மருமக்கள்வழி மான்மியம்/குலமுறை கிளத்துப்‌ படலம்‌

1. குலமுறை கிளத்து படலம்



என்கதை கேளும்! என்கதை கேளும்!
இரக்க முள்ளோரே என்கதை கேளும்;
நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே!
நடுநிலை நீதி நடத்தும்நல் லோரே!
மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே! 5
ஏழையென் துயரம் எல்லாம் கேளும்.
காசினி மீதென் கதைபோல் இல்லை.
சீதையின் கதையும்[1] சிறுகதை யாகும்.
பாஞ்சா லியின்கதை[2] பழங்கதை யாகும்.
தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை[3] 10
உமியாம், தவிடாம், ஊதும் பொடியாம்.
கேளும் !கேளும்! என்கதை கேளும்!
பதும நாபன் பாத பங்கயம்[4].

அணிமுடி யாக அணிதிரு மூல
மன்னர் புரக்கும் வளமலி வஞ்சி 15
நாட்டிற்[5] சிறந்த நாஞ்சில் நாட்டில்
தொல்லூ ராகும் நல்லூ ரதனில்[6]
மேழிச் செல்வம் விரும்பும்வே ளாளர்
குலத்தில்ஓர் எளிய குடியிற் பிறந்தேன்.
தந்தைநோ யாளி, தாயுமோ ரேழை. 20
அண்ணன் தம்பிகள் ஐவரும் மாண்டார்.
அக்காள் தங்கையும் இல்லை, அடுத்தவர்
உற்றார் உறவினர் ஒருவரு மேயிலை;
ஒருதடி நிலமும் ஓரணை ஏரும்[7]
ஒருசிறு குடிலும் உண்டெமக் காஸ்தி. 25
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
உற்றதெ லாம்சொல ஒழிகழி நூலாம்[8],
ஒருநாள் போதுமோ? இருநாள் போதுமோ?
முற்றும் கேளும், முடிவையும் பாரும்!

தாழையம் பதிக்குத் தலைவர்—அவர் பெயர் 30
ஏழையான் சொல்வது இசையுமோ? அம்மா![9]
பாவியாம் என்னைப் பதினா றாண்டில்
ஐந்தாம் மனைவி யாக மணந்தனர்.
கணவர் வீட்டுக் கதையினைக் கேளும்;
மனைவியர் வேலை வகையினைக் கேளும்: 35
தொழுத்துச் சாணம்[10] வழிக்க ஒருத்தி,
தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி,
அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி;
அண்டையில் அகலா திருக்க ஒருத்தி;
அத்தனை பேர்க்கும் அடிமை யாளாய்
ஏழை பாவி யானும் ஒருத்தி 40
எளியேன் சென்ற நாள்முத லாக
எல்லா வேலையும் என்தலை மேலாம்.
பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர்.
பெரிய அக்காள் பெருமாப் பிள்ளை[11] 45
"ஏனடி அம்மா! யான்ஏ காங்கி.[12]
உரிய அரிசி உண்டெனில் சோறு:
உழக்குக் குறுநொய் உண்டெனில் கஞ்சி;
மக்களைப் பெற்ற மகரா சிகள்நீர்
உண்ண வேண்டும், உடுக்க வேண்டும்; 50

உழைத்துப் பொருளுண் டாக்க வேண்டும்;
எனக்கினி யிங்கே யாதுண் டம்மா?"
என்று பெருமூச் செறிந்து சொல்லி.
இருந்த இடம்விட் டகலவே மாட்டாள்.
அடுத்த அக்காள், அழுபிள்ளைக் காரி; 55
அடமும் கொஞ்சம் அதிகம் கொண்டவள்;
அம்மா, மிளகை அரைஎன் றால்உடன்
அவள்கை மதலை அழுவது கேட்டிடும்;
பிள்ளைக் குணமோ, பிடுங்கி வைப்பாளோ.
என்ன மாயமோ, யானேதும் அறியேன். 60
மூன்றாம் அக்காள் முழுச்சோம் பேறி.
அன்றியும்,
மூன்று மாதமாய் முழுகவு மில்லை;[13]
வாயா லெடுப்பாள் வயாக்கோட் டியினால்;[14]
ஏறின கட்டில் இறங்கவே மாட்டள். 65
இனியோர் அக்காள் எடுப்புக் காரி.[15]
இந்தி ராணியும் ஈடிலை; இவளது
மஞ்சள் பூச்சும் மயக்கிடு பேச்சும்
சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும்
கோல உடையும் குலுக்கு நடையும் 70
கொண்டை யழகும் கண்டு, கணவர்
அண்டையி லிருந்தும் அகலவே ஒட்டார்;
'தங்கப் பெண்ணே தாராவே!
தட்டான் கண்டால் பொன்என்பான்[16]

