முதுமொழிக்காஞ்சி, 1919/பொய்ப் பத்து
VII. பொய்ப் பத்து.
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரறிவி னோனினிது வாழாமை பொய்.
(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து, எல்லா மக்களுள்ளும், ஒருவன் போறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம்—மனிதர் எல்லாருள்ளும், பேர் அறிவினோன்—மிக்க அறிவுள்ளவன், இனிது வாழாமை— இன்பமடைந்து வாழாதிருத்தல், பொய்—பொய்யாம்.
மிக்க அறிவுள்ளவன் இனிது வாழ்வான் என்பது உண்மை.
“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.”—திருக்குறள்
2. பெருஞ்சீ ரோன்றன் வெகுளியின்மை பொய்.
(ப-பொ.) பெருஞ் செல்வத்தைப் பெற்றானொருவன் வெகுளாமை பொய்.
(ப-ரை.) பெருஞ்சீரோன்—பெருஞ்செல்வம் பெற்றிருப்பவன், வெகுளி இன்மை—கோபியாதிருத்தல், பொய்—பொய்யாம்.
பல காரியங்களையும், பல ஏவலாளரையும் கவனிப்பதில் ஏதாவது தவறு கண்டவிடத்துப் பெருஞ்செல்வர் கோபிப்பது இயல்பு. உலகவியல்பு நோக்கிக் கூறியது.
3. கள்ளுண் போன்சோர் வின்மை பொய்.
(ப-பொ) கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.
(ப-ரை.) கள் உண்போன்—கள்ளைக் குடிப்பவன், சோர்வு இன்மை—ஒழுக்கம் தளராதிருப்பது, பொய்—பொய்யாம்.
கள்ளுண்பவனுடைய ஒழுக்கம் உறுதியாக இராமல், தளர்வடையும்.
சோர்வு—“மனமொழி மெய்கள் தன்வயத்தவல்ல வாதல்.”
“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.”—திருக்குறள்.
4. கால மறியாதோன் கையுறல் பொய்.
(ப- பொ.) காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.
கையுறல்—(கை—செய்கை, கருமம். உறல்—அடைதல், பெறுதல்)—செய்கையின் பலனைப் பெறுதல்.
(ப-ரை.) காலம் அறியாதோன்—ஒரு காரியத்தைச் செய்யலுற்று, அதற்குரிய காலத்தை அறியாதவன், கையுறல்—காரிய சித்தியடைதல், பொய்—பொய்யாம்.
உரிய காலத்தில் செய்யத் தொடங்கிய காரியம் கைகூடுவது நிச்சயம்.
“அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.”—திருக்குறள்.
5. மேல்வர வறியாதோன் தற்காத்தல் பொய்.
(ப-பொ.) எதிர் காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண் செய்து காத்தல் பொய்.
(ப-ரை.) மேல்—இனி, வரவு—வரத் தக்கதை, அறியாதோன்—அறியாதவன், தற்காத்தல்—தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளுதல், பொய்—பொய்யாம்.
நல்ல காரியத்துக்கு நாலிடையூறும் வரும்; அவைகளை முன்னாக அறிந்து, பரிகாரம் தேடாதவன் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்வது இல்லை.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.”—திருக்குறள்.
6. உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய்,
(ப-பொ.) மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.
“தக்க கருமம்”-பிரதிபேதம்
(ப-ரை.) உறுவினை—மிக்க கருமத்தை, காய்வோன்—செய்யாமல் வெறுப்பவன், உயர்வு வேண்டல்—மேன்மையடைய விரும்புதல், பொய்—பொய்யாம்.
ஆக்கம்—மேன்மேல் உயர்தல்.
உறுவினை என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, பயன் பெறுதலான காரியம், கைகூடத் தக்க காரியம் என உரைப்பதும் பொருந்தும்.
“உறுவினைக் கயர்வோன்.”—பாட பேதம் (அயர்வு—சோர்வு.)
7. சிறுமைநோ னாதோன் பெருமைவேண்டல் பொய்.
(ப-பொ.) பிறர்க்குத் தான் செய்யும் பணிவினைப் பொறாதோன், தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.
பிறர் தனக்குச் செய்யும் பணிவினைப் பொறாதோன் என்றும் பாடபேதம் உண்டு.
(ப-ரை.) சிறுமை—அடக்கத்தை, நோனாதோன்—அனுசரிக்கப் பொறாதவன், பெருமை—பெருமையை, வேண்டல்—வேண்டுதல், பொய்—பொய்யாம்.
நோன்றல்—பொறுத்தல் (இதற்கு எதிர்மறை நோனாமை); “உற்ற நோய் நோன்றல்” (திருக்குறள்) என வருகின்றது.
பெருமையை விரும்புகின்றவன், பிறரிடம் பணிவாக அடங்கி நடப்பான். “பெருமை பெருமித மின்மை” என்றது திருக்குறள்.
8. பெருமைநோ னாதோன் சிறுமைவேண்டல் பொய்.
(ப-பொ.) பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக் குணம் வேண்டுதல் பொய்.
(ப-ரை.) பெருமை—பிறர் தன்னை அரியனாகக் கொள்ளும் பெருமையை, நோனாதோன்— வேண்டாதவன், சிறுமை—இழி குணத்தை, வேண்டல்—விரும்புதல், பொய்—பொய்யாம்.
பிறர் தன்னை அரியனாக மதித்தலை விரும்பாதவன், இழிகுணத்தை விரும்பான். “பெருமை பெருமிதமின்மை”. ஆதலால், பெருமிதமில்லாதவன் இழிகுணத்தை விரும்புவதில்லை.
9. பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய்.
(ப-பொ.) பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறை செய்தல் பொய்.
நசை—இச்சை. வேட்கை—ஆசைப் பெருக்கம், முறை—நீதி.
(ப-ரை.) பொருள் நசை—பொருளில் விருப்பத்தால் வரும், வேட்கையோன்—பேராசையுடையவன், முறை செயல்—நீதியை மேற்கொண்டு நடத்தல், பொய்—பொய்யாம்.
மிக்க பொருளை விரும்பிப் பேராசையுற்றவன், நடுவு நிலைமையில் நின்று, நீதியை மேற்கொண்டு நடக்க மாட்டான்.
வேட்கை—பொருள்களின் மேல் தோன்றும் பற்றுள்ளம். இந்தச் சூத்திரம் அரசனைக் கருதியது
10. வாலிய னல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
(ப-பொ) மனத்தின் கண் தூயனல்லாதோன் தவஞ் செய்தல் பொய்.
(ப-ரை.) வாலியன் அல்லாதோன்—மனத்தில் பரிசுத்தம் இல்லாதவன், தவம் செய்தல்—தவத்தைச் செய்தல், பொய்—பொய்யாம்.
வாலியன்—(வால்—சுத்தி, இ—சாரியை) சுத்தியுள்ளவன், பரிசுத்தன்.
சுத்த மனமுள்ளவனே தவஞ் செய்தற்கு உரியவன்.
வாலியனல்லாதோன் என்பது “மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர்”—(திருக்குறள்) என்பதனால் விளங்கும்.