மலரும் உள்ளம்-1/கதைப் பாடல்கள்
பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்.
பூலோக மெல்லாம் கொண்டாட்டம்.
ஆனை மீது ஊர்வலமாம்.
அற்புத மான சாப்பாடாம்.
ஒட்டைச் சிவிங்கி நாட்டியமாம்.
‘உர்,உர்’ குரங்கு பின்பாட்டாம்.
தடபுட லான ஏற்பாடாம்.
தாலி கட்டும் வேளையிலே,
மாப்பிள்ளைப் பூனையைக் காணோமாம் !
வந்தவ ரெல்லாம் தேடினராம்.
“பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை
பிடிக்கா மல்தான் போய்விட்டார்!
'எங்கே ஓடிப் போனாரோ?”
என்றே பலரும் பேசினராம்.
பெண்ணின் தாயார் இதுகேட்டுப்
பெரிதும் வருத்தம் கொண்டாளாம்.
‘ஐயோ, தலைவிதி’ என்றெண்ணி
அங்கும் இங்கும் நடந்தாளாம்.
★
வந்தவர் சாப்பிடப் பானையிலே
வாங்கி வைத்த பாலையெலாம்
சந்தடி யின்றி மாப்பிள்ளை
சமையல் கட்டில் தீர்த்தாராம்!
திருடித் திருடிப் பாலையெலாம்
தீர்த்துக் கட்டும் மாப்பிள்ளையைப்
பார்த்து விட்டாள், பெண்தாயார்;
பலத்த சத்தம் போட்டாளாம்.
உடனே அங்கே எல்லோரும்
ஒன்றாய்க் கூடி வந்தனராம்.
மாப்பிள்ளைப் பூனை வழியின்றி
மத்தியில் நின்று விழித்தாராம்.
★
“திருட்டுப் பிள்ளைக்கு என்பெண்ணைத்
திருமணம் செய்ய முடியாது!
வேண்டாம் இந்தச் சம்பந்தம்.
வெட்கக் கேடு! போய்வாரோம்”
என்றே பெண்ணின் தாயாரும்
ஏளன மாகக் கூறியபின்
அருமைப் பெண்ணைத் தன்னுடனே
அழைத்துக் கொண்டு போனாளாம்.
★
‘வகைவகை யான சாப்பாடு
வயிறு முட்டத் தின்றிடலாம்’
என்றே எண்ணி வந்தவரும்
ஏமாற் றத்துடன் திரும்பினராம்!
தொந்திப் பிள்ளை யாருடன்
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர்.
வழியில் பெரிய மலையிலே
வாய்க்கு நல்ல பழங்களாய்
இருக்கும் செய்தி கேட்டதும்
ஏறப் பார்த்தார், இருவரும்.
‘குடுகு’ டென்று குமரனே
குதித்து மலையில் ஏறினன்.
மலையைக் கண்ட பிள்ளையார்
மலைத்துத் தொந்தி தடவினார்.
“களைப்பு அதிகம் ஆனது.
காலும் மெத்த வலிக்குது.
தம்பி நீபோய் வந்திடு.
தங்கி இருக்கின் றே”னென
அரச மரத்து அடியிலே
அமர்ந்தார், தொந்திப் பிள்ளையார்.
காற்ற டித்த ஓசையில்
காது கேளாக் குமரனும்
சிறிது தூரம் சென்றுதான்
திரும்பி பார்த்தான், அண்ணனை.
அங்கும் இங்கும் பார்த்தனன்;
அண்ணன் வரவு கண்டிலன்;
உச்சி மலையில் ஏறினன்;
உற்று எங்கும் நோக்கினன்.
காண வில்லை, அண்ணனைக்
கண்ணுக் கெட்டும் வரையிலும்.
மலையின் மேலே நின்றிடின்
மரத்தின் கீழே தெரியுமோ?
பார்த்துப் பார்த்து உச்சியில்
பார்த்துக் கந்தன் நிற்கிறான்.
காத்துக் காத்துக் கணபதி
காற்று வாங்கும் காட்சிபார்!
ராமு மிகமிக நல்லவனாம்.
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.
எவர்க்கும் அன்பாய் நடப்பவனாம்.
இரக்கம் மிகவும் உடையவனாம்.
ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.
ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதைநான்
கண்டேன், உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன்நான்.
பாலு என்னும் ஒருபையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்.
மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்;
மறைத்து மடியில் வைத்தானாம்.
பார்த்ததும் உடனே கடைக்காரர்
‘பட்’டென அறைகள் விட்டாராம்.
‘திருடன், திருடன்’ என்றவனைத்
திட்டினர், அங்கு யாவருமே.
பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிஷம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.
கெட்டவன் எனவே பெயரெடுக்க
‘சட்’டென முடியும். ஆனாலோ,
நல்லவன் என்ற பெயர்பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன். அன்று ஓர் உண்மை.
அடைவோம், இதனால் பெருநன்மை.
மோட்டார் ஓட்டி முருகையன்
மூர்க்கத் தனங்கள் மிக்கவனாம்.
காட்டின் வழியாய் இரவினிலே
காரை ஓட்டிச் செல்லுகையில்,
விளக்கின் ஒளியைக் கண்டதுமே
மிரண்டு காட்டு மிருகங்கள்,
பார்வை சிறிதும் தெரியாமல்
பதறித் துடித்து நின்றிடுமே.
முயல்கள் வழியில் நின்றிட்டால்
முருகன் காரை அவைமேலே
ஏற்றிக் கொன்று, அவற்றினையே
எடுத்துக் கொண்டு போய்விடுவான்.
நாட்கள் தோறும் முயல்கட்கு
நமனாய் அன்னவன் ஆயினனே!
ஒருநாள் அந்த வழியினிலே,
உள்ள மைல்கல் ஒன்றிற்கு
வெள்ளை யடித்து இருந்ததனால்
வெள்ளை முயல்போல் தோன்றியதே!
முருகன் அதனை முயலெனவே
முட்டாள் தனமாய் எண்ணிவிட்டான்.
விட்டான் காரை அதன்மேலே
‘பட்’டெனக் கல்லில் மோதியதே!
காரின் முன்னால் இருந்திட்ட
கண்ணா டியுமே நொறுங்கியதே.
பட்டது காயம், பலமாக.
பல்லில் இரண்டு போயினவே.
“முயலைக் கொன்று தின்றிட்ட
முன்னம் பற்கள் உடைந்தனவே!
ஐயோ, உயிரைக் கொன்றேனே!
அதனால் கடவுள் தண்டித்தார்”
என்றே எண்ணி முருகனுமே
இளகிய உள்ளம் பெற்றனனே.
பையன் :
புள்ளி மானே, கோபம்நீ
கொள்வ தேனோ, கூறுவாய்?
மான் :
கட்ட விழ்த்து விட்டிடு.
காட்டை நோக்கிப் போகிறேன்.
பையன் :
ஒருவினாடி கூடநான்
உன்னை விட்டி ருப்பேனோ?
மான் :
உடனே நீயும் புறப்படு.
ஒன்றாய்க் காடு செல்லலாம்.
பையன் :
காட்டை நோக்கிப் போகவா?
கல்லும் முள்ளும் குத்துமே!
அம்மா, அப்பா, பாட்டியை
ஐயோ, விட்டு வருவதோ?
இருட்டிப் போனால் விளக்குமே
இல்லை அந்தக் காட்டிலே.
சிங்கம், கரடி, புலியுமே
சீறி வந்து கடிக்குமே.
மான் :
அப்ப டித்தான் எனக்குமே
அதிகக் கஷ்டம் இல்லையோ?
சுற்றத் தார்கள் வருவரோ?
துள்ளிச் சுற்ற முடியுமோ?
