மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாதாளசாமி சொன்ன புதுமுகம் தேடிய படாதிபதி கதை

420053மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — பாதாளசாமி சொன்ன புதுமுகம் தேடிய படாதிபதி கதைவிந்தன்

பாதாளசாமி சொன்ன
புது முகம் தேடிய படாதிபதி கதை

‘கோலிவுட், கோலிவுட் என்று சொல்லா நின்ற கோடம்பாக்கம் பதியிலே 'கோபதி, கோபதி' என்று ஒரு படாதிபதி உண்டு. அவர் தமக்காகப் புதுமுகத்தைத் தேடினாரோ, 'பைனான்ஷியர்'களுக்காகப் புது முகத்தைத் தேடினாரோ, அல்லது படத்துக்காகத்தான் புதுமுகத்தைத் தேடினாரோ அது எனக்குத் தெரியாது; எப்பொழுது பார்த்தாலும் புதுமுகத்தைத் தேடிக்கொண்டே இருந்தார். அங்ஙனம் தேடிக்கொண்டிருந்த காலையில், அவர் ஒரு நாள் 'கொஞ்சம் சுதந்திரமாகத் தாகசாந்தி செய்துவிட்டு வருவோமே!’ என்று தம் காரில் பெங்களுருக்குப் போக, அந்தச் சமயம் பார்த்து அங்கிருந்த ஒரு கடன்காரன் அவருடைய காரைப் பறிமுதல் செய்துகொள்ள, 'தேவுடா!' என்று அவர் திரும்பி வருங்காலை 'பிருந்தாவனம் எக்ஸ்பிர'ஸில் திரும்பி வருவாராயினர்.

இப்படியாகத்தானே அவர் திரும்பி வருங்காலையில், அதிஅதிஅதி ரூபரூபரூப செளந்தரியவதி ஒருத்தி தன் தாயுடன் அவர் இருந்த பெட்டிக்குள் ஏறி உட்கார, அவளைப் பார்த்த படாதிபதி, ‘இவள் சரோஜாதேவியாக இருப்பாளோ, கே. ஆர். விஜயாவாக இருப்பாளோ?’ என்று ஒருகணம் நினைத்து, மலைத்து-மறுகணம், 'இல்லையில்லை, இவள் ஜெயலலிதாவேதான்!' என்று பாவித்து, பூரித்து-பின்னர், ‘அவர்களில் யாரும் இவளுக்கு அருகில்கூட நிற்க முடியாது. இவள் யாரோ, என்ன பேரோ? ‘மேக்-அப்' இல்லாமலேயே இவள் அழகு 'கீ லைட்'டைப் போல ஜொலிக்கிறதே, ‘மேக்-அப்' போட்டால் 'ஆர்க் லைட்'டைப்போல ஜொலிக்கும் போலிருக்கிறதே? ஆகா! பெங்களுரிலே இவள் கிடைத்திருந்தால், ‘என் காரை 'ஜப்தி' செய்த கடன்காரனுக்கு முன்னால் இவளைக் கொண்டுபோய் நிறுத்தியிருந்தால், ‘இருக்கும் கடன் இருக்கட்டும்; மேற்கொண்டு எவ்வளவு வேண்டும்?’ என்று அவன் இவளைப் பார்த்துக்கொண்டே என்னைக் கேட்டிருப்பானே! போச்சே போச்சே போச்சே, ஓர் அரிய அரிய அரிய சந்தர்ப்பம் அனாவசியமாக அனாவசியமாக அனாவசியமாகக் கைநழுவிப் போச்சே போச்சே போச்சே!' என்று பலவாறாகச் சிந்தித்து, நிந்தித்து, ‘குழந்தையின் பெயர் என்ன அம்மா?’ என்று அவள் தாயாரை ‘ஐஸ் கிரீம்' போல் உருகிக் கேட்க, 'அவள் பெயர் தெரிந்து உமக்கு என்ன ஆகவேண்டும்? போம் ஐயா, போம்! என்று அவள் 'ஹாட் காப்பி' போல் முகத்தைத் திருப்ப, ‘சனியன், சனியன், சனியன்! சினிமா நட்சத்திரங்களுக்குப் பின்னால்தான் தாய் என்ற பெயரிலோ, தகப்பன் என்ற பெயரிலோ, கணவன் என்ற பெயரிலோ இப்படி ஏதாவதொரு சனியன் வந்து தொலைகிறதென்றால் இவளுக்குப் பின்னாலுமா இப்படி ஒரு சனியன் வந்து தொலைய வேண்டும்?’ என்று அவளுக்குத் தெரியாமல் தம் தலையில் தாமே இரண்டு தட்டுத் தட்டிக்கொள்ள, அதை எப்படியோ பார்த்துவிட்ட அந்த அதிஅதிஅதி ரூபரூபரூப செளந்தரியவதி 'குபுக்'கென்று சிரிக்க, அந்தச் சிரிப்பால் அவர்கள் இருந்த பெட்டி பூராவும் 'குபீ'ரென்று வெளிச்சம் பரவுவது போன்ற ஒரு பிரமைக்கு உள்ளாகி அவர் திக்குமுக்காடுவாராயினர். அந்த திக்கு முக்காடலில், 'ஐயோ, இது என்ன? பினாகாபல் ஒளியோ, சிக்னல் பல் ஒளியோ தெரியவில்லையே? இவளுக்கு மட்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை ஒரு துளி இருந்துவிட்டால் போதும், இவளைக் கொண்டு போய் சினிமாவிலும் நடிக்க வைக்கலாம். ‘பைனான்ஷியர்'கள் சிலரைப் பைத்தியம் பிடித்து அலையவும் செய்யலாம். அதற்கு இந்தச் சனியன் இவளை விடாதுபோல் இருக்கிறதே? என்ன செய்யலாம்? அவளிடமிருந்து இவளை எப்படிப் பிரிக்கலாம்?' என்று அவர் யோசித்துக் கொண்டிருக்க, அதற்குள் காட்பாடி ஜங்ஷனுக்கு வந்த வண்டி அங்கே 'உஸ்'ஸென்று பெருமூச்சு விட்டுக்கொண்டே நிற்க, தாயும் மகளும் 'சட்'டென்று இறங்கி அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்வாராயினர்.

