மருமக்கள்வழி மான்மியம்/கோடேறிக்‌ குடிமுடித்த படலம்‌

9. கோடேறிக் குடிமுடித்த படலம்

ஐயோ! ஐயோ! அடங்கா வீர
பத்திரப் பிள்ளை, (அப் பாவி பாதகன், என்
குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன்,
அரக்கன், ஏழரை ஆண்டைச் சனியன்)
விரைவில் ஓடி வீட்டில் சென்று, 5
மனைவியை அழைத்து மண்டையைக் காட்டி, உன்
அண்ணன் அடித்த அடிகளைப் பாரடி!
இன்றைக்கு,
உயிர்போ காமல் இருந்தது உன் தாலிப்
பாக்கியம் தானடி, பகவான் செயலடி! 10
அவன், எண்ணிப் பாராது ஏசின ஏச்சிவ்
கடுகள் வேனும் உன் காதில் விழுந்தால், நீ
நஞ்சைத் தின்பாய். நான்று சாவாய்,
நாக்கைப் பிடுங்கி நடுங்கி இறப்பாய்,
ஆற்றில் குளத்தில் அலறி விழுவாய்,
சங்கிலித் துறைபோய்ச்[1] சாடி யொழிவாய்;
இதற்கோர் ஐயம் இல்லை, இல்லையே!

என்னைப்,
பறைப்பயல் பள்ளப் பயலினும் கேடாய்
நினைத்துப் பேசின நீசன் அவனை 20
வாயில் மண்ணை வாரி யடித்து
வீட்டை விட்டு வெளியி லிறக்கின
அன்றைக்கு அல்லவோ ஆண்பிள்ளை யாவேன்?
என்று பற்பல இன்னும் சொல்லிக்
கோபா வேசம் கொண்டவ னானான். 25
கூட இருந்த குசும்பன் சாமி[2]
போதா தென்று புகையும் போட்டான்.
வீணாய்க் கதையை விரிப்பதேன்? அம்மா!
அப்பனும் மகனும் அண்டை வீட்டுக்
குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும் 30
கோட்டு மாடன் பிள்ளையும் கூடி
இரவு முழுதும் இருந்து, யோசனை
பலவும் செய்து, பலபல வென்று
விடியு முன்னம் விரைவா யெழுந்து,
பானையில் கிடந்த பழவோ லைகளும் 35
முறிப்பெட்டியிலுள்ள[3] முன்னோ லைகளும்
கைச்சீட்டுகளும் கடச்சீட்டுகளும்[4]
கைச்சாத் துகளும்[5] பொய்ச்சாத் துகளும்,

பத்திரச் சுருளும் பகர்ப்புச் சுருளும்,[6]
எல்லாம் சுமடாய்க் கட்டி, இரண்டொரு 40
முண்டைப் போட்டு மூடிப் பொதிந்து
தோளில் வைத்துச் சுமந்து கொண்டு,
நாகையம்[7] பதியை நாடிச் சென்றனர்.
அங்கு,
நீதிக் கெல்லாம் நிலைய மாகியும் 45
உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும்
கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும்
வாழும் நியாய வாதிகள் தங்கும்
வீதியை முற்ற விலகிச் சென்று, வீண்
விவகா ரங்கள் விளைநில மாகியும் 50
பொய்கள் அடைக்கலம் புகுமிட மாகியும்
குதர்க்கம் குடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்த ஓர்
அண்டப் புரட்டன் வக்கீல்ஆ பீஸில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை யறிந்து, 55
காரியம் சொன்னார். கதைகளும் சொன்னார்;
'காரணவ னைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்' என்றார்;
புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில் 60
தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம்முன் செய்த நல்வினைப் பயனோ?
தேரைமுன் செய்த தீவினைப் பயனோ?

ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்!
செல்லும் செலவு செய்திட, ரூபாய் 65
நூற்றைம் பதுக்கோர் நோட்டு,[8] வக்கீல்
மைத்துனன் முத்து வாத்தியார் பேருக்கு
எழுதி முடித்தார்; எடுத்து வந்த
ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்;
இவரிவர் சாக்ஷிகள் என்றும் சொன்னார்; 70
வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்[9]
மூத்த பிள்ளையே[10] முதலாம் சாக்ஷி;
மாத்தால் கணக்கு[11] மகரா சன்மகன்
பிச்சைக் காரன் பின்னொரு சாக்ஷி;
இருக ணில்லா இருளப் பன்மகன் 75
முத்தொளி மறவன் மூன்றாம் சாக்ஷி;
ஐயம் பிள்ளை அண்ணாவி[12] புதல்வன்
நல்ல பிள்ளை நாலாம் சாக்ஷி;
பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
யாடும் பெருமாள்[13] ஐந்தாம் சாக்ஷி. 80

நம்பர் பதித்த நாலா மாதம்
ஒருநாள் காலை, உறக்கப் பாயில்
எழுந்து என் கணவர் இருக்கும் பொழுது,
கறுப்பன் கட்டையன் சுப்படா மீசைக்
காரன்[14] ஒருவன், காலனைப் போல, 85
கோர்ட்டுச் சம்மனைக் கொண்டு வந்தான்.
(நச்சுவா யண்ணன் நாச காலன்
வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான்,[15]
எண்ணினது போல எல்லாம் ஆச்சுதே!
நினைத்தது போல நேரம் விடிந்ததே! 90
இந்நாள் இங்கு யான்படும் பாடெலாம்,
நாளை
அவரும் மக்களும் அனுபவிப் பார்கள்;
யாதும் தடையிலை. யாதும் தடையிலை;
பத்தினி என்சொல் பழுதா காது, 95
உத்தமி என்சொல் ஊரையும் சுடுமே:
கேட்கும், கேட்கும், தெய்வம் கேட்கும்!)
சேவகன் வந்த காரியம் தெரிந்தோ,
இயல்பாய்த் தானோ, (யாதோ அறியேன்)
மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை 100
அண்ணனும் அப்பொழுது அங்கு வந்து,
'யார் இவன்' என்றனர்; 'இன்னார்' என்றோம்;
சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்து என்
புருஷனை நோக்கி, "போனதெல்லாம்

