மருத்துவ களஞ்சியப் பேரகராதி/சிறப்புரை



சிறப்புரை

வறுமைச் குழலுக்கு ஆளான குடும்பத்தில் பிறந்து
பெற்றோர் செய்தொழிலில் தானும் உழைத்தவாரே,
பள்ளியில் சேர்ந்து படித்திடத் தானே வலியச் சென்று சேர்ந்து,
ஓய்வு வாய்த்த போதெல்லாம் ஏடுகள் பல பயின்று,
இனம் பிள்ளையாய்த் தந்தை பெரியாரின் பேச்சினைக் கேட்டு,
சமூகத்தின் மூடநம்பிக்கைகளை மறுக்கும் துணிவெய்தி,
அறிஞர் அண்ணாவின் உரையினைக் கேட்டு ஊக்கங்கொண்டு,
பள்ளியிலேயே கட்டுரை வரைவதில் வல்லவனாகி,
பின்னர் பேச்சாற்றலும் காட்டிப் பரிசுகள் பல பெற்று,
தமிழறிஞர் பலராலும் பாராட்டப்பட்ட மாணவ மணியாகி,
அண்ணாமலை பல்கலைக் கழகம் சார்ந்து தமிழின் முதுகலைஞனாகி,
தமிழ்த் தொண்டே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு,
வாய்த்த கல்லூரி ஆசிரியர் பணியையும் ஊதியத்தையும் துறந்து
தமிழ் ஆக்கத்திற்கே முழுநேரம் உழைத்திடும் உறுதி பூண்டு,
ஏடுகட்கு எழுதுவதையே வாழ்க்கைத் தொழிலாக ஏற்று,
தென்மொழிகள் புத்தக நிறுவனத்தின் பணியின் சேர்ந்து,
அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் கலை ஏடுகளும் வெளிவர
மூலநூலைச் சீர்செய்து மெய்ப்புத் திருத்துவதில் திறன்காட்டி,
முத்திங்கள் இதழான 'புத்தக நண்ப'னைச் சீருற வெளியிட்டு,
யுனெஸ்கோவின் அறிவியல் பேழையாம் 'கூரியர்' ஏட்டின்
தமிழ்ப்பதிப்பை வெளியிடும் பணியிலும் பங்கேற்றுத்
தன் மதிநுட்பம் காட்டியும் நிறுவனத்தார் மதிப்பைப் பெற்றும்
பொறுப்பாசிரியராய் உயர்ந்து, கால் நூற்றாண்டாக
அதன் செவிலித் தாயாகச் சீராட்டி வளர்த்து வருபவர்தான்
என் நண்பர் மணவை முஸ்தபா என்னும் தமிழ் மறவர்

'கூரியர்' ஏட்டினைத் தமிழில் வெளியிடும் சிறப்பினை யுனெஸ்கோ பாராட்டிய செய்தி கண்டு உவந்த தமிழுள்ளங் கொண்ட காயிதேமில்லத் இஸ்மாயீல் சாகிப் வழங்கிய அன்புப் பாராட்டும் வாழ்த்தும் முஸ்தபாவின் தமிழ்த் தொண்டினை மேலும் ஊக்குவித்தது. அவரது அயராத அறிவியல் தமிழ்த் தொண்டினை மேலும் ஊக்குவித்தது. அவரது அரியத் தமிழ்த் தொண்டு தமிழுலகின் மதிப்பைப் பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி விருதும், திரு.வி.க. விருதும் இன்னும் பலவகை பாராட்டுகளையும் பெற்ற பெருமை அவருக்கு உண்டு. பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைத் தாக்கம் அவரை மூடநம்பிக்கையை விரட்டுவதிலும் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதிலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைவழித் தாக்கம் அறிவியல் சிந்தனையைத் தமிழில் வளர்ப்பதிலும் அவரை முனைந்திடச் செய்தது.

