மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/10. ஏழை பங்காளர்

10. ஏழை பங்காளர்

பெருமானார் அவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே பணிவும், கனிவும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.

நலிவுற்றவர்கள், ஏழைகள் ஆகியோருடைய துன்பங்களைக் கேட்பதற்கு அவர்களின் காதுகள் எப்பொழுதும் தயாராயிருக்கும். உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிவார்கள்.

தெருவில் நடந்து போகும்பொழுது, அவர்கள் அடக்கத்தோடு நடந்து செல்வார்கள்.

அவர்கள் போகும்போது, 'உண்மையும் நேர்மையும் உடைய' 'அல் அமீன்' ‘அதோ போகிறார்கள்’ என்று சுட்டிக்காட்டி மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வார்கள்.

பொருள் வாங்குவதற்காகப் பெருமானார் அவர்கள் கடைக்குப் போகும்பொழுது, வழியில் இருக்கும் ஏழை எளியவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி, “முஹம்மது கடைக்குப் போகிறார், உங்களுக்குத் தேவையான பொருள்களைச் சொல்லுங்கள், வாங்கி வருகிறேன்” என்று கூறுவார்கள். அவர்கள் சொல்லும் பொருள்களை அவ்வாறே வாங்கி வந்து தருவார்கள்.