மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/12. சச்சரவைத் தீர்த்து வைத்தார்கள்
ஒருசமயம், மக்காவில் நிகழக் கூடியதாயிருந்த ஒரு பெரிய சண்டை பெருமானார் அவர்களின் தீர்க்கமான அறிவுக் கூர்மையாலும், சமாதானத் தூண்டுதலாலும் தவிர்க்கப்பட்டது.
அரேபிய நாடு முழுமைக்கும் புனிதத் தலமாகக் கருதப்படும் கஃபா வின் மதில் பழுதடைந்த நிலையில் இருந்தது: மக்கா வாசிகள் அனைவரும் அக்கட்டடத்தைப் புதுப்பிக்கக் கருதி, அதன் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு குடும்பத்தார் கட்டித்தர முன் வந்தனர்; புனிதத் தலத்தைக் கட்டும் பாக்கியத்தில் எல்லா குடும்பத்தினரும் பங்கு பெறவேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.
அவ்வாறு பல பிரிவுகளாகக் கட்டட வேலை நிறைவேறியது.
அக்கட்டடத்தின் முக்கிய பகுதியில் 'ஹஜருல் அஸ்வத்' என்னும் கருங்கல்லை நிறுவ வேண்டிய வேலை மட்டும் எஞ்சியிருந்தது. அதை நிறுவும் பாக்கியம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆசைப்பட்டார்கள்.
அதன் காரணமாகப் பெரிய கலவரம் நிகழ இருந்தது. அப்பொழுது முதியவர் ஒருவர், அந்தப் பிரச்சனை தீர ஒருவழி சொன்னார்.
"நாளைக் காலையில் கஃபாவின் வாசல் வழியாக முதன்முதலில் யார் வருகிறாரோ அவர் செய்யும் முடிவை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்பதே அவ்வழி!
அதை ஒப்புக்கொண்டு அனைவரும் சென்று விட்டனர்.
மறுநாள் காலை; ஆண்டவனுடைய அருளால், கஃபாவின் வாசலில், பெருமானார் அவர்களை மக்கள் அனைவரும் காண நேர்ந்தது. மக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரஞ் செய்தனர்.
நம்பிக்கைக்கு உரிய பெருமானார் அவர்கள் செய்யும் முடிவை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் என எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
உடனே பெருமானார் அவர்கள், அழுத்தமான, அகலமான ஒரு துணியைக்கொண்டு வரச்சொல்லி, அதன் மத்தியில், தங்கள் திருக்கரங்களால் ஹஜருல் அஸ்வதைத் தூக்கி வைத்தார்கள். பிரச்னை உண்டு பண்ணிக் கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு தலைவரைத் தேர்ந்து எடுத்து, அவர்கள் அனைவரையும் அந்தத் துணியைச் சுற்றிலும் பிடித்துக்கொண்டு, கருங்கல்லை நிறுவ வேண்டிய இடத்தில் அதைத் தூக்கி வைக்குமாறு கூறினார்கள். அவர்கள் அவ்வாறு செய்ததும், பெருமானார் அவர்கள் தங்கள் திருக்கரங்களால் ஹஜருல் அஸ்வத்தை எடுத்து, அதன் பழைய நிலையில் நிறுவினார்கள்.
இந்த நிகழ்ச்சி, அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளித்தது.