அவரது குறிக்கோளுக்குக் 'கூரியர்' பொறுப்பு நல்வாய்ப்பாயிற்று. கூரியர் வளர்ச்சிக்கு அவரது தொண்டு நல்வாய்ப்பாயிற்று. இந்த இஸ்லாமியத் தமிழர், தமிழிலும் தேர்ச்சி பெற்றதன்றி, அடிப்படை வடமொழிப் பயிற்சியும் பெற்றவராவார். எம்மொழிப் பயிற்சியும் எத்துறை அறிவும் திறமையும் எல்லாம் எந்தாய்மொழி தமிழின் ஆக்கத்திற்கே எனும் திண்மையர் அவர். "நான் நிறையப் படிக்கிறேன், படித்தவைகளைப் பற்றி ஆழச் சிந்திக்கிறேன். அவை என் மனதில் அப்படியே படிந்து விடுகின்றன. எழுதும்போது அவையெல்லாம் அப்படியே என் எழுத்தில் பதிகின்றன" என்று தன் எழுத்துத் திறமையை ஐயுற்ற ஆசிரியருக்கு மாணவர் முஸ்தபா கூறிய பதில் "விளையும் பயிர் முளையிலே" தந்த காட்சி. "விளைந்த பயிர் முதிர்விலே" அதன் பயனை உலகு பாராட்டுகிறது.

பேச்சும் எழுத்தும் மாந்தர் எண்ணத்தை வெளியிட ஏதுவாகும் தலைசிறந்த கருவி மொழி. அவ்வகையில் மனித உணர்வுகளை, பண்பாடுகளை, ஒழுக்க நெறிகளை, உயர் சிந்தனையை வெளியிடுவதற்கு முழு ஆற்றல் பெற்ற நிறைமொழியாக விளங்குவதே செந்தமிழ். தமிழ்மொழி பேசி வாழ்ந்துவரும் மக்கள் நாகரிக வளர்ச்சியும் அறிவியல் சார்ந்த முயற்சிகளிலும் மேம்பட்டு விளங்கிய காலம் வரையில், அவர் தம் மொழியும் அதற்கேற்ற சொற்களையும் கண்டு வளம் பெற்று வந்துள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின் வாழ்வில் சமய வழிப்பட்ட சிந்தனையும் புராணக் கற்பனையுமே மேம்பட்டு நின்றதால், உலகியல் வாழ்விலும் அறிவியல் எண்ண வளர்ச்சியிலும் பின்தங்கி விட்டனராதலின், தமிழ்மொழியும் அறிவியல் துறையில் புத்தாக்கம் பெறும் வாய்ப்பிழந்தது. ஆங்கில நாட்டவர் ஆட்சியின் விளைவாக நமது மக்கள் பயில நேரிட்ட ஆங்கிலமே மேல்நாடுகளில் வியத்தகு வளர்ச்சி பெற்று வந்த அறிவியல் கருத்துக்களை நாமறிய வாய்த்ததொரு வாயிலாக அமைந்தது. நம்மைப் பொறுத்தவரையில் 'ஆங்கிலமே' புத்துலக அறிவியல் ஒளி வழங்கிய பலகணியாகும்.