ஆசை கொண்ட உணவையம்
அடைந்து தின்னக் கூடுமோ?
கழுத்து நோக என்னையார்
காட்டில் கட்டிப் போடுவார்?
★
இதனைக் கேட்ட அவன்மனம்
இளகிப் போச்சு மெத்தவும்.
“ஐயோ, பாவம், ஐயையோ!
அவிழ்த்து விட்டேன், ஓடிடு”
என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.
காட்டை நோக்கி மகிழ்வுடன்
காற்றைப் போல ஓடிடும்,
மானைக் கண்டு அவனுமே
மகிழ்ச்சி கொள்ள லாயினன்!
பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.
ஒருநாள் அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
விறைத்து அதனில் பார்த்ததுவே.
கறுத்த நீளக் கோடுகளும்
கனத்த உடலும் கண்டதுமே,
“சிறுத்தை நான்தான். எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே!”
பூனை இப்படி எண்ணியதே.
புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
பாய்ந்து, உடைத்து நொறுக்கியதே.
ஆட்டம் போட்டு வீட்டினையே
அதிரச் செய்தது, புலிபோலே.
பாட்டி அங்கே வந்திடவே
பாய்ந்தது பூனை அவள்மீதும்!
பாட்டி கோபம் கொண்டனளே.
பக்கம் கிடந்த துடைப்பத்தால்
போட்டாள் பூனை தலைமேலே,
‘பொத்’தென உதைகள், புத்திவர
அடியைத் தாங்க மாட்டாமல்
அங்கே பூனை படுத்த துவே.
‘கொடிய புலியாய் எண்ணியதே
குற்றம் குற்றம் குற்றம்தான்!
பூனை என்றும் பூனைதான்.
புலியாய் மாற முடியாது’
தானே இப்படி எண்ணியதே;
சாது வாக மாறியதே!
கண்ணன் வெண்ணெய் திருடித் தின்ன
எண்ணங் கொண்டனன்.
கள்ளத் தனமாய் ஒருவர் வீட்டின்
உள்நு ழைந்தனன்.
வெண்ணெய் முழுதும் தின்று, தின்று
தீர்த்துக் கட்டினன்.
வீட்டுக் காரி வந்து விட்டாள்.
மாட்டிக் கொண்டனன்!
“வெண்ணெய் திருடித் தின்று கின்ற
திருட்டுக் கண்ணனே,
வெளியில் போன சமயம் பார்த்துத்
திருட வந்ததேன்?
உன்னை உனது தாயி டத்தில்
இழுத்துச் சென்றுநான்
உரலில் கட்டி வைக்கச் சொல்வேன்”
என்று கூறினள்.
“வெள்ளைக் கன்றைத் தேடிக் கொண்டே
உள்ளே வந்திட்டேன்.
வெள்ளை யாக உறியில் ஏதோ
இருக்கக் கண்டிட்டேன்.
உள்ளே கையை விட்ட பிறகே
வெண்ணெய் என்று நான்
உணர்ந்தேன்” என்று கூறிக் கண்ணன்
ஓடிப் போய்விட்டான்!
பணத்தில் மிக்க ஒருவரது
பையன் ஒருநாய் வளர்த்தனனே,
குணத்தில் மிக்கது அந்நாயும்.
குற்றம் எதுவும் செய்யாதாம்.
நாயைக் கண்டால் தந்தைக்கு
நஞ்சைக் கண்டது போலேயாம்.
வாயை விட்டுக் கோபமுடன்
வார்த்தை கூறி வைதிடுவார்.
“சோற்றுக் கில்லா நாளையிலே
சோறு போட்டு இந்நாயைப்
போற்று கின்றாய், உன்போலப்
புத்தி கெட்டவன் எவனுளனோ?”
என்றே தந்தையும் கூறிடுவார்,
என்னே செய்வான் பையனுமே!
நன்றி யுள்ள அந்நாயோ
நகரா தங்கே இருந்ததுவே.
உற்சவம் ஒன்று பக்கத்து
ஊரில் நடந்தது, கண்டிடவே,
உற்சா கத்துடன் எல்லோரும்
ஒன்றாய்க் கூடிச் சென்றனரே.
தள்ளா வயது ஆனதனால்
தந்தை மட்டும் போகவில்லை.
கள்ளன் ஒருவன் இரவினிலே
கதவைத் திறந்துள் ளேசென்றான்.
பந்தம் ஒன்றை வாயினிலே
பலமாய் வைத்துத் தூணுடனே,
தந்தை தன்னைக் கட்டியபின்
தங்கம் வெள்ளி திருடினனே.
‘சட்’டென அங்கே நாய்வந்து
தாக்கிய தந்தத் திருடனையே.
வெட்டிய காயம் போலவேதான்
மேலெலாம் புண்கள் ஆயினவே.
குரைத்ததன் சத்தம் கேட்டதுமே
கூடியே ஊரார் வந்தனரே.
விறைப்புடன் ஓடிய திருடனையே
விரட்டிப் பிடித்து உதைத்தனரே.
தன்னுடை உயிரும் தப்பியதே,
தங்கம் வெள்ளி நகையுடனே.
நன்றி மிகவும் உள்ளதென
நாயைப் புகழ்ந்தார், தந்தையுமே.
மனமகிழ் வுடனே அந்நாயை
மகனினும் மேலாய்ப் போற்றினரே.
தினமும் சோறு வைத்தனரே.
தின்னுதல் கண்டு மகிழ்ந்தனரே.
வயல்கள் நிறைந்த சிற்றூரில்
வாழ்ந்து வந்தான், ஒருவணிகன்.
சரவணன் என்பது அவன்பெயராம்.
சரஸ்வதி என்பவள் அவன்மனைவி.
தந்தி ஒருநாள் புறப்படென
வந்தத னாலே வணிகனுமே
பட்டணம் செல்ல அன்றிரவே
பொட்டணத் துடனே புறப்பட்டான்.
சரஸ்வதி மட்டும் தனியாகத்
தங்கி வீட்டில் இருந்தனளே.
நடுஇர வதனில் திருடர்களில்
நால்வர் வீட்டில் நுழைந்தனரே.
சத்தம் கேட்டுச் சரஸ்வதியும்
சத்தம் போட முற்பட்டாள்.
‘சத்தம் சிறிதும் போடாதே.
ஜாக்கிர தை!’யென மிரட்டினரே.
“அறையின் சாவி கொடுத்திடுவாய்.
அல்லது மண்டை உடைந்துவிடும்”
என்றவர் கூறச் சரஸ்வதியும்
எடுத்துக் கொடுத்தனள் சாவிதனை.
அறையைத் திறந்து ஆவலுடன்
அவர்களில் மூவர் நுழைந்தனரே.
நால்வரில் ஒருவன் சரஸ்வதியை
நகரா திருந்து காத்தனனே.
எண்ணம் பலபல சரஸ்வதிக்கு
எவ்வெவ் வாறோ தோன்றினவே.
யுக்தி ஒன்று உதித்திடவே
உடனே அந்தத் திருடனிடம்,
“உள்ளே பங்கு போடுகிறார்,
உனக்குச் சிறிதும் இல்லாமல்.
ஏமாந் தேநீ போகாதே !
எழுந்து உள்ளே பார்த்திடுவாய்“
என்றே கூறிட, அத்திருடன்
எழுந்தனன்; உள்ளே பாய்ந்தனனே.
விரைவில் சென்று சரஸ்வதியும்
‘வெடுக்’கெனக் கதவைப் பூட்டினளே!
திருடர் நால்வரும் அறைக்குள்ளே
‘திருதிரு’ எனவே விழித்தனரே!
சரஸ்வதி தெருவில் வந்தனளே;
சத்தம் போட்டுக் கத்தினளே.
“ஐயோ! திருடன்! ஐயையோ!
