மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/5. ஐந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோன்மணி

5

ஐந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோன்மணி சொன்ன

பேசா நிருபர் கதை

"கேளாய், போஜனே! எங்கள் விக்கிரமாதித்தர் ஊட்டியிலிருந்த காலை யாரோ ஒருவன் வந்து அவர் வீட்டுக் கதவைத் தட்ட, 'யார் அது?’ என்று கேட்டுக்கொண்டே வந்து அவர் கதவைத் திறக்க, 'இந்த அநியாயத்தைப் பார்த்தீர்களா? நேற்றுவரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர் இவர்; இன்று பேச முடியாதவராகப் போய்விட்டார். நாங்களும் யார் யாரிடமோ காட்டிப் பார்த்துவிட்டோம்; ஒருவராலும் இவரைப் பேச வைக்க முடியவில்லை. கடைசியில் ‘உங்களால்தான் பேச வைக்க முடியும்’ என்று உங்களை தெரிந்த ஒருவர் சொன்னார்; உடனே இங்கு அழைத்துக் கொண்டு வந்தோம்!' என்று வந்தவர் சொல்ல, ‘யார் இவர்? என்ன நடந்தது?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘அப்படியொன்றும் விசேஷமாக நடந்துவிடவில்லை. பிரபல பத்திரிகையொன்றின் சினிமா நிருபர் இவர். நேற்று வெளிப்புறக்காட்சிகள் சிலவற்றைப் படம் பிடிப்பதற்காக இங்கே ஒரு சினிமா கோஷ்டி வந்திருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக இரவல் சங்கீத சாகித்ய சரச சல்லாப உல்லாச உதயஸ்ரீயும் வந்திருந்தாளாம். அவளுடைய அருமை பெருமைகளைப் பற்றித் தன் பாட்டனார் சொல்ல இவர் கேட்டிருக்கிறார். அதிலிருந்து அவளைப் பார்க்க வேண்டும், அவளுடன் பேசவேண்டும் என்று இவர் துடியாய்த் துடித்திருக்கிறார். அதற்கு இங்கே ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததும் அவளைப் பேட்டி காணப் போயிருக்கிறார். ‘நீங்கள் சாப்பிடும் இட்டிலியின் சுற்றளவு என்ன, காப்பியை அவுன்ஸ் கணக்கில் அளந்து குடிக்கிறீர்களா, அளக்காமலே குடிக்கிறீர்களா?' என்றெல்லாம் கேட்டுவிட்டுக் கடைசியாக ‘இப்போது உங்களுக்கு என்ற வயதாகிறது?' என்று கேட்டிருக்கிறார். அவள் 'பதினாறு!’ என்று ஒரு வார்த்தை சொன்ன பாவம், ‘ஆ!’ என்று அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்திருக்கிறார்! அவள் பயந்துபோய், ‘உதவி, உதவி, ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்!’ என்று கீச்சுக் கீச்சென்று கூவ, நான் 'என்னவோ, ஏதோ' என்று ஓடிப் போய்ப் பார்த்தேன். 'மூர்ச்சை தானே?' என்று முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து விசிறிப் பார்த்தேன். மூர்ச்சை தெளிந்துவிட்டது; பேச்சுத்தான் திரும்பவில்லை!' என்று வந்தவர் கையைப் பிசைய, 'கவலைப்படாதீர்கள்; என்னுடன் இருக்கும் பாதாளசாமி ஒரு கதை சொன்னால் போதும்; பேசா நிருபர் பேசும் நிருபராகிவிடுவார்!’ என்பதாகத்தானே விக்கிரமாதித்தராகப்பட்டவர் வந்தவருக்கு அபயம் அளிக்க, 'எங்கே அந்தப் பாதாளசாமி? கதையைச் சொல்லச் சொல்லுங்கள், சீக்கிரம்!' என்பதாகத்தானே பேசா நிருபரும், அவருடைய பேசும் தோழரும் அவன் கதையைக் கேட்கத் தயாராவாராயினர்.