மாவீரர் மருதுபாண்டியர்/மீண்டும் மயிலப்பன்

4
மீண்டும் மயிலப்பன்

றவர் சீமையின் ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென் மேற்கே இருப்பது சித்திரங்குடி கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது ராணுவப் பணியில் இருந்த தால் இவர் “மயிலப்பன் சேர்வைக்காரர்” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ம் ஆண்டின் துவக்கத்தில் கும்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சிக்கோட்டையில் அடைத்தனர். இந்தக் கொடுமையைக் களைந்தெறிய மயிலப்பன் இரவு பகலாகப் பாடுபட்டார். திருச்சிக் கோட்டையில் இருந்த மன்னரை, காவலர்களுக்கு கடுக்காய் கொடுத்து விட்டு தப்புவிப்பதற்குக் கூட முயன்றார். திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார்.[1]

கும்பெனியாரின் கவனமும் படையணிகளின் நடமாட்டமும் நான்காவது மைசூர் போரில் ஈடுபட்டிருந்த பொழுது. முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமைதாங்கி நடத்தினார். கும்பெனியாரது கச்சேரிகளையும், களஞ்சியங்களையும் தீயிட்டும் அவர்களது கூலிப்படைகளுடன் பொருதியும், அவர்களிடமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியும், நாற்பத்து ஒரு நாட்கள், கும்பெனி நிர்வாகத்தைத் திக்கு முக்காடச் செய்தார். இறுதியில் துரோகிகளது துணையுடன் மக்களது கிளர்ச்சி நசுக்கப்பட்டதால் மனமுடைந்து தஞ்சை சீமை சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். ஆறு மாதங்களுக்குப்பின்னர் நெட்டுருக்குத் திரும்பி வந்தார். நிலைமைகளை நோட்டமிட்டார். தகவல் அறிந்த சிவகங்கை சேர்வைக்காரர்கள் அவரை இராமநாதபுரம் சீமைக்குச் செல்ல வேண்டாம் என்றும் நெட்டூரிலேயே தங்கி இருக்குமாறும் செய்தி அனுப்பினர். சிவகங்கைப் பிரதானிகளது செய்தி மயிலப்பனுக்கு வியப்பை அளித்தது. அடுத்த இரண்டொரு நாட்களில் அவரிடம் சாப்பாட்டிற்காக பத்துக்கலம் நெல்லை சிவகங்கை அரசுப்பணியாளர்கள் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை அடுத்து, சூடியூருக்கு முகாம் வந்திருந்த பெரிய மருது சேர்வைக்காரர் மயிலப்பனை அங்கு சந்தித்தார்.[2] கடந்தவைகளை மறந்து சிவகங்கைச் சீமையில் தொடர்ந்து தங்கி இருந்து சிவகங்கை அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அரசியல் நிலைமைகளை நன்கு புரிந்து கொண்ட மயிலப்பனும் மனமாற்றம் பெற்றுள்ள மருது சேர்வைக்காரரின் வேண்டுகோளை ஏற்று செயல்பட்டார்.

மறவர் சீமையின் மக்கள் கிளர்ச்சி, இறுதி தோல்வியுறுவதற்குக் காரணமான சிவகங்கை சேர்வைக்காரரது மாறுபட்ட மனநிலை மயிலப்பனுக்கு மகிழ்ச்சி அளித்தது. சேதுபதி மன்னரை சிறையிலே தள்ளி சேதுநாட்டை அபகரித்துள்ள வெள்ளைப் பரங்கியரைப் அழித்து, மறவர் சீமையின் மானத்தைக் காப்பதற்கு தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்து இருப்பதாக நம்பினார். ஓய்ந்து இருந்த அவரது உடல் நரம்புகள் முறுக்கேறின. அவரது நடையிலும் உடையிலும் ராணுவ மிடுக்கு மீண்டும் பிரதிபலித்தது. சிவகங்கையிலிருந்து பாஞ்சாலக்குறிச்சி கோட்டைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சரக்குகள் அணிக்கு பாதுகாப்பாக உடன் சென்றார். இந்த அணியில் குளத்தூர் நாகராச மணியக்காரரும், வெள்ளமருது சேர்வைக்காரரது மகன் சிவத்த தம்பியும் அன்னாரது மருமகன் ஆளஞ்சாத் தேவரும் இருபது துப்பாக்கி வீரர்களும், நூற்று எண்பத்து ஐந்து ஈட்டிக்காரர்களும் இருந்தனர். பதினாயிரம் துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டு சேர்ப்பதற்கான இருபத்து ஐந்து பொதி வண்டிகளுக்கு பாதுகாப்பாக இந்த அணியினர் சென்றனர். பாஞ்சையை அடைந்த இவர்களைப் பாராட்டி சிவத்தையா நாயக்கர் அன்பளிப்புக்களையும் வழங்கி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தார்.[3]

வழியில் தரக்குடியில் கம்பளத்தார் அணி தளபதி மயிலப்பனைப் பாராட்டி அவருக்கு பல அன்பளிப்புகளை வழங்கினர். காதிற்கு தோடு, கழுத்திற்கு கண்டசரம், கைகளுக்கு காப்புகள் என பொன் ஆபரணங்கள், பட்டாடை , குதிரைகள் ஆகியன. அத்துடன் அவரது கிளர்ச்சிக்காரர்கள் அணியில் முந்நூறு வீரர்களும் சேர்ந்து கொண்டனர். கழுமுடியில் அன்று தங்கி கமுதி, அபிராமம் பகுதிகளில் கிளர்ச்சியைத் தொடர்வது பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டார்.[4] இந்நிலையில் மேலமந்தை பாளையக்காரர் கிளர்ச்சிக்காரர்களுக்குப் பயந்து குடும்பத்துடன் ஊரை விட்டு சாயல்குடிக்கு ஓடினார். அங்குள்ள கும்பெனியாரது தானியக் களஞ்சியங்களை மேற்பார்த்து வந்த பணியாளர்களும் பயந்து முதலியார் மடத்துக்கு ஓடினர். பின்னர் மேலமாந்தை தானியக் கிடங்குகளைக் கொள்ளையிட்டு, கும்பெனியாரது மணியக்காரரையும் சம்பிரிதியையும் தொடர்ந்து சென்று சிறைப் பிடித்து காடல்குடிக்கு அனுப்பி வைத்தார்.[5]

