மருமக்கள்வழி மான்மியம்/வாழ்த்துப்‌ படலம்‌

8. வாழ்த்துப் படலம்

.......இக்கொடு மொழிகளாம்[1]
கருதற் கரிய கருடாஸ் திரங்கள்
பலவும் நெஞ்சிற் பாய, மருமகன்,
புண்பட்டுள்ளம் பொறுக்க முடியாது.
ஐயோ! என்றுகண் ணீர்விட்டு அழுது, 5
தந்தை தாயர் தம்மிடம் சென்று
விளைந்த எல்லாம் விரிவா யுரைத்தான்;
கோபம் பொங்கிக் கொதித்து வரும்படி
சிற்சில இடையிடை சேர்த்தும் கொண்டான்.
செப்பிய சொற்கள் தீயிற் காய்ச்சிய 10
கம்பிகள் போல்இரு காதும் நுழைந்திட,
வீர பத்திரப் பிள்ளை வெகுண்டு,
கால்நிமி ஷத்துஎன் கணவரைக் கண்டு,
"அட்டா மூடா! அதர்மசண் டாளா!
வஞ்சகா! கொடிய மறவா/ குறவா! 15
நெஞ்சில் இரக்கம் இல்லா நீசா !
மடையா! நீயென் மகனை நோக்கி
ஊத்தை வாயால் உளறின மொழிகளை
இன்னும் ஒருமுறை என்முன் வந்து

சொல்லடா பார்ப்போம், சொல்லடா பார்ப் போம்!
பள்ளிப் பையனை, பதினா றாண்டு
திகையாப்[2] பாலனை, தெரியாச் சிறுவனை,
கன்னியும் காப்பும் காணாக் குமரனை,[3]
கள்ளன் என்றும் கபடன் என்றும்,
கள்ளை யுண்டு களிப்பவன் என்றும், 25
தடியன் என்றும் மடியன் என்றும்,
தாசிகள் வீட்டுத் தானிகன்[4] என்றும்,
பழித்துப் பேசிய பாதகா! உன்தன்
நாவை யரிந்து நாய்முன் எறிந்தா
லன்றி என்சினம் ஆறாதே, அடா ; 30
உன்மகன் சாமி ஒழுங்குகள் எல்லாம்
யான்அறி யேன்என் றிருந்தா யோடா?
அவன்,
பரத்தை நாடிப்[5] பௌரணை தோறும்
கன்னிப் பதிக்குப்[6] போகும் காரணம் 35
பக்தியின் மிகுதியோ? பணத்தின் மிகுதியோ?
உண்டு கொழுத்த உரத்தின் மிகுதியோ?
உண்மை யறிய உனக்கு முடியுமோ?
கள்ளுக் குடிக்கிற காரிய மெல்லாம்

மந்தா ரம்புதூர்[7] மதுவிளை நாடான் 40
கிட்டின முத்துவைக் கேட்டால் தெரியும்.
நான்சொன் னால் நீ நம்புவை யோடா?
பள்ளியில் உன்மகன் படித்துப் பெரிய
பரீக்ஷையும் கொடுத்துப் பட்டமும் பெற்றுஒரு
மாதவ ராயராய்[8] வரட்டும் அப்பா! 45
நாடும் நகரும் நடுங்கட்டும், அப்பா!
அழகு! அழகு! அதிசயம்! அதிசயம்!
பெற்ற புத்திரன் பெரும்பிழை செய்யினும்
சிறுவன் செய்த சிறுபிழை என்பாய்,
சினந்திட மாட்டாய், சிரித்து விடுவாய். 50
ஏசினும் பேசினும் எட்டி யடிப்பினும் [வாய்.
மறுத்துரை செய்யாய், பொறுத்துக் கொள்
'மக்கள்மெய் தீண்டலுடற் கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்’கெனச்[9]
                                     [சொல்லும்
உண்மைக் குறளின் உட்பொருள் அறிந்து 55

நடப்பவர் உன்போல் நானிலத் தில்லை?
ஆனால்,
மருமகன் வந்து வணங்கி நின்று
வாழ்த்த எண்ணி வாயைத் திறக்குமுன்,
வைதான் என்று பொய்தான் சொல்வாய்! 60
அடியேன் என்று அவன் அங்கை கூப்பினும்,
அடித்தான் என்று அநியாயமே கூறுவாய்,
காரண வா! உன் காரிய மெல்லாம்
அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அப்பா!
ஒருகண் வெண்ணெயும் ஒருகண் நீறும் 65
வைப்பதும் உனக்கு வழக்கம் தான். அடா!
இதற்குச் சாத்திரம் எங்கே பார்த்து
வைத்திருக் கின்றீர், மாப்பிள்ளைத் துரையே!
போட்டும்;[10]
ஆண்டு தோறும் அறுப்புக் காலம்உன் 70
நாலாம் மனைவி நாடகக் காரி,
வித்துத் தண்டும் வாளை மீனும்
முருங்கைக் காயும் மொச்சைக் கொட்டையும்
வட்டி வட்டியாய் வாங்கி வாங்கிக்
கறிகள் வைத்துக் கஞ்சியும் வைத்து, 75
கஞ்சியை
ஆற்றி ஆற்றி அரையரை அகப்பையாய்
விட்டுக் கொண்டு, விசிறி எடுத்து
வியர்வை மாற வீசிக் கொண்டு,
பற்பல பேச்சிலும் பக்குவ மாக 80

