மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/வீர தீர சூரன் கதை

4

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

வீர தீர சூரன் கதை

விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன நான்காவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'ராசாத்தி, ராசாத்தி' என்று ஒரு ரவிக்கை போடாத அழகி எங்கள் கிராமத்தில் உண்டு. அவளுக்குத் தந்தையில்லை; தாய் உண்டு. அந்தத் தாயையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவள் வயற் காட்டு வேலைக்குப் போவதுண்டு. அவளுடைய நிறம் கறுப்புத்தான் என்றாலும், அந்தக் கறுப்பு எண்ணெய் விட்டு வழித்தாற்போல் எப்போதும் பளபளவென்று மின்னிக் கொண்டே இருக்கும். பருவத்தின் பரிபூரண அழகு ஒவ்வொரு அங்கத்திலும் பூரித்து நின்ற அவளைப் பார்த்தால் பசி தீரும்; தொட்டால் மயக்கம் வரும்; பேசினால் பித்தே பிடித்துவிடும். அரிவாளை இடையில் செருகிக்கொண்டு அவள் வயற்காட்டு வேலைக்கு அசைந்து அசைந்து நடந்து செல்லும்போது பின்னாலிருந்து அவள் அழகைப் பார்க்கும் வாலிபர்களின் மனமெல்லாம் அவளுடைய இடையைப் போலவே அப்படியும் இப்படியுமாக ஆடி அசையும். அவளுடைய வட்ட விழி எப்பொழுதாவது ஒரு சமயம் எதேச்சையாக அந்த வாலிபர்களை ஒரு நோக்கு நோக்கி, ஒரு சுற்றுச் சுற்றி வந்து நின்றால் போதும்; அவர்களும் தங்களை மறந்து அவளை அப்படியே ஒரு சுற்றுச் சுற்றி வந்து நிற்பார்கள்.

அப்படிச் சுற்றி வந்து நின்றவர்களிலே மூவரை அவளுடன் எப்போதும் பார்க்கலாம். அவர்களில் ஒருவன் பெயர் வீரன்; இன்னொருவன் பெயர் தீரன்; மற்றொருவன் பெயர் சூரன். இந்த மூவரும் காலையில் அவளுக்காக அவள் குடிசையைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்; பகலில் வயற்காட்டைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்; மாலையில் அவள் குளிக்க வரும் ஆற்றங்கரையைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

அவளுடைய மேனியழகை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது மறைந்திருந்து பார்க்காவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் பிடிக்காது; அன்றைய ஏக்கமும் தீராது.

இப்படியாகத்தானே அவர்களுடைய ஏக்கம் அவர்கள் தூங்கும்போது தூங்கி, விழிக்கும்போது விழித்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவன் ஒரு நாள், ‘பெயரைத்தான் வீரன் என்றும், தீரன் என்றும், சூரன் என்றும் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, நம்மில் ஒருவனுக்காவது அந்தப் பெண்ணின் கையிலுள்ள அரிவாளைப் பிடுங்கி அப்பால் எறிந்துவிட்டு, அவளை அப்படியே கட்டிப் பிடித்து அவள் கன்னத்தில் ஓர் 'இச்' கொடுக்கத் தைரியமில்லையே?’ என்றான் பெருமூச்சுடன்.

‘அதை நினைத்தால்தான் எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் இன்னொருவன்.

'அதை நினைத்தால்தான் எனக்கும் வெட்கமாயிருக்கிறது!’ என்றான் மற்றொருவன்.

இவர்கள் மூவரும் இப்படி வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, ஒரு நாள் பண்ணையாராகப்பட்டவர் ராசாத்தியின் அழகிலே சொக்கி, 'ஏ, குட்டி! இன்னிக்குக் குளிச்சதும் என் வீட்டுக்குக் கொஞ்சம் வாயேன்!' என்று வாயெல்லாம் பல்லாய் வேண்ட, 'இன்னிக்குக் குளிச்சதும் உங்க வீட்டுக்கு வந்தா, நாளைக்கு நான் குளிக்காம இல்லே இருக்கணும்?' என்று அவள் முகம் சிவக்கத் தன் உடலை ஒரு முறுக்கு முறுக்கி நிற்க, 'அதுக்குத்தான் இப்போ லூப், காண்டோம்னு என்னவெல்லாமோ வந்திருக்கேடி!’ என்று அவர் அவளுக்குத் தைரியமூட்டுவாராயினர். ‘லூப்பா!’

'ஆமாம், ஆஸ்பத்திரிக்குப் போய் அதை வச்சிகிட்டு வந்துட்டா அந்த வம்பே வராதாம்; இஷடத்துக்கு விளையாடலாமாம்!'

‘உங்களுக்கு எல்லாம் விளையாட்டாயிருக்கு!’

‘வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தானேடி?'

‘இருக்கும்; பணக்காரனுக்கு அது விளையாட்டாய்த்தான் இருக்கும். ஏழைக்கு அது வேதனையாயில்லே இருக்கு?'

‘என்ன வேதனை? தவறினால் நாலு குழந்தைகள் பிறக்கும்; அவ்வளவுதானே?'

‘ஏன், அனாதைக் குழந்தைகளாக அலையவா?'