போகட்டும் ஐயா! பொய்கைப் பற்றில் 105
ஆறு தடியும், அணஞ்சி விளையும்,
துலுக்கன் தோப்பும், தொட்டிச்சி மேடும்,[16]
மேலத் தெருவில் மேடை வீடும்,
ஈரணை ஏரும், ஏழு பசுவும்,
யாதொரு கடனும் இல்லா மல், நீர் 110
இருக்கு மட்டும் யாப்பிய மாகவும்,[17]
அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள்
ஒன்று விடாது உகந் துடைறை யாகவும்
எடுத்துக் கொள்ள ஓர் ஓலை யெழுதி
உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல், 115
வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல்
சும்மா இருப்பது மெத்தச் சுகமாம்.
இப்படி ராஜி எழுதிக் கொடுக்க
உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும்.
வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து 120
கறகற வென்று கறங்கி மயங்கி,
கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி
வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம்,
அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்!
தொல்லைக்குத் தூதுசொல்லிடவேண்டாம்! 125
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
பண்டொரு நீதிபதி, தம் கோர்ட்டு

வாயிலின் வந்த மனித ரெல்லாம்,
உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி 130
வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்,
தாட்பொதி[18] யொன்று தலையிற் சுமந்து
வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்[19]
கண்களால் கண்டு கண்டு, நாளும்
நல்லறிவு எய்திட நடைநடை தோறும் 135
இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
செய்து வைத்த கதைதெரி யாதோ?
இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்
இவைக ளன்றி வேறு எவையும் உண்டோ?

புத்தியில் லாஇரு பூனைகள் பண்டு 140
வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி[20]
உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்
நாம்,
பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ? 145
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்.
அரையடிச் சுவருக் காகஐக் கோர்ட்டு
வரையிலும் ஏறி வழக்குப் பேசி,
அந்திர புரத்து[21] மந்திரம் பிள்ளை
அடியோடு கெட்டது அறிய மாட்டீரோ? 150
வடக்கு வீட்டு மச்சம் பியும்[22] அவர்
மருமக் களுமாய் வருஷம் எட்டாக
மாறி மாறி வாதம் செய்து
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம் 155
கண்ணால் இன்று காணவில்லையோ?
வேலுப் பிள்ளை வீட்டு நம்பரில்,[23]
ஐந்தாம் சாக்ஷி ஆண்டி[24] அவனை
அழஅழப்படுத்தி,[25] அறுபது ரூபாய்

வாங்கிக் கொண்டு, மேல் வாயிதாத் தோறும்,
'வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்,
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்;
பானையி லேபத் தரிசி இல்லை,
உப்போ புளியோ ஒன்று மில்லை,
உச்சிக்கு எண்ணெய் ஒருதுளி யில்லை, 165
தொட்டில் கட்டத் துணியு மில்லை,
காந்தி மதிக்குக்[26] கண்டாங்கி யில்லை,
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை;
இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழிநான் கொடுக்கவருவேன்?'
என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
முளைய நல்லூர்[27] முதல்பிடிப் பிள்ளை
அண்ணனும் இப்படி யாகக் காரணம்,

விளாத்திக் கோண[28] விவகார மல்லவோ? 175
எத்தனை வகையை[29] இழந்தார், அப்பா!
மூக்கறை யன்விளை[30] மூலையில் நிற்கும்
பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்
தாங்கி, மீதியும் தருமே, அப்பா!
அந்த 180
மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
எல்லா நகையும் இறக்கி விட்டாளே!
ஒவ்வொரு காதிலும் உழக்குழக் குப்பொன்
இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே! 185
கருந்தாளி உலக்கை[31] கையில் எடுத்து அவள்
கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
யாவ ராயினும் எண்ணினது உண்டா?
என்ன செய்வாள், ஏழை! பாவம்!
நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய்[32] 190
ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
இதுவும் செய்யும், மேல் எதுவும் செய்யும்:
கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்,

வல்லம் வல்லமாய்[33] மாம்பழம் அனுப்பவும், 195
பானை பானையாய்ப் பால்நெய் யனுப்பவும்,
மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்,
வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்,
யாரால் முடியும்! யாரால் முடியும்;
எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்? 200
ஐயா.
வழக்கும் இழந்து வகையும் இழந்து,
யாவும் இழந்து உளம் ஏங்கி யிருக்கும்
கைலாசம் பிள்ளைக் கரையாளன்[34] வீட்டை
வக்கீல் பீஸு பாக்கி வகையில் 205
எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?
இந்த மாசம் எட்டாந் தேதி
மேலத் தெருவில்............வீட்டில்[35] 210
ஜப்திக்கு வந்த தலைவன், ஐயோ!
எள்ளள வேனும் இரக்கமில் லாமல்,
அந்தக்
கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும், 215

தண்ணீர் குடிக்கும் சமயம் பார்த்துப்
பிள்ளைக் கெண்டியைப் பிடுங்கச் செய்ததும்,
சருவம் பானை சட்டுவம் அகப்பை
குட்டுவம் செம்பு குழியல்[36] முதலாய்
உப்போடு சிரட்டை[37] ஒன்றுமில் லாமல் 220
எல்லாம் வண்டியில் ஏற்றிச் சென்றதும்,
நாம்
காணாற் கண்டதோ? கனவோ? ஐயா!
நாமெலாம் சேர்ந்து நடத்தின கட்சிக்
கொடையில், மாடன் கொண்டாடி நம்பி[38] 225
சந்தனம் பூசிச் சல்லடம் கட்டிப்
பூவை யெடுக்கப் போன பொழுது,
வாறண்டுக் காரன் வந்ததை யறிந்து,
குட்டிச் சுவரெலாம் குதித்துச் சாடி
வாய்க்கால் வழியாய் வடக்கே யோடி, 230
ஒருவரும் காணாது ஓச்சன் குளத்து[39]

மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்,
‘சாமி சுடலைச் சாம்பலி லாடி
விளையா டுதற்கு வேகமாய்ப் போகிறார்’
என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம் 235
எழுந்து போனதும், எங்கும் தேடிக்
காணா தானதும், கடைசியில் உண்மை
தெரிய வந்ததும், செலவோடு செலவு என்று
ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
வாறண்டை அன்று மடக்கி விட்டதும்[40] 240
நடந்த காரியமோ? நாடகந் தானோ?
வியாச்சியம், வேண்டாம், வியாச்சியம்! வேண்டாம்
தேடின முதலைத் தெருவில் வாரி
இறைக்க வேண்டாம்; இறைக்க வேண்டாம்.
அல்லும் பகலும் அலுப்பில் லாமல் 245
ஆஆ என்று அலை ஆமீன்[41] வாயில்
அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்
பொல்லா மீன்இது போலொரு மீனைக்
கடலினும் கூடக் கண்டவ ரில்லை. 250
எவரினும் பெரியவன் யானே ஆவேன்;
எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்;
இம்மிரு கத்தையும் எடுத்தொரு நொடியில்
வானெலாம் சுற்றி வருவதற் குள்ள
ஆற்றலு முடையேன்; ஆனால், அத்திறம் 255
அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட

அற்பமும் ஆசை எனக்கிலை; அன்றியும்,
உருவமோ நீளமோ உயரமோ கண்டே
மூட உலகம் மோசம் போகும்;
ஆதலால் ஒருவரும் அறியா திருந்து இந் 260
நாலுகை யானை[42] நடத்து கின்றேன்'
என்று தன் முதுகி லிருக்கும் ஈயொன்று
எண்ணாது டம்பம் எடுத்துரைப்பது போல்,
'இரவும் பகலும் இடைவிடாமல்
பற்பல வருஷம் படித்து பீ. எல்., 265
எம். எல். பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்,
யாங்க வில்லையேல் என்செய்வார்?' எனப்
புத்தி யிலாது புலம்பித் திரியும்
குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக் 270
குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குத்திட வேண்டாம்
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
'இன்ன படியென்று எழுதி விட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன். 275
விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்;
வருகிற வழியாய் வந்து எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
தருவேன்' என்று சற்றும் வாய்கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருஷன் 280

நிறையா வயிற்றை நிறைத்திடக் கடலைத்
திறந்து விட்டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும்[43] பட்டிகைப் படிகளும் 285
சாக்ஷிப் படிகளும் சமன்ஸுப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிஷன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப்[44] படிகளும்
வாறண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி 290
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி,
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட[45] ஆளும் நீரோ? ஐயா!
கோர்ட்டு பீஸு குமாஸ்தா பீஸு
கூடிக் காப்பி குடிக்கப் பீஸு 295
வெற்றிலை வாங்கிட வேறொரு பீஸு
வக்கில் பீஸு மகமைப் பீஸு
வக்கா லத்து வகைக்கொரு பீஸு
எழுதப் பீஸு சொல்லப் பீஸு
எழுதிய தாளை எடுகப்பீஸு 300
நிற்கப் பீஸு இருக்கப் பீஸு

நீட்டின கையை மடக்கப்பீஸு
பாரப் பீஸு[46] கீரப் பீஸு
பார இழவு பயிற்றுப் பீஸு
கண்டு பீஸு காணாப் பீஸு 305
முண்டுத் துணிக்கொரு முழுமல் பீஸு
அந்தப் பீஸு இந்தப் பீஸு
ஆனைப் பீஸு பூனைப் பீஸு
ஏறப் பீஸு இறங்கப் பீஸு
இப்படி யாக என்றென் றைக்கும் 310
பீஸு பீஸாகப்[47] பிச்சுப் பிடுங்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்,
குதித்துக் குடியை முடித்திடவேண்டாம்;
மூவுல கேத்து மூவரும்[48] நாணப்
பொதுரிக் கார்ட்டுப் புரையில்[49] தனியாய் 315
ஓர், மூலையில் இருந்து முத்தொழில்[50] இயற்றும்
தெய்வத்தின் இரு சேவடி நிதமும்
கண்டு தொழுது காணிக்கை யிட்டு
வணங்காதவர்க்கு வருந்தோ ஷங்கள்
இத்தனை யென்றிட யாரால் முடியும்? 320

இதற்கெலாம் முதலுக்கு எங்கே போவீர்?
வஞ்சியை முறித்து[51] வாரப் போவீரா?
வாதி பாகத்து வக்கீல் உம்மைக்
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
கிராஸு[52] கேட்டுக் கிடுக்கி விடுவான்; 325
சந்தேக மில்லை, சந்தேக மில்லை;
நீர்,
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்;
புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்:
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர்; 330
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்;
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்;
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்!
தயவாய்ச் சொல்லுவார், தக்கில்[53] கேட்பார்,
இரைந்து சொல்வார், எச்சில் எழும்புவார்; 335
பார் பார் என்பார். பல்லைக் கடிப்பார்;
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்;
அங்கும் இங்கும் அசையாதே என்பார்,
குனியாதே என்பார், கோட்டைப்பார்[54] என்பார்.
கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் 340
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.

