மலரும் உள்ளம்-1/முன்னுரை

ஆசிரியர் முன்னுரை

ஓடி விளையாடு பாப்பா—நீ
ஓய்ந்தி ருக்க லாகாது பாப்பா

என்ற மகாகவி பாரதியாரின் பாடலையும்,

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு—அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் பாடலையும், நான் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த போது பாடிப் பாடிப் பரவசமடைந்தேன்; சற்றுப் பெரியவனானதும், மற்றக் குழந்தைகள் அப்பாடல்களை ஆர்வமுடன் பாடுவதைக் கேட்டுக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

அக்கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் படிப்பதிலும், குழந்தைகள் அவற்றைப் பாடக் கேட்பதிலும் இன்பம் பெற்று வந்த எனக்கு, சொந்தமாகச் சில பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவலில், ஒரு சில பாடல்களை எழுதினேன். அவற்றை என் நண்பர்களிடம் காட்டினேன். அவர்கள் என் முயற்சியைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுரைகள் எனக்கு ஊக்கமளித்தன; உற்சாகமூட்டின. அந்த ஊக்கத்தில், உற்சாகத்தில் நான் தொடர்ந்து குழந்தைப் பாடல்கள் பலவற்றை எழுதினேன். எளிய நடையில், இனிய சந்தத்தில் கவிமணியவர்கள் இயற்றிய பல பாடல்களையும், பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்து அவர்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையுடனே எழுதி வந்தேன்.

முதல் முதலாக—அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘மலரும் உள்ளம்’ என்ற இதே பெயரில் நான் எழுதிய இருபத்து மூன்று பாடல்கள் கொண்ட ஒரு புத்தம் வெளி வந்தது. அதற்குப் பள்ளி ஆசிரியர்களும், பத்திரிகாசிரியர்களும், பெற்றோர்களும் அளித்த வரவேற்பும், ஆதரவும் என் முயற்சிக்குத் தூண்டுகோலாயின.

மேன்மேலும் தொடர்ந்து எழுதினேன். குழந்தைகளுக்காக வெளி வந்த—வெளி வருகின்ற பல பத்திரிகைகளிலும் அவை இடம் பெற்றன. அப்பாடல்களை அவ்வப்போது சிறு, சிறு புத்தகங்களாகப் புதுக்கோட்டைத் தமிழ் நிலையத்தாரும். இராயவரம் பாப்பா மலர் காரியாலயத்தாரும் வெளியிட்டு வந்தனர்.

சிறுசிறு புத்தகங்களாக இருப்பது, என் நண்பர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு புத்தகமாக வெளியிட்டால் நன்றாயிருக்குமே என்று யோசனை கூறினர். எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை முன்பே இருந்தது. நண்பர்களின் யோசனையைக் கேட்ட பிறகு, அந்த ஆசை நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து கொண்டே வந்தது. அதன் விளைவுதான் இப்புத்தகம்!

என் பாடல்கள் புத்தக உருவில் வருவதற்குப் பேருதவி புரிந்தவர்களில் முக்கியமானவர் மூவர். T. ஐயன் பெருமாள் கோனார் அவர்கள் (Senior Lecturer in Tamil, St. Joseph's College, Trichy}, கு. மதுரை முதலியார் அவர்கள் (Ex-Lecturer in Tamil, Loyola College, Madras), வித்துவான் தணிகை உலகநாதன் அவர்கள் (Hindu Theological High School, Madras)—இம்மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

கவிமணியவர்களின் வாழ்த்தும், சொல்லின் செல்வரின் அணிந்துரையும் இப்புத்தகத்திற்குக் கிடைத்ததே, நான் பெற்ற பெரும் பேறாகும். அவர்களின் அன்புக்கு, வணக்கம் செலுத்துகிறேன்.

இப்புத்தகம் நல்ல முறையில் வெளி வரப் பெருமுயற்சி எடுத்துக் கொண்ட என் இனிய நண்பர் ரத்னம் அவர்களுக்கும், நெற்குப்பை இராம சுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றி.

இத்தொகுதியிலுள்ள பாடல்களைக் குழந்தைகள் படித்து இன்புற்றால், அதுவே நான் அடையும் பேரின்பமாகும். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் செய்து வரும் முயற்சி ஓரளவாவது பயன் பெற்றதென மகிழ்ச்சியடைவேன்.

குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள்.

சென்னை,
 4-3-54

—அழ. வள்ளியப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/முன்னுரை&oldid=1724765" இலிருந்து மீள்விக்கப்பட்டது