மருமக்கள்வழி மான்மியம்/கும்பியெரிச்சல் படலம்
11. கும்பியெரிச்சல் படலம்
................
................[1]
தீரா வழக்கும் சென்மப் பகையும்
15
உற்ற ருக்குள் உண்டாக்கும் வழி
அப்பனைப் பிள்ளை அண்டவொட்டாவழி
பிள்ளையை அப்பன் பேணவொட்டாவழி
புருஷனை மனைவி போற்றவொட் டாவழி
மனைவியைப் புருஷன் மதிக்கவொட் டாவழி
20
அண்ணனைத் தம்பி அடுக்கவொட்டாவழி
தம்பியை அண்ணன் தரிக்கவொட் டாவழி
மருகனை மாமன் வஞ்சித் திடுவழி
மாமனை மருமகன் வதைத்துக் கொலும்வழி
குடியை முடிக்கும் கொடிய தீவழி
25
அடிபிடி சண்டை அகலாப் பெருவழி
மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி;
எண்ணும் படியுடல் என்பெலாந் தெரியக்
கண்ணும் குழிந்து கன்னமும் ஒட்டி
வயிற்றுக் கின்றி வறுமையின் மெலிந்து,
30
என்போல்
நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி;
வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி
இருள்வழி செல்பவர் இடறும் கல்வழி
கூகையும் ஆந்தையும் குடிகொளும் குகைவழி
நெருஞ்சில் படர்ந்து நிரம்பிய முள்வழி;
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ' மென்று
ஔவை சொல்மொழி அறியா மடவழி;
பெற்ற பிதாத் தன் பிள்ளை கட்குப்
பழியும் பாவமும் பற்றிய நோயும்
40
அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி,
ஒருகா சேனும் உதவாச் சதிவழி!
இது,
மக்கள் வழியென மதிக்கவொண் ணாது!
மருமக் கள்வழி யாகவு மாட்டாது;
45
இருவழி கட்கும் இடைவழி யாய்வரும்
வழியிது போல்இவ் வையகத்து எங்கும்
உண்டோ? அம்மா! உண்டோ? அம்மா!
வீடு விற்று விளைநிலம் விற்று
50
ஆடு மாடுகள் அனைத்தும் விற்று
குடிக்கும் செம்பு குழியலும்[2] விற்று,
பாத்திரம் பண்டம் பலவும் விற்று,
தண்டை பாத சரங்களும் விற்று,
காப்புக் காறை கடுக்கனும் விற்று,
பதக்கம் சிற்றுருப் பாம்படம்[3] விற்று,
55
தாலியை விற்றுப் பீலியை[4] விற்று,
வக்கீல் சாமி மலரடி களிலும்
குமஸ்தா மாடன் கோவில் களிலும்
சாக்ஷித் தெய்வச் சன்னிதி களிலும்
பழந்தேங் காய்கள் படைப்புகள் வைத்தும்,
60
வேண்டிய புகையிலை வெற்றிலை வைத்தும்,
விதம்விதம் வேட்டிகள் முண்டுகள் வைத்தும்,
சேலை தாவணி சீட்டிகள் வைத்தும்,
இன்னும் பலவாறு இவர்க ளிடத்து
முன்னம் கொண்ட கடன்களை முற்றும்
65
குறைகூறாது கொடுத்தும் முடிவில்
வழக்கை இழந்து வாய்மண் ணாகி.
உண்ண உணவும் உடுக்கத் துணியும்
இல்லா தாகி,யாரும் கைவிட,
முற்றத் துறந்த முனிபுங் கவர் போல்
70
பக்கப் பழுத்த[5] பட்டினத் தடிகள்போல்
"உற்றார் சதமல், ஊரார் சதமல்,
பெண்டிர் சதலை, பிள்ளையும் சதமல.
இப்பே ருலகில் யாரும் சதமல"[6]
என்று கூறி இனித் தோவாளைக்[7]
75
கஞ்சிப் புரையே கதியெனக் சென்று,[8]
பக்க மெங்கும் பரந்து சுற்றிச்
சுவான தேவர்[9] துதித்து நிற்க,
அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக்
காக்கைபா டினியர்[10] கானம் பாட
80
பழஅடி யார்கள் பலரோடும் கூடி
வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு,
பட்டைச் சோறும் பாற்சோ றாக
ஒட்டுத் திண்ணை உறங்கிட மாக
இருப்பதை நோக்கி இரங்கி,இரங்கி,
85
இழந்தை எண்ணி ஏங்கி ஏங்கி,
அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம் வழி—
ஐயோ, இவ்வழி ஆகாது ஆகாது!
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி-
மனிதர் செல்லும் வழியா யிடுமோ?
................
................[11]
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!!
95
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ?
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாற நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!!
100
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும் இந்நிலத்தில்
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!!
வெண்பா
காரணவன்.... தெப் போகல்யாணம் செய்வதெப்போ
வாரமிகு மக்களொடு வாழ்வதெப்போ-தாரணியில்
எல்லா ரையும் போல் இருப்பதெப்போ....
........நாம்.
முற்றும்
- ↑ 1-14. ஏட்டில் பொடிவு.
- ↑ 51. குழியல் - சாப்பிட உபயோகிக்கும் பாத்திரம்.
- ↑ 55, சிற்றுரு - கழுத்திலணியும் ஓர் ஆபரணம்; பாம்பாம்படம் - காதிலணியும் ஓர் ஆபரணம்.
- ↑ 56. பீலி - கால் விரல்களிலணியும் வெள்ளி அணி.
- ↑ 71. பக்கப் பழுத்த - மிக்க வயதாகி உடல் பழுத்த.
- ↑ 72-4. பட்டினத்தடிகள் பாடல், திருவேகம்பமாலை;
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்தாள் சதம் கச்சிஏகம்பனே. - ↑ 75-76. தேவாளைக் கஞ்சிப்புரை: தேவாளை என்பது நாஞ்சில் நாட்டிலுள்ள ஓரூர் திருவிதாங்கூர் மன்னரால் இங்கே ஏழைகளுக்குக் கஞ்சிவரர்க்கும் தருமம் முன்பு நடைபெற்றுவந்தது.
- ↑ 77-88, ஏழை மக்கள் கும்பலாகக் கூடியிருந்து கஞ்சி குடிக்கும்போது, நாய்களும் காகங்களும் சுற்றி வட்டமிடுவது
இவ்வரிகளில் குறிப்பிடப்படுகிறது. - ↑ 78. சுவானதேவர் - நாய்கள்.
- ↑ 80. காக்கை பாடினியர் - ஒரு பழம் புலவர் பெயர்; இங்கே காகங்கள்.
- ↑ 91-2. ஏட்டில் பொடிவு.