெற்ற பிறை அணி. அப்பிறையினின்றும் தொங்கும் முத்துவடம். அவ்வடத்தின் ஈற்றில் கிடந்து நெற்றியில் வந்து தவழும் சுட்டி. உள் உருவைப் புறங்காட்டும் மெல்லிய உயர்ந்த ஆடை, பரல் ஒலிக்கும் சதங்கை. சதங்கை அணிந்த கால்களை ஆடை தடுக்கவும் நில்லாது, தாயிடத்தே பால் உண்ணும் நினைவும் அற்று, நடைதேர் உருட்டி நடைபயிலும் அவன் முயற்சி ஆகிய இவற்றைக் கண்டு மகிழ்ந்தாள்.

ஆடும். மகனை ஓடிப் பற்றினாள். தன் முன் நிறுத்தினாள். “மகனே! நம் வீடு நோக்கி வரும் விருந்தினரை ஓம்பும் வேலை மிகுதியால், உன்னை எடுத்து மகிழவும் ஓய்வில்லை . ஓய்வற்று உழலும் என்னை , நீயும் நினைத்துப் பார்ப்பதில்லை!” என்று கூறி அன்பால் கண்டித்தாள். பின்னர், “மகனே! உன் மழலை மொழி கேட்டு மகிழும் என் உள்ளத்தை மேலும் மகிழ்விக்கும் வண்ணம், அறுசுவை கூடிய இனிய உணவை உண்டவர், அதற்கு மேலும் அமிழ்தம் உண்டு மகிழ்தல்போல், நானும் மகிழுமாறு, மழலை மொழி வழங்கிய உன் வாயால், உன்னைப் பேணி வளர்க்கும் பேரன்பு மிக்க செவிலியர், ஆடல் பாடல் துணையால் கற்றுத் தந்த சொற்களைத் திருந்தக் கூறி என்னைத் தித்திக்கப்பண்ணுவாய்!” என்று கூறி ஏங்கினாள்.

அவள், அவனைத் தன் முகத்திற்கு நேரே நிறுத்தி, அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுது, ஆங்கு வந்த அவள் கணவன், தன் வருகையை அவள் அறிந்து கொள்ளாவாறு அவள் பின் ஒளிந்து நின்றான், அவ்வாறு ஒளிந்து கொண்டதோடு, தன் மனைவியின் முன்னும், மகன் பின்னும் நின்று, தன் வருகையைப் பார்த்துவிட்ட தோழியையும், தன் வருகையை அறிவியாவாறு, கை அமர்த்தி அடக்கி விட்டான். அதனால், அவன் வருகையை அவன் மனைவி அறிந்திலள். தாய் தன்னை முன்னே. நிறுத்தி, அதைக் கூறிக் கொண்டிருக்குங்கால், மகன் தாயின் பின் வந்து நிற்கும் தந்தையைக் கண்டு கொண்டான். அதனால், தாய் கேட்பதை மறந்து, “அப்பா! -அப்பா!” என இரைந்து அழைக்கத் தொடங்கி விட்டான்,

அவள், மகன் செயல் கண்டு மருண்டாள், அவன் அவ்வாறு கூறுவது ஏன் என அறியாது ‘ விழித்தாள். அவனை வாரி எடுத்துத் தன் தோள் மீது கிடத்தி அணைத்துக் கொண்டாள். அந்நிலையிலும், தன் கண்முன் தந்தையே நிற்பதால், மீண்டும் அவன், “அப்பா! அப்பா!” என்றே அழைக்கத் தொடங்கினான். தான் ஒன்று கேட்க, அவன் ஒன்று கூறும் செயல், அவளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை நினைவூட்டிற்று. அதனால் தன்முன் நிற்கும் தோழிபால், “தோழி! நம் நோய் தீர்க்கும் மருந்தாவான் இவன் என்று கருதி நாம் இவனைப் பாராட்ட, இவன் நாம் கேட்டதற்கு விடை தாராது, தனக்குத் தொடர்பல்லாத, நமக்குத் துன்பத்தைத் தரவல்ல எதையோ ஒன்றைக் கூறுகிறான். இவன் செயல், முன்பு ஒரு நாள் நம்மால் வளர்த்து விடப் பெற்ற பாணன், சேய்மைக்கண் வரக்கண்டு அவனை அழைத்து, நாம் ஒன்று வினவ அவன் செய்த தவறு அவன் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தமையால், வாய்மறந்து, ஏனாதிப் பாடி எனும் பரத்தையர் சேரியில் வாழ்கிறோம்!’ எனக் கூறி விரைந்து மறைந்து போன செயலை நினைப்பூட்டி நகை விளைக்கிறதன்றோ?” என்று கூறினாள்.

