மலரும் உள்ளம்-1/சிறுமியின் உதவி
அருமை மிக்க நாயினை
அழைத்துக் கொண்டு தெருவிலே
சிறுவன் ஒருவன் செல்லுவான்,
தினமும் ஆடு மேய்க்கவே.
தெருவில் நாயும், அவனுமே
செல்லு கின்ற காட்சியைச்
சிறுமி ஒருத்தி ஆவலாய்த்
தினமும் பார்த்து வந்தனள்.
அன்று சிறுவன் மட்டுமே
அங்கு வந்தான். ஆதலால்,
“இன்று உனது நாயினை
எங்கே காணோம்?” என்றனள்.
“பொல்லாப் பையன் ஒருவனே
பிரிய மான நாயினைக்
கல்லால் அடித்துப் போட்டனன்;
காலை ஒடித்து விட்டனன்!
நன்கு காலும் ஓடிந்ததால்
நடக்க முடிய வில்லையே
என்றன் குடிசை தன்னிலே
இப்போ துள்ள” தென்றனன.
உடனே, அந்தச் சிறுமியும்
உள்ளம் நொந்து அவனுடன்
குடிசை தன்னை நோக்கியே
‘குடுகு’ டென்று ஓடினள்.
தரையில் படுத்து வலியினைத்
தாங்கொ ணாது புரண்டிடும்
அருமை நாயைக் கண்டனள்;
அருகில் நெருங்கிச் சென்றனள்.
“ஐயோ, பாவம்!” என்றனள் ;
அதனின் காலை நோக்கினள்;
‘செய்வ தென்ன?’ என்பதைச்
சிந்தித் துடனே எழுந்தனள்.
அந்தச் சிறுவன் உதவியால்
அடுப்பை மூட்டி, அதனிலே
வெந்நீர் போட லாயினள்;
விரைந்து வேலை பார்த்தனள்.
‘வெந்நீர் ஒத்த டத்தினால்
விலகும் நாயின் வலியுமே’
என்று அவளும் எண்ணினள்.
இதற்குத் துணியும் வேண்டுமே!
சுற்று முற்றும் பார்த்தனள்.
துணியைக் காணோம்! ஆதலால்
சட்டை தன்னைப் பாதியாய்த்
தயக்க மின்றிக் கிழித்தனள்.
சுட்ட நீரில் துணியினைத்
தோய்த்துத் தோய்த்துக் கல்லடி
பட்ட காலில் ஒத்தடம்
பையப் பையக் கொடுத்தனள்.
காலில் வலியும் குறைந்தது.
களிப்புக் கொண்டு நாயுமே
வாலை ஆட்ட லானது.
மகிழ்ந்தாள், அந்தச் சிறுமியும்.
கதையில் சொன்ன சிறுமி யார்?
கண்டு பிடிக்க முடியுமோ?
அதையும் நானே சொல்லவா,
அன்பு மிக்க பிள்ளைகாள்?
போரில் காயம் பட்டவர்
புண்கள் தம்மை ஆற்றியே
பாரில் வாழ்வை கழித்தவள்;
பண்பு மிகவும் உடையவள்,
நல்ல மாது ப்ளாரன்ஸ்
நைட்டிங் கேலைப் பற்றியே
சொல்லி வந்தேன். அவளது
தொண்டு என்றும் வாழ்கவே.