மருமக்கள்வழி மான்மியம்/அவையடக்கம்
அவையடக்கம்
அருந்தமிழ் அகத்தியன் ஆராய்ந் திடவும்
கேள்வியிற் பெரியநக் கீரன் கேட்கவும்
கல்வியிற் பெரியனாம் கம்பன் காணவும்
இயற்றிய நூலிதென் றெண்ணவும் படுமோ?
மருமக் கள்வழி யென்னும் வனத்தில்
5
புலிகள் சூழுமோர் புல்வாய்[1] போல
வலையிற் படுமோர் மணிப்புறாப் போல
கொள்கொம் பற்றுத் துவள்கொடி போல.
ஒருத்தி ஏழை ஒருதுணை யில்லாள்
தானும் மக்களும் தமிய ராகிப்
10
பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப்
புலம்பும் பொழுது, புண்ணிய சீலரே!
தொல்காப் பியமுதல் பல்காப் பியங்களும்[2]
கற்றுத் தெளிந்த கவிவல் லோரே!
விகாரம் முற்றும் விரவி வருமலால்
15
பொருட்சுவை சொற்சுவை பொருந்திவந் திடுமோ?
எதுகை மோனை இசைந்துவந் திடுமோ?
அணிகள் பற்பல அடுக்கிவந் திடுமோ?
ஆதலின், இதனைப்
பதவியும் பணமும் படிப்பு மிலாதேன்
20
பஞ்சப் பாட்டெனப் பழித்திக ழாதீர்.
இலக்கண வழூஉக்கள்[3] இருப்பினும், அவற்றை
வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின்
நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின்[4]
விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொண்மின்
பழையன திரிதலாய்ப் படித்துக் கொண்மின்
புதியன புகுதலாய்ப் பொறுத்துக் கொண்மின்.[5]
இன்னும்,
அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின்.
நாயேன்
30
கொண்ட கருத்தைக் குறைவறக்
கண்டு கொள்வது பெரியவர் கடனே.
- ↑ 6. புல்வாய் - மான் வகையில் ஒன்று.
- ↑ 13. தொல்காப்பியம் : தமிழிலுள்ள பழைய ஓர் இலக்கண நூல்; இதனைச் செய்தவர் தொல்காப்பியர்.
பல்காப்பியம்: பல காவியம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பரரமரயணம் முதலிய பெருங் காவியங்கள். - ↑ 23. இலக்கண வழூஉக்கள்: இலக்கணப் பிழைகள்.
- ↑
28-25. செய்யுள் விவகாரங்கள்:
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.
(நன்னூல்,105) - ↑
26-27. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.
(நன்னூல், 462)