மருமக்கள்வழி மான்மியம்/பரிகலப்‌ படலம்‌

5. பரிகலப் படலம்

ஐவரை மணந்தெம் கணவர் அடைந்த
துயரெலாம் இங்கே சொல்லி முடியுமோ!
இவரில் ஒருத்தியாய் எளியேன் அடைந்த
குறையெலாம் இங்கே கூறி முடியுமோ!
ஒருநாள்— 5
வெட்கம், வெட்கம், மிகவும் வெட்கம்!
துக்கம் துக்கம் பெரிதும் துக்கம்!
மனமும் நாணி வருந்துதே அம்மா!
நாவும் குழறி நடுங்குதே அம்மா!
எப்படிச் சொல்வேன்! யாவற் றிற்கும் 10
என் தலை விதியை யன்றிவ் வுலகில்
எவரை நோக இடமுண் டம்மா!—
தீபாவளியோ திருக்காத் திகையோ,
நன்றாய் எனக்கு ஞாபக மில்லை;
வீட்டில் ஏதோ விசேஷ முண்டு; 15
வீரவ நல்லுர்[1] விருந்து முண்டு;
பருப்பு முதலிய பற்பல கறிகள்
வகைவகை யாக வைத்தது முண்டு.

வந்த மனிதரும் எங்கள் மன்னரும்[2]
அமுது செய்துகை அலம்ப வெளியில் 20
இறங்கினர். உடனே, எனக்கு முன்னாய்
வாழ்க்கைப் பட்ட மனைவிய ருக்குள்
இழுப்பும் வலிப்பும் எதிர்ப்பும் வந்தன;
அடியும் பிடியும் கடியு மாயின.
மனிதப் பிறவியில் வந்தவரா மென்று 25
எள்ளள வேனுமோர் எண்ண மிலாதவர்
கொண்டை பற்றிச் சண்டை செய்தனர்!
மண்டை ரத்தம் வடிய விட்டனர்.
என்னால்,
ஆன மட்டும் விலக்கினேன், அம்மா! 30
ஆகா தாகா தென்றேன், அம்மா!
கெஞ்சிக் கெஞ்சிச் சொன்னேன், அம்மா!
கீழே விழுந்துக்கும் பிட்டேன், அம்மா!
எதற்கும் அவர்கள் இணங்கினா ரில்லை.
எளியேன் செய்யவே றென்னுண் டம்மா? 35
கூகூ என்ற கூக்குரல் கேட்டுப்
பக்கத் துள்ளார் பலரும் வந்தனர்.
ஊரார் எல்லாம் ஒன்றாய்க் கூடினர்.
விருந்தின ரெல்லாம் விரலை மூக்கில்
வைத்த படியே மயங்கி நின்றனர். 40
முடிவில்,
மேலவீட் டண்ணன் வெள்ளையம் பிள்ளை
(நல்ல மனிதர், நடுநிலை யுள்ளவர்
நாலுகா ரியமும் நன்றாய் அறிந்தவர்,
பட்டுத் தேறிப் பழக்கம் வந்தவர். 45

என்ன செய்யலாம்! இறந்துபோ யினரே!)
வந்தொரு வாறு வழக்கைத் தீர்த்தார்;
'ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்;
இடையில். 50
தீபா வளியோ, திருக்கார்த் திகையோ,
வேறிம் மாதிரி விசேஷ நாளோ,
வந்திடு மாகில், வரிசை வரிசையாய்
ஐந்திலை யிட்டவை அனைத்திலும் அமுது
படைத்துப் புருஷன் பருகிய பின்னர் 55
பரிகலத் துள்ள பதார்த்த மெல்லாம்
மனைவியர் சரியாய் வகுத்துண வேண்டும்.
வழக்குகள் ஒன்றும் வரலா காது'எனக்
கூறிப் போயினர்; கூடி யிருந்தோர்
யாவரும், 'இதுவே நீதி' என்றனர். 60
என்றவர்
கலகமுண் டான காரண மறிந்து
சிரித்து நின்றார், ‘சீசீ’ யென்றார்;
‘எச்சில் இலைக்காய் இந்தக் களரி
கூட்டுவரோ?‘[3] எனக் கூறிப் போனார். 65
ஐயோ!
துயரம், துயரம், பிறப்பே துயரம்;
பிறப்பினும் துயரம் பெண்மக ளாதல்;
பெண்மக ளாதலிற் பெரிதும் துயரம்
மருமக் கள்வழி வலையிற் படுதல்; 70
வலையிற் பட்டு வருந்தலில் துயரம் ஓர்

காரண வருக்குக்[4] கழுத்தைக் கொடுத்தல்;
கழுத்தைக் கொடுத்தலில் துயரம் கருணை
இல்லா மாமிக் கிசைய நடத்தல்;
இசைய நடத்தலில் துயரம் என்போல் 75
பாரக மீதிப் பஞ்சபா விகளில்
ஒருத்தி யாக உயிர்பெற் றிருத்தலே!


  1. 16. வீரவ நல்லூர் - நாஞ்சில் நாட்டின் வடபகுதியிலுள்ள ஒரு சிற்றூர்.
  2. 19. எங்கள் மன்னர்: கணவர்.
  3. 64-65. களரி கூட்டுதல்: சண்டையிடுதல்.
  4. 72. காரணவர்: குடும்பத் தலைவர்