முதுமொழிக்காஞ்சி, 1919/இல்லைப் பத்து

VI. இல்லைப்பத்து.

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
 மக்கட் பேற்றிற் பெறும்பே றில்லை.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்கட கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற் பெறும் பேறில்லை.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம்—மனிதர் எல்லாருக்கும், மக்கள் பேற்றின்—புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும், பெறும் பேறு—பெறத்தக்க பாக்கியம், இல்லை—வேறில்லை.

மக்கட்பேறு—புத்திர பாக்கியம். மக்கட்பேற்றின்—புத்திர பாக்கியம் போல என்றும் பொருள்படும். “பெரும் பேறு” என்று பாடங் கொண்டால், பெரிய பாக்கியம் என்பது பொருள்.

மனிதர் பெறத் தக்க பாக்கியங்களில் புத்திர பாக்கியத்தைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை.

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
 மக்கட்பே றல்ல பிற.” - திருக்குறள்.

மக்களாப் பிறக்கும் பிறவியிற் பெறும் பேறில்லை எனினும் அமையும்.

2. ஒப்புர வறிதலிற் றகுவர வில்லை.

(ப- பொ.) செய்யக் கடவன செய்கையோ டொக்கும் தகுதி இல்லை.

(ப-ரை) ஒப்புரவறிதலின்—செய்யக் கடவனவற்றைச் செய்வது போல், தகுவரவு—தக்க செய்கை, இல்லை—வேறில்லை.

ஒப்புரவு—உலக நடை, ஒப்புரவறிதல்—உலக நடையினை அறிந்து செய்தல். உலக நடை தர்ம சாஸ்திரங்களில் கூறப்படுவதின்றி, அவரவர் தாமே அறிந்து செய்யும் தன்மையது. ஆதலால் ஒப்புரவு என்பது அவரவர் தவிர்க்கலாகாமல், செய்யக் கடவனவான செய்கைகள் என்கிற பொருள் பெற்றிருக்கிறது:- கடப்பாடுகள் என்பதாம். தகுவரவு—தகுதி: தக்க செய்கை.

தத்தம் கடப்பாடுகளைச் செய்வது போல், சிறந்த செய்கை வேறில்லை.

“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
 ஒப்புரவின் நல்ல பிற.”—திருக்குறள்.

3. வாய்ப்புடை விழைச்சி னல்விழைச் சில்லை.

(ப-பொ.) மக்கட்பேறு வாய்த்த கலவி போலும் கலவியின் நல்ல தில்லை.

(ப-ரை.) வாய்ப்பு உடை(ய)—மக்கட்பேறு வாய்த்த, விழைச்சின்—இணை விழைச்சு (கலவி) போல், நல் விழைச்சு இல்லை—கலவியின் நல்லதில்லை..

“வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கில்லை” என்ற பாடம் கொண்டு, சாக்ஷி முதலியன வாய்த்துள்ள வழக்கைக் காட்டிலும் நல்ல வழக்கு வேறில்லை என்றும் உரைப்பார்.

வாய்ப்பு—பேறு. விழைச்சு—இணைவிழைச்சு—கலவி.

புத்திர பாக்கியம் பெறுதலான கலவியே கலவி.

4. வாயா விழைச்சிற் றீவிழைச் சில்லை.

(ப-பொ.) மக்கட்பேற்றின் பொருட்டன்றிக் கலக்கும் கலவி போலத் தீயதில்லை.

(ப-ரை.) வாயா விழைச்சின்—புத்திர பாக்கியத்தின் பொருட்டன்றிச் சிற்றின்பங் கருதிக் கலக்கும் கலவி போல், தீவிழைச்சு—தீமையான கலவி, இல்லை—வேறில்லை.

“வாயா வழக்கிற் றீவழக்கில்லை”—பாடபேதம். வாயா—வாயாத, பொருந்தாத, சாக்ஷி முதலியன நன்கு பொருந்தாத வியவகாரத்தைப் போல், கெட்ட வியவகாரம் வேறில்லை.

முன் வாக்கியத்தில் கூறினதை வற்புறுத்துமாறு இந்த வாக்கியத்தை எதிர்மறை முகத்தால் கூறினார்.

5. இயைவது காத்தலிற் கொடுமை யில்லை.

(ப-பொ.) தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று காக்கும் காப்பிற் கொடுமை யில்லை.

(ப-ரை.) இயைவது—தனக்குக் கூடுமான பொருளை, காத்தலின்—இரந்தவர்க்கு இல்லை யென்று ஒளித்தலைப் போல், கொடுமை—கொடுமையான செய்கை, இல்லை—வேறில்லை.

“இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
 பார்த்தாக்கப் பக்கு விடும்.”

“இரவுள்ள உள்ளம் உருகும், காவுள்ள
 உள்ளதூஉ மின்றிக் கெடும்.”—திருக்குறள்.

6. உணர்வில னாதலிற் சாக்கா டில்லை.

(ப-பொ.) ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்காடில்லை.

(ப-ரை.) உணர்விலன் ஆதலின்—அறிவிலான் ஆதல் போல, சாக்காடு—மரணம், இல்லை—ஒருவனுக்கு வேறில்லை.

அறிவில்லாதவன் செத்த பிணத்தை ஒப்பான்.

“உரையில னாதலின்”' என்ற பாடத்துக்குப், புகழில்லாதவனாயிருத்தலைக் காட்டிலும் என்பது பொருள்.

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார். இசையொழிய
 வாழ்வாரே வாழா தவர்.”-திருக்குறள்.

7. நசையிற் பெரியதோர் நல்குர வில்லை.

(ப-பொ.) ஆசையின் மிக்கதொரு வறுமை இல்லை.

(ப-ரை.) நசையின்—ஆசையினும், பெரியது—மிக்கதாகிய, ஓர்—ஒரு, நல்குரவு—தரித்திரம், இல்லை—வேறில்லை.

“அதிக ஆசை மிகு தரித்திரம்” என்றது ஓர் பழமொழி.

நல்குரவாவது, நுகரப்படும் பொருள் ஒன்றுமில்லாமை. பொருள்களிடத்து ஆசை கொள்ளும் போது, அப்பொருள்களில்லாமையே பெரிய குறைவாகத் தோன்றுதலால், ஆசை வறுமை போன்றதாகின்றது. அதனாலன்றோ, திருவள்ளுவரும் “நல்குர வென்னு நசை” என்றார்.

“வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
 யாண்டும் அஃதொப்ப தில்.”—திருக்குறள்.

8. இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை.

(ப - பொ.) புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க்கில்லை.

எச்சம்—(எஞ்சல்—மிஞ்சல்)—மிஞ்சியிருப்பது; மிச்சமாக இருப்பது. தந்தை முதலியோர் இறக்கும் போது, மிச்சமாக வைத்த பொருள். அதை உரையாசிரியர் ‘பிறர் பயப்பதோ ராக்கம்’ என்றார்; ஆஸ்தி; செல்வம்.

(ப-ரை.) இசையின்—கீர்த்தியைக் காட்டிலும், பெரியது—சிறந்ததாகிய, ஓர் எச்சம்—ஒப்பற்ற ஆஸ்தி, இல்லை—வேறில்லை.

“வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
 எச்சம் பெறாஅ விடின்.”—(திருக்குறள்).

கீர்த்தியைப் போல், சிறந்த செல்வம் இல்லை.

9. இரத்தலி னூஉங் கிளிவர வில்லை.

(ப-பொ.) இரந்து உயிர் வாழ்தலின் மேல் கீழ்மை இல்லை.

(ப-ரை.) இரத்தலின்—பிச்சையெடுத்து உயிர் வாழ்வதைக் காட்டிலும், ஊங்கு—மேலான, இளிவரவு—இழிவு, இல்லை—வேறில்லை.

“ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
 கிரவின் இளிவந்த தில்.”-திருக்குறள்.

“இரத்த லின்னூங் கிளிவர வில்லை”; “இரத்திலினூங்காம்” பாடபேதம்.

10. இரப்போர்க் கீதலின் எய்துஞ் சிறப்பில்லை.

(ப-பொ.) இரப்போர்க்குக் கொடுப்பதின் மிக்கதாய் வெய்தும் மேன்மை இல்லை.

“கொடுப்பதின் மிகத் தாம் எய்தும்”—பாடபேதம்.

(ப-ரை.) இரப்போர்க்கு—யாசிப்பவர்க்கு, ஈதலின்—கொடுப்பதைக் காட்டிலும், எய்தும்—ஒருவன் அடைதலான, சிறப்பு—மேன்மை, இல்லை—வேறில்லை.

ஈகை போல், புகழ் தருவது வேறில்லை என்பதாம்.

“உரைப்பார் உரைப்பவை யெல்லாம். இரப்பார்க்கொன்
 றீவார்மேல் நிற்கும் புகழ்.”—திருக்குறள்.