‘பாவி, என் உடம்பிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதுபோல் போகிறாளே! அடிக்கடி நடக்கும் ரயில் விபத்து இப்போது நடந்திருக்கக் கூடாதா? அதில் சிக்கி அந்தச் சண்டாளி மட்டும் செத்திருக்கக் கூடாதா? அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறுவதுபோல் கூறி, அவளைக் கோலிவுட்டுக்கு அடித்துக் கொண்டு போயிருக்கலாம். இப்போது அதற்கும் வழி யில்லையே! தாமும் இறங்கி அவர்களைத் தொடர்ந்து தான் என்ன பயன்? ‘குழந்தையின் பெயர் என்ன அம்மா?' என்று அத்தனை அருமையாகக் கேட்டதற்கே 'அவள் பெயர் தெரிந்து உமக்கு என்ன ஆக வேண்டும்?’ என்று அந்தக் கிராதகி எரிந்து விழுந்தாளே, அப்படிப்பட்டவள் தம்மிடம் அதற்கு மேல் என்ன பேசிவிடப் போகிறாள்? 'ஏதும் பேச வேண்டாம்!' என்பதற்காகத்தான் அவள் அப்படி எரிந்து விழுந்தாளோ, என்னவோ?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே படாதிபதி சுற்றுமுற்றும் பார்க்க, அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் பளிச்சென்று ஏதோ மின்ன, 'ஆ! கிடைத்து விட்டது, கிடைத்தே விட்டது! அவள் கிடைக்காவிட்டாலும் அவள் பின்னலிலிருந்து நழுவி விழுந்த ஒரு திருகுப்பூ கிடைத்து விட்டது. கிடைத்தே விட்டது! இதைக் கொண்டாவது அவளை ஏதாவது செய்ய முடியுமா, எப்படியாவது கவர முடியுமா?’ என்று சட்டென்று அதை எடுத்துத் தம் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, 'தாமும் இறங்கி அவர்களைத் தொடரலாமா? தொடர்ந்து போய் இதைக் கொடுக்கும் சாக்கில் அவர்களுடன் இன்னொரு முறை பேசிப் பார்க்கலாமா?' என்று நினைத்து, கனைத்து, இருமி, செருமி, 'எதற்கும் போய்த்தான் பார்ப்போமே!’ என்று அவர் துணிந்து வண்டியை விட்டு இறங்க, அது காலை 'எங்கே, எங்கே?’ என்று அவரைத் தேடும் கண்களுடன் அங்கு ஓடோடியும் வந்த அவருடைய ‘ப்ரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்' பிரபாகர், ‘உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கவா என் உடம்பில் உயிர் இருந்தது, இருக்கிறது, இருக்கப் போகிறது? எத்தனையோ பாடாவதி படங்களுக்கு-ஐ ஆம் சாரி-'பாக்ஸ் ஆப் ஹிட்' படங்களுக்கு அதிபதியான நீங்களா கேவலம் இந்தப் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸில் வருவது? அதைப் பார்க்கவா என் கண்கள் இருந்தன, இருக்கின்றன, இருக்கப்போகின்றன? அவற்றை இன்றே, இப்பொழுதே, இக்கணமே குருடாக்கிக்கொண்டு விடுகிறேன், பாருங்கள்!’ என்று தன் சாவிக் கொத்திலிருந்த கத்தியை எடுத்துக் ‘கண்ணப்ப நாயனா'ரைப் போல அவன் தன் கண்களைக் குத்திக் கொள்ளப் போக, 'பக்தா, மெச்சினோம்!' என்பதைப்போல் படாதிபதி அதைத் தடுத்து, ‘என்ன விஷயம், எங்கே வந்தாய்?' என்று கேட்க, 'பெங்களூரில் உங்கள் கார் பறிமுதலான செய்தி என் காதில் விழுந்தது. கொதிப்பதற்கு உங்கள் உடம்பைப் போலவே என் உடம்பிலும் ரத்தம் இல்லாததால்தானோ என்னவோ, என் மூக்கில் வியர்த்தது. 'ஏன் மூக்கு வியர்க்கிறது? என்று ஒரு கணம் அந்த வியர்க்கும் மூக்கின் மேல் விரலை வைத்து யோசித்துப் பார்த்தேன். 'இருக்கவே இருக்கிறது பிரைவேட்டாக்சி; அதை எடுத்துக்கொண்டு போய் நாம் ஏன் நம் படாதிபதியின் மானத்தைக் காப்பாற்றக்கூடாது?’ என்று தோன்றிற்று. உடனே எடுத்தேன் ஓட்டம்; ஒரு பிரைவேட் டாக்சிக்காரனைப் பிடித்தேன். மாதம் ரூபா எழுநூறு வாடகை பேசி, ஏ ஒன் டாக்சி, ஒன்றை எடுத்துக் கொண்டு பெங்களுக்குப் பறந்தேன்; நீங்கள் பாக்கி வைத்திருக்கும் ஓட்டல்களையெல்லாம் விட்டுவிட்டுப் பாக்கி வைக்காத ஓட்டல்களை மட்டும் 'அலசு, அலசு’ என்று அலசிப் பார்த்தேன்; காணவில்லை. கடைசியில் அந்தப் 'பழைய முகம் பாமா' சொன்னாள், நீங்கள் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸில் சென்னைக்குப் போய்விட்டீர்கள் என்று. உடனே கண்ணில் ரத்தம் வடிய அதை விரட்டிக்கொண்டு வந்து உங்களை இந்தக் காட்பாடியில் பிடித்தேன். வாடகையைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். மாதா மாதம் அதைக் கொடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை; படம் என்று ஒன்று எடுத்து முடித்து, வெளியிட்டு, அது ஓடினால் கொடுக்கலாம்; ஓடா விட்டால், ‘அடுத்த படத்துக்கு ஆகட்டும்!' என்று சொல்லி விடலாம். அதற்காக அவன் காரை 'ஜப்தி' செய்வதாயிருந்தாலும் தன் காரைத்தான் ஜப்தி செய்து கொள்ள வேண்டுமே தவிர, நம்மிடம் ஜப்தி செய்வதற்கும் ஒரு காரும் இருக்கப் போவதில்லை. ஆகவே, நமக்கு ஒன்றும் நஷ்டமில்லை; அவனுக்குத்தான் நஷ்டம். ‘அவன் போனால் போகிறான்’ என்று நாம் இன்னொரு பிரைவேட் டாக்சிக்காரனைப் பார்த்துக் கொள்ளலாம். வாருங்கள்; வந்து காரில் ஏறிக்கொள்ளுங்கள். வரும்போது எவ்வளவு கம்பீரமாகக் காரில் வந்தீர்களோ, அவ்வளவு கம்பீரமாகப் போகும்போதும் காரிலேயே போய் இறங்குங்கள்!' என்று அழைக்க, ‘நாலு டஜன் சோடா வாங்கி விட்டு நாற்பது டஜன் சோடா, என்று கணக்கு எழுதினாலும் இப்படி ஒரு ப்ரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் இந்த ஜன்மத்தில் தமக்குக் கிடைப்பானா?' என்று மெய் சிலிர்த்து, மேனி சிலிர்த்து அவர் அவனுக்குப் பின்னால் போவாராயினர்.

ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரைவேட் டாக்சியில் படாதிபதியை ஏற்றி உட்கார வைத்ததும், 'ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்?’ என்று ப்ரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் பிரபாகர் ஓர் 'இது'க்கு எப்பொழுதும் கேட்பதுபோல் அவரைக் கேட்க, அதுதான் சமயமென்று அவர் தாம் கண்ட 'புது முக'த்தைப் பற்றி அவனிடம் மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிட, அவ்வளவையும் பொறுமையுடன் கேட்டுவிட்டு, 'இவ்வளவுதானே, அவள் பெயர் என்ன?’ என்று அவன் அவரைக் கேட்க, ‘அதுதானே தெரியவில்லை, தெரிந்தால் ராமநாமத்தை ஜபித்துக்கொண்டிருப்பேனே!' என்று அவர் உதட்டைப் பிதுக்க, 'அவள் எப்படி இருந்தாள், எப்படி இருமினாள், எப்படித் தும்மினாள்?' என்று அவன் அவரைக் 'குடை, குடை' என்று குடைய, தம்மால் முடிந்த வரை படாதிபதி அவளை வர்ணித்துத் தள்ளிவிட்டு, 'இதோ பார்த்தாயா, இந்தத் திருகுப்பூ ஒன்றுதான் அவளிடமிருந்து எனக்குக் கிடைத்தது. இதைக் கொண்டு போய்க் கொடுக்கும் சாக்கிலாவது அவளிடம் இன்னொரு முறை பேசிப் பார்க்கலாம் என்றுதான் நான் வண்டியை விட்டு இறங்கினேன். அதற்குள் நீ வந்துவிட்டாய்; அவர்களும் போய் விட்டார்கள். இனி என்ன செய்வது? இதைக் கொண்டு போய் பூஜை அறையிலாவது வைக்கலாமென்று பார்க்கிறேன்!' என்று நெஞ்சு நெக்குருகச் சொல்ல, 'கவலைப்படாதீர்கள்; இந்த திருகுப்பூவைக் கொண்டே அவளை நான் கண்டுபிடித்து உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கிறேன். நீங்கள் போய் வாருங்கள்!’ என்று அவன் அந்தத் திருகுப்பூவை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு, அவரைக் கோலிவுட்டுக்கு அனுப்பி வைப்பானாயினன்.

