மருமக்கள்வழி மான்மியம்/மாமி அரசியற்‌ படலம்‌

2. மாமி அரசியற் படலம்

வர்கதை இவ்வா றாக, இனிஎன்
மாமி கதையை வகுப்பேன் கேளும்.
அரங்கு பூட்டாம், அறைப்புரை பூட்டாம்,
தட்டுப் பூட்டாம், சாய்ப்புப் பூட்டாம்;[1]
அரிசியை நிதமும் அளந்து வைப்பாள், 5
நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்.
கொல்ல மிளகைக்[2] குறுக்கி வைப்பாள்,
உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,
கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள்,
கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்; 10
தீபா வளிக்குத் தீபா வளியே
எண்ணெ யறியும் என்தலை. அம்மா!
அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி
குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளோ?
உம்மே லாணை, ஒருநா ளாகிலும் 15
கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பி யாரக் குடித்ததே யில்லை;
கந்தைத் துணிகள் கட்டின தல்லால்,

கண்டாங் கிகளைக்[3] கண்டதே யில்லை.
அடுக்களை நடையே நிலைய யாயினும் 20
அங்கும் இங்கும் ஆக அவ்வீடு
எங்கும் இருப்பாள் எங்கள் மாமி.
இவளொரு கண்ணுக் கிணை அவ் இந்திரன்
ஆயிரம் கண்ணும் ஆகா துண்மை.
பின்னே நோக்கினும் முன்னுள தறியும்; 25
முன்னே நோக்கினும் பின்னுள தறியும்;
எறும்பும் காணா இடத்திவள் கண்போம்;
புகையும் நுழையா இடத்திவள் புத்திபோம்.
ஆணாய்ப் பிறந்தால் அகிலம் ஆளுவாள்;
இருகண் இருப்பின் இடமிது போதுமோ? 30
எல்லாம் வல்ல எம்பெரு மான்இவள்
குணத்தை அறிந்தே கொடுத்தான் ஒருகண்.
கணகண என்றெக் கணமும் நாக்கின்
அடிக்கும் மணிவிசை அடங்கி விடுமென்று
எவரும் எண்ணி யிருந்ததே யில்லை. 35
ஊரை முழுதும் உழக்கால் அளப்பாள்.
நாட்டை முழுதும் நாழியால் அளப்பாள்.
நரியை முன்னம் பரியாய் ஆக்கின
நாதனும்[4] கண்டு நாண, இவளும்
யானையைப் பூனை யாக மாற்றுவாள். 40
பூனையை யானை போலக் காட்டுவாள்.
ஐயோ! உலகுக் கெங்கள் அருமை

அத்தை திருவிளை யாடலை யெல்லாம்
பத்துப் பரஞ்சோ திகளே[5] பாடினும்
முடியா தென்றால், மூதறி வில்லா 45
அடியாள் சொல்லி அறியப் படுமோ?
இரக்கம் சிறிதும் இன்றி, எனக்கிவள்
இடுவாள் வேலைகள் இரவும் பகலும்.
குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்;
கும்பி யாரக் குடிக்க வொட்டாள்; 50
உண்ண வொட்டாள் உறங்க வொட்டாள்;
உடலைக் கீழே சரிக்க[6] வொட்டாள்;
அருமை மதினி அடிக்கடி அடிக்கடி
சடைவா றுதற்குத்[7] தாய்வீ டடைவாள்;
மக்களும் பின்னால் வருவர்; புருஷன் 55
இரண்டொரு நாள்கழித் தெட்டிப் பார்ப்பான்
வந்தால் போகும் வரையிலும் என்னை
அம்மியில் வைத்துச் சம்மந்தி யாக[8]
அரைத்து விடுவாள். ஐயம் அதற்கிலை.
என்னிரு மக்களும் இவருக் கேவல் 60
செய்து செய்து துரும்பாய்த் தேய்ந்தார்.


  1. 3-4. அரங்கு, அறைப்புரை, தட்டு, சாய்ப்பு: வீட்டில்
    பாகங்கள்.
  2. 7. கொல்லமிளகு-மிளகாய் வற்றல், நன்றாய் பழுத்துக்
    காய்ந்த வற்றல் மிளகு.
  3. 19. கண்டாங்கி - சாயப்புடவை.
  4. 38-39. நரியை..... நாதன் - மதுரைச் சோமசுந்தரக்
    நடவுள்.
  5. 44. பரஞ்சோதி-திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்.
  6. 52. சரிக்க - சாய்க்க; படுக்க.
  7. 54. சடைவு ஆறுதற்கு - இளைப்பு நீங்குதற்கு.
  8. 58. சம்மந்தி (சம்பந்தி): துவையல் வகை; ஒரு பெண்ணின் நாயகனுடைய தங்கை அவளை விட வயதில் சிறியவளாயிருந்தால் அவளுக்குச் சம்பந்தி முறையாவாள்; அவளுடைய தம்பி மனைவியும் அவளுக்குச் சம்பந்தியாவாள்.