முதற் குலோத்துங்க சோழன்/சமயநிலை



எட்டாம் அதிகாரம்

குலோத்துங்கனது சமய நிலை


ம் குலோத்துங்கன் கொண்டொழுகியது பொதுவாக வைதிகசமயம் என்பது 'முந்நூல் பெருமார்பிற் சிறந்தொளிரப் பிறப்பிரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்[1]வேதங்கள் நான்கினையும் வேதியர்பாற் கேட்டருளி[2]னான் என்று ஆசிரியர் - சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியிற் கூறியிருத்தலால் நன்கு விளங்குகின்றது. ஆனால் இவன் வைதிக சமயத்தின் உட்பிரிவுகளாகிய சைவ வைணவ சமயங்களுள் சைவசமயத்தையே சிறப்பாகக் கொண்டொழுகியவன் ; சிவபெருமானிடத்து அவவுகடந்த பத்தி செலுத்தியவன். இவன் காலத்திற்கு முற்பட்ட சோழ மன்னர்கள் எல்லோரும் சைவராகவே இருந்திருப்பதோடு தில்லையில் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டும் வந்துள்ளனர். ஆதித்தன், முதற்பராந்தகன் முதலானோர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்து அதனைச் சிறப்பித்திருக்கின்றனர். நம் குலோத்துங்கனும் தன் முன்னோரைப் போலவே திருச்சிற்றம்பலத்தெம்பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு புரிந்துவந்தான். ஆயினும், தாம் மேற்கொண்ட சமயமொழிய மற்றைச் சமயங்களைக் கைக்கொண்டொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானும் துன்புறுத்தும் அரசர் சிலர்போல இம் மன்னர் பெருமான் புறச்சமயங்களில் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இதற்குச் சில சான்றுகள் எடுத்துக்காட்டிச் சிறிது விளக்குவாம்.

சோழ இராச்சியத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள்தோறும் இவனுடைய கல்வெட் டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சார்ந்த மன்னார்குடியிலுள்ளதும் இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று வழங்கப்பெறுவதுமாகிய திருமால்கோட்டம் இவன் பெயரால் எடுப்பிக்கப்பெற்ற தொன்றாம். ' குலோத்துங்க சோழ விண்ணகரம்' என்பது; அதற்குரிய பழைய பெயர். அன்றியும் நாகப்பட்டினத்தின்கண் கடார [3]த்தரசனாகிய சூடாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவனது மகனாகியமாற விசயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற இராசராசப் பெரும்பள்ளி என்னும் புத்தவிகாரத்திற்கு நம் குலோத்துங்கன் விளைநிலங்களை நிபந்தமாகவிட்டிருக்கிறான். கி. பி. 1090-ல் இக்கோயிலுக்கு இவ்வேந்தன் விட்ட நிபந்தங்களை யுணர்த்தும் செப்பேடுகள்'[4]ஹாலண்டு ' தேயத்திலுள்ள ' லெய்டன்' நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருத்தலை இன்றுங்காணலாம். இத்தகைய செய்திகளை யாராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தவன் என்பது இனிது பெறப்படுகின்றது. ஆயினும், இவன் சிவபிரானிடத்து ஆழ்ந்த பத்தியுடையவனாய்ப் பெரிதும் ஈடுபட்டிருந்தான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இவன் எய்தி யிருந்த திருநீற்றுச்சோழன் என்ற அருமைத் திருப்பெயரொன்றே இதனை நன்கு வலியுறுத்தும். ஆகவே இவனைச் சிறந்த சைவர் தலைமணி என்று கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடையதேயாகும்.



  1. 1. க. பரணி - தா. 229
  2. 2. ௸ 230
  3. 3. கடாரம் = மலேயாவின் மேல்கரையில் தென் பக்கத்தில் கெடா என்னும் பேருடன் உள்ளது.
  4. 4. The Smaller Leiden Grant.