அபாய”மெனவே அலறினளே.
ஊரார் எல்லாம் தடியுடனே
ஒன்றாய்க் கூடி வந்தனரே.
கதவைத் திறந்து திருடர்களைக்
கயிற்றால் கட்டி இழுத்தனரே.
கச்சே ரிக்குள் நால்வரையும்
கைதி யாக நிறுத்தினரே.
ஊரார் எல்லாம் சரஸ்வதியை
ஒருங்கே புகழ்ந்து பேசினரே.
சர்க்கார் மெச்சி அவளுக்குத்
தகுந்த பரிசும் தந்தனரே.
சரவணன் இக்கதை கேட்டதுமே
சந்தோ ஷத்தால் பூரித்தான்.
“சமயம் பார்த்து யுக்தியுடன்
சரியாய்க் காரியம் நீசெய்தாய்.
புத்தி மிகுந்த உன்னுடைய
புருஷன் ஆனேன்!” எனமகிழ்ந்தான்.
பையன் :
கோழிக் குஞ்சே, உன்கதையைக்
கூறு வாயோ, என்னிடத்தே?
கோழிக் குஞ்சு :
அப்படி யேநான் கூறுகிறேன்.
அண்ணா கதையைக் கேட்டிடுவாய்.
தாயின் வயிற்றில் சிலநாட்கள்
தங்கி இருந்தேன் அதன்பின்னே,
மூலை ஒன்றில் என்அம்மா
முட்டை யாக இட்டனளே.
அதனைக் கண்ட ஒருமனிதன்
அவனது அருமை மனைவியிடம்,
“முட்டைத் தோசை சுட்டுத்தா.
மிகவும் ஆசை” என்றிடவே,
“அடைக்கு வைப்போம் இதனை நாம்.
அப்புறம் சிறிய குஞ்சுவரும்.
குஞ்சு வளர்ந்து சிலநாளில்
கோழி யாகும். அக்கோழி
தினமும் முட்டை இட்டுவரும்
தின்ன லாமே இருபேரும்”
என்றனள், அவனும் ‘சரி’யென்றான்.
என்னுடை உயிரும் தப்பியது!
மஞ்சள் தாதைத் தின்றேநான்
வளர்ந்தேன், அந்த முட்டைக்குள்.
அடியேன் முட்டைக் குள்ளேயும்,
அம்மா முட்டை மேலேயும்
இருந்தோம், மிக்கப் பொறுமையுடன்.
இருபத் தொருநாள் ஆயினவே.
எத்தனை நாள்தான் அடைபட்டு
இருப்பது என்றே கோபமுடன்
மூக்கால் முட்டையின் ஓட்டினைநான்
முட்டி உடைத்து வெளிவந்தேன்.
வந்ததும், என்னை என்அம்மா
மகிழ்ச்சி யோடு வரவேற்றாள்.
நாட்கள் வளர இறக்கையுடன்
நானும் வளர்ந்து நடைபோட்டேன்.
‘கொக்கக் கோ’வென என்தாயும்
கூப்பிட நானும் ஓடிடுவேன்.
அன்புடன் என்னைப் பத்திரமாய்
அழைத்துச் செல்வாள், அவளுடனே.
குப்பை கிளறி ஆகாரம்
கொத்தித் தின்னப் பழக்கிடுவாள்.
பருந்தைக் கண்டால் இறக்கையினுள்
பதுக்கி என்னை வைத்திடுவாள்.
குருணை யோடு தானியங்கள்
கொடுக்கின் றார்கள், மனிதர்களும்.
தின்று, தின்று என்னுடலும்
தினமும் கொழுத்து வருகிறது.
என்னை இப்படி வளர்த்திடுவோர்
என்று கழுத்தைத் திருகுவரோ?
ஈசன் கருணை புரிவாரோ!
‘குடுகு’டென்று விரைவிலே
கோபு ஓடி வந்தனன்.
“அப்பா, கடிகா ரத்திலே
அந்தச் சிறிய முள்ளையே
காண வில்லை! யாரதைக்
கழற்றிக் கொண்டு போயினர்?
ஓடிந்து விழுந்து போனதோ !
ஒன்றும் அறியேன் நான்”எனக்
கூறித் தந்தை தம்மையே
கூட்டி வந்து காட்டினன்.
பார்த்தார் தந்தை, முட்களை
பார்த்துப் பார்த்துச் சிரித்தனர்.
விஷயம் அறியாக் கோபுவோ
விளக்கிக் கூற வேண்டினன்.
“கண்ணை மூடிக் கொள்ளுவாய்.
காட்டு கின்றேன், முட்களை”
என்று தந்தை கூறவே
இறுகக் கண்ணை மூடினன்.
சிறிது நேரம் சென்றதும்,
திறந்து பார்க்கக் கூறினர்.
கண்ணைத் திறந்து பார்த்ததும்
கண்டான் இரண்டு முட்களை!
மகிழ்ச்சி பெற்ற கோபுவும்
“மந்தி ரந்தான் என்னவோ!
எனக்குத் தெரியச் சொல்லுவீர்”
என்று கெஞ்சிக் கேட்டனன்.
கோபு தெரிந்து கொள்ளவே
கூற லானார், தந்தையும்..
“பார்த்தாய் கடிகா ரத்தினை,
பன்னி ரண்ட டிக்கையில்.
சிறிய தன்மேல் பெரியமுள்
சேர்ந்து ஒன்றாய் நின்றதால்,
பார்க்கும் போது ஒன்றுபோல்
பட்ட துன்றன் கண்களில்.
சிறிது நேரம் சென்றதும்
சேர்க்கை விலகிப் போனதே!
இதுதான் எனது மந்திரம்.
இல்லை வேறு தந்திரம்!”
திருடன் ஒருவன் இரவிலே
திருட எண்ணம் கொண்டனன்;
அருகில் உள்ள ஊரையே
அடைந்து திருடச் சென்றனன்.
வயலின் நடுவே வழியினில்
மனிதன் நிற்கக் கண்டனன்;
பயந்து அங்கே நின்றனன்;
பதுங்கி மறைவில் ஒளிந்தனன்.
அந்த மனிதன் நடுவிலே
அசைந்தி டாமல் நிற்கவே.
‘எந்த வழியில் செல்வது?’
என்று எண்ணிப் பார்த்தனன்.
போக வழியும் இல்லையே!
பொறுமை பறந்து போனதே !
வேக மாகத் தடியுடன்
‘விறுவி’ரென்று சென்றனன்.
தடியால் அந்த மனிதனைத்
தலையில் ஓங்கி அடித்தனன்.
அடிமேல் அடியும் வைத்தனன்.
ஆனால், அந்த மனிதனோ…?
தாக்க வந்த திருடனைத்
தடுத்து விடவும் இல்லையே!
ஊக்க மாகத் திருப்பியே
உதைக்கத் தானும் இல்லையே!
‘குய்யோ! முறையோ!’ என்றுமே
குதித்து ஓட வில்லையே!
‘ஐயோ!’ என்று அலறியே
அழவும் இல்லை, இல்லையே!
அடித்து, அடித்துக் கையுமே
அலுத்துப் போன திருடனும்
‘தடித்த தோலை உடையவன்
தடியன் இவனும் யா’ரெனக்
கிட்டச் சென்று வேகமாய்த்
தொட்டுப் பார்த்தான். பார்த்ததும்,
வெட்கப் பட்டுச் சிரித்தனன்.
விஷயம் என்ன, தெரியுமோ?
மனிதன் இல்லை, அவ்விடம்,
மரமும் இல்லை. ஐயையோ!
துணியா லான உருவம்தான்.
சோளக் கொல்லைப் பதுமையே!
