மருமக்கள்வழி மான்மியம்/யாத்திரைப்‌ படலம்‌

10. யாத்திரைப் படலம்

மூன்று மாதம் முன்ன தாகவே
மனைவியர் இருவர் மாண்டு போயினார்;
நாலாம் மனைவி நாடகக் காரியும்
விடுமுறி[1] போட்டு விலகி விட்டனள்.
ஒருத்தி[2], பாவம், ஒருகதி யில்லாள் 5
நான்கு பிள்ளை நமனுக்குக் கொடுத்தாள்.
பெற்றும் மலடி, பேசா மடந்தை,
எனக்குத் துணையாய் இருந்தாள், அம்மா!
எழுந்து நடக்க இயலா தாகிப்:
பாயிற் கணவர் படுத்த நாள்தொட்டு 10
அடைந்த துயரெலாம் அறிபவர் யாரே?
ஒருநாள்,
தீனம்[3] என்ற செய்தி யறிந்து
மருமகன் வந்தான், வாயிலில் நின்றான்;
எட்டிப் பார்த்தான். இனிஇவர் என்றும் 15

எழுந்திருப் பதுவு மிலையெனத் தேர்ந்தான்;
அண்டையிற் சென்றான், அழவும் செய்தான்;
'என்ன வேண்டுவது' என்றும் கேட்டான்!
பக்கத் திருந்த பாவிகள், யாங்கள்
இருவரும் ஏங்கி இரங்கி யழுதோம்; 20
கண்ட மக்களும் கதறி யழுதனர்;
புருஷனும் இதனைப் பொறுக்கமாட்டாமல்,
அருகில் நின்ற மருகனை நோக்கி,
"அப்பா! வாடா, அண்டையில் இருடா.
நாச காலர் நாலைந்து பேர்கள் 25
கூடி நம்மைக் கோர்ட்டில் நாடகம்
ஆடும் படியாய் ஆக்கி விட்டனர்.
போகட்டும், போகட்டும், போனது போகட்டும்.
இன்றோ நாளையோ இப்பொழுதோ என்று
எனக்கும் காலம் இறுகி விட்டது[4]. 30
இதுநாள் வரையில், யான்என் மனைவி
மக்களுக்கு என்றொரு வஸ்து வாகிலும்
கொடுத்தது மில்லை. குடியிருப்பதற்கு
வீடும் அவர்க்கு வேறிலை, அப்பா!
தங்கத்தை[5] நீயே தாலி கட்டினால், 35
கவலையின்றிக் கட்டையை விடுவேன்.
அவளும் சமைந்து ஈராண்டுகள் ஆச்சுது;
கண்ணால் உங்கள் கல்யா ணத்தைக்
காண்பனோ? தெய்வ கடாக்ஷம் எப்படியோ!
அத்தைமார் இவர்கள் அல்லும் பகலும் 40
படும்பா டுகள் நீ பார்க்க வில்லையோ?

அப்பா! இவரை ஆதரித்து என்றும்
காப்பாற் றுவது உன் கடமை யல்லவோ?
பயலையும்[6] நீகண் பார்த்துக்கொள், ஐயா!
படிப்பான் கருத்தாய், பணந்தான் இல்லை; 45
பரீக்ஷை கொடுத்துப் பாஸாய் வரஇனும்[7]
ஐந்து வருஷம் ஆகும். அப்பொழுது உன்
தங்கை வயதும் சரியாய் வந்திடும்.
மேற்கா ரியம் உன் விருப்பம் போலச்
செய்து கொள், நீ தெரிந்தது தானே? 50
இந்த
ஊரி லுள்ள ஒருபய லாவது
நல்லவன் என்றுநீ நம்பி விடாதே.
கொஞ்சம் இடம்நீ கொடுத்தா யானால்,
உள்ளதை யெல்லாம் ஒன்றில் வாமல் 55
கொள்ளை யடித்துக் கொண்டுபோய் விடுவான்.
நச்சு வித்துகள்! நச்சு வித்துகள்!
நம்பல் ஆகாது! நம்பல் ஆகாது!
என்னடா, அப்பா? என்ன செய்யட்டும்?
வயித்தியன் ஒழுங்காய் வருகிறா னில்லை: 60
தக்க மருந்தும் தருகிறா னில்லை;
பணம்பணம் என்று பதைத்துச் சாகிறான்.
எழுந்திருப் பதுவும் இனியிலை; ஆயினும்,
ஆட்டு லேகியம் கூட்டித் தின்றால்
சுகம்வரு மென்று சொல்லு கிறார்கள்; 65
கையிற் பணயிலை, கடன் தரு வாரிலை;

