மருமக்கள்வழி மான்மியம்/விநாயகர்‌ வணக்கம்‌

மருமக்கள்வழி மான்மியம்

விநாயகர் வணக்கம்

எம்பெரு மானே! இணையடி பரவும்
அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க
யானை நீள்கரம் ஏந்திய கடவுளே![1]
உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது
தந்தையோ. 5
என்றும் சையில் தலையோ டேந்தி
இரந்து திரிவான், இருப்பிட மில்லான்.
அம்பலந் தோறும் ஆடி அலைவான்,
அமிழ்தென நஞ்சையும் அள்ளி யுண்பான்,
பித்தனாகிப் பேயொடு குனிப்பான்,[2] 10
நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான்.
மாமனோ,

பூமக ளோடும் புவிமக ளோடும்
மதித்திட அரிய வளமெலாம் ஒருங்கு
வைகுந் திவ்விய வைகுந் தத்தில் 15
ஆயிரம் பணாமுடி அரவணை மீதே
அறிதுயி லமர்ந்திவ் வகில மெல்லாம்
ஆளும் பெரிய அண்ணலே யாயினும்,
கபட நாடகன்; கையிற் சக்கரம்[3]
இருந்தும், எவர்க்கும் ஈயாக் கள்வன். 20
ஆதலின், நீயும்,
தந்தை வீடெனத் தங்கிட மின்றி
மாமன் வீடென மதிப்பிட மின்றிச்
சந்தியும் தெருவும் தண்ணீர்க் கரையும்
மரத்தி னடியும் வாழிட மாக 25
இருந்தனை, உன்போல் இருவழி கட்கும்
இடைவழித் தங்கி இடர்ப்படும் எங்கள்
வருத்த மெல்லாம் அறிந்திட வல்லவர்
அறிந்து முற்றும் அகற்றிடும் நல்லவர்
நடுநிலை கண்ட நாயகர் வேறிங்கு 30
ஒருவரும் இல்லை; உன் திருவடி பணிந்து
மருமக் கள்வழி மான்மியம் பாடத்
தொடங்கினன், வந்து துணைநின் றிந்நூல்
இனிது முடிய இதயம்
கனிவு செய்தெனைக் காத்தருள் வாயே. 35


  1. 2-3. இவ்வடிகளுக்கு இருவகையாகப் பொருள் கூறலாம். 'அன்பினர்' உனக்கு வேண்டிக்கொள்பலற்றை
    யெல்லாம் வாரியுண்பதற்கு (அளிக்க) வசதியாக யானை நீள்கரம் ஏந்தினாய் என்பதொன்று. 'அன்பினர் உன்னிடம்
    வேண்டுபவற்றையெல்லாம் அவர்களுக்கு அளிக்க யானை நீள்
    கரம் ஏந்தினாய்' என்பது மற்றொன்று.
  2. 20. குனிப்பரன்-நடமாடுவாள்.
  3. 19-20, சக்கரம்-இருபொருள்: திருமால் கையிலேந்திய
    சக்கராயுதம்; திருவிதாங்கூரில் வழங்கிய சக்கரம் என்னும்ஒரு
    செப்பு நாணயம். இப்பெயருடைய நாணயங்கள் கொல்லம்
    ஆண்டு 1125 புரட்டாசி மாதம் 30-ம் தேதியோடு அரசாங்கத்தாரால் நிறுத்தப்பட்டுவிட்டன.