‘என்னை ஏனோ அழகாக
ஈசன் படைக்க வில்லை’யென
எண்ணி, எண்ணி ஒருகாக்கை
ஏங்கிச் சுற்றித் திரிகையிலே,
கூட்டில் அழகிய கிளியொன்றைப்
போட்டு அடைத்து, ஒருபையன்
வாட்டி வதைக்கக் கண்டதுவே;
மனத்தில் வருத்தம் கொண்டதுவே.
‘அழகாய் என்னைப் படைத்திருந்தால்,
அடியே னுக்கும் இக்கதிதான்.
அழகைக் காட்டிலும் விடுதலையை
அளித்தார், ஆண்டவன்’ என்றதுவே.
பட்டு என்ற சிறுமியும்
பார்ப்ப தற்கு அழகுடன்
பட்டு ஆடை உடுத்தியே
பாலு வீடு வந்தனள்.
ஒன்று சேர்ந்து இருவரும்
ஓடி யாட வீதியில்
அன்று ஏதோ சண்டையும்
அவர்க ளுக்குள் வந்ததே!
சண்டை தன்னில் பாலுவோ
தள்ளி விட்டான், பட்டுவை.
அண்டை ஓடும் சாக்கடை
அதனில் பட்டு வீழ்ந்தனள்.
பட்டு மீது கெட்டநீர்
பட்ட தாலே ஆடையும்
கெட்டுப் போச்சு. ‘ஓ’வெனக்
கிளம்ப லாச்சு, அழுகையும்.
லியோ டால்ஸ்டாயின் கருத்தைத் தழுவியது
பட்டு அழுது வருவதைப்
பார்த்த தாயும் அவளையே
கட்டி அணைத்துக் கொண்டனள்;
கார ணத்தை அறிந்தனள்.
வேக மாகப் பாலுவின்
வீடு நோக்கிச் சென்றனள்;
கோப மாகப் பாலுவைக்
குற்றம் சாட்டி வைதனள்.
பட்டு தாயார் வைவதைப்
பாலு தாயார் கேட்பளோ?
திட்ட லானாள், அவளுமே.
சிறிய சண்டை வளர்ந்தது.
இரண்டு தந்தை யார்களும்.
இந்தச் செய்தி கேட்டதும்,
திரண்ட தோளைத் தட்டியே
தீர மாக வந்தனர்.
சண்டை வலுத்து விட்டது;
சத்தம் பெருக லானது;
கண்டு களிக்க மக்களும்
கணக்கில் லாமல் கூடினர்.
கம்பு ஒன்றை ஊன்றியே
கனிந்த வயதுப் பாட்டியும்
வம்பு மூண்ட அவ்விடம்
வந்து கூற லாயினள்:
“பிள்ளை போட்ட சண்டையைப்
பெரிது செய்யும் மக்களே,
சொல்லைக் கொஞ்சம் கேளுங்கள்.
சுத்த மூடச் செய்கையேன்?
சண்டை மறந்து பிள்ளைகள்
சரச மாக அன்புடன்
ஒன்று சேர்ந்து திரும்பவும்
ஓடி யாடல் பாருங்கள்”
என்று பாட்டி கூறவே
எதிரில் வந்து பார்த்தனர்.
அன்பு கொண்டு பிள்ளைகள்
ஆடல் கண்டு வெட்கினர்.
பச்சைக் குழந்தை என்றனுக்குப்
பக்குவ மாகப் பெயர்வைக்க
இச்சை கொண்டனர் பெரியோர்கள்.
என்னைச் சுற்றிக் கூடினரே.
அம்மா உடனே அவளுடைய
அப்பா பெயரைக் குறிப்பிட்டு,
“சம்பந் தம்என அழைத்தாலே
சரிப்படும்” என்று கூறினளே.
“இல்லை, இல்லை, என்அப்பா
பெயரைத் தான்நாம் இடவேண்டும்.
செல்லப் பன்என வைப்பதுதான்
சிறந்தது” என்றார், என்அப்பா.
“இரண்டும் வேண்டாம். பிள்ளைக்கு
ஏற்றது சாமிப் பெயரேதான்.
பரமசிவன்தான் நல்ல” தெனப்
பாட்டி உரக்கக் கூறினளே.
மூவரும் சண்டை போட்டார்கள்.
முடிவே இல்லை. ஆதலினால்
மூவரும் சேர்ந்து என்றனுக்கு
முப்பெயர் இட்டு அழைத்தார்கள்.
அம்மா வுக்கு, சம்பந்தம்.
அப்பா வுக்குச் செல்லப்பன்.
பாட்டிக் கோநான் பரமசிவன்.
பள்ளியில் இனிமேல் எப்பெயரோ?
“சீன வெடிகள் எங்குமே
தேடிப் பார்த்தும் இல்லையே.
காண வில்லை, கண்ணிலே,
கடைகள் தோறும் சென்றுமே.
கம்பி வாணப் பெட்டிதான்
கடைசி யாக வாங்கினேன்.
வம்பு இன்றி இதனைநீ
மகிழ்ச்சி யோடு கொளுத்துவாய்”
என்று தத்தை தந்தனர்.
இதனைக் கேட்ட சீனுவோ,
‘ஒன்றும் வேண்டாம்’ என்றனன்;
உதறி அதனைத் தள்ளினன்,
‘பட்ச ணங்கள் தின்னவோ,
பட்டு ஆடை உடுத்தவோ
இஷ்ட மில்லை’ என்றனன்.
யார்உ ரைத்தும் கேட்டிலன்.
‘டப்டப்’ சத்தம் பக்கத்து
ராமு வீட்டில் கேட்கவே,
அப்பா அருகில் வந்தனன்.
“அடுத்த வீட்டில் பாரப்பா.
வேட்டு வாங்கி ராமுதான்
விடுகின் றானே, சத்தமும்
கேட்கு தப்பா. எனக்குநீ
கிடையா தென்றே கூறினாய்”
என்று கூறித் தந்தையை
இழுத்து வந்தான். இருவரும்,
சென்று ராமு வீட்டிலே
கண்ட தென்ன தெரியுமோ?
வெடிக்கும் சீன வெடியைப்போல்,
வீம்பு செய்த ராமுவை
அடித்துக் கொண்டு தந்தையார்
அங்கி ருந்தார்; வெடியில்லை!
ஜவஹர் ஒருநாள் வேட்டைக்குத்
தனியே கிளம்பிச் சென்றனரே.
அவரது கையில் துப்பாக்கி
ஆயுத மாக இருந்ததுவே.
குட்டி மான்ஒன் றவர்முன்னே
குதித்து ஓடி வந்ததுவே.
சுட்டார், ஜவஹர். உடனேயே,
துடித்துக் கொண்டே அம்மானும்,
வந்து ஜவஹர் காலடியில்
மயங்கி வீழ லானதுவே!
அந்தக் காட்சி ஜவஹரையே
அதிகம் கலக்கி விட்டதுவே.
“எவர்க்கும் கெடுதி செய்தறியேன்.
என்னைச் சுடுவது சரியாமோ?”
ஜவஹரைப் பார்த்துக் கேட்பதுபோல்
தரையில் கிடந்தது, மான்குட்டி.
கண்ணீர் சொரியும் மான் அதனைக்
கண்டார் ஜவஹர். கண்டதுமே,
புண்ணாய்ப் போனது அவர்மனமும்.
கண்ணீர் விட்டார். அக்கணமே,
“துப்பாக் கியைநான் இனிமேலே
தொடவே மாட்டேன். சத்தியமே”
இப்படி உடனே கூறினரே.
இதுவரை சொல்லைக் காத்தனரே.
பண்டி கைக்கு வாங்கிய
பால னுடைய சட்டையைக்
கொண்டு சென்று விட்டது,
குரங்கு ஒன்று திருடியே!