இதற்கிடையில் காடல்குடியை தாக்கியபிறகு நாகலாபுரத்தில் நிலை கொண்டு இருந்த கும்பெனித் துருப்புக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியினால் கும்பெனிப் பணியாளர்களும் குடிமக்களும் பீதியடைந்தனர். நாகலாபுரம் எட்டையாபுரம், ஆகிய ஊர்களுக்கு பீரங்கி அணிஒன்றை அனுப்புவதற்கும், பாப்பாங்குளத்தில் போர் வீரர்களையும் ஆயுதங்களையும் ஆயத்த நிலையில் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.[6] இத்துடன் புரட்சியில் ஈடுபட்டுள்ள பாளயக்காரர்களுக்கு மக்கள் எந்த வகையிலும் புகலிடமோ அல்லது உதவியோ செய்யக் கூடாது என்றும், மீறினால் விசாரித்து உடனடியாக மரணதண்டனை வழங்கப்படும் எனவும் கலெக்டரது பயமுறுத்தல் விளம்பரம் வெளியிடப்பட்டது.[7]

அடுத்து கிளர்ச்சிக்காரர்கள் கூட்டம் கமுதி நோக்கிப் புறப்பட்டது. கமுதி கோட்டையை துப்பாக்கி, ஈட்டி வீரர்கள் தாக்கினர். அவைகளினால் பலன் இல்லை என்று புரிந்து கொண்டபின் அபிராமத்திற்குப் புறப்பட்டனர். ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் ஊரைத் தாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் நாகலாபுரம் பள்ளிமடம் குடிகள் தங்களிடம் இருந்த நகை நட்டுக்களை திருச்சுழி கோயிலில் ஒப்படைத்துவிட்டு பக்கத்து கிராமங்களுக்கு பயந்து ஓடினர் என்ற விபரம் பள்ளிமடம் அமில்தாரது அறிக்கையில் இருந்து தெரிகிறது.[8] இதற்கிடையில் நிலைமையை அறிந்த திருநெல்வேலி கேப்டன் சாகிபர் லெப்டினண்ட் மில்லரை 16வது பட்டாளத்தின் முதல் அணியுடன் கமுதிக்குச் செல்ல உத்திரவிட்டான். மில்லரும் 12-3-1801 கமுதி கோட்டைவந்து சேர்ந்தான்.[9] இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சி போராளிகளுக்கும் சிவகங்கை சேர்வைக்காரர்களுக்கும் உள்ள கடிதப் போக்குவரத்தைத் தடை செய்தனர். மண்டல மாணிக்கத்தில் தங்கி இருந்து இந்தப் பணிகளைக் கவனித்து வந்த சுப்பையர் என்பவரையும் அவரது ஆறு பணியாட்களையும் பரங்கிகள் கைது செய்து இராமநாதபுரம் கோட்டையில் அடைத்து விலங்கிட்டனர்.[10]

சுப்பையரிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தில் இருந்து, சிவகங்கை சேர்வைக்காரர்களைப் பற்றிய சந்தேகத்தை கும்பெனி யார், உறுதிப்படுத்திக்கொண்டதுடன் சிவகங்கைக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் இடைப்பட்ட இரகசிய இராணுவத் தொடர்பு விவரங்களையும், மீண்டும் இராமநாதபுரம் சீமையில் நடக்கவிருக்கும் கிளர்ச்சிகளின் சூத்திரதாரியாக மயிலப்பன் சேர்வைக்காரர் பங்கு வகிக்க இருப்பதையும் கும்பெனியார் புரிந்து கொண்டனர். இத்துடன் இந்த இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிவகங்கை சேர்வைக்காரர்களது ஆதரவாளர்களான பெரும்புள்ளிகள் யாவர்  என்பதையும் சுப்பையரது வாக்குமூலத்தில் இருந்து பெற்றனர்.[11] கும்பெனியார், எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவை எளிதாக அமைந்தன.

பாஞ்சையில் இருந்து திரும்பும் வழியில் தளபதி மயிலப்பன் சேர்வைக்காரரது அணியினர், கொடுமலூரிலும் அபிராமத்திலும் நிலை கொண்டிருந்த கும்பெனிப் படைகளை அழித்து நாசமாக்கினர்.[12] அவர்களது அடுத்த இலக்கு கமுதி கோட்டைதான். இந்தக்கோட்டை இராமநாதபுரம் சீமையில் உள்ள இராமநாதபுரம் கோட்டையைத் தவிர்த்து, கீழாநிலை, அனுமந்தக்குடி, ஆறுமுகம் கோட்டை, முஸ்டக்குறிச்சி, முதல்நாடு, பந்தல்குடி, பெருநாழி ஆகிய கோட்டைகள் அனைத்திலும் அமைப்பிலும், வலிமையிலும் சிறப்பானது மட்டுமின்றி இராமநாதபுரம் சீமைக்கு தெற்குவாயில் போல இராமநாதபுரம் - திருநெல்வேலி - வழியில் சிறப்பாக அமைந்து இருந்தது. பிரஞ்சு நாட்டுப் பொறியாளர் களது கட்டுமானத் திறத்தில் விஜயரகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது.[13] அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் குண்டாற்று வடகரையில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகளின் மேல் உறுதியான இரண்டு சுற்றுகல் மதிலுடனும் ஒன்பது அலங்கங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டு இருந்தது.[14] ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பெனிப்படையினருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் நிகழ்ந்த போர்களின் பொழுது பழுதடைந்த அந்தக் கோட்டையின் சிதைவுகள் அப்படியே காட்சி அளித்தன. அதனைக் கண்ட பொழுது மயிலப்பன் சேர்வைக்காரரது மனத்திரையில் பல காட்சிகள்-சிந்தனைக்கதிர்கள்-துளிர்த்து மின்னி மறைந்தன.