‘ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
ஒன்றா? இரண்டா? உடன் சொலும்’ என்பார்:
நாம்,
‘குதிரைக்கு ஏது கொம்புகள்?‘ என்றால், 345
அது,
கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்!
‘கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்;
இரண்டா? ஒன்றா? என்பது என் கேள்வி:
உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம் 350
கேட்டேனா? ஓய்? காதுகேட் காதோ?‘
என்றெலாம் சொல்லி ஏமாற்றி விடுவார்.
குண்டில்[55] விழுந்த குள்ள நரியைப்
படுத்தும் பாடெலாம் உம்மைப்படுத்துவார்.
இவர், 355
ஈரங் கிகளை[56] எடுத்துச் சொன்னால்
பீரங் கிகளும் பின்னிட் டோடும்;
பொல்லா தவர் அவர், பொல்லா தவர்அவர்.
இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும்[57]
இணையா வாரோ? இணையா வாரோ? 360
அறிந்து பிழையும், அறிந்து பிழையும்.
சொந்த வீட்டில் துரும்பையும் தூக்கி
எறியச் சற்றும் இயலாது என்பவர்,

வக்கில் வீட்டில் வரிக்கல்[58] பிடுங்கப்
போவதும் எத்தனை புத்திகேடு. ஐயா! 365
தங்கை மக்கள் தரித்திரம் அடைந்து
வயிற்றுக்கு இன்றி வாடி யலைய
வருக்கை மாம்பழம் வாழைப் பழமும்
பெட்டிப் பாலும் பிஸ்கூத் துகளும்
ஊரார் மக்கள் உண்டு களித்திட 370
வாங்கிச் செல்வது மதியுளார் செயலோ?
மேடும் காடும் வெட்டித் திருத்திப்
பாறையும் உடைத்துப் படுநில மாக்கிப்
பருவம் அறிந்து பண்பட உழுது
மண்ணலம் உணர்ந்து வளமிகப் பெய்து, 375
வாசிறை மீண்டான்[59] வளரச் செய்து,
சம்பாப் பயிரைத் தழைக்கச் செய்து
காலா காலத்தில் களைகள் எடுத்து
வேலியைக் கட்டி விலங்கினம் விலக்கிப்
பறைகளைக் கொட்டிப் பறவையை ஒட்டி. 380
நீரும் பாய்ச்சி, நிதமும் இராப்பகல்
உறக்க மின்றி உழைப்பத னாலே
விளையச் செய்த மேனிநெல் எல்லாம்,
வக்கீல் வீட்டு வாயிலிற் கொண்டுபோய்
விரித்துக் காய்ச்சி வீசித் தூற்றி 385
அளந்து வாரி அறைக்குட் போட்டு
வெறுங்கை யோடு வீடு போய்ச் சேரும்
நம்மவர் போல் இந் நானிலத் தெங்கும்

ஒருவ ரேனும் உண்டோ? ஐயா!
மூச்சை யடக்கி முக்குளி போட்டுக் 390
கீழுலகம் போய்க் கிடைத்த சிப்பியை
வாரி யெடுத்து மேலே வந்திடும்
முழுக்கா ளியினிடம்[60] முத்தொன் றேனும்
இருப்பதும் உண்டோ? எண்ணிப் பாரும்!
படிப்பிலார் தேடும் பற்பல பொருளும் 395
படித்தவர் வீட்டையே பார்த்துச் செல்லும்;
மூடர் முதலெலாம் வக்கீல் முதலாம்.[61]
ஐயம் இதற்கிலை, ஐயம் இதற்கிலை;
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
ஐயா ! ராஜி ஆவதே உத்தமம்! 400
மருமக் கள்வழி வழங்கும்இந் நாட்டில்
வீடுவீ டாயொரு கோடிருந் தாலும்[62]
வழக்குகட்கு ஓய்வு வருமோ ஐயா?"
என்று இவை யெல்லாம் எடுத்துச் சொல்லி
இறங்கிப் போனார். இக்கதை யெல்லாம் 405
நாலாம் மனைவி நாடகக் காரியின்
மாமன் மகன் ஒரு வக்கீல் குமஸ்தன்
அறிந்து வந்தான். "அண்ணே! அந்த
வெள்ளையம் பிள்ளைக்கு வேலை யில்லை;
காடு கூப்பிடுது[63] காலம் வரவில்லை; 410

வீடு போக்கிடுது, வேளைவர வில்லை?
கூனக் கிழவன் கோர்ட்டு வழக்கில்
என்ன அறிவான்? இவன்பேச் சையும் ஒரு
காரிய மாகக் கருதிட லாமோ?
செல்வமும் கல்வியும் செழித்த நாட்டில், 415
வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில்,
உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில்,
வழக்குகள் நிதமும் வளர்ந்து வருவது
சகஜம் என்று ஸ்தாபித்திட நான்
‘அத்தா ரிட்டிகள்’[64] ஆயிரம் காட்டுவேன். 420
அண்டப் புரட்டன் வக்கீல், என்ன
ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ?
இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்?
ஏழை, பாவம், யாவ ரேனும்
வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார்; 425
அன்றி,
பதிவு சாக்ஷிப்[65] பலவேசம் பிள்ளை[66]
கூட்டா ளிகளைக் கூட்டிற் கண்டால்,
வாயைத் திறவார், மௌனம் கொள்வார்;

பேடியைக் கண்ட பீஷ்மரும்[67] ஆவார்; 430
அண்டமும் கோழி அண்டமாய் விடும்;
உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்;
அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்;
எதுவந் தாலும் யான்இருக் கின்றேன்;
என்னை, 435
அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர்,
இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை,
மகம்மத லாவில் வரிகள் இத்தனை
என்று சொல்ல எனக்குத் தெரியும்.
தி. பி. கோ.[68] வைத் திருப்பித் திருப்பிப் 440
பாரா இரவும் பகலும் இல்லை.
சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே!
சட்ட மெனக்குத் தலைகீழாய்த்[69] தெரியும்;
நடைபடி[70] யெல்லாம் நன்றாய் தெரியும்:
இரண்டு கையால் எழுதத் தெரியும்; 445

அரை நிமிஷத்தில் அநியா யங்கள்[71]
ஐம்பதைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்;
பட்டிகை எழுதப் பாரம் போடக்
கெட்டி கெட்டி என்றுபேர் கேட்ட
ஏட்டுக் குமஸ்தன்[72] யானே யாவேன் 450
சாடை காட்டிச் சாட்சிக ளுக்குத்
தெரியாக் காரியம் தெரியச் செய்ய
என்னைப் போல் இங்கு யாருண்டு? ஐயா!
கட்சிகள் வந்து என் கையில் தந்த
பணத்தைச் சொந்தப் பணம்போல் எண்ணி 455
வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொள்வேன்;
சிறிது மோசஞ்[73] செய்திட மாட்டேன்;
வக்கீல் குமஸ்தன் சத்திய வாசகன்[74]
இன்னார் என்று இந் நாடெலாம் அறியும்.
ராஜியும் வேண்டாம், கீஜியும் வேண்டாம், 460
நானே கேஸு நடத்தி, ஜயமும்
வாங்கித் தருகிறேன்; மலைக்க வேண்டாம்;
என்,
வக்கீல் பேர்க்கு ஒரு வக்கா லத்தை