அருமை யான சட்டையை
அணிந்து மனிதர் போலவே
குரங்கு காட்டை நோக்கியே
‘குடுகு’ டென்று சென்றது.
ஓடிச் சென்று காட்டிலே
உள்ள நண்பர் முன்னரே
ஆடிப் பாடிக் குதித்தது;
அவைகள் கேட்க உரைத்தது:
“மனிதன் போல உடையுடன்
வந்தேன்; என்னைப் பாருங்கள்.
இனிமேல் என்னைக் குரங்கெள்
எவரும் கூற முடியுமோ?”
கூறிக் கொண்டே இப்படிக்
குரங்கு ஓடி மரத்திலே
ஏறிக் கொள்ள லானது;
எழும்பி, எழும்பிக் குதித்தது.
ஆட்டம் ஆடிக் குதிக்கையில்
அங்கே கிளையில் சட்டையும்
மாட்டிக் கொண்டு விட்டது!
வலிந்து குரங்கு இழுத்தது.
இழுத்து, இழுத்துப் பார்த்துமே
எடுக்க முடிய வில்லையே!
கழுத்து நொந்து போனது;
கர்வம் ஓடுங்க லானது.
“மரங்கள் தம்மில் தொத்தியே
மகிழ்ச்சி யோடு தாவிடும்
குரங்கே நானும் என்பதைக்
கொஞ்ச மேனும் எண்ணிலேன்.
மாட்டிக் கொண்டேன் சட்டையை
மனிதர் போல. ஆதலால்,
மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்.
வந்து உதவும், நண்பரே”
என்று கெஞ்ச, அவ்விடம்
இருந்த மற்றக் குரங்குகள்
ஒன்று கூடி வந்தன;
உதவி செய்து காத்தன.
திருப்பதி மலைக்குச் செல்வதெனத்
தீர்மா னித்தார், என் தந்தை.
“என்னையும் அழைத்துச் சென்றிடுவீர்”
என்றே அவரை நான்வேண்ட,
‘சரி’என அவரும் கூறினரே.
தந்தையும் நானும் புறப்பட்டோம்.
மலையில் ஏறிச் செல்லுகையில்
மயக்கம் எனக்கு வந்ததுவே.
“களைப்பொடு மயக்கம் வருகிறது.
காலும் அத்துடன் வலிக்கிறது.
எத்தனை தூரம் இனியும்நாம்
ஏறிட வேண்டும்” என்றேனே.
“இன்னும் கொஞ்சம் தூரம்தான்.
ஏறிடு வாயெ”ன அழைத்தனரே.
வழியில் உட்கார்ந் துட்கார்ந்து
வந்தோம் மலையின் உச்சிக்கே.
மணிகள் மூன்று ஆயினவே.
மலையின் உச்சி அடைந்திடவே.
திவ்விய தரிசனம் செய்தோமே.
தின்றிட உணவும் பெற்றோமே.
பெறுதற் கரிய காட்சியினைப்
பெற்றோம் அன்று வாழ்வினிலே.
மலையைக் கடந்து இறங்கிடவே
மறுநாட் காலை புறப்பட்டோம்.
‘விறுவிறு’ எனவே கீழ்நோக்கி
விரைவில் இறங்கி வந்திட்டோம்.
சிரமம் சிறிதும் இல்லாது
சீக்கிர மாக வந்ததனால்,
மலையின் அடியை அடைந்திடவே
மணிகள் இரண்டே ஆயினவே.
அடியில் வந்ததும் தந்தையெனை
அருகில் அழைத்துக் கூறினரே.
“சென்றிட மலைக்கே மூன்றுமணி
சென்றது. அத்துடன் சிரமங்கள்
வந்தன, நமது வழியெல்லாம்.
வாழ்வும் அதுபோல் உணர்ந்திடுவாய்.
பெரியோ ரெனவே பெயரெடுக்கப்
பெரிதும் துன்பம் வழிமறைக்கும்.
நாட்கள் பலவும் ஆவதொடு
நம்பித் துன்பம் கடந்திடுவர்.
இறங்குதல் போல எளிதன்று
இம்மண் ணுலகில் பெரியோராய்
ஆவது” என்றே கூறினரே.
அன்றொரு பாடம் கற்றனனே.
தெருவி லுள்ள மாமரம்,
தின்னத் தின்னப் பழங்களை
அருமை யோடு தந்திடும்.
அதனை ராமு பார்த்தனன்.
கல்லைக் கையில் எடுத்தனன் ;
கையை நன்கு ஓங்கினன்
பல்லைக் கடித்துக் கொண்டனன் :
பலமாய் வீசி எறிந்தனன்.
விட்ட கற்கள் பழங்களை
வீழ்த்தி விட்டுக் கிளைகளில்
‘பட்பட்'டென்று மோதின.
பட்டை யாவும் பெயர்ந்தன.
ஆசை கொண்டு கற்களை
அள்ளி, அள்ளி வீசினன் ;
வீசி எறிந்து பட்டைகள்
மிகவும் பெயரச் செய்தனன்.
“தின்னத் தின்னப் பழங்களைத்
திருப்தி யோடு தருகிறேன்.
என்னை ஓங்கி அடிப்பதேன்?
எனது தோலை உரிப்பதேன்?
நன்மை செய்த என்னைநீ
நன்றி கெட்டு வதைப்பதேன்?”
என்றே அந்த மாமரம்
எண்ணி ஏங்க லானதே!
குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது.
நித்தம், நித்தம் குருவியும்
நீண்ட தூரம் சென்றிடும்.
கொத்தி வந்து இரைதனைக்
குஞ்சு தின்னக் கொடுத்திடும்.
“இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்கப் பழகுங்கள்.
இரையைத் தேடித் தின்னலாம்”
என்று குருவி சொன்னது.
“நன்று, நன்று, நாங்களும்
இன்றே பறக்கப் பழகுவோம்”
என்று கூறித் தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின.
ஒன்று மட்டும் சோம்பலாய்
ஒடுக்கிக் கொண்டு உடலையே,
அன்று கூட்டில் இருந்தது.
ஆபத் தொன்று வந்தது!
எங்கி ருந்தோ வந்தனன்.
ஏறி ஒருவன் மரத்திலே.
அங்கி ருந்த கூட்டினை
அருகில் நெருங்கிச் சென்றனன்.
சிறகு இருந்தும் பறக்கவே
தெரிந்தி டாமல் விழித்திடும்
குருவிக் குஞ்சைப் பிடித்தனன்;
கொண்டு வீடு சென்றனன்.
குருவிக் குஞ்சு அவனது
கூட்டில் வாட லானது.
அருமை அன்னை உரைத்தது
அதனின் காதில் ஒலித்தது.
வேலன் மனைவி கறுப்பாயி
விடிந்ததும் சண்டை துவக்கிடுவாள்.
காலம் எல்லாம் சண்டையிலே
கழிப்பாள், கணவன் வருந்திடவே.
சண்டை ஒருநாள் முற்றிடவே
‘சட்'டென வேலன் கோபமுடன்
அண்டையி லிருந்த கத்தியினால்
அறுத்து விட்டான், அவள்மூக்கை.
வெட்டி எடுத்த மூக்குடனே
விரைந்து வைத்திய ரிடம்சென்றாள்.
“ஒட்டுப் போட்டுத் தைத்திடுவீர்.
உமக்குப் புண்ணியம்” எனச்சொன்னாள்.
துண்டு மூக்கை மேஜையின்மேல்
தூக்கி வைத்த வைத்தியரும்
துண்டுத் துணியால் அவள்முகத்தைத்
துடைத்துக் கொண்டு இருந்தனரே.
அறுந்து தனியாய் இருந்திட்ட
அந்த மூக்குத் துண்டதனைப்
பறந்து வந்த ஒருகாக்கை
பாய்ந்து தூக்கிச் சென்றதுவே.
