முதுமொழிக்காஞ்சி, 1919/பழியாப் பத்து

III. பழியாப் பத்து.

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
  யாப்பி லோரை இயல்புகுணம் பழியார்.

(ப-பொ.) கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாதா ரியற்கையாகிய குணத்தை யாவரும் பழியார்.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம்—மக்கள் எல்லாருள்ளும், யாப்பு இலோரை—யாதொரு செய்கையிலும் உறுதியான நிலையில்லாதவருடைய, இயல்பு குணம்—இயற்கையாகிய குணத்தை, பழியார்—எவரும் பழித்துரையார்.

யாப்பு—{யா+பு)—கட்டு; உறுதி; நிலை. “அது முதற்காயின் சினைக்கையாகும்” என்றபடி, யாப்பிலோரது இயல்பு குணத்தைப் பழியார் என முடித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் இயல்பாகவே எக்காரியத்திலும் நிலையில்லாதவராயின், அவ்வியல்பைப் பழித்துரைத்தலால் பயனில்லை என்பதாம்.

2. மீப்பி லோரை மீக்குணம் பழியார்.

(ப-பொ.) மேன்மைக் குணம் இல்லாரை, மேன்மை செய்யாமையை யாவரும் பழியார்.

(ப-ரை.) மீப்பு இலோரை—மேன்மைக் குணம் இல்லாதவரது, மீக்குணம்—மேன்மையானவற்றைச் செய்யும் இயல்பில்லாமையை, பழியார்—எவரும் பழித்துரையார்.

கீழ்மக்களிடம் மேலோர்க்குரிய குணமும் செய்கையுமில்லாமையை எவரும் பழித்துரையார்.

மீக்குணம் என்பதை, மீச்செலவு என்பது போல, வரம்பு கடந்த செய்கையைச் செய்யும் இயல்பு எனக் கொள்வதும் பொருந்தும்.

3. பெருமை யுடையதன் அருமை பழியார்.

(ப- பொ.) பெருமையுடைய தொன்றனை முடித்துக் கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சி தவிரார்.

(ப-ரை.) பெருமை உடையதன் அருமை—பெருமையுடையதொரு பொருளை முடித்துக் கொள்ளும் அருமையைப் பற்றி, பழியார்—அவ்வருமையைப் பழித்து முயற்சியை விடார்.

உடையதன்—உடைய அதன்.

“அருமையுடைத்தென் றசாவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும்” (திருக்குறள்). ஆகையால், ஒரு பெரிய பொருள் கிட்டுவது அரிதென் றெண்ணி, அது காரணமாக அதனை முடித்தற்குரிய முயற்சியைச் செய்யாமலிரார்.

“பெருமை யுடையவர் ஆற்றுவர் ஆற்றின்
 அருமை யுடைய செயல்.”—திருக்குறள்.


4. அருமை யுடையதன் பெருமை பழியார்.

(ப-பொ.) அருமையுடைய தொன்றினை முடித்துக் கொள்ளும் பொழுது, அரிதென்று பழித்து அதின்கண் உள்ள முயற்சிப் பெருமையைத் தவிரார்.

(ப-ரை.) அருமை உடையதன் பெருமை—அருமையுடையதொரு பொருளை அரிதென்று முயற்சிப் பெருமையை, பழியார்—பழித்துத் தவிரார்.

கிடைத்தற் கருமையான பொருளினது அருமையைப் பழியாமல், அது கிடைத்தற்குரிய கௌரவமான முயற்சிகளைச் செய்வர்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
 செயற்கரிய செய்கலா தார்.”—திருக்குறள்.

5. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்.

(ப-பொ.) ஒரு வினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய், அக்குறைவினையை யாவரும் பழியார்

“செய்யாததற்கு முன்பே அக்குறை வினையை” என்றும் “செய்வதற்கு முன் செய்த குறைவினையை” என்றும் பிரதிபேதம் உண்டு.

(ப-ரை.) நிறையச் செய்யா—நிரம்பச் செய்து முடிக்காத, குறை வினை—குறை வினையை, பழியார் —எவரும் பழித்துரையார்.