எழுதிப் போடும்" என்றெலாம் சொல்லி 465
இந்திர சாலம் மந்திர சாலம்
மகேந்திர சாலமும் வல்லஇம் மனிதன்
நாட்பண மாக நாலு ரூபாயும்
வக்கா லத்தும் வாங்கிச் சென்றான்;
'அர்ஜி கொடுத்தேன், அவதி[75] மாற்றினேன். 470
பிரதி யுத்தரமும் பேஷாய்க் கொடுத்தேன்.
கேஸில் ஜயமும் கிடைக்கும், நிச்சயம்'
என்று வார்த்தைகள் இதமாய்க் கூறி,
இடையிடை ரூபாய் இருபது முப்பது
தட்டிக்கொள்வான்; (தலைவிதி! தலைவிதி!) 475
கொடுத்துவைத் தவர்கள் கொண்டு போனார்கள்:
என்விதி யானும் இப்படி யானேன்;
நாகைக் கோர்ட்டில் கேஸு நடந்தது;
நடந்தது, நடந்தது, நாலரை வருஷம்;
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே! 480
இரவும் பகலும் இன்றி என் கணவர்
பட்ட பாடெலாம் பகர்வதும் எளிதோ?
திங்கட் கிழமை தெரிசனம் போச்சு,
திண்டாட் டங்கள் தீரா தாச்சு!
வெள்ளிக் கிழமை விரதம் போச்சு, 485
விவகா ரங்கள் மிகவே யாச்சு!
குளியும் போச்சு, கும்பிடும் போச்சு,
கோர்ட்டு வாசல் குடியிருப் பாச்சு!
மாதாந் தங்கள்[76] மறந்தே போச்சு.

வக்கீ லாபீஸ் வாழிடம் ஆச்சு! 490
உயர்ந்த மேடை உறைவிடம் போச்சு,
ஒட்டுத் திண்ணை உறங்கிட மாச்சு!
மெத்தை திண்டு விதானம் போச்சு,
விரிக்கும் பாய் அவர் மேல்முண் டாச்சு!
துப்பட்டாவும் தொங்கலும் போச்சு, 495
துவர்த்து முண்டும்[77] துணியுமே யாச்சு!
புட்டும்[78] பழமும் காப்பியும் போச்சு,
புளித்த காடியே போதுமென் றாச்சு!
தோசை இட்டலி தோய்ப்பனும்[79] போச்சு,
தொந்தியும் கரைந்து சுருங்குவ தாச்சு! 500
சுகந்தத் தூளும் சோப்பும் போச்சு.
சும்மா சிரங்கு சொறிவது மாச்சு!
சீலைக் குடையும் செருப்பும் போச்சு,
தினமும் வெயிலில் திரிவது மாச்சு!
அரைவண் டியுமாடும் அனைத்தும் போச்சு, 505
அஞ்ச லோட்டம்[80] அவர்க்கே யாச்சு!
மட்டிலாக் கவலை மனங்குடி கொண்டது,
அளவிலாத் துன்பம் அடிமை செய்தது!
ஐயோ! யாங்கள் அனைவரும் அந்நாள்
அடைந்த துயரெலாம் யாரே அறிவார்? 510

வேறு

குலக்குறத்தி வரினுமொரு
       கோடங்கி வரினும்
குறிகேட்டுப் பொருள்விரித்துக்
       கொண்டிருந்தோம். அம்மா![81]
துலக்கமுறப் பரல் பரத்திச்
       சோசியர்கள் கணித்துச்
சொன்னவைகள் உண்றை யென்று
       துணிந்திருந்தோம், அம்மா! 1
பதியிருக்கும் பதியெங்கும்
       பதிவாகச் சென்று
பால்வைத்துக் கணக்குகளும்
       பார்த்து வந்தோம்,[82] அம்மா!
கதிகிடைக்கும் எனக்காளி
       கொடை நடக்கும் காலம்
கடாத்தறித்துப்[83] பொங்கலிட்டுக்
       காத்திருந்தோம், அம்மா! 2
குறத்திசொன்ன குறியெல்லாம்
       குறிதவறிப் போச்சே!
கோடங்கி[84] குறியாலும்
       குணமில்லா தாச்சே!

நிறுத்துரைக்கும் நிமித்திகரின்
         நிமித்தங்கள் இந்நாள்
நினைக்கும்போ துளம் வெந்து
         நீறாகு தம்மா! 3
பதித்தலத்துப் பால்வைத்தும்
         பயனடைந்தோ மில்லை!
பலிகொடுத்தும் தேவி அருள்
         பாலித்தா ளில்லை!
விதித்தவீதி தான் இருக்க
        வேறுவிதி வருமோ!
விம்மியினி அழுவதெலாம்
        வீணலவோ அம்மா! 4

வேறு

இப்பெரும் கஷ்டம் யாரே படுவர்?
கணவர்,
அல்லும் பகலும் அலைந்து சடைத்தார்,
எலும்பும் தோலு மாக இளைத்தார்.
இருமல் இழுப்புக்கு இருப்பிட மானார், 5
எதிலும் விருப்பம் இல்லா தானார்.
வெளியூர்ப் போக்கை விட்டே விட்டார்,
உள்ளூர் மட்டும் உலாவி வந்தார்;
சிலநாள் பின்னும் செல்லச் செல்ல
தெருவில் மாத்திரம் திரிவா ராயினர்; 10
படிப்படி யாய்இப் படியவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது;
அண்டை வீடாகி, அறைப்புரை யாகி.
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்;
எழுந்து நடக்க இயலா தானார்; 15
நடந்தவர் கீழே கிடந்தா ரம்மா!