மறவர் சீமை மண்ணின் மீது கொண்ட கட்டற்ற பாசத் தினாலும் மறக்குடி மக்களது மூத்தகுடி மகனாக பல நூற்றாண்டுகளாக விளங்கிவரும் சேதுபதி மன்னர் மீது வைத்து இருந்த ராஜவிசுவாசத்தினாலும் உந்தப்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் முன்னூறு பேருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக்கோட்டையில் இருந்த கும்பெனிப்படையினை ஆவேசமாகத் தாக்கி அழித்த நிகழ்ச்சியும், அதனையடுத்து அதே வருடம் நாட்டுப்பற்றும், அன்னிய எதிர்ப்பு ஆவேசமும் கொண்டு காட்டு வெள்ளம் போலத் திரண்ட சாதாரணக் குடிமக்களுடனும் சேர்ந்து மே, ஜான் மாதங்களில் இந்தக் கோட்டையில் இருந்த பரங்கிப்பட்டாளத்தைப் பல முறை எதிர்த்துப் போராடிய நிகழ்ச்சிகளும்[15] இந்தப் போராட்டங்களுக்கு தம்முடைய வலதுகரமாக இருந்து உதவி போர்க்களத்தில் தியாகியான சிங்கன் செட்டியின் நினைவும் எழுந்து அவரது கண்ணின் ஓரத்தில் நீர்த் துளிகளாக அரும்பி உதிர்ந்தன. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் பரங்கியரது பாசறையாக அந்தக் கோட்டை இருந்து வருவதை நினைக்கும் பொழுது, அவருக்கு வெறுப்பும், வெஞ்சினமும் எல்லையற்ற விசுவரூபமாக வளர்ந்தது. ஒரு குதிரை மீது அவர் அமர்ந்து இருந்த பொழுதும் ஓராயிரம் குதிரைகளை அவர் ஒருவரே இயக்குவது போன்ற நினைப்பு விண்ணைச் சாடுவது போன்ற பயங்கரமான போர்க்குரல்! அலறல்! அவரது அணியில் இருந்த ஓராயிரம் மறவர்களும் அவரைப்பின் தொடர்ந்து கோட்டை மதில்மேலும், கோட்டை முகப்பிலும் அணி வகுத்து நின்ற பரங்கிகளையும் அவர்களது கூலிப்படைகளையும் தாக்கினர். வேல், ஈட்டி, வாள், வளரி ஆகிய ஆயுதங்களுடன் ஒரு சில துப்பாக்கிகளும் அவர்களது முன்னேற்றத்திற்குப் பாதையமைத்துக் கொடுத்தன. கொலைகாரன் லெப்டினண்ட்மில்லர் கட்டளைப்படி வெடித்த துப்பாக்கிச் சூடுகளும் பீரங்கி வெடிப்புகளும் மறவர்களது உக்கிரமான - ஏன் - மூர்க்கத்தனமான தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. கமுதிக் கோட்டையின் பிரம்மாண்டமான பிரதான கதவுகள் நொறுங்கி மக்களது சக்திக்கு வழிவிட்டு வீழ்ந்தன.[16]

மறவர்களது மகிழ்ச்சி ஆரவாரம் பெருகியது. இன்னும் சிலமணி நேரங்களில் இரண்டாவது சுற்று மதிலையும் கடந்து கோட்டைக்குள் புகுந்து விடலாம் என்ற நிலையில் போராடிய மறவர்களுக்கு எதிர்பாராத திகைப்பும் ஏமாற்றமும் காத்து இருந்தன. திடீரென வடதிசையில் இருந்து பரங்கியர் உதவிக்கு இராமநாதபுரம் கோட்டை அணியினர் வந்து சேர்ந்தனர். போரின் இறுதி நிலையில் மாற்றம். கிளர்ச்சிக்காரர்கள் மிகவும் களைத்துப் போயிருந்தாலும் மீண்டும் கும்பெனியாரின் உதவிப்படைகளுடன் அவர்கள் மோதினர். ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. புதிய அணியினரின் சுறுசுறுப்பான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், கோட்டைக்கு வடகிழக்கே உள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிக்கு பின்னடைந்து பரமக்குடி சென்றனர்.[17] ஆனால் லெப்டிமில்லர் அவர்களைத் தொடர்ந்து துரத்தி வந்தான். காட்டுப் பரமக்குடி கிராமத்து அருகே கும்பெனிப்படையணியை கிளர்ச்சிக்காரர்கள் வீராவேசமாகப் பொருதி அவர்களது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினர்.[18] இதற்கிடையில், சிவகங்கையில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் உதவிக்கு மறவர் அணி ஒன்று வந்து சேர்ந்ததால், மில்லரது கூலிப்படையை மயிலப்பன் அழித்து வாகை சூடினார். மில்லர் உயிர்தப்பி இராமநாதபுரம் கோட்டைக்கு ஒட்டம் பிடிக்க வேண்டியதாயிற்று. அப்படி ஒடும் பொழுதுகூட, சித்திரங்குடியில் கைது செய்து கொண்டு வந்த தளபதி மயிலப்பன் மனைவியையும் சகோதரியையும் விடாப்பிடியாக மில்லர் இராம நாதபுரம் கோட்டைக்குக் கொண்டு சென்று சேர்த்தான். தகவல் அறிந்த தளபதி மயிலப்பன் சேர்வைக்காரர் எஞ்சி நின்ற கும்பெனி அணியை துவம்சம் செய்ததுடன் காட்டுப் பரமக்குடியிலும், தெளி சாத்தநல்லூரிலும் கும்பெனியாருக்கு சொந்தமாக இருந்த தானியக் களஞ்சியங்களைச் சூறையாடி அழித்தார்.[19]