வழக்கில் முதலை[8] வாரி யெறிந்தேன்;
கிழக்கு மேற்காய்க் கிடக்கின்றேன் இதோ!
என்ன செய்யலாம்? யாரை நோகலாம்?"
என்று இம் மொழிகள் இசைப்பது கேட்டு அவர் 70
கூடப் பிறந்து உயிர் கொள்ளும் வியாதிபோல்[9],
அருமை மதினி ஆங்கார வல்லி
காந்தாரி யம்மை கடுகி வந்தாள்.
மகனை நோக்கி, "மடையா, மூடா!
முருக்குத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே! 75
ஐயா[10] உன்னிடம் சொல்லி அனுப்பின
செய்திகள் என்ன? நீ செய்வதிங்கு என்ன?
நீயும்,
ஆண்பிள்ளை யோடா? அவலட் சணமே!
அத்தைமார் கூட அழஇருந் தனையோ? 80
அவர்,
கைவிஷம் கொடுத்துக் கணவனைக் கைவசம்
ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ?
வருஷம் ஐந்தாய் வழக்கும் சண்டையும்
மூட்டி விட்ட முண்டைகள் அல்லவோ? 85
நினைத்த காரியம் நிமிஷம் முடிப்பரே!
மாய வல்லிகள் வலையில் நீயும்
விழுந்துவிட்டாயோ? வெட்கம்! வெட்கம்!
போதும் எழுந்திரு! போதும்! போதும்!

அரங்குக்;[11] கதவை அடைத்துப் பூட்டிவை; 90
தட்டுக்[12] கதவையும் சங்கிலி யிட்டுவை;
சாய்ப்புக் கதவிலும் தாழைப் போட்டுவை
பொதிய மலையும் பொட்டண மாகிப்
புழைக்கடை[13] வழியாய்ப் போய்விடும், அப்பா!
ஐயா வரும்வரை அங்கே நீதான் 95
கருத்தாய் நின்று காத்திட வேண்டும்.
இந்தா பூட்டுகள். இவையும் போதுமா?
அதிகம் வேண்டுமோ? அறிந்துசொல் அப்பா"
என்று இப் படியாய் எக்கா ரியங்களும்
சரியாய்ப் பார்த்துச் சட்டம் கட்டி, 100
அரங்கு நடையின் அருகாய் ஓர் மலைப்
பாம்பு போலப் படுத்துக் கொண்டாள்.
நினைக்க நினைக்கஎன் நெஞ்சு வேகுதே
ஐயோ! சிவசிவ! அரஹர! அரஹர!
போதும், போதும், இச்சன்மம் போதும்; 105
பட்ட துயரமும் பாடும் போதும்.
கணவர்க்கு அந்திய காலம், தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை யானதும்,
பரந்த சட்டி படிக்க மானதும்,
பாலும் அன்னப் பாலேயானதும்[14], இனி 110
எடுத்துச் சொல்வது ஏனோ? அம்மா!
மருமக் கள்வழி வந்து பிறந்தவர்க்கு
ஏதும் புதுமை இவற்றில் உண்டோ?

ஈனாப் பேச்சிபோல்[15] எங்களை வெருட்டின
மதினியின் மீதும் வருத்தமொன் றில்லை. 115
காயம் மணக்குமோ? காஞ்சிரம் இனிக்குமோ?
இயற்கையை மாற்ற யாரால் முடியும்!
இவையெலாம் அல்ல. என்றென்றைக்கும் என்
மனத்தி லிருந்து வாளா யறுப்பது!
நெஞ்சி லிருந்து நெருப்பா யெரிவது? 120
மற்று அக்காரியம் வையக மெல்லாம்
அறியும் படியான் அறைவேன். அம்மா!
கணவரின் மரண காலத்து அங்கு
வந்திருந்தவர் என் மகனை நோக்கி,
"தம்பி! உன் தந்தை தலைமாட்டிருந்து. 125
திருவா சகத்தில் சிற்சில பதிகம்
படி"யெனச் சொல்லிப் பண்ணை வீட்டி
லிருந்து ஒரு புத்தகம் எடுத்துக் கொடுத்தனர்.
பயலும் அதனைத் திறந்து பார்த்தான்.
'ஆரே தமிழை அறிபவர்?' என்றான்; 130
'பள்ளியில் தமிழும் படித்தேனோ?" என்றான்;
'பரீக்ஷையில் தமிழொரு பாடமோ?' என்றான்;
'என்னால் படிக்க இயலாது' என்னச்
சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.[16]
ஐயோ! 135