  1. 16. சங்கிலித் துறை - கன்னியாகுமரிக் கடலில் தீர்த்தமாடும் இடத்தை யடுத்துள்ள ஆழமான ஓரிடம். தீர்த்தமாடுவோர் அலைகளால் அடித்துச் செல்லப்படாதவாறு இரும்புச்
    சங்கிலியால் அங்கே வேலி போட்டிருக்கும்.
  2. 26. குசும்பன் சாமி: ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் சதா கோள் சொல்லிப் பகை மூட்டுவதையே தொழிலாகக் கொண்ட சாமி என்னுமொருவன்.
  3. 36. முறிப்பெட்டி - ஓலைப் பிரமாணங்களைக் காப்பாற்றி வைப்பதற்குரிய பெட்டி. முறி - ஓலைப் பிரமாணம்.
  4. 37. கடச்சீட்டு - கடன்சீட்டு.
  5. 38. கைச் சாத்து- ரசீது.
  6. 39. பகர்ப்புச் சுருள் - நகல்: ஒன்றைப் பார்த்துப் பெயர்த்தெழுதி வைத்தது.
  7. 43. நாகை - நாகர்கோவில்.
  8. 66. நோட்டு - பிராமிசரி நோட்டு என்னும் கடன் பத்திரம்.
  9. 71. வெள்ளை மடம்: நாகர் கோவிலை யடுத்த ஓரூர். கள்ளபிரான் - அங்குள்ளார் ஒருவரின் பெயர்.
  10. 72. மூத்தபிள்ளை: நாஞ்சில் நாட்டு வேளாளரில் தகுதியுடையவருக்குத் திருவிதாங்கூர் மன்னரால் முன்பு அளிக்கப்பட்டு வந்த ஒரு பட்டம்.
  11. 73. மாத்தால் - நாகர் கோவிலுக்கு ஆறு மைல் வடக்கிலுள்ள ஓரூர். கணக்கு - மூத்தபிள்ளை ஸ்தானம் உடையவர்கள் பெயரோடு 'கணக்கு' என்று இணைத்தெழுவது வழக்கம்.
  12. 77. அண்ணாவி - உபாத்தியாயர்.
  13. 79-80. பொய் சொலாமெய்யன், மாறியாடும் பெருமாள்: இவை பெயர்கள்.
  14. 84-5. கறுப்பனும் கட்டையனும் மீசைக்காரனுமான ஒருவன்.
  15. 87-8. நச்சுவாயண்ணனும் நாசகாலனும் வெட்டைரய்ப் போவானுமான வீரபத்திரன்.
  16. 106-7. பொய்கைப்பற்று, அணஞ்சிவிளை, துலுக்கன் தோப்பு, தொட்டிச்சிமேடு: நிலப் பெயர்கள்.
  17. 111. யாப்பியம் - நாஞ்சில் நாட்டு மருமக்கள் தாயக்
    குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். குடும்பத்திலிருந்து விலகும்
    போது அக் குடும்பத்தில் அவருக்குள்ள பாத்தியதைக்கு ஈடாகக் கொடுத்து ஒதுக்கும் சொத்து.
  18. 132. தாட்பொதி - காகிதக் கட்டு.
  19. 128 - 137. முன்பு அறிவுள்ள நீதிபதி யொருவர் நியாயத் தலத்து வாயிலின் இருபக்கங்களிலும் யாவரும் பார்க்கும்படி இரண்டு சித்திரங்கள் எழுதி வைக்கச் செய்திருந்தார். முதலாவது சித்திரம், எலும்புந் தோலுமாகி, தரித்திர நிலையடைந்த ஒரு மனிதன் உடைந்த ஓடொன்றைக் கையிலேந்தி நிற்பது; இது, கோர்ட்டு வழக்கில் ஈடுபட்டவர் இரு சார்ருள். வழக்குத் தோற்றவர் தம் கைப்பொருள் இழந்து, இரப்பதற்கு நல்ல சட்டி கூடக் கிடைக்காமல், உடைந்த ஓட்டைக் கையில் வைத்திருக்கும் காட்சி. இரண்டாவது சித்திரம், மற்றொரு மனிதன் காகிதப் பொதி யொன்றைத் தலையில் சுமந்து நிற்பது. இது, வழக்கில் வென்றவர், தமது பொருளையெல்லாம் வழக்காடுவதிலே செலவு செய்து பென்ற பிறகு, பணமிழந்து, வழக்குச் சம்பந்தமான தஸ்தாவே ஜுகள் மாத்திரமே மீதியாகி, அவற்றைத் தலையிலே சுமந்து கொண்டு திரியும் காட்சி இவ்வுருவங்களைப் பார்த்த பிறகேனும், வழக்கில் வென்றவர் நிலைமையும் தோற்றவர் நிலைமையும் முடிவில் தரித்திர நிலைமையே என்பதை அறிந்து, கோர்ட்டுக்குப் போய் வீணில் பொருளைப் பாழாக்காதிருக்க வேண்டும் என்ற உண்மையை மக்கள்
    உணர்ந்து ஒழுகும் பொருட்டு ஒரு நீதிபதி அவ்வுருவங்களை
    எழுதி வைக்கச் செய்தார் என்றொரு கதை உண்டு.
  20. 140-145. இரு பூனைகள் வானரத்திடம் சென்று வழக்குப் பேசிய கதை; இது பஞ்சதந்திரத்தில் உள்ளது.
  21. 149. அந்திரபுரம் — நாஞ்சில் நாட்டிலுள்ள ஓரூர்.
  22. 151. மச்சம்பி - அத்தான்: அக்காள் கணவன்.
  23. 157. வேலுப்பிள்ளை வீட்டு நம்பர் - வேலுப்பிள்ளை
    என்பவரின் குடும்பத்தில் ஏற்பட்ட வழக்கு.
  24. 158. ஆண்டி: ஒருவர் பெயர்.
  25. 159. அழ அழப்படுத்தி - மிகவும் கஷ்டப்படுத்தி.
  26. 167. காந்திமதி - ஆண்டியின் மனைவி.
  27. 173. முளைய நல்லூர்: இப்பெயருடைய ஊர் தற்பொழுது நாஞ்சில் நாட்டில் அழிந்துவிட்டது. இவ்வூரிலுள்ள ஒருவன் நாஞ்சில் மக்களுக்குப் பெருந்துன்பம் இழைத்துவந்தான் என்று நாஞ்சில் நாட்டில் வழங்கி வரும் பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அப்பாடல் வருமாறு:

    தாழக் குடியில் வைரவனும்

    தமிழ்த்தே ரூரில் சந்திரனும்

    கூழம் பெருத்த முளைய நல்லூர்க்

    குறும்பன் அணஞ்ச பெருமாளும்

    நாளை இவர்கள் தலைதெறித்தால்

    நன்றாய் வாழும் நாஞ்சில் நாடு.

    முதல் பிடிப் பிள்ளை — பொக்கிஷதாரன், ஊரின் பொது நிதியைக் காப்பவன்.
  28. 175. விளாத்திக் கோணம்: ஒரு கோணத்தின் பெயர்; கோணம் - ஒருவருக்கு உரிமையான பல நிலங்கள் அடுத்தடுத்து ஒரு சேகரமரகக் கிடக்கும் பகுதி.
  29. 176. வகை - வஸ்து, சொத்து.
  30. 177. மூக்கறையன் விளை - ஒரு புன்செய் நிலம்.
  31. 186. கருந்தாளி உலக்கை: கருந்தாளி மரத்தால் செய்தது.
  32. 190. அதிக காலம் இடையீடில்லாதபடி அடுத்தடுத்துப் பல குழந்தைகள் பிறந்திருந்தால், அவற்றை நட்டியும்
    குட்டியும் நாழியும் உழக்கும்' என்று நாஞ்சில் நாட்டில்
    சொல்வதுண்டு.
  33. 165. வல்லம் - தென்னங் கீற்றினால் செய்யும் ஒருவகைக் கூடை
  34. 204. கரையாளன்: இது ஓர் உத்தியோகப் பெயர். கரையிலுள்ள வரிப்பணம் வாங்குபவர். தற்பொழுது நாஞ்சில் நாட்டின் பகுதி, ஊர் என்று பிரித்திருப்பது போல, முன்பு கரை, தேசம் என்றிருந்தது. கரையிலுள்ள பணப் பிரிவு செய்யும் உத்தியோகஸ்தர் கரையாளர் என்று அழைக்கப்பட்டார்.
  35. 210. ஏட்டில் பொடிவு.
  36. 219. குட்டுவம் - தண்ணீர் விட்டு வைத்திருப்பதற்காக உபயோகிக்கும் பரந்த பெரிய பாத்திரம்; கொப்பரை என்று சொல்வதுமுண்டு. குழியல் - சாப்பிட உபயோகிக்கும் பாத்திரம்.
  37. 220. உப்போடு - உப்புப் போட்டு வைக்க உபயோகிக்கும் அற்பப் பாத்திரம். மரத்தாலானது. சிரட்டை - கொட்டாங்கச்சி. மிக்க விலையுயர்ந்த பாத்திரம் முதல் விலையே இல்லாத அற்பச் சிரட்டை வரையிலுள்ள எல்லாப் பாத்திரங்களையும் என்பதைக் காட்டுகிறது.
  38. 225. மாடன் கொண்டாடி நம்பி - மாடன் என்ற தெய்வத்தை ஆராதனை செய்து, ஆவேசம் வந்து ஆடுயவன்; நம்பி என்ற பெயருடையவன்.
  39. 231. ஓச்சன் - உவச்சன்; உவச்சன் குளம் என்பது ஒரு குளம். அழகியபாண்டியபுரம் முதலிய பல ஊர்களில் இப்
    பெயருடைய குளங்கள் உள்ளன.
  40. 240. மடக்கிவிட்டது - ஆளைப் பிடிக்காமல் திரும்பிப் போகச் செய்தது.
  41. 246. ஆ ஆ என்று அலைகிற ஆமீன் - அமீனா.
  42. 261. நாலுகை - அக்கீல் கோர்ட்டில் அணியும் கறுப்புக் 'கவுன்' நாலுகையுடைய சட்டை என்று ஏளனமாகச் சொல்வது வழக்கம். நாலுகை யானை என்பது வக்கில். வக்கீலாகிய யானையைத் தான் நடத்திச் செல்வதாகக் குமஸ்தா கூறிக் கொள்கிறான்.
  43. 285. பாரப் படி பாரம் எழுதுவதற்குரிய கூலி.
  44. 288. லேலம் -ஏலம்.
  45. 292. 'வாணாளைக் கொடுத்து வாண தீர்த்தம் ஆடுவது'
    என்பது ஒரு நாஞ்சில் நாட்டுப் பழமொழி; வாண தீர்த்தம்
    என்பது பாபநாசம் அருவியிலுள்ள ஒரு தீர்த்தக் கட்டம்.
    இதில் தீர்த்தமாடி வருவது மிகவும் சிரமமான காரியம்.
    அதிகக் கஷ்டப்பட்டு ஒரு காரியத்தை நிறைவேற்றுவது
    இப்பழமொழியின் கருத்து.
  46. 303. கோர்ட்டு பாரங்களைப் பூர்த்தி செய்து எழுதுவதற்குரிய கூலி
  47. 311. பீஸு பீஸாய் : பீஸ் (fees) என்னும் கட்டணம் கட்டணமாக என்றும், துண்டு (piece) துண்டாக என்றும் பொருள்படும். பிச்சு - பிய்த்து.
  48. 314. மூவர் - பிரம, விஷ்ணு, ருத்திரர்.
  49. 315. பொது ரிக்கார்ட்டுப் புரை : ரிக்கார்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடம்; ஆவணக் களரி (Record Office).
  50. 316-7. முத்தொழில்: இல்லாததை உண்டு பண்ணுதல்,
    உண்டுபண்ணியதைப் பரிபாலித்தல், உள்ளதை அழித்தல்
    என்பன, தெய்வம் - இங்கே குமஸ்தா.
