மலரும் உள்ளம்-1/யோசனை எப்படி?
வேலன் காட்டு வழியாக
வெளியூர் சென்றான், அப்பொழுது.
மரத்தை அடியில் வெட்டுகின்ற
மனிதன் ஒருவனைக் கண்டனனே.
“இத்தனை பெரிய மரத்தை நீ
எப்படி எடுத்துச் செல்வாயோ?”
என்று கேட்ட வேலனிடம்,
“எப்படி எடுத்துச் செல்லுவதா!
அங்கே வண்டி நிற்கிறதே,
அதில்தான்” என்றான், அம்மனிதன்.
“போ,போ, புத்தி கெட்டவனே
பிழைப்பது இப்படித் தானோ நீ
மரத்தைக் கீழே சாய்ப்பதுவாம்!
வண்டியில் அப்புறம் ஏற்றுவதாம்!
எனது சொல்லைக் கேட்டிடுவாய்.
எளிதில் காரியம் முடிந்துவிடும்.
வண்டியை அருகே நிறுத்திடுவாய்;
மரத்தை அடியில் வெட்டிடுவாய்.
வெட்டிய மரத்தை வண்டியிலே
வீழ்ந்திடும் படிக்குச் செய்திடுவாய்.
எப்படி எனது யோசனை? சொல்”
என்றே வேலன் கேட்டிடவே,
‘சரி,சரி’ என்றே அம்மனிதன்,
தலையை ஆட்டி மகிழ்வுடனே,
வண்டியை அருகில் நிறுத்தினனே;
மரத்தை வெட்டிச் சாய்த்தனனே.
‘பட, பட’ என்ற சத்தமுடன்
‘பட்’டென மரமும் சாய்ந்ததுவே.
மரத்தின் பளுவைத் தாங்காமல்
வண்டியும் ‘அப்பளம்’ ஆனதுவே!