மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/அகதிகள் கதை

3

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

அகதிகள் கதை

மிஸ்டர் விக்கிரமாதித்தர் மறுபடி முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன மூன்றாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும்கேளும்! 'இரண்டாவது உலக மகா யுத்தம், இரண்டாவது உலக மகா யுத்தம்’ என்று ஒரு பயங்கர யுத்தம் இந்தப் பாரிலே நடந்ததுண்டு. அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்த காலையில் பர்மாவிலிருந்த இந்தியர் பலர் பயந்து போய், இந்த இந்தியா தேசத்தை நாடி அகதிகளாக வந்ததுண்டு, அப்படி வந்தவர்களிலே மூன்று தம்பதியர் ஒரு நாள் இரவு ஒரு செல்வந்தர் வீட்டுக்குச் சென்று, ‘ஐயா, இன்றிரவு இங்கே தங்க எங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுப்பீர்களா?' என்று கேட்க, 'கொஞ்சம் என்ன, நிறைய உண்டு!' என்றார் அவர்.

காடு மலையெல்லாம் கால் கடுக்க நடந்து வந்த தம்பதியர் அறுவரும், 'அப்பாடா, அம்மாடி!’ என்று அமர்ந்து, தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க, ‘இந்த உலகத்திலே எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார் செல்வந்தர்.

'அன்ன சுகமே பெரிய சுகம்!' என்றார் ஒருவர்.

‘பெண் சுகமே பெரிய சுகம்!' என்றார் இன்னொருவர்.

‘நித்திரை சுகமே பெரிய சுகம்!' என்றார் மற்றொருவர்.

'அப்படியா?' என்ற செல்வந்தர், ‘அன்ன சுகமே பெரிய சுகம்!’ என்ற தம்பதியருக்கு அறுசுவையோடு அன்னமிடச் சொன்னார்; ‘பெண் சுகமே பெரிய சுகம்!' என்ற தம்பதியருக்கு ‘மலர் மஞ்சம்' தயாரித்துக் கொடுக்கச் சொன்னார்; ‘நித்திரை சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு ‘இலவம் பஞ்சு மெத்தை' போடச் சொன்னார். இப்படியாகத்தானே அவரவர்கள் விரும்பியதை அவரவர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு, அவர் தூங்கப் போக, நடு இரவில் யாரோ ஒருவர் வந்து அவருடைய அறைக் கதவைத் தட்ட, 'யார் அது?’ என்று கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தார் அவர்.

‘நான்தான்!' என்றார் வந்தவர்.

‘நான்தான் என்றால்... ?'

‘பெண் சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்!' என்றார் வந்தவர்.

‘ஓ, என்ன விஷயம்?’ என்றார் வீட்டுக்குரியவர்.

‘பசிக்கிறது!' என்றார் வந்தவர்.

‘அப்படியா? உட்காரும்!' என்று அவரைச் செல்வந்தர் உட்கார வைக்க, இன்னொருவர் வந்து, 'நித்திரை சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்' என்றார் தயங்கித் தயங்கி.

‘ஓ, என்ன விஷயம்?’ என்றார் செல்வந்தர்.

‘பசிக்கிறது!’ என்றார் அவர்.

‘அப்படியா? உட்காரும்’ என்று அவரையும் உட்கார வைத்துவிட்டு, ‘இன்னொருவர் எழுந்து வரவில்லையா?' என்று செல்வந்தர் கேட்க, ‘இல்லை, அவர்தான் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறாரே!' என்றனர் இருவரும் வயிற்றெரிச்சலுடன்.

‘ஏன், நீங்கள் தூங்கவில்லையா?' என்றார் வீட்டுக் குரியவர்.

‘தூக்கம் வந்தால்தானே தூங்க? பசிதான் வயிற்றைக் கிள்ளுகிறதே!' என்றனர் இருவரும்.

‘உங்கள் பெண் சுகம், நித்திரை சுகமெல்லாம் என்னவாயின?' என்று செல்வந்தர் கேட்க, ‘அன்ன சுகத்துக்கு அப்பால்தான் அந்த சுகமெல்லாம் என்று இப்போதல்லவா தெரிகிறது எங்களுக்கு?' என்று இருவரும் சொல்ல, 'அப்படியா?' என்று செல்வந்தர் சிரித்து, அவர்களுக்கும் அறுசுவையோடு அன்னமிட, அதை உண்டு அவர்களும் ஆனந்தமாக உறங்கலாயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இந்த மூன்று சுகங்களில் எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தரைக்கேட்க, ‘அன்ன சுகத்தைத்தான்!” என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மறுபடியும் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க.... காண்க.... காண்க......