‘இனி பயமில்லை, ஜயமே!' என்று படாதிபதி கோபதி தேர்ந்து, தெம்பாகிக் கோலிவுட்டை நோக்கிச் செல்ல, அவர் கொடுத்த திருகுப்பூவுடன் காட்பாடியை 'நரி வலம்' வருவது போல் ஒரு வலம் வந்த பிரபாகர், அங்கிருந்த ஒரு பெரியவரை அணுகி, 'இங்கே நகைக் கடைகள் ஏதாவதுண்டா?' என்று விசாரிக்க, 'இங்கே ஒன்றுமில்லை; வேலூரில்தான் இருக்கிறது!' என்று அவர் சொல்ல, அவன் அங்கிருந்த ஜட்கா வண்டிகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வேலூருக்கு வருவானாயினன்.

வழியில், ‘சிறிது நேரத்துக்கு முன்னால் ஒரு தாயும் மகளும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கி வந்தார்களே, அவர்கள் எந்த வண்டியில் ஏறினார்கள்? எந்த ஊருக்குப் போனார்கள் என்று உனக்குத் தெரியுமா?’ என்று அவன் வண்டிக்காரனை விசாரிக்க, 'எத்தனையோ பேர் வருகிறார்கள். எத்தனையோ வண்டிகளில் ஏறுகிறார்கள், எத்தனையோ ஊர்களுக்குப் போகிறார்கள். அவர்களில் எந்தத் தாயைக் கண்டோம் நாங்கள், எந்த வண்டியைக் கண்டோம் நாங்கள், எந்த ஊரைக் கண்டோம் நாங்கள்?' என்று அவன் தன் கையை அகல விரிக்க, அவன் குதிரையை விரட்டுவதுபோல இவன் அவனை ‘சரி சரி, போ போ!’ என்று எரிச்சலுடன் விரட்டுவானாயினன்.

வேலூர் வந்தது; வண்டி நின்றது. இறங்கினான். பிரபாகர்; ஏறி இறங்கினான் ஒவ்வொரு நகைக் கடையாக. ‘இது உங்கள் கடை நகையா, இது உங்கள் கடை நகையா?' என்று கேட்டதுதான் மிச்சம்; கிடைத்த பதில், இல்லை, இல்லை, இல்லை!’

கடைசியாக ஒரு கடைக்காரர் சொன்னார், ‘இது கடை நகையில்லை, கை தேர்ந்த ஆச்சாரி யாரோ செய்திருக்கிறான்!' என்று. ‘அந்த ஆச்சாரியை உங்களுக்குத் தெரியுமா?' என்று அவன் அவரை ஆவலோடு கேட்டான். கிடைத்த பதில், ‘தெரியாது, தெரியாது, தெரியாது!’

‘சரி, தெரிந்தவன் எங்கே இருப்பான்?’ என்று அவன் காட்பாடியை ஒரு வலம் வந்ததுபோல வேலூரையும் ஒரு வலம் வர, அங்ஙனம் வந்தகாலை ஓர் ஆச்சாரியின் கடை அவன் கண்ணில் பட, புதுமுகமே கிடைத்துவிட்ட பூரிப் போடு அவன் அவரை நெருங்கி, 'ஐயா, பெரியவரே! அனு பவத்தில் சிறந்தவரே! பார்க்காத ஆச்சாரிகளை யெல்லாம் பார்த்தவரே! இந்தத் திருகுப்பூ செய்த ஆச்சாரியை உமக்குத் தெரியுமா?’ என்று தன் கையிலிருந்த திருகுப் பூவைக் காட்டிக் கேட்க, அவர் அதை வாங்கி ஒரு முறைக்கு இரு முறையாகத் திருப்பிப் திருப்பிப் பார்த்துவிட்டு, 'இது வள்ளிமலை ஆச்சாரி சென்னிமலை செய்த வேலை!' என்று சொல்ல, 'அப்படியா சங்கதி? இந்தாரும், ஐந்து ரூபா!' என்று அவரிடம் ஓர் ஐந்து ரூபா நோட்டை எடுத்து நீட்டிவிட்டு, அவன் உடனே வள்ளிமலைக்குச் செல்வானாயினன்.

அங்கே சென்னிமலை ஆச்சாரியைக் கண்டு, 'இந்தத் திருகுப்பூ நீங்கள் செய்ததுதானே?' என்று பிரபாகர் கேட்க, 'ஆமாம், நான்தான் செய்தேன்!' என்று அவர் சொல்ல, ‘யாருக்குச் செய்து கொடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்று அவன் பின்னும் கேட்க, 'கொஞ்சம் என்ன, நிறையவே சொல்கிறேனே! இது தன் தங்கைக்காக அண்ணன் செய்து கொடுத்த திருகுப்பூ!' என்று அவர் பின்னும் சொல்ல, ‘யார் அந்தத் தங்கை, யார் அந்த அண்ணன்?’ என்பதாகத்தானே அவன் கேட்க, 'தங்கை அபயம்; அண்ணன் ஆரூரான். அவன் தன் தங்கையையும் தாயையும் இங்கே தவிக்க விட்டுவிட்டு, 'இதோ இரண்டே வருடத்தில் வந்துவிடுகிறேன்!' என்று அந்தமானுக்குப் போனான்; இருபது வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. அவனைக் காணாத துக்கத்துடனேயே அவன் தாய் செத்தாள்; தங்கைக்குக் கலியாணமாகி அவளும் இப்போது ஒரு பெண்ணைப் பெற்று வைத்துக்கொண்டு, அதோ தெரிகிறதே, அந்தக் கோடி வீட்டில்தான் அவனுக்காகக் காத்திருக்கிறாள்!’ என்பதாகத்தானே அவர் சொல்லி, அவர்களுடைய வீட்டையும் அவனுக்குக் காட்ட, 'அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?’ என்று அவன் கேட்க, ‘தெரியுமே, தீபநாயகி!' என்று அவர் சொல்ல, ‘இந்தாருங்கள், ரூபா பத்து!’ என்று அவரிடம் பத்து ரூபா நோட்டொன்றை எடுத்துப் படுகுஷியுடன் நீட்டிவிட்டு, அவன் கடைத் தெருவை நோக்கி அவசர அவசரமாகச் செல்வானாயினன்.