எழுத்தறிவு பெறாத மக்கள் பெரும்பான்மையினராக இருந்த நிலையிலும், ஏட்டறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் பெற முடியாத வறுமைச் சூழலிலும் - அறிவியல் கருத்துக்கள், விஞ்ஞான விளக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை. மக்களின் பலவகை மூடநம்பிக்கைகள் ஒரு வகையில் அறிவு நாட்டத்திற்குத் தடையாயிற்று எனினும், அறிவியல் உண்மை விளக்கங்கள் தாய்மொழியில் விளக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த கல்வியைத் தமிழிலேயே பயில்வதற்கு வழிசெய்யும் முயற்சியாகப் பலநூறு ஏடுகள் தமிழில் வெளிவந்துள்ளன. கல்லூரியில் பயிலும் மாணவர் களுக்கான உயர்கல்வி ஏடுகளும் பல இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அனைத்தையும் தமிழிலேயே பயிலச் செய்யும் அளவிற்கோ, மாணவர்களே பயில முன்வரும் அளவிற்கோ பல்கலை அறிவியற் பாடங்கள் அனைத்தும் தமிழில் வெளிவருவதற்கான முயற்சி தொடர வேண்டியுள்ளது. மருத்துவம், பொறியியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கால்நடை மருத்துவம் முதலான துறைகள் பலவற்றையும் தமிழில் வழங்கச் செய்யும் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் நாள்தோறும் வெளிவரும் புதிய உண்மைகளையும் நுணுக்கங்களையும் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்து தமிழில் அரங்கேற்றும் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வகைப்படுத்தப் பட்டிருந்த அறிவியல் துறைகள் இன்று மேலும் பல கிளைகளாக விரிவடைந்திருப்பது மட்டுமின்றி, கடந்த ஒரு நூற்றாண்டில் அறிவியல் எய்திய வளர்ச்சி விகிதத்தை இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளிலேயே எட்டி யுள்ளது. இன்றோ அதைப் போன்று மேலும் பல மடங்கு விரைவுடன் அறிவியல் வளர்ந்து வருகின்றது. அது உலகத்தின் பல நாடுகளிலும் (சில மொழிகளிலும்) நாளும் உருவாகிவரும் அறிவியல் வளர்ச்சியின் விரைவு என்பதால், நாம் அந்த விரைவுக்கு ஈடுகொடுக்கும் சூழலில்லை. எனினும் அவற்றின் பயனை நாமும் உடனுக்குடன் பெறுவதற்கு இன்றியமையாத மொழிபெயர்ப்புத் திறனை மிகப் பெரிய அளவில் மட்டுமின்றி, விரைவாகச் செய்திடவல்ல கணிப்பொறிப் பயன் பாட்டையும் மேற்கொண்டு நிறைவேற்றிட முனைய வேண்டும். அப்படிப்பட்ட வழிமுறைகள் மேற்கொள்ளப் பட்டாலன்றி, நமது முன்னேற்றம் மட்டுமன்றி, வாழ்க்கை நிலையும் மேலும் பின்னடைவுக்கு ஆளாகி, நாம் உலகோரால் கருதப்பட வேண்டாதவர் ஆவோம்.

இதைத் தெளிவாக உணர்ந்தவர் திரு.மணவை முஸ்தபா. அறிவியல் கருத்தைத் தமிழில் தர முடியுமா? மாணவர்களின் அறிவியல் பயிற்சி மொழியாகும் தகுதி தமிழுக்கு உண்டா? இருப்பினும் பயன்படுமா? என்றெல்லாம் ஐயுறவு எழுப்பியவர்கட்கெல்லாம் - தகுந்த விடை அளித்தவர் அவர்.

"தமிழில்" எந்தத் (அறிவியல்) துறைச் செய்தியையும், சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் கூற முடியும், எத்தகைய அறிவியல்நுட்பக் கருத்துக்களையும், தெளிவாகவும் திட்பமாகவும் சொல்ல முடியும். ஏனெனில் தமிழ் கடந்தகால மொழி மட்டுமல்ல; நிகழ்கால மொழியுமாகும் ஆற்றல்மிக்க எதிர்கால மொழியுமாகும். இன்று முதல் தமிழில் எதையும் கூற முடியும் என்பதை வெறும் சொல்லால் அல்ல; செயலால் நிரூபிப்பதே என் வாழ்வின் ஒரே இலட்சியம், "குறிக்கோள்" என்று ஒரு மேடையில் திரு. முஸ்தபா கூறிய உறுதிமொழியைச் செயற்படுத்திக் காட்டவே தன்னை முழுவதுமாய் அப்பணிக்கே ஒப்படைத்துக் கொண்டுள்ளவர் அவர்.

எந்தப் பொருள் குறித்த சொல்லாயினும் மக்கள் வழக்கில் இடம்பெற்று அப்பொருளைக் குறிக்கும் ஒரே சொல்லாக இது நிலைபெறுவதைப் பொறுத்தே ஒரே சொல்லாக அமையலாகும்.

சைக்கிள் - ஈருருளி, மிதிவண்டி எனவும்,
பிளசர் கார் - மகிழுந்து, சீருந்து எனவும்,
பஸ் - பேருந்து, பயணி உந்து எனவும்,
டிரெயின் - தொடர்வண்டி - நீராவி வண்டி எனவும்,
ஏரோபிளேன் - விமானம், வானூர்தி எனவும்.