கையைத் தட்டி வைத்தியரும்
கதறிப் பார்த்தார். ஆனாலும்
ஐயோ, ஏதும் பயனில்லை!
அலறித் துடித்தாள், கறுப்பாயி.
காக்கை மூக்கைத் தின்றதுவோ!
கடலில் போட்டு விட்டதுவோ !
மூக்கை இழந்த சூர்ப்பனகை
முக்கா டிட்டுத் திரும்பினளே!
எட்டு மணியும் அடித்தது.
இன்னும் தனது படுக்கையில்
குட்டி யப்பன் தூங்கினன்,
குறட்டை விட்டு அருமையாய்.
‘காகா, காகா!’ சத்தமோ
காதைத் துளைக்க லானது.
‘ஆஹா! ஊஹூ!’ என்றவன்
ஆத்தி ரத்தில் விழித்தனன்.
கண்ணை விழித்துப் பார்க்கையில்
காகக் கூட்டம் ஒன்றினைக்
கண்டான், தன்னைச் சுற்றிலும்
கடிக்க லானான், பற்களை.
‘தூக்கந் தன்னைக் கெடுக்கவா
துணிந்து வந்தீர்?’ என்றதும்
காக்கை யாவும் ஒன்றுபோல்
‘காகா, காகா’ என்றன.
கோபம் கொண்டு அவனுமே
குதித்துக் கொண்டு எழுந்தனன்.
‘காகா, காகா கா’வெனக்
கடுமை யாகக் கத்தின.
நாகம் போலச் சீறினன்;
நாயைப் போலப் பாய்ந்தனன்.
‘காகா’ என்றே திரும்பவும்
கத்திக் கொண்டே எழும்பின.
வேக மாக அவனுமே
விரட்ட எண்ணி ஓடினன்.
‘காகா காகா கா’வெனக்
கதறிக் கொண்டே பறந்தன.
விரைந்தே அவனும் அவைகளை
விரட்டிக் கொண்டே ஓடினன்.
துரத்திச் சென்றான். ஆதலால்,
சோம்பல் பறந்து போனதே!
தூக்கம் தன்னைப் போக்கவும்,
சுறுசு றுப்பாய் ஓடவும்
ஊக்கம் தந்த காக்கைகள்
உலகில் வாழ்க, வாழ்கவே!
ஒருநா ளிரவு படித்திடவே
உட்கார்ந் தேன்நான் தங்கையுடன்.
‘கடகட’ எனவே ஒருசத்தம்
கதவி லிருந்து வந்ததுவே.
“யாரது ?” என்றே நான்கேட்டேன்.
யாரும் “நான்தான்” எனவில்லை!
திரும்பப் பதிலே வரவில்லை.
திருடன் எனவே எண்ணிவிட்டேன்.
பயத்தால் என்னுடல் நடுங்கியது.
பார்த்தனள், தங்கை; சிரித்தனளே.
“ஐயோ! அச்சம் கொள்கின்றாய்.
ஆணோ நீதான்?” எனக்கேட்டாள்.
எழுந்தேன் விரைவாய், இடம்விட்டே
எடுத்தேன் தடியைக் கைதனிலே.
சென்றேன் அந்தக் கதவோரம்,
சிறிதும் அச்சம் இல்லாமல்.
“மிரட்டிச் சென்ற அச்சத்தம்
மீண்டும் வந்தால் உடனேயே,
தட்டிய அந்தத் திருடனைநான்
தடியால் அடிப்பேன்” எனுமுன்னே
‘கடகட’ எனவே மறுபடியும்
கதவில் சத்தம் எழுந்ததுவே.
‘பட்’டெனக் கதவைத் திறந்தேன்நான்.
பார்த்தேன் எல்லாப் பக்கமுமே.
யாரையும் அங்கே காணோமே !
“யார் அவர்?” என்றே நான் கேட்டேன்.
இதனைக் கண்ட தங்கையுமே
‘இடிஇடி’ எனவே சிரித்தனளே.
“கதவைத் தட்டிச் சென்றதுவே
கண்ணில் தோன்றாக் காற்றுத்தான்!
அடித்திடும் காற்றை அடிப்பதற்கோ
அத்தனை வீரம்?” என்றனளே!
மறுநாட் காலை பொங்கலென்ற
வாங்கிக் கரும்புடன் தேங்காய்கள்
குறும்புக் குப்பனின் தந்தையுமே
கொண்டு தம்வீடு வந்தடைந்தார்.
குப்பனின் நாக்கில் நீர்வழிய
‘குடுகுடு’ என்றே ஓடிவந்தான்.
அப்பா விடமுள்ள கரும்பினையே
அவசர மாகப் பறிக்கவந்தான்.
“படைத்த பிறகுதான் தின்றிடலாம்.
பதறிடில் பயனில்லை” என்றுரைத்தார்.
தடுத்திடும் தந்தையின் மொழிகளினால்
தாங்கொணாக் கோபம் கொண்டனனே.
அம்மா கரும்பினைத் துண்டுகளாய்
அறுத்துமே பானையில் வைத்தனளே.
அம்மா பானையை வைக்குமிடம்
அறிந்தனன்; குப்பன் மகிழ்ந்தனனே.
பூனைபோல் இரவில் எழுந்தவனும்
போயினன், யாவரும் தூங்குகையில்
பானையி னுள்ளேகை விட்டனனே;
பல்லால் கரும்பைக் கடித்தனனே.
‘ஐயையோ!’ என்றஓர் சத்தமுடன்
அலறித் துடித்துக் குதித்தனனே.
கையை உதறியே கத்துவதைக்
கண்டனர் பெற்றோரும், ஓடிவந்தே.
கரும்பினைக் கடித்தவன் வாயினையே
கடித்தது, கரும்பினில் மொய்த்திருந்த
எறும்புகள் தாமென்று யாவருமே
எளிதினில் உண்மை அறிந்தனரே.
“பொழுது விடியும் வரையிலும்நீ
பொறுத்திட லாகாதோ?” என்றுரைத்தே
அழுதிடும் கண்களைத் துடைத்ததுடன்
அவனையும் பெற்றோர்கள் தேற்றினரே.
நாட்டுக் காக ஒருவீரன்
நான்கு ஆண்டுகள் போர்செய்து
வீட்டை நோக்கித் திரும்பினனே.
வெற்றி கொண்டு மகிழ்வுடனே.
வந்திடும் வழியில் ஓர்ஊரில்
மக்கள் வீரனை வரவேற்றுத்
தந்தனர், பாலும் பழங்களுமே,
சந்தோ ஷத்துடன் உண்டிடவே.
“எதுவும் வேண்டாம். இவைகளிலே,
எனக்கு வேண்டிய தொன்றேதான்.
அதுவே நான்கு ஆண்டுகளாய்
அடியேன் தினமும் வேண்டுவது.
நாட்டைக் காக்கப் படைதிரட்டி
நாங்கள் சென்ற அச்சமயம்,
வீட்டில் எனது குழந்தையினை
விட்டு வந்தேன், வாட்டமுடன்.
அந்த அருமைப் பெண்ணுக்கு
ஐந்து வயது தானிருக்கும்.
இந்த ஊரில் அவ்வயதில்
எனக்கு வேண்டும், ஒருகுழந்தை.
கொஞ்சி அதனுடன் விளையாட,
கொண்டு வந்தால் நலம்” என்றே
கெஞ்சிக் கேட்டான், அவ்வீரன்.
கேட்டதும் உடனே அவ்விடத்தே,
அழைத்து வந்தனர், ஒருபெண்ணை.
அதற்கும் வயது ஐந்தேதான்.
பழத்தை எடுத்து அவள்கையில்
பரிவுடன் கொடுத்தான், அவ்வீரன்.
