முதுமொழிக்காஞ்சி, 1919/அறிவுப் பத்து

II. அறிவுப் பத்து.

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
  பேரிற் பிறந்தமை ஈரத்தி னறிப.

(ப-பொ.) கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவன் ஈரமடைமையானே அறிவர்.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம்—மனிதர் எல்லாருள்ளும்; பேரில் பிறந்தன—ஒருவன் பெருங்குடியிற் பிறந்ததை, ஈரத்தின்—உயிர்களிடத்தில் அவனுக்குள்ள அன்பினால், அறிப—அறிவர்.

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக், குலத்தின் கண் ஐயப் படும்” (திருக்குறள்). ஆகையால், ஒருவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதற்கு அவனிடத்துள்ள கருணையே அறிகுறி.

2. ஈர முடைமை ஈகையி னறிப.

(ப-பொ.) ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக் கொடுக்கும் கொடையினானே அறிவர்.

(ப-ரை) ஈரம் உடைமை—ஒருவன் மனத்தில் கருணையுடையவன் என்பதை, ஈகையின்—ஏழைகளுக்குக் கொடுப்பதனால், அறிப—அறிவர்.

ஒருவனிடத்துக் கருணை உண்டு என்பதற்கு அவனுடைய ஈகையே அறிகுறி.

3. சோரா நன்னட் புதவியி னறிப.

(ப-பொ) ஒருவன் தப்பாத கடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன் நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.

(ப-ரை.) சோரா கல் நட்பு—ஒருவன் தளராத நல்ல சிநேகம் உடையவன் என்பதை, உதவியின்—அவன் தனது சிநேகருக்குச் செய்யும் உதவியினால், அறிப—அறிவர்.

சோரா—இளையாத; உறுதியுள்ள.

ஒருவர் ஒருவரோடு உறுதியான நட்புடையவர் என்பதற்கு அவர் அவருக்கு ஆபத்திலே செய்யும் உதவியே அறிகுறி. “ஆபத்திலே அறியலாம் அருமை சினேகிதனை” என்றது ஓர் மூதுரை.

“உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
 இடுக்கண் களைவதாம் நட்பு.” - திருக்குறள்.


4. கற்ற துடைமை காட்சியி னறிப.

(ப-பொ.) ஒருவனது கல்வியை அவன்றன் அறிவினானே அறிவர்.

(ப-ரை.) கற்றது உடைமை—ஒருவன் கல்வியுடையனாயிருத்தலை, காட்சியின்—அவனுடைய அறிவினாலே, அறிப—அறிவர்.

காட்சி—அகக்கண்ணாற் காணுதல்; அறிவு.

“மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”' ஆகையால், ஒருவன் கற்ற கல்வியின் அளவிற்கு அவனுடைய அறிவின் அளவே அறிகுறி.

5. ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப.

(ப-பொ.) ஒருவன் ஆராய்ந்து துணிய வல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானே அறிவர்.

ஏற்றம்—உய்த்தல். எதிர்கோள்—(எதிர்த்தல்—முற்படுதல்) முற்கொண்டு பாதுகாக்கும் காப்பு.

(ப-ரை.) ஏற்றம் உடைமை—ஒரு காரியத்தை ஒருவன் ஆராய்ந்து முடிக்க வல்லவன் என்பதை, எதிர்கோளின்—இடையூறுகள் வருவதற்கு முன்னே அவன் செய்யும் பாதுகாவலால், அறிப—அறிவர்.

ஒருவன் காரிய முடிக்க வல்லவன் என்பதற்கு, அக்காரியத்தில் வருதலான இடையூறுகளை யறிந்து அவன் செய்யும் பாதுகாப்பே அறிகுறி என்பதாம்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
 அதிர வருவதோர் நோய்”.

“வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
 ஆராய்வான் செய்க வினை”-திருக்குறள்

“ஏற்றமுடைமை” என்று பாடங்கொண்டு, ஒருவன் குடிப் பிறப்பு முதலிய உயர்வுடையன் என்பதை அவன் தன்னிடம் வருவாரை எதிர் கொண்டு செய்யும் உபசாரத்தால் அறிக என்றும் பொருளுரைப்பர். அவ்வுபசாரங்கள் “இருக்கை யெழலும் எதிர்செலவும் எனை விடுப்ப ஒழிதலோ டின்ன—குடிப்பிறிந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார்” (நாலடியார்) என்பதனால் அறியப்படும்.