வழங்குவது போன்ற நிலை இடைக்காலத்தே தொடர்வது இயல்பே. மலேசியாவிலும் சிங்கையிலும் பெட்ரோல் பம்பு எண்ணெய்க்கடை என்றும், டிபன் சாப்பிட்டீர்களா என்று கேட்கப்படும் காலைச் சிற்றுணவைக் குறிக்கும் வகையில் பசியாறியாச்சா என்றும் கேட்கின்றனர். இது வழக்காற்றலால் ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்தும் திறன் பெறுவதைக் காட்டும். தமிழகத்தில் எண்ணெய்க் கடை, உணவுக்கு வேண்டிய எண்ணெய்களை விற்கும் இடத்தைக் குறிக்கும். மேலும் கெரசின் மண்ணெண்ணை’ என்று வழங்குவது போன்று பெட்ரோலுக்கும், டீசலுக்கும் தமிழில் தனிச்சொல் அமையவில்லை. அவைபோன்று மருத்துவத் துறை சார்ந்த Dettol; Tincture; Turpentine; Terramycin முதலான சொற்களுக்கு ஈடாகத் தனித் தமிழ்ச் சொல் இல்லை. அப்படியே வழங்கலும் பொருந்தும். ஆங்கிலத்தில் இடம்பெற்ற அறிவியல் கலைச்சொற்கள் அவை உருக்கொண்ட வகையால் பருப்பொருளை உணர்த்துவதிலும், அப்பொருளையும், இயல்புகளையும் விளைவுகளையும் நுணுக்கமாகப் புலப்படுத்தும் திறமுடையவையாதலின், சொல்லுக்குச் சொல் இதுவே தமிழ்ச்சொல் எனக் கொண்டு வரையறுத்துக் கையாளுதல் மொழிபெயர்ப்பில் எளிதன்று சொல்லுக்குச் சொல் இது என்னும் நிலை அறிவியல் கலைச்சொல் மொழிபெயர்ப்பில் உருவாகிட, தமிழில் கையாளப்படக் கூடிய கலைச்சொற்களைப் பொருள் வரையறை செய்து முறைப்படுத்துவதும் விரைவு படுத்தப்பட்டாக வேண்டும்.

A Dictionary of standardised Scientific and Technological terms in Tamil உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அப்பணிக்கும் இன்றியமையாத அடிப்படைப் பணியாக அமைந்திருப்பது இந்தக் களஞ்சியம் ஆகும். ஆங்கிலச் சொற்கள் பல நாம் வழக்கமாக உணரும் பொருளில் இருந்து சற்றே வேறுபட்டதொரு குறிப்பிட்ட பொருளை வழங்குவதாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

Advancement - எனில் மாறுகண் அறுவை மருத்துவம்
Affiliation - எனில் (தொடர்புடை) மூலம் காணல் 
Antisocial  - எனில் மனநலக்கேடு 
Aspiration  - எனில் உறிஞ்சி இழுத்தல்
Contract    - எனில் நோய்பீடித்தல், தொற்றுதல் 
Culture     - எனில் நுண்ணுயிர் வளர்ப்புப் பண்ணை 
Flora       - எனில் நுண்ணுயிர் படை எனவும்

வழங்குவதையும் அவைபோன்ற பல சொற்களையும் இக்களஞ்சியத்தில் காணலாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில மருத்துவச்சொற்களின் பொருளை நாம் விளங்கிக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட Angia; Angiogram; Angiography; X-ray; Gamma rays; virus; laser முதலான பல சொற்கள் குறிக்கும் பொருளை இந்தக் களஞ்சியம் தெளிவடையச் செய்கிறது.

அறிவியல் ஆய்வு புதிய உண்மைகளையும், பல பொருள் ஆற்றலையும் பயனையும் அதனைப் பயன் கொள்ளும் கருவியையும் கண்டுபிடிப்பதால் நாள்தோறும் வளர்வது. அப்படிக் கண்டறிந்த மேதைக்கு உலகம் கடமைப்பட்டுள்ளது. எனவே அவர் பெயராலோ, அவர் சூட்ட நேரிட்ட பெயராகவோ அவை வழங்குவது தமிழ் ஆக்கத்திற்குத் தடையல்ல. பொருளின் பெயர் மருந்து பெயர் பலவும் பெயர்ச் சொற்களேயாவதால் அதே பெயர் தமிழிலும் பயன்படுத்தப்படுவது தவறல்ல. ஆனால் அவற்றை எவரும் எதுவெனத் தெளிவதற்கான விளக்கம் தமிழில் தரப்படுவதே தமிழுக்கு ஆற்றவேண்டிய அறிவியல் ஆக்கப்பணி யாகும். அந்த அரிய பணியைத் திறம்படவும் தெளிவுடையதாகவும் ஆற்றியுள்ளார் திரு. மணவை முஸ்தபா.