அப்பன் மரணம் அடையுங் காலம்
எமவே தனைகள் இல்லா தாக்கவும்,
சிந்தை சிவனடி சேரச் செய்யவும்,
செந்தமிழ் மறையாந் திருவா சகத்தைப்
பக்க மிருந்து படிக்க அறியா 140
மக்கள் படிப்பை வையகம் மதிக்குமோ?[17]
நாஞ்சி னாட்டில் நல்லஆண் பிள்ளை
இல்லா ததனால் இப்படி யாச்சுது!
மலையா ளத்தில் வரைந்திடும் கோர்ட்டு
சமன்ஸுவந்தால் சரியாய்ப் படித்துக் 145
காட்டுவ தோபெருங் காரியம் அம்மா!
ஈசன் கழலுக்கு எமையா ளாக்கும்
புண்ணிய நூல்களைப் புறக்கணித் திடுதல்
அறிவோ? அழகோ? ஆண்மையோ? அம்மா!
பண்டு தொட்டுப் பரம்பரை யாக 150
முன்னோர் வைத்த முழுமணிப் பூணெலாம்
ஆசை யோடணிந்து அழகுபா ராமல்.
பாசிக் காகவும் பளிங்குக் காகவும்

கூச்ச மின்றியோர் குச்சுக் கடை போய்க்
காத்துநிற் பவரைக் காசினி கண்டு 155
சீசீ யென்று சிரித்தி டாதோ?
பைத்திய மென்று பழித் திடாதோ?
அன்னை யாக்கிய அமுதினை உண்ணாது
அண்டை வீட்டுக் கூழை யலந்து[18]
வாரி யுண்டு வயிறு நிரப்பும் 160
மதியும் என்ன மதியோ? அம்மா!
நாஞ்சி னாட்டில் நடப்பவை யெல்லாம்
அதிசயம்! அதிசயம்! அதிசயம், அம்மா!
பாவம்! சாமியும் சுவரிற் சாய்ந்து, கண்ணீர்
மாலை மாலையாய் வடித்தங் கிருந்தான். 165
இந்தச் சமயம், எங்கள்புண் ணியத்தால்,
உலகெலாம் புகழும் உமையொரு பாகத்
தேசிகன்[19] பாற்சிவ தீக்ஷை பெற்றவர்—
நெற்றி நிறைந்த நீற்றுப் பூச்சினர்
கழுத்து நிறைந்த கண்டிகை யணிந்தவர் 170

உலர்ந்து பழுத்த உடையை உடுத்தவர்
தளர்ந்த நடையினர் சாந்தம் உடையவர்
கண்டவர் தொழத்தகு காட்சி கொண்டவர்
மாணிக்க வாசகர் வழங்கிய மணியெலாம்
பேணித் தம்உளப் பெட்டியில் வைத்துத் 175
தினந்தினம் எம்மான் திருவடி சார்த்திப்
பணியுந் தொண்டர்—பாக்கிம் பிள்ளைப்
பாட்டா[20] வந்தனர்; படிப்புரை யிருந்தவர்
வேண்டிய காரியம் விளம்பக் கேட்டு,
உரைத்த நாத்தேன் ஊறி யெழவும், 180
உள்ளமும் செவியும் ஒருங்கு குளிரவும்,
திருத்த மாகத் திருவாச கத்தில்
பற்பல பதிகமும்[21] பண்ணோடு ஓதினர்;
இப்படி அவரும் யாத்திரைப் பத்தில்,

‘போலோம் காலம் வந்ததுகாண் 185
பொய்விட் டுடையான் கழல் புகவே’[22]
என்ற பாகம் எடுத்துக் கூறவே,
கணவர்,
ஏங்கி யழுத எங்களை நோக்கினர்,
வாடி யழுத மக்களை நோக்கினர், 190
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்.