'ஆமாம்; அதற்குத்தான் நம்ம தேசம் ஏற்கெனவே பேர் போனதாச்சே! நாம் புதுசாவா அலையவிடப் போறோம்?'

‘அப்புறம் அந்த மாதிரிக் குழந்தைகளுக்கு நீங்க அனாதை ஆசிரமம் கட்டுவீங்க; தாராளமா தான தருமம் செய்வீங்க; அப்படித்தானே?'

'ஆமாம்; பாவமும் நானே, புண்ணியமும் நானே!'

‘நல்ல கூத்தய்யா, உங்க கூத்து!' என்று அவள் சிரிக்க, 'ஐயோ, சிரிக்காதேடி! உன் சிரிப்பு என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி, என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி!' என்று அவர் மேலும் சொக்கி, அவளைத் தாவி அணைக்கப் போக, ‘அட, உன்னைக் கட்டையிலே வைக்க!' என்று அவள் அவருடைய கன்னத்தில் ‘பளார்' என்று அறைந்துவிட்டு, ‘உன் வேலையும் வேணாம், நீயும் வேணாம், போ!’ என்று தன் குடிசையை நோக்கி நடையைக் கட்டுவாளாயினள்.

‘அப்படியா சேதி? உன்னை விட்டேனா, பார்!' என்று கருவிக் கொண்டே சென்ற பண்ணையார், அன்றிரவே தன்னுடைய அடியாட்களில் சிலரை ஒரு ஜீப்புடன் அவளுடைய குடிசைக்கு அனுப்பி, தூங்கும்போது அவள் வாயில் துணியை அடைத்து அவளைத் துக்கிக் கொண்டு வந்து விடுமாறு சொல்லி அனுப்ப, அவர்கள் அப்படியே சென்று அவளைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு திரும்ப, சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட அவளுடைய தாயார், 'ஐயோ, என் மகளை யாரோ வந்து தூக்கிக் கொண்டு போகிறார்களே!' என்று கதற, ‘யார் அம்மா, யார்?’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கேட்டுக் கொண்டே வந்து அவளைச் சூழ்ந்து கொள்வாராயினர்.

‘அதுதானே தெரியவில்லை எனக்கு!' என்று அவள் அழுது புலம்ப, 'ஓடுங்கள், ஓடுங்கள்! உடனே போலீசில் புகார் செய்யுங்கள்!' என்றார் அவளைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்.

‘இப்போதே புகார் செய்து வைத்தால்தான் நல்லது; இரண்டு குழந்தைகளுக்குத் தாயாவதற்குள்ளாகவாவது போலீசார் அவளைக் கண்டுபிடிப்பார்கள்!’ என்றார் இன்னொருவர்.

'அவள் தாயாவாளோ, தற்கொலை செய்துகொண்டு விடுவாளோ?’ என்றார் மற்றொருவர்.

'தற்கொலை செய்துகொண்டால் அவள் குற்றவாளி; தாயாக்கப்பட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு சென்றவன் குற்றவாளி. அதுதான் சட்டம்; அதுதான் ஒழுங்கு!' என்றார் மற்றும் ஒருவர்.

‘என்ன சட்டமோ, என்ன ஒழுங்கோ? சமயத்தில் எதுவும் கை கொடுப்பதில்லை!' என்றார் ஒர் அனுபவசாலி.

இந்தச் சமயத்தில் அங்கே விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்த வீரனும் தீரனும் சூரனும் 'கவலைப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம், அவளைக் காப்பாற்ற!’ என்று அவள் தாயாரைத் தேற்ற, ‘எப்படிக் காப்பாற்றுவீர்கள்?’ என்று அவளைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அவர்களை ஏக காலத்தில் கேட்பாராயினர்.

‘அதற்கு வேண்டியதெல்லாம் ஒரே ஒரு ஜீப்தான்!’ என்றான் வீரன்.

'ஆமாம், என்னிடம் ஒரு ஜீப் இருந்தால் அவளைக் கொண்டு போன அந்த ஜீப்பை நான் துரத்திப் பிடித்து விடுவேன்!' என்றான் தீரன்.

‘நான் வேண்டுமானால் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்!' என்றான் சூரன்.

‘செய்; உடனே செய்!' என்று தீரன் துடிக்க, சூரன் அப்படியே செய்ய, தீரன் அதை எடுத்துக்கொண்டு போய் ராசாத்தியைப் பண்ணையாரின் ஆட்களிடமிருந்து மீட்டுக் கொண்டு வருவானாயினன்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இப்போது அந்தப் பெண் யாருக்குச் சேரவேண்டும்? யோசனை சொன்ன வீரனுக்கா? ஜீப்புக்கு ஏற்பாடு செய்த சூரனுக்கா? அந்த ஜீப்பில் போய் அவளை மீட்டுக்கொண்டு வந்த தீரனுக்கா? என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'தீரனுக்குத்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'அவனைத்தான் அவளும் கலியாணம் செய்துகொண்டாள்!' என்று சொல்லி விட்டு, பாதாளம் விக்கிரமாதித்தரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டுவிட்டது காண்க.... காண்க.... காண்க......