உண்மையும் பொய்யும் ஒருங்கு கலந்து
காலம் போக்கும் காரணம் இன்னதென்று
அப்ப முத்து[11] நீ அறிவா யோடா?
கொட்டுக் குடவைப்[12] புட்டும் தின்று, மேல்
குறுணிக் காப்பியும் குடித்தால் போதுமா! 85
வீட்டுக் காரியம் விசாரித்து அறிய
மதியில் லாதவன் மனிதனா? மாடா?
சாளையும் சோறும் சண்ணும் சப்பா.[13]
களத்துச் சுவரைக் கடந்து போவது
எத்தனை வட்டி நெல் என்று அறி வாயோ? 90
கூடப் பிறந்தவள் கும்பி கொதித்து
வந்துநின் றாலும், மாபா தகன்நீ,
ஆழக்கு நெல்லும் அளித்திடு வாயோ!
அலர்தலை யுலகில் அறவழி நில்லா
அரசர் மகுடம் அனைத்தையும் ஒன்றாய் 95
அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி

மாசெலாம் அகற்றி வையகம் தொழுதன்
அடியில் இடுஞ்செருப் பாணிகள் ஆக்கவும்.
அவர்,
கொடுங்கோல் எல்லாம் குதிரைப் பாகர் 100
தாங்குதற் குரிய சவுக்குகள் ஆக்கவும்,
ஈட்டி வாள் இவை யாவையும் முறித்துப்
பண்பட நிலம் உழு படைகள் ஆக்கவும்
கொடிகள் கொற்றக் குடைகள் இவற்றைச்
சிறுசிறு துண்டாய்க் கீறிச் சிறுமியர் 105
பாவைக்கு அணிபா வாடைகள் ஆக்கவும்,
நாடும் நகரும் நாசம் செய்யும்
பென்னம் பெரிய பீரங் கிகளை
இந்திய நாட்டில் இழுத்துக் கொணர்ந்து
செந்நெல் கோதுமை தீங்கரும்பு என்று 110
பன்னப் படுபல பயிர்களும் ஓங்குநம்
நிலங்களில் என்றும் நீர்வளம் பெருகக்
கங்கை யமுனை காவிரி முதலிய
வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்.
கங்கணம் கட்டியெம் காவலர் காவலன் 115
ஐந்தாம் ஜ்யார்ஜாம் அமரா பரணன்[14]
பூதலம் மீதலம் பாதலம் நடுங்க
ஏம கால தூதரும் இளைக்கக்

கடும்போர் செய்யும் இக்காலந் தன்னில்[15]
காரண வர்களே! காரண வர்களே! 120
குடும்பந் தோறும் கொடுங்கோ லரசு
நிலைத்திட முயல்வது நீதிதா னாகுமோ?
அது,
நீணிலத்து இனியொரு நிமிடம் நிற்குமோ?
ஐயோ! இவர் செய்யும் அநியா யங்களை 125
அறிபவர் யாரே! அறிபவர் யாரே!
கொடுங்கோ லரசர் குடிகளைப் போல், இக்
காரண வர்களின் கைக்கீழ்த் தங்கி
இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
மாறாக் கண்ணீர் வடிய விட்டுத் 130
தீராத் துயரம் தீருநாள் எண்ணி
நைந்து நொந்து நாளைக் கழிப்பவர்
எத்தனை எத்தனை எத்தனை என்பேன்!"
என்றெலாம் சொல்லி இனிய மொழிகளால்
வாழ்த்தி நல்ல வரங்களும் கொடுத்துத் 135
தெருவில் இறங்கினார். சிறிது தூரம்
சென்று, பின்னும் சீறிச் சினந்து
வந்தார்; வந்த வரவில், மண்டை
படீரென வாசற் படியில் மோத,
முன்னிலும் கோபம் மூண்டு, "மூடா! 140
வஞ்சகா! உன்குட வண்டியைக்[16] கலக்கிப்