மயிலப்பனது குதிரைப்பிரிவு வீரர்கள், பரமக்குடிக்கு வட கிழக்கே பத்துக்கல் தொலைவில் உள்ள சாலைக் கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இராமநாதபுரம் சிவகங்கை சீமைகளின் எல்லையில் உள்ள இந்த கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அங்கு வைகையாற்றில் பலகால்களில் வரும் வெள்ளத்தைத்தேக்கி விவசாயம் செய்வதால் இந்தப்பகுதி வளமை பெற்று இருந்தது. ஆதலால், கும்பெனி நிர்வாகத்தின் அங்கமான கச்சேரி ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டிடத்தை தீக்கிரையாக்கி கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் வெஞ்சினத்தை ஆற்றிக் கொண்டனர். மற்றும் அங்குள்ள கம்பெனியாருக்கு சொந்தமான நெல் பட்டறைகளில் இருந்த நெல்லையும் சில கால்நடைகளையும் அங்கிருத்து கடத்திச் சென்றனர்.[20]

தொடர்ந்து அவர்கள் வடக்கே சென்று மறுநாள் விடியலில் வரவணி, செங்கப்படை கிராமங்களைத் தீயிட்டு அழிமானம் செய்து, மேற்கே திரும்பி பரத்தைவயலுக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்குக் கம்பெனியாரது நெல் ஏராளமாக கொள்ளைப் பொருளாக கிடைத்தது.[21] அப்பொழுது மானாமதுரைக்கும் பரமக் குடிக்கும் இடையில் உள்ள நெட்டூர் கிராமத்தில் நிலை கொண்டு இருந்த பரங்கிப்படைகளை மருது சேர்வைக்காரர் மக்கள் படை தூரத்தியடித்த செய்திகிடைத்ததால் அவர்களது திட்டத்தை மாற்றி மீண்டும் வரவனி, செங்குடி கிராமங்களுக்குச் சென்று கொள்ளையிட்டனர். மேலும் கும்பெனியாருக்கு ஆதரவாக இருந்து உதவிய கொக்கூரணி கிராம மக்களைச் சூழ்ந்து பயமுறுத்தி அவர்களது உடமைகளைக் கொள்ளையிட்டனர், அதேபோல் அடுத்து, செட்டி கோட்டை கிராமத்தையும் அழித்துத் தீயிட்டனர். தகவல் தெரிந்து லெப்டி. மில்லர் பரமக்குடி வழியாக மயிலப்பன் அணியைத் தாக்குவதற்காக வந்தான். கொள்ளைப் பொருட்கள் அனைத்தையும் பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவைத்த மயிலப்பன் சேர்வைக்காரர். அவைகள் போய்ச் சேருவதற்காகமில்லதது அணியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மிகுதியாக சண்டையிட்டு தாமதப்படுத்திய பிறகு, தமது திட்டப்படி ஆனந்தூருக்கு புறப்பட்டுச் சென்றார்.[22]

மயிலப்பனது இத்தகைய வீர சாகஸங்களினால் இராமநாதபுரம் சீமையில் கும்பெனி நிர்வாகம் கலகலத்து தடுமாறியது. மக்கள் விரோதக் கொள்கையைக் கொண்டு அங்கு இயங்கி வந்த பரங்கியர் நிர்வாகம், மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கு அஞ்சி கோட்டை மதில்சூழ்ந்த பத்திரமான பகுதிக்குள் மட்டும் "ஆட்சி" நடத்தியது. ஏனைய பகுதிகள் அனைத்தும் கிளர்ச்சிக்காரர்கள்.

கட்டுப்பாட்டில் இருந்து வந்தன.[23] தங்களுக்கு அவ்விதம் பல வகைகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்துவதற்கு சிவகங்கைப் பிரதானிகள்தான் முழுக்க, முழுக்க மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர் என்பதை கும்பெனியார் ஒருமுகமாக முடிவு செய்தனர். மருது சேர்வைக்காரர்களது இந்த மறைமுக தாக்குதலை மடக்க இராமநாதபுரம் கலெக்டர் லூஷிங்டன் ஒரு வழியையும் கண்டு பிடித்தார்.

மறைந்த சிவகங்கை அரசி - ராணி வேலு நாச்சியாரது வம்சாவழி விவரங்களுடன் தம்மை அவசரமாகச் சந்திக்கும்படி சிவகங்கை பிரதானிக்கு கலெக்டாது ஒலை சென்றது. இந்த ஒலையின் பின்னணி எதுவாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட சின்னமருது சேர்வைக்காரர் இயல்பான பணிவுடன் பதிலையும் கோரிய விவரங்களையும் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.[24] நேரில் சென்று அவரைச் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார். உடல் நலிவு காரணமாக தாம் சிவகங்கையை விட்டு வெளியேற இயலவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு இருந்தார். சின்னமருதுவை நேரில் அழைத்துப் பேசி எச்சரிக்கை செய்ய எண்ணிய லூஷிங்டனுக்கு மிக்க ஏமாற்றம் ஏற்பட்டது. சிவகங்கைச் சேர்வைக்காரருக்கு எழுதிய பதிலில்.“.... நான் தங்களை நேரில் மிக முக்கியமான காரணத்திற்காக சந்திக்க விரும்பினேன். உங்களைத் தவிர வேறு யாரும் அந்தப்பணியில் ஈடுபட இயலாது......” என தமது வருத்தத்தை கலெக்டர் குறிப்பாகத் தெரிவித்து இருந்தார். [25]