தராசிலே வைத்து நிறு என்பான் 75
எங்கும் போகாமல் இங்கே யேயிரு
என்று சொல்லுவ திவட்கே இசையும்.
இவள்,
அடுக்களை வந்திடாள்—அரக்குப் பாவையோ?[17]
கரிக்காலம்[18] கையெடாள்—கனகசுந் தரியோ? 80
வாருகோ வேந்திடாள்—மகராணி மகளோ?[19]
வெயிலில் இறங்கிடாள்—மென்மலர் இதழோ?
குடத்தை எடுத்திடாள்—குருடியோ நொண்டியோ?
வஞ்சகி இவள்செய் தலையணை மந்திர[20]
உபதே சங்களை உண்மையென் றெண்ணிக் 85
கணவன் ஒவ்வொரு காலத் தெங்களைப்
படுத்திய பாடெலாம் பகர்வதும் எளிதோ?


  1. 8. சீதையின் கதை: இராமாயணம்.
  2. 9. பாஞ்சாலி கதை: மகாபாரதம்.
  3. 10. சந்திரமதி கதை: அரிச்சந்திர புராணம்.
  4. 13. பதுமநாபன்-திருவனந்தபுரத்தில் எழுந்தருளியுள்ள
    திருமால், பாத பங்கயம்-திருவடித் தாமரை
  5. 14-15. திருமூலமன்னர் - திருவிதாங்கூர் நாட்டை கி.பி. 1886 முதல் 1924 வரை ஆண்ட அரசர். வஞ்சிநாடு-திருவிதாங்கூர் நாடு.
  6. 17. நல்லூர் - சுசீந்திரத்தின் அருகிலுள்ள ஒரு சிற்றூர்.
  7. 24. தடி-வயல். ஓரணை ஏர்-உழவு வேலைக்கான ஒரு
    ஜதை மாடும் அதற்குரிய ஒரு கலப்பை நுகமும். இம்மான்
    மியத்தில் பின்னர் வரும் 'ஈரணை ஏரும் ஏழு பசுவும்' (9:109) என்பதனோடு ஒப்பு நோக்குக. சுல்வெட்டுக்களிலும் 'அணை என்றுதான் வந்திருக்கிறது. உலக வழக்கிலும் ஓரணை ஏர், ஈரணை ஏர் என்றே வழங்கி வருகின்றனர்.
  8. 27. ஒரு கழி நூல்: மிக நீண்டது. நூலைப் பிரிக்கப் பிரிக்க வந்துகொண்டே இருப்பதுபோல, கதையும் சொல்லச்
    சொல்ல வளர்ந்துகொண்டே பேரகும்; சொல்லி முடிவு
    பெறாது.
  9. 30-31. தாழையம்பதி - தாழைக்குடி என்ற ஊர்: நாகர்கோவிலுக்கு அருகிலுள்ளது. கணவர் பெயரை மனைவியர் சொல்லுதல் கூடாது என்பது சமுதாய வழக்கம்.
  10. 36. தொழுத்துச் சாணம் - மாட்டுத் தொழுவிலுள்ள சாணம்; தொழு-மாட்டுக்கொட்டில்.
  11. 45 பெருமாப் பிள்ளை: ஒரு பெண்ணின் பெயர்.
  12. 46. ஏகாங்கி - குழந்தையில்லாமல் தனியேயிருப்பவள்.
  13. 63. முழுகவுமில்லை - கர்ப்பமாயிருக்கிறாள்.
  14. வயாக்கோட்டி - மசக்கை.
  15. 56. எடுப்புக்காரி - கர்வமுடையவள்.
  16. 73-76. இது, வாய்மொழியாக வழங்கும் ஒரு பாடலின் பகுதி.
  17. 79. அரக்குப் பாவை-மெழுகினாலாகிய பொம்மை. மெழுகு நெருப்புப்பட்டால் உருகிவிடும் என்னும் கருத்தால்
    அடுக்களை வந்திடாள் என்கிறாள். அடுக்களையில் நெருப்பு
    இருக்குமல்லவா?
  18. 80. கரிக்கலம் - கரிபட்ட பாத்திரம்.
  19. 81. வாருகோல் - துடைப்பம். மகராணி- மகாராணி, பேரரசி.
  20. 84. தலையணை மந்திரம் - படுக்கையறையில் மனைவி
    கணவனுக்கு இரகசியமாகச் சொல்லும் கோள்.