முழுவதும் செய்து முடியாத குறை வேலையைக் கண்டு எவரும் பழித்தல் செய்யார். அவ்வேலை பின்னும் திருத்தமெய்தி நன்கு முடிதல் கூடுமாதலால், அறிவுடையோர் பழியார்.

6. முறையி லரசர்நாட் டிருந்து பழியார்.

(ப- பொ.) நடுவு செய்யாத அரசர் நாட்டின்கண் இருந்து, அவ்வரசர் நடுவு செய்யாமையை யாவரும் பழியார்.

(ப-ரை.) முறைஇல்—நீதி முறை இல்லாத, அரசர் நாடு—அரசருடைய நாட்டில், இருந்து—வசித்திருந்து, பழியார்—அவ்வரசர் நீதி முறை செலுத்தாமையை எவரும் பழித்துரையார்.

கொடுங்கோலரசருடைய நாட்டில் வசிப்பவர், அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைத்தால் அவ்வரசருடைய கொடுமைக்கு உள்ளாவராதலின் அது செய்யார்.

நடுவு நிலைமை—“பகைநொதுமல் நண்பு என்னும் மூன்று பகுதியினும், அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை” என்றும், நடுவு—“ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு” என்றும் உரைப்பர் பரிமேலழகர்.

7. செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்.

(ப-பொ) தமக்கு உதவி செய்வதற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப் பழியார்.

(ப-ரை.) செயத்தக்க—தமக்கு உதவி செய்தற்குரிய, நல் கேளிர்—நல்ல உறவினர், செய்யாமை—அங்ஙனம் உதவி செய்யாமையை, பழியார்—நல்லோர் பிறரிடம் பழித்துரையார்.

கேளிர் என்பது நட்பினரையும் குறிக்கும். கேளிர் என்பதில் இர்—பலர் பால் விகுதி. (பெண்டிர் புத்தேளிர் என்பவற்றிற் போல).

சுற்றத்தார் உதவி செய்திலரென்று பழியாமல், அவரைத் தழுவிக் கொண்டு போதலே சிறப்புடைத்து.

கேளிரை நட்பினர் என்று கொண்டால், நட்பினர் உதவி செய்திலரென்று பழியாமல், நட்பிற் பிழை பொறுத்தலே சிறப்புடைத்து என்பதாம்.

8. அறியாத் தேசத் தாசாரம் பழியார்.

(ப-பொ) தான் அறியாத தேசத்தின் கண் சென்று, அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்.

(ப-ரை.) அறியாத தேசத்து—தான் முன்னறியாத தேசத்தில் வழங்கும், ஆசாரம்—ஒழுக்கங்களை, பழியார்—பழித்துரையார்.

அந்தந்த தேசத்தின் வசதிக்கும், நிலமிதிக்கும் நாகரிகத்திற்கும் ஏற்றவாறு ஆசாரங்கள் வேறுபடுதலால், தான் முன்னறியாத தேசத்தின் கண் சென்றவன், அங்கு வழங்கும் ஆசாரங்கள் தன் தேசத்தில் வழங்கும் ஆசாரங்களோடு ஒத்திராமையைக் கண்டு, அவைகளைப் பழித்துரைத்த லாகாது.

9. வறியோன் வள்ளிய னன்மை பழியார்.

(ப-பொ.) வறுமை யுடையானை வண்மையுடையா னல்லனென்று பழியார்.

(ப-ரை.) வறியோன்—பொருளில்லாதவனது, வள்ளியன் அன்மை—ஈகையில்லாமையை, பழியார்—எவரும் பழித்துரையார்.

பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லாரும் பழிப்பர்; பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.

10. சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார்.

(ப-பொ.) சிறுமைக் குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை, ஒழுக்கத்தான் மிக்காரும் கண்டால் பழியார்.

(ப-ரை.) சிறியார்—கீழோருடைய, ஒழுக்கம்—துராசாரத்தை, சிறந்தோரும்—மேலோரும், பழியார்—பழித்துரையார்.

துராசாரம் கீழோருக் கியல்பாதலால், மேலோர் அதனைப் பழித்துரையார்.