பொறுமை இழந்த கலெக்டர், மீண்டும் சின்னமருது சேர்வைக்காரருக்கு எழுதிய கடிதத்தில் இராமநாதபுரம் சீமை கிளர்ச்சிக்காரர்களுக்கு சிவகங்கை சீமை புகலிடமாக இருந்து வருவது பற்றிய புகார்கள் ஏராளமாக வரப்பெறுவதாகவும் சிவகங்கை சீமையில் நிலைகொண்டு இருக்கும் மயிலப்பனைப் பிடித்துக் கொடுக்குமாறும் கோரி இருந்தார். அந்தக்கடிதத்தின் வாசகம்[26] " ... ... ... ... கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சிக்காரர்களுக்கு நீர் ஆதரவு அளித்து வருவது பற்றிய அறிக்கைகள் எனக்கு நாள் தவறாமல் வந்து கொண்டு இருக்கின்றன. உமது செல்வாக்கைச் சிதைப்பதற்காக உமது எதிரிகள் ஏற்பாடு செய்துள்ளவை இவை என நான் கருதியது உண்டு. ஆனால் இப்பொழுது, முறையாக லெப்டி மில்லர் மூலமாக, சிவகங்கைச் சீமையில் மயிலப்பன் புகலிடம் பெற்று இருப்பதை அறிகிறேன். நம்மீது கொண்டு உள்ள விசுவாசத்தை நீர் பகிரங்கமாக மீறும் இந்தக்குற்றத்தின் கொடுமையை எவ்விதம் சகித்துக் கொள்வது என்பதை என்னால் நினைத்துப் பார்க்க இயலவில்லை.

"ஏற்கனவே துரைத்தனத்தாரின் மிகுதியான வெறுப்பைப் பெற்றுள்ள மயிலப்பனையும் அவனது கூட்டாளிகளையும் உடனே கைப்பற்றி ஒப்படைக்குமாறு கோரி இருந்தேன். இதுவரை உம்மிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆதலால், இப்பொழுது மீண்டும் அதே கோரிக்கையை நினைவுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். மேலும், இந்தக் கட்டளையை மதிக்காவிட்டால், அல்லது அதனை நிறைவேற்றாது - அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த இயலாவிட்டால் கும்பெனியாரது பாதுகாப்பு உமக்கு எப்பொழுதும் இருக்காது என்பதை நேர்மையான முறையில் எச்சரிக்கை செய்கிறேன்.

"உண்மையில், உம்மிடம் பணிவுடைமை இருந்தால் உமக்குப் பாதுகாப்பான வழி யொன்றையும் கூற விருப்புகிறேன். கொடுமைகள், சூழ்ச்சிகளால் உம்மை வழி நடத்துபவர்களது பலவீனமான ஆலோசனைப்படி நடப்பதைவிட்டு நீங்கிக் கொள்ளவும். அவை உம்மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்.முன்பு கட்டனூரில் நாம் சந்தித்த பொழுது உமக்கு ஆதரவும் பாதுகாப்பும் தருவதாக உறுதி சொன்னேன். நீர் கும்பெனியாருக்கு கீழ்ப்படிந்து கடமைகளை நிறைவேற்றும் வரை, அந்த உறுதிமொழிக்கு மதிப்பு உண்டு. அதற்குத்தக்க தருணம் இப்பொழுது வாய்த்துள்ளது. இப்பொழுது உமக்குத் தேவையானது கும்பெனி துரைத்தனத் தாரின் சலுகையா அல்லது சீற்றமா? இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளவும். ......."

இதனை அரண்மனை அட்டவணை படித்து முடிக்கக் கேட்டதும் சின்னமருது சேர்வைக்காரருக்கு சிரிப்புத்தான் வந்தது .

கேவலம்! ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாததால் செல்வம் கொழிக்கும் இந்திய நாட்டில் மிகுதியாகவும் விலை குறைவாகவும் உள்ள தேவையான பொருட்களை வாங்கிச்சென்று பிழைக்க வந்தவர்கள் இந்த மிலேச்சர்கள். அவர்களது எழுத்தில் எவ்வளவு ஆணவமும் அழுத்தமும் பொதிந்து இருக்கின்றன! பரம்பரையாக இந்த நாட்டை ஆண்டு வந்த பேரரசர்களைப்போல் அல்லவா இவர்கள் பாவனை செய்கிறார்கள்! வளைந்து செல்லும் வணிகர்களுக்கு அதிகாரம் செய்யும் வலிமை வந்துவிட்டது! இருந்தாலும் தமக்கே உரிய ராஜதந்திரப் பணிவுடன் சின்னமருது கலெக்டருக்கு பதில் ஒன்றை அனுப்பி வைத்தார்.[27] கும்பெனியாருக்குத் தொடர்ந்து விசுவாசத்துடன் இருப்பவர் போலவும் மயிலப்பனுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லாதது போலவும், கும்பெனியாரது அதிருப்தியை உண்டு பண்ணக்கூடிய அபாயத்தைத் தோற்றுவிக்கப் போவதில்லை என்னும் பாணியில் அவரது பதில் கடித வாசகம் அமையப் பெற்று இருந்தது அந்தக்கடிதம்.