கணவன் வருகையையும், அவன் வருகை அறிந்தே, மகன், “அப்பா ! அப்பா !” என அழைக்கிறான் என்பதையும், அறிந்து கொள்ளாமையால், அவ்வாறு கூறினவள், பின்னர், மகன் தன் பின்புறமே நோக்கி நிற்பதாலும், தன் முன் நிற்கும் தோழியின் கண்களும், அவ்வப்போது, தன் பின் புறத்தையே நோக்கியதாலும், கணவன் வந்து பின்புறத்தே நிற்கிறான் என்பதை உணர்ந்து கொண்டதும், “தோழி! கணவர் வந்துளார் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் அவர் வருகை கோட்டையுள் வாழ்வாரை அழித்தற்கு வேண்டிய படைக்கலங்களைப் போட்டுச் செல்லும் கருத்தோடு, கள்வர் சிலர் அக்கோட்டையுள் நுழைவதுபோல் நம் நலத்தை அழித்து, நலம் அழிந்த நம் நிலை கண்டு நகைக்கும் கருத்தோடு வந்ததல்லது, நம்பால் கொண்ட அன்பால் வந்திலர் என்பதை அறிவேனாதலின், அவர் வருகை கண்டு மகிழ்ந்திலேன்!” என்று கூறினாள்.

மனைவி, தன்மீது குற்றம் சாட்டிக் கூறவே, மறைவிடம் விட்டு, அவள் முன் வந்து நின்றான். நின்று, “பெண்ணே ! பெரிய மதில் சூழ்ந்த அகன்ற கோட்டையைக் காக்கும் காவலர், கோட்டையுள் கள்வர் எவரும் புகாதிருக்கவும், கள்வரால் ஏதம் உண்டாகும் என அஞ்சிய அச்சத்தால், கள்வரைக் கண்டோம் எனக் கூறிக் கலங்குவார் போல், எம்மை விட்டு அகன்று நின்று, நான் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாகச் சொல்லிச், சினந்து வருந்தாதே. நான் உன் அடிமை. உன் ஆணையை மீறும் உள்ள உறுதி இவ்வடிமைக்கு இல்லை!” என்று கூறிப் பணிந்து நின்றான்.

“குற்றம் புரிந்திலேன்!” எனக் கணவன் கூறக்கேட்ட அவள், அவன் குற்றம் உடையன் என்பதை ஊர் அறியச் செய்வது , தன் கடனே எனக் கருதினாள். அதற்கேற்ப, அவனும், பரத்தையைப் புணர்ந்தவிடத்து அவள் மாலையின் மலர்கள் சில, இதழ் அற்று அவன்மீது உதிர, அதை அறியாது, அம்மலர்த் துகள்களோடு, அவள் முன் வந்து நின்றான். அதை அதுவரையும் காணதிருந்தவன், அவள் தன்மீதும் குற்றம் சாட்டிக் கூறவே, அவன் ஒருமுறை தன்னை நோக்கிக் கொண்டான். தன்மீது மலர் இதழ்கள் சிந்திக் கிடப்பதை அறிந்தான். அதை அவள் அறியாவாறு அகற்றிவிட எண்ணினான். உடனே பெருங்காற்று வீசும் இடமாகப் பார்த்து நின்றான். மலர் இதழ்கள், காற்றில் பறந்து மறைந்தன. அதை அவள் அறியக் கூடாது என அவன் விரும்பினாலும், அவள் அதை அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டதை அவன் அறியக் கூறி, “ஆகவே, அன்ப! நீ என் மகன் மீது கொண்ட அன்பால் வந்தவன் அல்லை!” என்று கூறிக் குற்றம் சாட்டினாள்.

அவனால் ஏதும் கூற முடியவில்லை. தன் குற்றத்தை மறைப்பது இயலாது என்பதை அறிந்தான். ஆயினும், அதை ஒப்புக் கொள்ளவும் அஞ்சினான். செய்வதறியாது விழித்தான். இறுதியில் மகன் துணையால் அவள் மனத்தை மாற்றத் துணிந்தான். உடனே, “பெண்ணே நான் குற்றம் அற்றவன் என்று கூறகிறேன். அதை ஏற்றுக் கொள்ள நீ மறுக்கிறாய். அவ்வாறே நான் குற்றம் புரிந்தவனாகவே கொள். ஆனால் அது கருதி மாறுபட்டு நிற்பதற்கு இதுவல்ல சமயம். அதோ நிற்கிறான் நம் மகன். அவனைத் தனியே விடுத்து, நாம் முரண்பட்டு நிற்பது முறையாகாது. கன்று தனித்திருக்கப் பார்த்திராது பசு. நாம் பார்த்துப் பிரிந்து நிற்கிறோம். இந்நிலை இனியும் வேண்டாம். கன்றைக் கண்டு விரைந்தடையும் ஆ போல், நம் மகனை, இருவரும் ஏந்தி இன்புறுவோமாக!” என்று கூறிக் கொண்டே, மனைவியின் தோளிற் கிடக்கும் மகனைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான். அக்காட்சி கண்டு அகம் மகிழ்ந்தாள் அவள்.

