மலரும் உள்ளம்-1/மாமரம்
தெருவி லுள்ள மாமரம்,
தின்னத் தின்னப் பழங்களை
அருமை யோடு தந்திடும்.
அதனை ராமு பார்த்தனன்.
கல்லைக் கையில் எடுத்தனன் ;
கையை நன்கு ஓங்கினன்
பல்லைக் கடித்துக் கொண்டனன் :
பலமாய் வீசி எறிந்தனன்.
விட்ட கற்கள் பழங்களை
வீழ்த்தி விட்டுக் கிளைகளில்
‘பட்பட்'டென்று மோதின.
பட்டை யாவும் பெயர்ந்தன.
ஆசை கொண்டு கற்களை
அள்ளி, அள்ளி வீசினன் ;
வீசி எறிந்து பட்டைகள்
மிகவும் பெயரச் செய்தனன்.
“தின்னத் தின்னப் பழங்களைத்
திருப்தி யோடு தருகிறேன்.
என்னை ஓங்கி அடிப்பதேன்?
எனது தோலை உரிப்பதேன்?
நன்மை செய்த என்னைநீ
நன்றி கெட்டு வதைப்பதேன்?”
என்றே அந்த மாமரம்
எண்ணி ஏங்க லானதே!