போடுகிறேன் பார்.... .... .... ....
.... .... .... .... .... .... .... .... ....
.... .... .... .... .... .... .... .... ....”[17]
படபட என்று பற்பல மொழிகளைப் 145
பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா!
கணவரோ,
வைய வைய[18] வைரக் கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக் கல்லும்
ஆகி யிருந்தனர்.... .... .... 150


  1. 1. ஏட்டிற் பொடிவு
  2. 22. திகையா - பூர்த்தியாகாத.
  3. 23. கன்னியும் காப்பும் காணாக் குமரன் - கலியாணமாகாத சிறுவன்: கன்னி காணா - கன்னி கழியாத; காப்பு -
    கலியாணத்தின்போது கையிலணியும் மங்கலக் காப்பு.
  4. 27. தானிகன் - ஸ்தானிகன் : இங்கே, தாசிகள் வீட்டையே இருப்பிடமாகக் கொண்டவன்.
  5. 34. பரத்தை நாடி யென்பது மோக்ஷத்தை விரும்பி
    யென்றும், தாசியை விரும்பி யென்றும் பொருள்படும்.
  6. 35. கவனிப்பதி - கன்னியாகுமரி
  7. 40. மந்தாரம்புதூர் - குமரிக்குப் போகும் வழியருகிலுள்ள ஓர் ஊர்.
  8. 45. மாதவராயர் : இவர் கி.பி. 1858 முதல் 1872 வரையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பல சீர்திருத்தங்களைச் செய்தவர் இவரே. திருட்டு முதலிய தீமைகளை அறவே ஒழிக்கத்தக்க ஏற்பாடு செய்தார். இலவசக் கல்வி நிலையங்கள் பல, இவர் காலத்தில் ஏற்பட்டன. திருவனந்தபுரத்திலுள்ள பெரிய அரசாங்கக் காரியாலயமாகிய ஹுஸுர்க் கச்சேரி கட்டியவரும் இவரே. இவரது உருவச்சிலை இவர் கட்டிய கச்சேரி மாளிகையின் எதிர்ப்புறத்துச் சாலையிலே மாளிகையை நோக்கி நிறுவப் பெற்றுள்ளது.
  9. 53-54. திருக்குறள் 'புதல்வரைப் பெறுதல்' என்ற
    அதிகாரத்தில் வரும் ஐந்தரம் பாடல்.
  10. 69. போட்டும் - போகட்டும்; இது நிற்க.
  11. 83. அப்பமுத்து - கொஞ்ச காலத்துக்கு முன் நாகர்கோவிலில் இருந்த பேர்போன ஒரு மூடன்.
  12. 84. கொட்டுக் குடவை பாத்திரவகை,
  13. 88-89. சாளை - சாளை மீன்; இதில் துப்புவாளை என்னொரு
    வகையுண்டு: இம்மீன் முள் அதிகமுடையதாதலால், சாப்பிடும்போது, முள்ளைத் துப்பிக்கொண்டே யிருக்கவேண்டி
    யிருக்கும். இப்படி முள்ளை நிக்கி நீக்கிச் சாப்பிடுவதற்கு
    அதிக நேரமாகும். பெண்டிர், இந்த மீனைக் கறிசமைத்துக்
    கணவருக்குப் பரிமாறி, அவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்,
    களத்துச் சுவரின் மேலாக அவரறியாமல் நெல்லை அப்புறப்படுத்தி விற்றுப் பணம் சேர்த்துக் கொள்வதுண்டு; இந்தப் பழக்கமே இந்த வரிகளில் சுட்டப்படுகிறது. சண்ணும் - நிறையச் சாப்பிடும். சப்பா - பயனற்றவன் என்பது கருத்து.
  14. 116.ஐந்தாம் ஜ்யார்ஜ் செய்த கடும்போர் : இவர்
    இங்கிலாந்து தேசத்து மன்னர். இந்தியாவில் பிரிட்டிஷ்,
    அரசாங்கம் இருந்தபோது, இந்தியச் சக்கரவர்த்தியாக விளங்கினார். இவர் காலத்தில்தான் முதல் உலக மகாயுத்தம்
    (1914-1919) நடைபெற்றது. இதுதான் இவர் செய்த கடும்
    போர்.
  15. 119. இக்காலம் : சென்ற முதல் மகாயுத்தம் நடந்த காலமாகிய 1914-1919-ம் ஆண்டு.
  16. 141. குடவண்டி: தொந்தி வயிறு.
  17. 142-4. இவ்விடத்தில் ஏடு சிதியமாகப் போய்விட்டது.
  18. 148. வைய, வைய, திட்டத் திட்ட: மிகவும் மௌனம்
    கொண்டனர்.