6. சிற்றிற் பிறந்தமை பெருமிதத்தி ன்றிப.

(ப-பொ.) சிறுமையுடைய குடியின் கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானே அறிவர்.

(ப-ரை.) சிற்றில் பிறந்தமை—ஒருவன் இழிகுடியிற் பிறந்தவன் என்பதனை, பெருமிதத்தின்—அவனுடைய கர்வத்தினால், அறிப—அறிவர்.

“பெருமை பெருமிதமின்மை) சிறுமை, பெருமிதம் ஊர்ந்து விடல்” ஆதலால், ஒருவன் இழிகுடியில் பிறந்தவன் என்பதற்கு அவன் கொண்டுள்ள கர்வமே அறிகுறியாகும்.

“பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
 அணியுமாம் தன்னை வியந்து.”-திருக்குறள்


7. குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப.

(ப-பொ.) ஒருவனை ஒருவன் படிறு செய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.

குத்திரம்—படிறு, வஞ்சகம்.

(ப-ரை.) குத்திரம் செய்தலின்—ஒருவன் ஒருவருக்குச் செய்யும் வஞ்சகச் செயலால், கள்வன் ஆதல்—அவன் திருடன் என்பதை, அறிப—அறிவர்.

ஒருவன் களவு செய்யும் கருத்தினன் என்பதற்கு அவனுடைய வஞ்சகச் செயலே அறிகுறி.

“அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
 களவறிந்தார் நெஞ்சிற் கரவு.”-திருக்குறள்.


8. சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப.

(ப-பொ) சொற் சோர்வுபடச் சொல்லுதலான், அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர்.

சோர்வு—வழுவுதல், சொற்சோர்வு—சொல்ல வேண்டுவதை மறப்பான் ஒழிதல்.

(ப-ரை.) சொற்சோர்வு உடைமையின்—ஒருவன் சொல்லும் சொற்களில் தவறுதல் உடையனாதலால்,எ சோர்வும்—அவனிடத்துள்ள எல்லாத் தவறுகளையும், அறிப- அறிவர்.

ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு, அவனுடைய சொற்சோர்வே அறிகுறி.

“சொற்சோர்வு படேல்.”—ஔவையார்.

“சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பினிதே.”—இனியா நாற்பது.

9. அறிவுசோர் வுடைமையிற் பிறிதுசோர்வு மறிப.

(ப-பொ.) ஒருவன் தன்னறிவின் கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன் என்பதறிவர்.

(ப-ரை.) அறிவு சோர்வு உடைமையின்—ஒருவன் அறிவு தளர்ச்சி யுடையனா யிருத்தலால், பிறிது சோர்வும்—அவனிடத்துள்ள ஏனைத் தளர்ச்சிகளையும், அறிப—அறிவர்.

ஒருவன் பலவகைத் தளர்ச்சிகளையும் உடையவன் என்பதற்கு அவனுடைய அறிவின் தளர்ச்சியே அறிகுறி.

10. சீருடை யாண்மை செய்கையி னறிப.

(ப-பொ.) ஒருவன் புகழுடைய ஆண் வினைத் தன்மையை, அவன் செய்கையான் அறிவர்.

(ப-ரை.) சீர் உடை—புகழ் பொருந்திய, ஆண்மை—(ஒருவனது) ஆண்மையை, செய்கையின்—அவனுடைய செய்கையால், அறிப—அறிவர்.

ஒருவன் ஆண்மையுடையவன் என்பதற்கு, அவனுடைய செயல்களே அறிகுறியாம்.

ஆண்மை—(ஆண்+மை)—ஆடவர் தன்மை; பௌருஷம்; வீரம். ஆள்+மை எனக் கொண்டு, ஆளுந்தன்மை ஆள் வினைத் தன்மை என்றலுமாம்.