  51. 322. வஞ்சி - கோவிலில் காணிக்கை செலுத்தும் உண்டிப் பெட்டி. லஞ்சியை முறித்தல்; திருட்டுத் தொழிலில் வல்லவனை வஞ்சியை முறித்த கள்வன்' என்று சொல்வது நாஞ்சினாட்டு வழக்கம்.
  52. 325. கிராஸு - குறுக்கு விசாரணை.
  53. 334. தக்கில் - தாழ்ந்த குரலில்.
  54. 330. கோட்டை - கோர்ட்டை,
  55. 353. குண்டில் - பள்ளத்தில்.
  56. 356. ஈரங்கி: (Hearing) வழக்குக் கேட்கை.
  57. 359. ஏழரை நாட்டன்: ஏர்ட்லி நார்ட்டன் (Eardley Norton) என்ற பிரசித்தி பெற்ற ஆங்கிலேய வக்கீல்: பாமர மக்கள் இப்பெயரை உச்சரிக்கும்போது, ஏழரை நாட்டன் என்று மருவி, ஏழரை நாட்டுச் சனியன் என்றும் பொருள்படும்.
  58. 364. வரிக்கல் - நீளமாக அடித்துத் திருத்திய கல்.
  59. 396. வாசிறை மீண்டான்! ஒருவகை நெல்,
  60. 393. முழுக்காளி - முத்துக் குளிப்பவன்.
  61. 397. மூடர்களால் வக்கீல்கள் செல்வராகிறார்கள் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி (Fools make the lawyers rich).
  62. 402. கோடு - கோர்ட்டு.
  63. 410-411. 'காடு வாவா என்கிறது டு போ போ என்கிறது' என்பது ஒரு பழமொழி.
  64. 420. அத்தாரிட்டி - அத்தாட்சி, ஆதாரம்.
  65. 427. பதிவு சாக்ஷி: லஞ்சம் வாங்கிக்கொண்டு முன் பின் தெரியாத எந்தப் பத்திரத்திலும் சாக்ஷிக் கையெழுத்துப் போடவும் சாக்ஷி சொல்லவும் தயாராயிருப்பவன்.
  66. பலவேசம் பிள்ளை: இப்பெயரைப் 'பலவேஷம் பிள்ளை'
    எனக் கொள்ள வேண்டும்; இவர், லஞ்சம் பெற்றுக்கொண்டு
    யார் யாருக்கு எந்த எந்த விதமாகச் சாட்சியம் சொல்ல
    வேண்டுமோ அந்தந்த விதமாகக் கோர்ட்டில் சொல்லத்
    துணிந்திருப்பவர் என்பது கருத்து.
  67. 430. பேடியைக் கண்ட பீஷ்மர்: உத்தம வீரரான பீஷ்மர் பேடிமீது அம்பு தொடுக்கமாட்டார். அவரைப் போரில் ஒருவராலும் வெல்ல முடியாதிருந்த நிலையில் ஒரு பேடியை முன் நிறுத்தி அருச்சுனன் அவரை வென்றான்
    என்பது பாரத சரித்திரம்.
  68. 460. தி. பி. கோ. - திருவிதாங்கூர் பீனல் கோட் (குற்ற விசாரணைச் சட்டம்).
  69. 443. தலைகீழாய்: மிக நன்றாக என்றும், மாறுபாடாக என்றும் இருபொருள் தொனிக்கும்.
  70. 444. நடைபடி: கோர்ட்டு நடவடிக்கை முறைகள் என்றும், கோர்ட்டு வாசல் நடை, அதன் படிகள் என்றும் இருபொருள்.
  71. 446. அநியாயம்: பிராது என்றும், நியாயக்கேடு என்றும் இருபொருள்.
  72. 450. ஏட்டுக்குமஸ்தன் - தலைமைக் குமஸ்தா (Head clerk)
  73. 457. சிறிது மோசம்: சிறுதுகூட மோசம் செய்ய மாட்டேன் என்றும், சிறிய மோசம் செய்யாமல் பெரிய மோசமே செய்வேன் என்றும் இருபொருள்.
  74. 458. சத்திய வாசகன் : சொல் (அதாவது வாசகம்) மட்டுமே சத்தியம், செயல் முற்றிலும் பொய்யும் புரட்டும் என்பது கருத்து.
  75. 470. அர்ஜி-பிராது, மனு. அவதி- வாய்தா.
  76. 489. மாதாந்தங்கள்: ஒவ்வொரு மாதக் கடைசியிலும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஏதேனுமோர் ஆலயத்துக்குச் சுவாமி தரிசனம் செய்யப்போகும் வழக்கம்.
  77. 496. துவர்த்து முண்டு — ஈரந் துவட்டுவதற்குரிய துண்டு.
  78. 497. புட்டு - பிட்டு,
  79. 499. தோய்ப்பன்: ஒருவகைப் பலகாரம்.
  80. 506. அஞ்சலோட்டம் - தபால் சுமந்து செல்லும் அஞ்சற்காரன் ஓடும் ஓட்டம்.
  81. 1. அம்மா: விளி; இவ்வரலாற்றைச் சொல்லிவரும் பெண் மற்றொரு பெண்ணை அம்மா என விளித்துக் கூறுகிறாள்.
  82. 2, 4. நாராயணசாமி பதிகள் அல்லது கோயில்களை
    நாஞ்சில் நாட்டிலுள்ள பல ஊர்களிலும் காணலாம். அப்
    பதிகளில் சிறப்பு நடத்துவதற்குப் 'பால் வைத்தல்' என்று
    பெயர். பதி கொண்டாடி சன்னதம் கொண்டு அடிமைகளுக்கு வருங்காரியம் கூறுவது 'கணக்குப் பார்த்தல்' எனப்படும்.
  83. 2. கடாத் தறித்து - கடாவைப் பலியிட்டு
  84. கோடங்கி - குடுகுடுப்பைக்காரன்.