மலரும் உள்ளம்-1/மரமும், மாடும்
‘மரமே, மாடே’ என்றெல்லாம்
மனிதர் திட்டிக் கொள்கின்றார்.
மரமும் மாடும் உதவுதல்போல்
மனிதர் எங்கே உதவுகிறார் ?
★★★
நிழலைத் தந்து களைப்பெல்லாம்
நீக்குதல் அந்த மரமாகும்.
பழத்தைத் தந்து உடலுக்கே
பலத்தைத் தருவது மரமாகும்.
விறகைத் தந்து அரிசியினை
வேகச் செய்வது மரமாகும்.
பறவை கூடு கட்டிஇனம்
பரவச் செய்வது மரமாகும்.
★★★
வயலை உழுது பயிர்களையே
வளரச் செய்வது மாடாகும்.
வெயிலில், மழையில் மனிதர்களை
விரைந்து இழுப்பது மாடாகும்.
கழுத்து நோகத் தினந்தினமும்
கவலை இழுப்பது மாடாகும்.
கொளுத்தும் வெயிலில் நடந்திடவே
கொடுப்பது மிதியடி, மாடாகும்.