“மைஅற விளங்கிய மணிமருள் அவ்வாய், தன்
மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப்

பொலம்பிறையுள் தாழ்ந்த புனைவினை உருள்கலன்,
நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர,

உறவுஎஞ்சாது இடைகாட்டும் உடைகழல் அந்துகில், 5
அரிபொலி கிண்கிணி ஆர்ப்புஓவா அடிதட்பப்,
பாலோடு அலர்ந்த முலைமறந்து, முற்றத்துக்
கால்வல் தேர்கையின் இயக்கி, நடைபயிற்றா
ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
போல வரும்என் உயிர். 10

பெரும! விருந்தொடு கைதுவா எம்மையும் உள்ளாய்,
பெருந்தெருவில் கொண்டாடி, ஞாயர் பயிற்றத்
திருந்துபு நீகற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்துஒவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப்
பெருந் தகாய் ! கூறு சில 15

எல்இழாய்! சேய்நின்று, நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே,
வாய்ஓடி ஏனாதிப் பாடியம் என்றற்றா,
நோய்நாம் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட

ஒவாது, அடுத்து அடுத்து, அத்தா அத்தா என்பான் மாண
வேய் மென்தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்றுஇவன், 20
வாய் உள்ளிற் போகான் அரோ

உள்ளி, உழையே ஒருங்கு படைவிடக்
கள்ளர் படர்தந்தது போலத், தாம்எம்மை
எள்ளுமார் வந்தாரே ஈங்கு

ஏதப்பாடு எண்ணிப் புரிசைவியல் உள்ளோர், 25
கள்வரைக் காணாது கண்டேம் என்பார் போலச்

சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்; நின்
ஆணை கடக்கிற்பார் யார்?

அதிர்வில் படிறுஎருக்கி வந்துஎன் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி 30
உதிர்துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர்வளி நின்றாய் நீசெல்.

இனி, எல்லா! யாம் தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி யாதொன்றும் எம்கண் மறுத்தா இல்லாயின்,
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் 35
தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்
ஆபோல் படர்தக நாம்.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தன் மகனைத் தழுவி நின்ற தலைவி அறியாவாறு சென்று நின்று, அவளோடு உறழ்ந்து கூறி ஊடல் தீர்ந்தது இது.

1. அவ்வாய்–அழகிய வாய்; 2. மெய்பெறா–பொருள் செறியாத; நனைத்தர–நனைய; 3. பொலம் பிறை–பொன்னால் பிறைபோல் பண்ணிய அணி: உருள்கலன்–சுட்டி; 5. எஞ்சாது–முழுமையும்; உடைகழல்–உடுத்த உடை கழன்று போகும்; 6. அரிபொலி–உள்ளே இட்ட பரலால் அழகுபெற்ற; தட்ப தடுக்க; 7. அலர்ந்த–பருத்த; 9. பெருவிறல்–முருகன்; 11. கைதூவா–கைஓயாத; 12. ஞாயர்–செவிலித்தாயர்; பயிற்ற–கற்றுத்தர; 17, வாய் ஓடி– வாய்மறந்து; ஏனாதிப்பாடி – ஏனாதி என்பான் பெயரால் எழுந்த ஒரு பரத்தையர் சேரி; 21. வாய்உள்ளல்– வாயினின்றும்; 22. உழையே–கோட்டையின் உள்ளே; 24. எள்ளுமார்–நகைத்தற் பொருட்டு; 28. கடக்கிற்பவர்–மீறுபவர்; 29. படிறு–வஞ்சனை; எருக்கி–வருத்தி; 30. முச்சி–உச்சியினின்றும்; 32. எதிர்வளி – எதிர்க்காற்று; 33. கைந்நீவி–கைகடந்து; 35. எந்தை–என்தந்தை; 36. தாவா–குறையாத; யாத்துழி–கட்டியுள்ள இடத்திற்கு.