".. --- 23.3.1801 தேதிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அதன் அடக்கத்தைப் புரிந்து கொண்டேன். அதில் கடந்த சில காலமாக கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாகவும், ஆயுதபாணிகளான வீரர்களைத் திரட்டி வருவதாகவும், இரண்டாவது முறையாக கிளர்ச்சிக்காரர் மயிலப்பனுக்கு ஆதரவு அளித்து இருப்பதாகவும், அவரைப் பிடித்துக் கொடுத்து கும்பெனியாருக்குக் கட்டுப்பட்டவனாக நடந்து கொள்ளுமாறும் குறிப்பிடபட்டுள்ளது. கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்கு நாங்கள் அடைக்கலம் அளிப்பதா? எங்களது கனவிலும் நினைக்காத ஒன்று. இவ்விதம் நிகழ்ந்து இருந்தால், அதற்குரிய குற்றவாளி நாங்களாக இருந்தால், அது எங்களுடைய பொல்லாத காலம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

"மயிலப்பன் எங்களது சீமைக்குள் வந்தால். சந்தேகத்துக்கு இடமில்லால், தாமதிக்காமல் உடனே அவனைப் பிடித்து அனுப்பி விடுவோம். மதுரை, திண்டுக்கல் சீமையைச் சேர்ந்தவர்கள், மதுரைக்குத் திரும்பும் வழியில் எங்களது சீமையில் உள்ள எமனேசுவரம் கன்னியப்பிள்ளை மடத்தில் ஒரு இரவு தங்குவார்கள். திருடர்கள் அவர்களை மடக்கி திருடிச் சென்று விடுவார்கள். காயமடைந்தவர்களுக்குக் கட்டுப்போட்டும். கையில் பணமும் கொடுத்து தக்க பாதுகாப்புடன் மதுரைக்கு அனுப்பி வைக்கின்றோம். மற்றும் எங்களது சீமை எல்லையில் உள்ள பரமக்குடி முதலான ஊர்களில் இருந்து பதறி ஓடி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறோம்.

"ஏற்கனவே மயிலப்பனைப் பிடித்துக்கொடுக்குமாறு, வந்த கடிதத்தைப் பார்த்தவுடன், எங்களது ஆட்களை நாலாபுறமும் அனுப்பிப் பிடித்து வருமாறு செய்தோம். ஆனால் எவ்வளவேர தேடிப்பார்த்தும், முயற்சி செய்தும் அவன் எங்கும் அகப்படவில்லை. முன்பு சிங்கன் செட்டியுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்ட காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவனைப் பிடித்து வருமாறு எங்களது கோட்டை சேர்வைக்காரரையும், பாம்பூர் நாயக்கரையும் அனுப்பி வைத்தேன். மயிலப்டன் ஒரு முரடன். அவனால் எங்களுக்கு என்ன உதவி செய்ய இயலும்? பயனற்ற ஒருவனுக்காக ஆதரவு அளித்து வீணாக கும்பெனியாரதும் உங்களதுமான வெறுப்பை அல்லவா சம்பாதித்துக் கொள்ள நேரிடும்? நாங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் விசுவாசத்துடன் இருந்து உங்களது சலுகைகளைப் பெறுவதற்கு முயன்று வருகிறோம். அதனால், நாங்களும் எங்களது குடும்பத்தினரும் முன்னேற்றம் எய்த முடியும்.

"தாங்களும் எங்களுக்கு கட்டனூரில் கொடுத்த வாக்குறுதியை மறக்காமல் நினைவில் இருத்தி வைத்து கும்பெனி யாருக்குக் கட்டுப்பட்டு நடந்து வருகிறோம். நாங்கள் இவ்விதம் உள்ளச்சத்துடனும் நேர்மையுடனும் நடந்து வரும்பொழுது எங்களைப்பற்றி இத்தகைய புகார்கள் எங்களது எதிரிகளால், எங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படுவது எங்களது பொல்லாத காலந்தான். முறையான விசாரணையின் மூலம் எங்களது நேர்மையைப் புரிந்து, எங்களைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறோம்.

"இரண்டு கடிதங்கள் மதுரை வழியாக கிடைத்தன. அவைகளுக்கு உடனே பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. திருச்சுழி வழியாக வரப்பெற்ற கடிதத்திற்கும் பதில் அனுப்பப்பட்டு விட்டது.

எங்களது பேஷ்குஷ் தொகையை இராமநாதபுரம் பேஷ்காரிடம் செலுத்திவிட முதலில் கட்டளை இடப்பட்டது. அந்த தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு எழுதினேன். தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு அவருக்கு கட்டளையிடப்படவில்லை என அவர் பதில் கொடுத்தார்.

"இதனை உங்களுக்கும் தெரிவித்து இருக்கிறேன். இங்குள்ள குழப்பமான சூழ்நிலை காரணமாக பொதி வண்டிக்காரர்கள் இங்கு வருவது இல்லை. தானியங்களுக்கும் தவசங்களுக்கும் கிராக்கி இல்லை. பக்கோடா பணம் கிடைப்பது மிகவும் அபூர்வமாக இருக்கிறது. இப்பொழுது கட்டளையிட்டுள்ளபடி இராமநாதபுரத்தில் கிஸ்தியைச் செலுத்தி விடுகிறோம். நாங்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து வருகிறோம். கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம். கும்பெனியார் குற்றம் காணும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம். ....”