“உன்னைப் போலவே என்மகளும்
உயரம் இத்தனை வளர்ந்திருப்பாள்.
என்னைக் கண்டதும் துள்ளிடுவாள்;
இனிக்கும் பேச்சுப் பேசிடுவாள்.”
கூறினன் இப்படி மகிழ்வுடனே,
கொட்டிய கண்ணீர்த் துளியுடனே.
வாரியே அந்தச் சிறுபெண்ணை
சாலைவ ழியிலோர் ஆலமரம்—அது
தங்க நிழலினைத் தந்தமரம்.
சாலைவ ழியாகச் செல்பவர்க்கு—அது
தளர்வு மாற்றியே நின்றமரம்.
களைத்து வருந்தியே வந்திடுவார்—அங்குக்
கால்வலி தீர அமர்ந்திடுவார்.
இளைத்த அவர்க்குமே இன்பம்தரும்—அன்றி
இன்னலும் தீர்த்து வழியனுப்பும்.
பள்ளிச் சிறுவர்கள் ஓடிவந்தே—அங்குப்
பற்பல ஆட்டங்கள் ஆடிடுவார்.
அள்ளியே சுள்ளிகள் சேர்த்திடுவார்—நல்ல
அந்தணர் வேள்வி நடத்திடவே.
காலைப் பொழுதிலே பல்துலக்க—அது
கனிவுடன் குச்சிகள் தந்திடுமே.
மாலைப் பொழுதினைப் போலதுவும்—என்றும்
மனங்கு ளிர்த்திடச் செய்திடுமே.
எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள்—அங்கு
எமனைப் போலவே வந்ததடா.
எத்தனையோ உயிர் மாண்டிடவே—மிக்க
இன்னல் புரிந்துமே சென்றதடா.
எண்ணரும் உயிர்கள் எத்தனையோ—அதில்
இன்பற்ற வாழ்வினை நீத்தனவே.
கண்ணினைப் போன்றநம் ஆலமரம்—அந்தக்
கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே!
வேரற்று அம்மரம் வீழ்ந்ததுவே—பெரும்
வீரனைப் போலக் கிடந்ததுவே.
ஊரினர் யாவரும் கூடிவந்தே—அதன்
உன்னத நன்மையைப் பேசினரே.
அத்தனை மக்களும் வாடினரே—“இது
ஐயோ போனது!” என்றனரே.
இத்தலம் விட்டே போய்விடினும்—அது
எல்லார் உள்ளத்தும் நின்றதுவே!
அருமை மிக்க நாயினை
அழைத்துக் கொண்டு தெருவிலே
சிறுவன் ஒருவன் செல்லுவான்,
தினமும் ஆடு மேய்க்கவே.
தெருவில் நாயும், அவனுமே
செல்லு கின்ற காட்சியைச்
சிறுமி ஒருத்தி ஆவலாய்த்
தினமும் பார்த்து வந்தனள்.
அன்று சிறுவன் மட்டுமே
அங்கு வந்தான். ஆதலால்,
“இன்று உனது நாயினை
எங்கே காணோம்?” என்றனள்.
“பொல்லாப் பையன் ஒருவனே
பிரிய மான நாயினைக்
கல்லால் அடித்துப் போட்டனன்;
காலை ஒடித்து விட்டனன்!
நன்கு காலும் ஓடிந்ததால்
நடக்க முடிய வில்லையே
என்றன் குடிசை தன்னிலே
இப்போ துள்ள” தென்றனன.
உடனே, அந்தச் சிறுமியும்
உள்ளம் நொந்து அவனுடன்
குடிசை தன்னை நோக்கியே
‘குடுகு’ டென்று ஓடினள்.
தரையில் படுத்து வலியினைத்
தாங்கொ ணாது புரண்டிடும்
அருமை நாயைக் கண்டனள்;
அருகில் நெருங்கிச் சென்றனள்.
“ஐயோ, பாவம்!” என்றனள் ;
அதனின் காலை நோக்கினள்;
‘செய்வ தென்ன?’ என்பதைச்
சிந்தித் துடனே எழுந்தனள்.
அந்தச் சிறுவன் உதவியால்
அடுப்பை மூட்டி, அதனிலே
வெந்நீர் போட லாயினள்;
விரைந்து வேலை பார்த்தனள்.
‘வெந்நீர் ஒத்த டத்தினால்
விலகும் நாயின் வலியுமே’
என்று அவளும் எண்ணினள்.
இதற்குத் துணியும் வேண்டுமே!
சுற்று முற்றும் பார்த்தனள்.
துணியைக் காணோம்! ஆதலால்
சட்டை தன்னைப் பாதியாய்த்
தயக்க மின்றிக் கிழித்தனள்.
சுட்ட நீரில் துணியினைத்
தோய்த்துத் தோய்த்துக் கல்லடி
பட்ட காலில் ஒத்தடம்
பையப் பையக் கொடுத்தனள்.
காலில் வலியும் குறைந்தது.
களிப்புக் கொண்டு நாயுமே
வாலை ஆட்ட லானது.
மகிழ்ந்தாள், அந்தச் சிறுமியும்.
கதையில் சொன்ன சிறுமி யார்?
கண்டு பிடிக்க முடியுமோ?
அதையும் நானே சொல்லவா,
அன்பு மிக்க பிள்ளைகாள்?
போரில் காயம் பட்டவர்
புண்கள் தம்மை ஆற்றியே
பாரில் வாழ்வை கழித்தவள்;
பண்பு மிகவும் உடையவள்,
நல்ல மாது ப்ளாரன்ஸ்
நைட்டிங் கேலைப் பற்றியே
சொல்லி வந்தேன். அவளது
தொண்டு என்றும் வாழ்கவே.
‘டப்டப்’ பென்ற சப்தமே
நான்கு திசையும் கேட்டது.
குப்பன் உடனே தெருவிலே
குதித்து ஓடி வந்தனன்.
சீனு, ராமு இருவரும்
சேர்ந்து அங்கே நின்றனர்.
சீன வெடியைக் கொளுத்தியே
தெருவில் எறிய லாயினர்.
சீன வெடிகள் யாவுமே
தீர்ந்து போன பிறகுமே
ஆனை வெடியைக் கொளுத்தினர்.
அதனை வீசி எறிந்தனர்.
கீழே விழுந்த வெடியுமே
கிளம்பி வெடிக்க வில்லையே.
கோழை போலக் கிடந்தது!
கொஞ்சம் நேரம் ஆனது.
சப்த மில்லை, புகையில்லை,
சாது போலக் கிடப்பதைக்
குப்பன் கண்டான். கண்டதும்
கூற லானான் பிறரிடம்:
“நெருப்பு அணைந்து போனது.
நீண்ட நேரம் ஆனது.
அருகில் சென்றே எடுத்திட
ஐயோ! அச்சம் கொள்வதேன்?
பயந்து நடுங்கும் புலிகளே!
பார்ப்பீர், அதனை எடுக்கிறேன்;
தயங்க மாட்டேன்” என்றனன்,
தாவி அருகில் சென்றனன்.
கிட்டச் சென்று வெடியினைத்
தொட்டுப் பார்க்கும் முன்னரே
‘பட்பட்’ டென்று வெடித்தது!
பாய்ந்து முகத்தில் அடித்தது!
குப்பன் அந்த இடத்திலே
குட்டிக் கரணம் போட்டனன்!
தப்பிப் பிழைத்து விட்டனன்,
சாமி புண்ணி யத்தினால்!
சென்னையி லிருந்து மதுரைக்குச்
சென்றேன் ரயிலில், அன்றொருநாள்.
இரவு முழுதும் வண்டியிலே
இருந்தேன். மறுநாள் காலையிலே,
திருச்சி வந்தது, பலகாரம்.
தின்றிட இறங்கிச் சென்றேனே.
