மருத்துவ களஞ்சியப் பேரகராதி/முன்னுரை

முன்னுரை

திரு. மணவை முஸ்தபா 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதி' என்ற இந்நூலை வல்லுநர்களின் உதவியோடு எழுதியிருக்கிறார். இந்நூல் சொல்லுக்குப் பொருள்தரும் அகராதியாக மட்டுமின்றி, நூலின் பெயருக்கேற்ப விளக்கம் தரும் கலைக்களஞ்சியமாகவும் திகழ்கிறது. சான்றாக "Viral haemorrhagic fever" என்பதற்குத் தமிழில் கிருமிக் குருதிப் போக்குக் காய்ச்சல் என்று பொருள் தருவதோடு வெப்ப மண்டலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல் என்று விளக்கமும் இதில் தரப்பட்டுள்ளது. poliomyelitis-என்பதற்கு 'இளம்பிள்ளை வாதம்' என்பதோடு முதுகுத் தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி, முளைத் தண்டிலும் முதுகுத் தண்டிலும் உள்ள முன்பக்கக் கொம்புகளின் இயக்க நரம்பணுக்களை ஒரு கொள்ளை நோய்கிருமி தாக்குவதால் இது உண்டாகிறது' என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமின்றி செயற்படுத்தும் நோக்கோடு தமிழ்வளர்ச்சிக் கென்று தனியாக ஒரு அமைச்சரை நியமித்து, மொழியியல், மருத்துவம் போன்ற துறைகளையும் தமிழில் கற்க முடியும் என்பதற்கான பணிகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய பணிகளுக்கு மணவை முஸ்தபாவின் 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் கைகொடுக்கும்.

மு. கருணாநிதி

(மருத்துவக் கலைச்சொல் களஞ்சிய
அகராதி நூல் முன்னுரைச் சுருக்கம்)