மருது சேர்வைக்காரரது இந்தக் கடித வாசகம் கும்பெனி யாருக்கு. அவர்கள் முன்னர் கட்டுப்பட்டு இருந்த விசுவாசிகள் போன்று அமைந்து இருந்ததே யொழிய அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கும்பெனியாருக்கு எதிராக இருந்தன என்பதை கும்பெனியாரது ஒற்றர்களது அறிக்கைகள் தெரிவிக்கின்றன. திருவாடானை வட்டம் ஒரூரில் இருந்து கும்பெனியாருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையொன்றில் வெள்ளைமருது சேர்வைக்காரரது மைத்துனர் பொன்னளிக் கோட்டை உடையார் சேர்வைக்காரர், சுந்தரபாண்டிய பட்டினத்தில் மூன்று நாட்களாக தங்கி இருப்பதாகவும், கும்பெனியாருக்கு ஆதரவாக உள்ள பெருவாக்கோட்டை சேர்வைக்காரரை ஓலம் கலுங்கு என்ற இடத்தில் சந்தித்துப்பேசுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகத் தெரிவித்தது.[28] சிவகங்கை வட்டார மங்கலத்தில் இருந்து வரப்பெற்ற கடிதத்தில்[29] ”சின்னமருது சேர்வைக்காரார், மேலூர் நாட்டு கள்ளர் தலைவர்கள் பதினோரு பேர்களை வரவழைத்து சிறப்புக்கள் செய்தார். பல்லக்கும், குதிரையும், பட்டாடைகளும், மானியங்களும், அவர்களுக்கு வழங்கி, அவருக்கு உதவி பெறுவதற்கான உறுதிமொழி களைப் பெற்ற பின்னர், அவர்களை வழியனுப்பி வைத்துள்ளார். மேலும் அவர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வெடி மருந்துப் பொதிகளையும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது உறுதி. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இங்கு, காளையார்கோவில் காடுகளிலும் எல்லாவிதமான சாமான்களையும் சேகரித்து இருப்பு வைத்து வருவதுடன் பகிரங்கமான போருக்குரிய எல்லா ஆயத்தங் களையும் அவர் செய்து வருகிறார். ..." என்று தெளிவாக சிவகங்கை பிரதானிமீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவைபோன்ற கடிதங்களில் இருந்து சிவகங்கை சேர்வைக்காரர்கள், தங்களது சீமையில் உள்ள கும்பெனியாருக்கு ஆதரவான 'நாட்டுத் தலைவர்களை'ச் சந்தித்து அவர்களுக்கு மன மாற்றம் ஏற்படுத்துவதிலும், சிவகங்கைச் சீமையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்நிய எதிர்ப்புப்போரை, காளையார் கோவில் கோட்டையில் நிகழ்த்தி, அந்த மண்ணின் மகத்தான பெருமையையும், மறவர்களது மானத்தையும் வீரத்தையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர், என்ற உண்மையை கும்பெனியார் கண்டு கொண்டதில் புதுமை எதுவும் இல்லை. சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகளைக் கொண்ட பரந்த மறவர் சீமையின் புறக்காவல் நிலையமாக பாஞ்சாலங் குறிச்சியும் தலைவாயில் போன்று கமுதிக் கோட்டையும், தலைமை இடமாக காளையார்கோவில் கோட்டையும் அப்பொழுது திகழ்ந்து வந்தன. இந்த ராணுவ மையங்களின் நிலைமையைப் பொறுத்துத்தான் மறவர் சீமையின் எதிர்காலம் அமைந்துஇருப் பது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

மயிலப்பன் மீண்டும் இராமநாதபுரம் சீமைக்குத் திரும்பினார். அவரது பணி முழுவதும் அங்குதானே உள்ளது. வழியில் கமுதிப்பேட்டையில் உள்ள சில கடைகளை அவரது அணியினர் குறையிட்டனர். அபிராமத்தில் கும்பெனியாருக்கு ஆதரவாக இருந்த காதர் மீரான் என்ற முஸ்லீம் பிரமுகரைத் தேடிப்பிடித்தனர். கொன்று போடுவதற்கு. ஆனால் மயிலப்பன் தலையிட்டு அவருக்கு மனந்திருந்துவதற்கு வாய்ப்பாக மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். விபரம் அறிந்த சின்னமருது சேர்வைக்காரர். இத்தகைய இரக்கமான செயலுக்கு மயிலப்பனை கடிந்து எச்சரித்தார்.[30] போர்க்களத்தில் ஒப்பாரி வைப்பதுண்டா? இலட்சியத்திற்கு எதிராக நடப்பவர்களின் தனிப்பட்ட தன்மைகளைப் பரிசீலித்து பச்சாத்தாபப்படுவதற்கு அது சந்தர்ப்பம் இல்லை என்பது சிவகங்கை சேர்வைக்காரரது கருத்து.

அடுத்து அந்த அணியினர் அபிராமத்துக்கு வடகிழக்கேஉள்ள கொடுமலூருக்குச் சென்றனர். அங்குள்ள கும்பெனியாரது சேகரம் பட்டறையில் இருந்த நெல் இருப்புக்களைக் கொள்ளையிட்டனர். இவ்விதம் கும்பெனியாரது சேகரம்பட்டறைகளில் இருந்து மருதுவின் வீரர்களால் சூறையிடப்பட்ட நெல்லின் அளவு 7339 கலம் 4 மரக்கால்-4, 3/4 படி என்றும், மருதுசேர்வைக்காரர்களது உறவினரான பொன்னளிக்கோட்டை உடையார் சேர்வையும் அவரது குழுவினரும் கொள்ளை கொண்டது 90.85-கலம்-9 மரக்கால் 4, 3/4 படி எனவும் கும்பெனியாரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.[31] இவை பெரும்பாலும் இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த சிக்கல், முதுகுளத்துார், கமுதி, அபிராமம், வெந்தோணி, ராஜசிங்க மங்கலம், அருநூத்திமங்கலம், அனுமந்தக்குடி, குத்தகை நாடு, ஒருர், கோட்டைப்பட்டினம், புல்லுமாரி ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்டவை எனத் தெரிகிறது.