வடையும் காபியும் அங்கொருவர்
வைத்து விற்றனர். பார்த்ததுமே,
பைக்குள் கையை விட்டேனே.
பணத்தை விரைவாய் எடுத்தேனே.
எடுத்தே அவரிடம் கொடுத்தேனே.
எனது பசியினைத் தீர்த்தேனே.
மறுபடி வண்டியில் ஏறியதும்
வண்டி நகர்ந்தது, விரைவுடனே.
வண்டி நகர்ந்ததும் எங்களிடம்
வந்தார், ‘டிக்கெட்’ சோதகராம்.
“எங்கே, உனது டிக்கெட்டை
எடுப்பாய்” என்றார் அம்மனிதர்.
உடனே, பைக்குள் கைவிட்டேன்;
உள்ளே காணோம் டிக்கெட்டை!
‘ஐயோ!’ என்றேன்; திடுக்கிட்டேன்;
அலசிப் பார்த்தேன்; பயனில்லை
‘பலகா ரத்தை வாங்கிடவே
பணத்தை விரைவாய் எடுக்கையிலே
டிக்கெட் கீழே வீழ்ந்திருக்கும்’
நினைத்தேன், இப்படி, அதற்குள்ளே,
‘ஏனோ தம்பி, நடிக்கின்றாய்?
என்னை ஏய்த்திட முடியாது!
எடுப்பாய் பணத்தை இருமடங்கு.
இங்கே எதுவும் பலிக்காது!’
என்றார். அவரிடம் உண்மைதனை
எடுத்துக் கூறியும் பயனில்லை!
அத்தனை பேர்கள் மத்தியிலே
அவமா னத்தால் தலைகுனிந்தேன்.
உண்மை உரைத்தேன்; ஆனாலும்
என்னை நம்பா திருந்ததுஏன்?
கவனக் குறைவே இத்தனைக்கும்
காரணம் என்பதை நன்குணர்ந்தேன்.
‘சத்தியம் பேசும் மனிதனுக்குத்
தகுந்த கவனமும் வேண்டு’மென
காந்தித் தாத்தா சொன்னமொழி
காதில் ஒலித்தது, அச்சமயம்.
குழந்தை யாக இருந்த போது
ஜவஹர் லாலுடன்
குதிரைக் குட்டி ஒன்று கூட
இருந்து வந்தது.
அழகு மிக்க குதிரைக் குட்டி
அதனில் ஏறியே
அலகா பாத்து நகரைச் சுற்றித்
தினமும் வருவரே.
அன்றொ ருநாள் குதிரை மீது
ஜவஹர் ஏறியே,
ஆனந் தமாய் ஊரை யெல்லாம்
சுற்றும் போதிலே,
என்ன அந்தக் குதிரைக் குட்டி
நினைத்து விட்டதோ!
என்றும் இல்லா வேகத் தோடே
ஓட லானது!
‘விருட்’டென் றந்தக் குதிரைக் குட்டி
பாய்ந்து ஓடவே,
விழுந்து விட்டார், ஜவஹர் அங்கே
தரையின் மீதிலே!
திரும்பிக் கூடப் பார்த்தி டாது
குதிரைக் குட்டியும்
சென்று ஜவஹர் வீடு தன்னைச்
சேர்ந்து விட்டது!
குதிரை மட்டும் திரும்பி வந்த
காட்சி கண்டதும்,
“குழந்தை எங்கே?” என்று பெற்றோர்
திகைக்க லாயினர்.
பதறிக் கொண்டே தந்தை தாயும்
மற்றை யோர்களும்
பலதி சைக்கும் சென்று நன்கு
தேட லாயினர்,
தரையில் வீழ்ந்த ஜவஹர் லாலோ
எழுந்து உடைகளைத்
தட்டி விட்டுக் கொண்டு வீடு
நோக்கி வந்தனர்.
குறைகள் எதுவும் இன்றித் திரும்பி
வந்த குழந்தையைக்
கூட்ட மாகத் தேடி வந்தோர்
வழியில் கண்டனர்.
‘கண்ணே!" என்று அருகில் சென்று
கட்டிக் கொண்டனர்.
“காயும் உண்டோ?” என்று உடலைத்
தடவிப் பார்த்தனர்.
“ஒன்று மில்லை, என்றன் குதிரை
வந்து சேர்ந்ததா?”
என்று கேட்டுக் கொண்டே ஜவஹர்
வீடு வந்தனர்.
குதிரை மீது ஜவஹ ருக்குக்
கோபம் வந்ததா?
கொஞ்சம் கூடக் கோப மில்லை;
அன்பி ருந்தது!
அதிக மான வீரத் தோடு
குதிரை ஏறியே
அடுத்த நாளும் சுற்ற லானார்
வழக்கம் போலவே!
ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன்
அரச மரத்தில் ஏறினன்;
பாடு பட்டுத் தழைகள் தம்மைப்
பறித்துக் கீழே போட்டனன்.
ஆசை யோடு ஆட்டு மந்தை
அவற்றைத் தின்னும் வேளையில்
நாச வேலை செய்ய எண்ணி
நாலு ஐந்து ஆடுகள்,
அம்பு பாய்ந்து பெயர்த்த தைப்போல்
அரச மரத்துப் பட்டையைக்
கொம்பி னாலே வேக மாசுக்
குத்திப் பெயர்க்க லாயின.
அரச மரத்தில் இருந்த சிறுவன்
அந்தக் காட்சி கண்டதும்,
இறங்கி வந்து அவைகள் தம்மை
இகழ்ந்து மிகவும் பேசினன்:
“கழுத்தை வெட்டிக் கறிச மைத்துக்
களித்தே உண்பார், மனிதர்கள்.
குளிரைப் போக்க அவர்க ளுக்குக்
கொடுக்கின் றீர்கள், கம்பளி.
தின்று வளர இலையும், தழையும்
தினமும் தந்த மரத்தினை
நன்றி கெட்டுத் தோல் உரித்தல்
நியாய மாமோ, கூறுவீர்?”
வேலன் காட்டு வழியாக
வெளியூர் சென்றான், அப்பொழுது.
மரத்தை அடியில் வெட்டுகின்ற
மனிதன் ஒருவனைக் கண்டனனே.
“இத்தனை பெரிய மரத்தை நீ
எப்படி எடுத்துச் செல்வாயோ?”
என்று கேட்ட வேலனிடம்,
“எப்படி எடுத்துச் செல்லுவதா!
அங்கே வண்டி நிற்கிறதே,
அதில்தான்” என்றான், அம்மனிதன்.
“போ,போ, புத்தி கெட்டவனே
பிழைப்பது இப்படித் தானோ நீ
மரத்தைக் கீழே சாய்ப்பதுவாம்!
வண்டியில் அப்புறம் ஏற்றுவதாம்!
எனது சொல்லைக் கேட்டிடுவாய்.
எளிதில் காரியம் முடிந்துவிடும்.
வண்டியை அருகே நிறுத்திடுவாய்;
மரத்தை அடியில் வெட்டிடுவாய்.
வெட்டிய மரத்தை வண்டியிலே
வீழ்ந்திடும் படிக்குச் செய்திடுவாய்.
எப்படி எனது யோசனை? சொல்”
என்றே வேலன் கேட்டிடவே,
‘சரி,சரி’ என்றே அம்மனிதன்,
தலையை ஆட்டி மகிழ்வுடனே,
வண்டியை அருகில் நிறுத்தினனே;
மரத்தை வெட்டிச் சாய்த்தனனே.
‘பட, பட’ என்ற சத்தமுடன்
‘பட்’டென மரமும் சாய்ந்ததுவே.
மரத்தின் பளுவைத் தாங்காமல்
வண்டியும் ‘அப்பளம்’ ஆனதுவே!