மலரும் உள்ளம்-1/செல்வச் சிறுமியும் ஏழைச் சிறுமியும்
செல்வச் சிறுமி:
பொம்மைக்குப் பட்டாடை கட்டிடுவேன்.
பொன்னாலே நகைகளும் போட்டிடுவேன்.
அம்மாவோ அன்புடன் பட்சணங்கள்
அடிக்கடி தந்திடத் தின்றிடுவேன்.
காரிலே பள்ளிக்கும் சென்றிடுவேன்.
காலால் நடந்துமே நானறியேன்.
ஜோரான காட்சிகள் கண்டிடுவேன்.
சொகுசாக என்றுமே வாழ்ந்திடுவேன்.
ஏழைச் சிறுமி:
நாயினும் கேடாய் அலைந்துவிட்டேன்.
நடுங்கிக் குளிரில் ஒடுங்கிவிட்டேன்.
ஆயிரம் ஓட்டை இருந்திடினும்
அணிந்திட ஒருதுணி போதுமய்யா.
ஊரெலாம் பல்லைநான் காட்டிவிட்டேன்.
ஒருபிடி அன்னமும் போடவில்லை.
யாரும் இரங்கிட வில்லையய்யா.
இப்போதே சாகவும் சித்தமய்யா!