இன்னொரு ஆவணத்தின்படி கிளர்ச்சிக்காரர்கள் இராம நாதபுரம் சீமையில் 24, 474. ஸ்டார்பக்கோடா பெறுமானமுள்ள தானியங்களையும் ரொக்கத்தையும் கைப்பற்றியதாகவும், சிவகங்கைச் சீமையின் கொள்ளை 12, 413. பக்கோடா பெறுமானம் உள்ளது என்றும் தெரியவருகிறது.[32] இந்த தகவல்களைத்தெரிந்த தளபதி மில்லர் நாகலாபுரத்திலிருந்து திருநெல்வேலிச் சீமையின் கூலிப்படையுடன் இராமநாதபுரம் சீமைக்கு விரைந்தான். அதற்குள்ளாக, கிளர்ச்சிக்காரர்கள் அபிராமம் பகுதியிலிருந்து பரமக்குடி பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் விரைவிலேயே சிவகங்கையிலிருந்து தளபதி மயிலப்பன் அணிக்கு உதவிப் படைகளும் ஆயுதங்களும் தொடர்ந்து வந்து சேர்ந்தன.[33] இராமநாதபுரம் சீமை முழுவதும் கிளர்ச்சியை முடக்கிவிட்டு கும்பெனியாரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும்; இதனால் எதிரியின் வலுவனைத்தையும் அங்கேயே வீணாக்கிவிட்டால் சிவகங்கைச் சீமைப் போரில் அவர்களை எளிதில் மடக்கிவிடலாம் என்பது மருதுசேர்வைக்காரர்கள் திட்டம். இராமநாதபுரம் சீமையின் வடகிழக்கே பாண்டுகுடியில், மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரது தலைமையில் அமைக்கப்பட்ட இராமநாதபுரம் சீமைக்கான தற்காலிக அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைந்து இருந்தது.[34] அவரது இளைய சகோதரர் கனக சபாபதித் தேவர் முதுகுளத்துார் பகுதியில் தீவிரமாக இயங்கி வந்தார். அத்துடன், இராமநாதபுரம் சீமையில் இருந்து நூறு பொதி வண்டியில் ஆயுதங்களும் இருபது பொதி வண்டிகளில் வெடிமருந்தும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பப்பட்டன. [35]ஏற்கனவே சிவகங்கைச் சீமை வீரர்களும் அங்கு போய்ச்சேர்ந்து இருந்தனர். மொத்தத்தில் இரண்டு மறவர் சீமைகளில் இருந்து முப்பது ஆயிரம் மறவர்கள் திரண்டு இருந்தனர்.

அன்றைய அரசியல் சூழ்நிலையில், இராமநாதபுரம் - சிவகங்கைச் சீமைகளின் பத்திரத்திற்கு புறக்காவல் நிலையமாக அந்தக்கோட்டை விளங்கியது. அதனால் அந்தக் கோட்டையின் பாதுகாப்பிற்கும், உறுதிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் செய்து வந்தனர். மறவர் சீமை வீரர்களின் பணியும் அந்தக்கோட்டைப் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏறத்தாழ இருநூறு கல் தொலைவு இடைவெளி சிவகங்கைக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் இருந்தாலும், அரசியலில் இரு பாளையங்களும் மிகவும் நெருக்கமாக இணைந்து நின்றன.

  1. Madurai District Records vol. 1139, p. 185.
  2. Ibid. 18-4-1802. p. 46
  3. Tinnevely District Records, vol. 3579 (1-3-1801)
  4. pp. 69-72. 4 Papers relating to Polgar war, Tinnevely District (1914).
  5. Ibid
  6. Madurai District Records, vol. 1182, (7-3-1801), pp. 5354,
  7. Ibid pp. 79-80
  8. Madurai District Records. vol. 1182, (8-3-1801), pp 84-86.
  9. Ibid pp. 86-92.
  10. Ibid vol. 1133. (7-3-1801) p. 178.
  11. Ibid, vol. 1178 (A) pp., 315-16.
  12. Tinnevely District Records, vol 3579, (14-3-1801), p. 74.
  13. 13 Rajaram Row T: Manual of Ramnad Samasthanam (1891) p. 180.
  14. 14 Military Consultations vol. 21 (1772 AD) p. 160.
  15. கமால் S.M. டாக்டர் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் 1987). 118-119
  16. Madurai District Records, vol. 1182, (8-3-1801) pp.84-86.
  17. Board of Revenue Proceedings, vol. 278. p. 3318
  18. 18 Tinnevely District Records, vol. 3579 (24-3-1801) p. 81
  19. Madurai District Records, vol. 1133 (12-3-1801) p. 188
  20. 20 Madurai District Records. vol 1138, (20-3-1801)
  21. 21 Tinnevely District Records vol 3579 (20-3-1801) p. 81
  22. 22 Madurai District Records vol 1 133, (20-3-1801) p. 195
  23. 23 Tinnevely District Records, vol 3579 (20-3-1801) p. 81
  24. 24 Military Consultations, vol. 297, (4-2-1801) p. 171-72
  25. 25. Madurai District Records, vol. 1133, (6-2-1801), p. 174.
  26. 26. Ibid, (25–3–1801) p. 176,
  27. 27 Madurai District Records, vol.1133.(30-3-1801) pp.200-203
  28. Madurai District Records, Vol. 1 133, (29-3-1801) p. 49.
  29. Madurai District Records Vol. p. 198.
  30. 30. Ibid vol. 1139 (1802–AD) pp. 46-48.
  31. 31 Madurai District Records, vol. 1132, (14-6-1802) p.25.
  32. 32 Ibid vol. 1142 pp. 41-42.
  33. 33 Revenue Consultations, vol. 107 (1806-1810) p.228.
  34. 34 Tinnevely District Records, vol. 3579, (18-3-1801) p.77.
  35. 35 Ibid. p. 69-72.