  1. 3. விடுமுறி - கணவனும் மனைவியும் பிரிந்து கொள்வதைக் குறிக்கும் பிரமாண பத்திரம்.
  2. 5. ஒருத்தி - மற்றொரு மனைவி.
  3. 13. தீனம் - நோய்; உடல் நலமின்மை.
  4. 30. இறுகிவிட்டது - முடிவு நெருங்கிவிட்டது.
  5. 35. தங்கம் - அவருடைய பெண்ணின் பெயர்.
  6. 44. பயல் - அவருடைய மகன்.
  7. 46. வரஇனும் - வர இன்னும்.
  8. 67. முதலை தன்கைப் பொருளை.
  9. 71. உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்பது மூதுரை.
  10. 76. ஐயா அவளுடைய கணவன்; கேட்ட பையனுடைய தந்தை.
  11. 90-92. அரங்கு - தட்டு, சாய்ப்பு - வீட்டின் பாகங்கள்,
  12. 91. தட்டு - மேல்மாடி.
  13. 94. புழைக்கடை - புறக்கடை; வீட்டின் பின் வாயிற்புறம்.
  14. 110. அன்னப்பால்- உலையிலுள்ள கொதி நீர், கஞ்சி.
  15. 114. ஈனாப்பேச்சி - மகவு பெறாத பேய்ச்சி ஒரு பிசாசு. ஈனா அரக்கி என்றும் சொல்வர்.
  16. 130-5 கொஞ்ச காலத்துக்கு முன், திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் தமிழர் வாழும் நாடான நாஞ்சில் நாட்டிலுங்கூட. பாடசாலைகளில் மலையாளமொழியே கற்பித்து வந்தார்கள். ஆரம்பக்கல்வியும் தமிழிலே கிடையாது; மலையாளத்தில்தான்; இது காரணமாக இந்தப் பையனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.
  17. 136-141. பெரியவர்கள் இறந்து போகும்போது, அவர்களுடைய மனம் ஆண்டவனுடைய திருவடிகளை நினைக்கச் செய்யும் பொருட்டு, அருகிலிருந்து யாரேனும் திருவாசகப் பாடல்களை ஓதுவது இன்றும் தமிழ்நாட்டிலே பெரு வழக்காயுள்ளது. தனது மகன், தந்தையின் மரண காலத்தில் அருகிலிருந்து திருவாசகம் வாசிக்கக்கூட முடியவில்லையே. அவன் பள்ளிப் படிப்பு அவ்ளைவு பயனற்றதாய்ப் போய்விட்டதே என்று அதை அப்பெண் நிந்தித்துக் கூறுகிறாள். இந்த நிலைமை இக்காலத்தில் மாறிவிட்டது; நாஞ்சில் நாட்டில் மட்டுமன்றி, மலையாள நாட்டிலும்கூட, சில இடங்களில் தமிழ்ப் பாடசாலைகள் நடந்து வருகின்றன.
  18. 159. அலந்து-ஆசைப்பட்டு.
  19. 167-8. உமையொருபாகத் தேசிகர்: ஆசிரியருக்குச் சிவ
    தீக்ஷை செய்து வைத்த பெரியவர். இவரது மடம் சீலை
    குண்டத்திலும், தேரூரையடுத்த வாணன்திட்டு முதலிய பல
    இடங்களிலும் உண்டு. அங்கு, சைவ போதனை முதலிய
    தருமங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

    ஸ்ரீ தேசிகரிடம் ஆசிரியர் சிவதீக்ஷை பெற்றுக்கொண்ட
    போது பாடிய ஒரு பாடல் வருமாறு:

    வேறும் ஒருதுணையான வேண்டுவனோ வேணுவனம்

    தேறுமுமை யோர்பாகத் தேசிகனே - கூறுமெமக்கு

    எய்யாப் பிறவி இருளகல நீயளித்த

    பொய்யா விளக்கிருக்கும் போது.
  20. 178. பாட்டா; பாட்டனார், தாத்தா. படிப்புரை —
    வீட்டில் முன்பக்கம் உள்ள குறடு; படிப்புரையை ஒட்டுத்
    திண்ணை என்றும் சொல்லது உண்டு. நாஞ்சில் நாட்டில்
    பெரும்பாலான வீடுகளும் வீட்டின் முன்புறம் திறந்தவெளி
    முற்றமும் அதனைச் சுற்றிலும் படிப்புரையுமாகவே அமைந்திருக்கும்.
  21. 182. திருவாசகத்தில் பற்பல பதிகம்: பதிகம் என்பது தெய்வத்தைப் பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுட்களால் பாடப்படும் பிரபந்தம். தேவாரப் பாடல்களைத்தான் பதிகம் என்று சொல்வது வழக்கம். திருவாசகப் பாடல்களைப் பதிகம் என்று சொல்லது இல்லை. இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமையால் இப்பெண்மணி பதிகம் என்று உரைக்கின்றாள்.
  22. 185-186. யாத்திரைப்பத்தில் இங்குக் குறிக்கப்பட்ட பாடல் அதன் தொடக்கப்பாடல்:

    பூவார் சென்னி மன்னன் எம்

    புயங்கப் பெருமரன் சிறியோமை

    ஓவாது உள்ளம் கலந்துணர்வாய்

    உருக்கும் வெள்ளக் கருணையினால்

    ஆவா என்னப் பட்டு அன்பாய்

    ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்

    போவோம் காலம் வந்ததுகாண்

    பொய்விட் டுடையான் கழல்புகவே.

    பூவார்: பூக்கள் நிறைந்த: புயங்கப் பெருமான்: சர்ப்பாபரணங்களை யுடையவன். புயங்கம் பாம்பு: ஓவாது:
    ஒழியாது, இடைவிடாது; வெள்ளக்கருணை; மிகுந்த கருணை: ஆலா என்னப்பட்டு; ஆவா என்பது இரக்கத்தை
    உணர்த்துகின்றது. காலம்: செல்லுவதற்குரிய காலம்: பொய்
    விட்டு; பொய்யான உடலை விட்டு, பொய் நிலையற்ற உடம்பு.