தமிழ் மண்ணில் தொன்னாளிலேயே வளர்ந்து, பயன்பட்டு அண்மைக் காலத்தில் தொய்வடைய நேரிட்டுள்ளது சித்த மருத்துவம். அந்த மருத்துவ முறையையும் மருந்து செய்முறைகளையும் விளக்கி எழுந்த செய்யுள் ஏடுகள் பல. அவர்கள் உடற்கூற்றினையும் அதன் இயக்கத்தையும், உள் உறுப்புகளையும் குறித்து அறிந்து பெயரிட்டு வழங்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இடம்பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் பலவற்றிற்கு ஈடான தமிழ்ச் சொற்களை நாம் அவற்றுள் கண்டறியலாகும். சித்த மருத்துவச் சொற்கள் பலவும், சில நோய்களின் பெயர்களும் முன்னரே கைக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகை முயற்சியில் சித்த மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் ஈடுபடவும், அம்முயற்சியால் மருத்துவ அறிவியல் தழைக்கவும் இந்தக் களஞ்சியம் ஏற்றதொரு துணையாகும். மேலும் "மருத்துவம், வேதியியல், தாவர இயல் தொடர்புடைய அறிவியல்" என்னும் பெயருடன் அறிவியல் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் தரும் பேரகராதி ஒன்றினை, அறிவாற்றலில் சிறந்த டி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே தன் தனி முயற்சியால் உருவாக்கியுள்ளதை அறிந்தவர் எவரும் நன்றியுடன் போற்றத் தவறார். சித்த மருத்துவ நூற்களில் தமிழ் வழக்கிலும் இடம்பெற்ற பெயர்களாக அந்த அகரவரிசையில் காணப்படும் சொற்கள் பலவும், இப்படிப்பட்ட மருத்துவக் களஞ்சியப் பணி விரிவுக்குப் பெரிதுப் பயன்படும் என்று கருதுகிறேன்.

அலோபதி மருத்துவப் பட்டப்படிப்பும் தமிழில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதற்கான நியாயங்கள் வளர்ந்துள்ள இக்காலத்தில், தேர்ந்த மருத்துவ அறிவாற்றலைத் தமிழில் பெறமுடியுமா? என்னும் கேள்வி எழுப்பும் இளைஞர் உலகம் தெளிவடைந்து தன்னம்பிக்கை கொள்வதற்கும் இந்தக் களஞ்சியம் வழிசெய்யும் என்பதில் ஐயமில்லை. அறிவியல் மருத்துவ நூல் எழுதுவார்க்கும் தகுந்த தமிழ் வழக்கை நாடுவார்க்கும் ஏற்றதொரு கையேடாகவும் இது விளங்கும்.

மேலும் விரித்துரைக்க நான் ஒரு மருத்துவனோ அறிவியல் துறையினனோ அல்ல. சுருங்கச் சொல்வதானால், இந்தக் களஞ்சியம் மருத்துவ அறிவியல் தமிழ் ஆக்கத்திற்கு அமைக்கப்பட்ட புதிய பாதையாகும். இந்தப் பாதையைப் பயன்படுத்தி நடப்போர் பலராகிடின் தமிழில் அறிவியல் கருத்துக்களைக் கையாளும் திறனும் அதனை வளர்க்கும் ஆர்வமும் மேலோங்கும் என்பது உறுதி

காலமெல்லாம் தமிழ் ஆக்கப் பணியில் ஈடுபட்டுள்ள 'கூரியர்' ஆசிரியரும், கூரிய சிந்தனையாளருமான இதன் ஆசிரியர் காலம் தேடும் தமிழன் மணவை முஸ்தபா அவர்களை எவ்வளவு பாராட்டினும் தகும் அவருக்கு - அவரது தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்.

க. அன்பழகன்

(மேனாள் கல்வியமைச்சர்,
தமிழ்நாடு அரசு)