அங்கே அந்தமானிலிருந்து அப்போதுதான் திரும்பிய அண்ணன்போல் அவன் தன் உடன் பிறவாத் தங்கைக்கும், அவள் தனக்காகப் பெற்று வைத்திருக்கும் மகளுக்கும் பழம், பலகாரம், துணி, மணி எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, 'அபயம்! அம்மா, அபயம்!’ என்று ஆச்சாரி காட்டிய கோடி வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று கேட்டுக் கொண்டே வந்து தீபநாயகி கதவைத் திறக்க, 'வாடியம்மா, தீபநாயகி! என்னைத் தெரிகிறதா உனக்கு? நான்தாண்டியம்மா, உன் மாமன் அம்மா எங்கே போய்விட்டாள்? என்று உறவுமுறை கொண்டாடிக்கொண்டே அவன் உள்ளே நுழைவானாயினன்.

அதற்குள் அடுக்களையிலிருந்த அபயம் அவனுடைய குரலைக் கேட்டு வெளியே வர, 'என்ன தங்கச்சி, என்னை மறந்து விட்டாயா?' என்று அவன் அவளைக் கேட்க, ‘யார் நீங்கள்?’ என்று அவள் குழம்ப, 'நான்தான் ஆரூரான்; உன் அருமை அண்ணன். அந்தமானுக்குப் போயிருந்தேன், இல்லையா? இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் திரும்பி வருகிறேன்!’ என்று அவன் அளக்க, அவள் அதை அப்படியே நம்பித் தன் கையிலிருந்த ஏனம் தன்னுடைய கையை விட்டு நழுவுவதுகூடத் தெரியாமல், ‘அண்ணா! அம்மா உன்னைப் பார்க்காமலே கண்னை மூடிவிட்டார்களே, அண்ணா!’ என்று ஓடோடியும் சென்று அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடிப்பாளாயினள்.

அப்புறம் என்ன, அந்தத் தீபநாயகியைக் கொண்டு வந்து கோபியிடம் சேர்ப்பது அப்படியொன்றும் கஷ்டமாயில்லை அவனுக்கு; ‘எல்லோரையும்போல இவளை நான் கலியாணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கும்; அவ்வளவுதான்! அதைவிட இவள் இருக்கும் கொள்ளை அழகுக்கு இவளை சினிமாவில் சேர்த்துவிட்டால் இப்படி ஆகிவிடலாம், அப்படி ஆகி விடலாம்!’ என்று அவன் அபயத்துக்கு ஆசை காட்ட, 'இனி என் இஷ்டம் என்ன அண்ணா இருக்கிறது? உன் இஷ்டம், அவள் இஷ்டம்!’ என்று அவள் ஒதுங்க, ‘இனி நீ தீபநாயகி இல்லை 'தீபஸ்ரீ!' என்று அந்தத் தீபஸ்ரீயை அழைத்துக் கொண்டு அவன் அக்கணமே கோலிவுட்டுக்குத் திரும்புவானாயினன்.

வழியில், 'ஒரு வேடிக்கை செய்கிறாயா?' என்று அவன் தீபஸ்ரீயைக் கேட்க, ‘என்ன வேடிக்கை செய்ய வேண்டும், மாமா?' என்று அவள் அவனைக் கடாவ, 'கோலிவுட்டில் 'கோபதி, கோபதி' என்று ஒரு படாதிபதி இருக்கிறார். என் ஆருயிர் நண்பரான அவருக்கு நான் ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன், உன்னை இன்று அழைத்து வருவதாக அதனால் அவர் உன்னை அங்கே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். அந்த ஆவலில் அவர் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்; அதற்காக நீ அவரிடம் ஒரு பொய் சொல்ல வேண்டும்!' என்று சொல்ல, ‘என்ன பொய், மாமா?' என்று அவள் அந்த ‘மாமா'வை விடாமல் சொல்லிக் கேட்க, ‘வரும்போது நாம் இருவரும் ஒரு டாக்சி பேசிக்கொண்டு வந்ததாகவும், அந்த டாக்சி விபத்துக்குள்ளாகி அதில் நான் இறந்துவிட்டதாகவும் நீ அவரிடம் சொல்ல வேண்டும்!' என்று அவன் சொல்ல, ‘அது நிஜமாகவே நடந்துவிடக் கூடாதே, மாமா!’ என்று அவள் நடுங்க, 'பைத்தியமே! இதற்கெல்லாம் நீ இப்படி பயந்துவிடக் கூடாது; இதை விடப் பயங்கரங்களெல்லாம சினிமா உலகில் நடக்கும். அதற்கெல்லாம் நீ இப்போதே தயாராகிவிட வேண்டும்!' என்று அவன் அவளைத் தட்டிக் கொடுக்க, ‘அப்படியே செய்கிறேன் மாமா!’ என்று அவள் செப்புவாளாயினள்.

கோலிவுட் வந்தது; ‘கோபதி பிக்சர்'ஸும் வந்தது. தீபஸ்ரீயுடன் அங்கே வந்த பிரபாகர் அவளை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டுத் தான் வராந்தாவில் மறைந்து நிற்க, கோபதியைக் கண்ட தீபஸ்ரீ, 'பிருந்தாவானம் எக்ஸ்பிரஸில் தன்னைப் பார்த்து, ‘குழந்தையின் பெயர் என்ன?’ என்று குழைந்தவரல்லவா இவர்!' என்று பிரமிக்க, 'நீ நினைப்பது சரிதான்! அவன் இவனேதான்!' என்று அவர் தம் சினிமா வாடை'யோடு அவளை விழுங்கிவிடுபவர்போல் பார்த்துக் கொண்டே சொல்ல, 'என்னுடன் வந்தவர் பாவம், வழியில் டாக்சி விபத்துக்குள்ளாகி வாயைப் பிளந்துவிட்டார்!’ என்று அவர் அவனைப் பற்றிக் கேட்காவிட்டாலும், அவளே அவனைப் பற்றி அவரிடம் மறக்காமல் சொல்ல, 'அவன் போனால் இன்னொருவன்; நீ வா, நாம் குளுகுளு அறைக்குப் போய் குளுகுளு என்று இருப்போம்!' என்று அவர் அதைப் பொருட்படுத்தாமல் அவளை ஆசையுடன் அழைக்க, அதைக் கேட்டு வராந்தாவில் இருந்த பிரபாகரின் இதயம் 'டக்'கென்று நிற்க, அவன் அப்படியே சுருண்டு கீழே விழுந்து ‘ஆத்ம சாந்தி' அடைவானாயினன்.'

பாதாளசாமி இந்தக் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘பிரபாகர் செத்ததற்கு யார் காரணம்? அவனா, கோபியா?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, அவர் வேண்டுமென்றே பேசா நிருபரை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘பிரபாகர்தான்!’ என்று இன்னொரு கண்ணால் பாதாளசாமியைப் பார்த்துக் கொண்டே சொல்ல, அதைக் கேட்ட பேசா நிருபர் தன்னை மீறிய அதிர்ச்சிக்குள்ளாகி, ‘இல்லையில்லை; அவன் செத்ததற்கு அந்த நன்றி கெட்ட கோபிதான் காரணம்!’ என்று ஆவேசத்துடன் கத்த, ‘பேசிவிட்டார்! பேசா நிருபர் பேசிவிட்டார்!’ என்று விக்கிரமாதித்தர் சிரித்துக்கொண்டே சொல்லி, அந்தப் பேசும் நிருபரை பேசும் தோழருடன் அனுப்பி வைப்பாராயினர்."

ந்தாவது மாடியின் ரிஸப்ஷனிஸ்ட்டான மனோன் மணி இந்தப் 'பேசா நிருபர் கதை'யைச் சொல்லி முடித்து விட்டு, “நாளைக்கு வாருங்கள்; ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...