முதுமொழிக்காஞ்சி, 1919/துவ்வாப் பத்து

IV. துவ்வாப் பத்து.

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
  பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், பழியுடையோர் செல்வம் வறுமையின் நீங்கியொழியாது.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம்—எல்லா மக்களுள்ளும், பழியோர்—பழிக்கப்படுபவரது, செல்வம்—செல்வமானது, வறுமையின்—வறுமைத் தன்மையினின்றும், துவ்வாது—நீங்கி யொழியாது.

பழியோர் என்றது “உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும், கெடாஅத நல்லறமுஞ் செய்யார்,” “நடுவிகந்தா மாக்கமுடையார்” முதலாயினாரை. பாத்துண்ணாமையாலும் அதனால் இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் பெறாதொழிதலாலும் அவர் செல்வரா யிருந்தும் வறியவரையே ஒப்பர்.

நடுவிகந்தாம் ஆக்கத்தை ஒழிய விடாமல் ஈட்டினார் பழிப்புக்கிடமாதலால், அவர் செல்வத்தைப் பழியோர் செல்வம் என்றார்.

“பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
 கழிநல் குரவே தலை.”—திருக்குறள்.

“மனந்தூய்மை..... இனந்தூய்மை தூவா வரும்”—என்பதில், தூவா(க) என்பது பற்றுக் கோடாக என்ற பொருளில் வந்திருக்கிறது.

“கருமஞ்செயவொருவன் கைதூவே னென்னும், பெருமையிற் பீடுடையதில்” என்னுங் குறளில், கைதூவேன் - கையொழியேன் என்ற பொருளில் வந்திருக்கிறது. ஆகவே தூவாது என்பது துவ்வாது என விகாரப்பட்டு வந்ததாகக் கொள்ளலாம்.

2. கழிதறு கண்மை, பேடியிற் றுவ்வாது.

(ப-பொ) இடமும் காலமும் அறியாது மிக்க தறுகண்மை பேடித் தன்மையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) கழி தறுகண்மை—இடத்துக்கும், காலத்துக்கும் ஏற்ற அளவின் மிக்க வீரம், பேடியின்—பேடித் தன்மையின், துவ்வாது—நீங்கி யொழியாது. தறுகண்மை—அஞ்சாமை, மறம், வீரம்.

பகைவர் மேல் செல்லுதற்கேற்ற காலமும், பகைவரை வெல்லுதற்கேற்ற வசதியும் அறியாது மிக்க தறுகண்மை செய்பவன் தோல்வியடைவது நிச்சயமாதலால், அத்தறுகண்மை பேடித்தன்மை யோடொக்கும்.

பகைத் திறந் தெரியாது செய்யும் கழிதறுகண்மை எனக் கொள்வதும் பொருந்தும்.

பேடித்தன்மையை, “தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை, வாளாண்மை போலக் கெடும்” என்றும் “பகையகத்துப் பேடிகை யொள்வாள் அவையகத், தஞ்சு மவன்கற்ற நூல்.” (திருக்குறள்) என்றும் வருவனவற்றால் அறியலாம்.

3. நாணில் வாழ்க்கை பதித்தலிற் றுவ்வாது.

(ப-பொ) நாணழிந் துண்டு வாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) நாண் இல் வாழ்க்கை—வெட்கங் கெட்டு உண்டு வாழும் உயிர் வாழ்க்கை, பசித்தலின்—பசித்தலாகிய துன்பத்தின், துவ்வாது—நீங்கி யொழியாது.

நாணாவது நல்லோர் தமக்கொவ்வாத காரியத்தைக் கண்டவிடத்து அடையும் வெட்கம்; “கருமத்தால் நாணுதல் நாணு.” (திருக்குறள்)

வெட்கங்கெட்டு உயிர் வாழ்தலால் உண்டாகின்ற துன்பம், பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறாயதன்று: அதனோடொத்ததே. துன்ப அளவால், இரண்டும் ஒக்குமாயினும், பசிக்குப் பரிகாரமுண்டு. அழிந்த நாணுக்கு உயிர் விடுவதன்றி, வேறு பரிகாரமில்லை. ஆகவே, “உயிரினும் சிறந்தன்று நாணே” என்பது பெறப்படும். படுதலால், “நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால், நாண் துறவார் நாணாள் பவர்" என்பது கருத்தாம்.

4. பேணி லீகை மாற்றலிற் றுவ்வாது.

(ப-பொ.) விருப்பமில்லாத கொடை, கொடையை நீக்குதலின் ஒழியாது.

(ப-ரை.) பேண் இல்—விருப்பமில்லாத, ஈகை—ஈகையானது, மாற்றலின்—இல்லையென்று மறுத்துரைத்தலுக்கு, துவ்வாது—வேறாக ஒழியாது.

விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகையாம்; விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது; அதனோடொக்கும் என்பதாம்.

மாற்றல்—கொடாது மறுத்தல்.

A civil denial is better than a rude grant.

5. செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது.

(ப-பொ.) செய்யத் தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) செய்யாமை—தாம் செய்யத் தகாத காரியங்களை, மேற்கோள்—செய்வோமென்று மேற்கொள்வது, சிதடியின்—மூடத்தன்மையின், துவ்வாது—நீங்கி யொழியாது.

செய்யத் தகாத காரியங்களைச் செய்வதாக மேற்கொண்டு தொடங்குவது, மூடத் தன்மையின் வேறாகாது.

“செய்தக்க வல்ல செயக்கெடும்; செய்தக்க
 செய்யாமை யானுங் கெடும்.

“பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
 கையல்ல தன்கட் செயல்.”—திருக்குறள்.

சிதடி—(சிதடு—பேதைமை )—அறிவிலி. “சிக்கர் சிதடர்” எனச் சிறுபஞ்ச மூலத்தில் வருகின்றது.

6. பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது.

(ப-பொ.) பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) பொய் வேளாண்மை—விருப்பமில்லா விட்டாலும் விருப்பமுடையவர் போல் செய்யும் ஈகையானது, புலைமையின்—நீசத் தன்மையின், துவ்வாது —நீங்கி யொழியாது.

புலைமை—கீழோரது தன்மை—இழிவு.

மனப்பூர்வமாய்ச் செய்யாத உபகாரம் கீழோரது தன்மையின் வேறாகாது. பிரதிஷ்டைக்கு உபகாரம் செய்வோர், நீசர்க்குச் சமானமாவர்.

“புலையிற் றுவ்வாது”-பாடபேதம்.

7. கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது.

(ப-பொ.) ஒருவனை ஒருவன் நட்பாகக் கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) கொண்டு—ஒருவரை ஒருவர் நட்பாகக் கொண்டு, கண் மாறல்—பின்பு அவரிடத்துக் கண்ணோட்டம் ஒழிதல், கொடுமையின்—அவருக்குக் கொடுமை செய்தலின், துவ்வாது—நீங்கி யொழியாது.

கண்ணோட்டம்—தன்னோடு பழகினவரைக் கண்டால் அவர் கூறியவற்றை மறுக்க மாட்டாமை; இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாகலின், அப்பெயர் பெற்றது; தாட்சண்ணியம்.

ஒருவனோடு சிநேகம் பண்ணிப் பின்பு, அவனிடம் தாட்சண்ணியம் காட்டாதவர், அவனுக்குக் கொடுமை செய்தவரன்றி வேறாகார்.

8. அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது.

(ப- பொ.) அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) அறிவிலி—அறிவில்லாதவனை, துணைப்பாடு—ஒருவன் துணையாகக் கொண்டிருத்தல், தனிமையின்—தனித்திருத்தலின், துவ்வாது—நீங்கி யொழியாது.

அறிவில்லாதவனைத் துணையாகக் கொண்டிருப்பது தனித்திருப்பதற்குச் சமானமேயன்றி, வேறாகாது. ஆகவே அறிவில்லாதவனைத் துணைக் கோடல் வேண்டா. சிற்றினம் சேராமல், பெரியாரைத் துணைக் கொள்க. என்பதாம்.

“துணைநல மாக்கத் தரும்”—திருக்குறள்.

9. இழிவுடை மூப்புக் கதத்திற் றுவ்வாது.

(ப-பொ.) இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது.

“இளிவரவினையுடைய மூப்பு” “பிறரைவெறுத்து”—பாட பேதம்

(ப-ரை.) இழிவு உடை மூப்பு—இழிவோடு கூடிய மூப்பு, கதத்தின்—கோபத்தின், துவ்வாது—நீங்கி யொழியாது.

கோபம் பிறரால் வெறுக்கத்தக்கதே; இழிவுடை மூப்பும் பிறரால் வெறுக்கத்தக்கதே. ஆகவே, இரண்டையும் ஒழித்தல் வேண்டும். நல்லறம், நல்லொழுக்கம் உடையோர் மூப்பு வந்தவிடத்தும் கௌரவ குணங்கள் வாய்ந்திருப்பர். அங்ஙனமான மூப்பு, எல்லாராலும் போற்றப்படுவதாகும்.

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும். தீய
 பிறத்தல் அதனான் வரும்.”—திருக்குறள்.

10. தானோ ரின்புறல் தனிமையிற் றுவ்வாது.

(ப-பொ.) தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) ஓர்தான்—ஒருவன், தான் மாத்திரமே, இன்புறல்—இன்புற்றிருப்பது, தனிமையின் துவ்வாது—வறுமையின் நீங்கியொழியாது.

பொருளுடையவனாய் எவர்க்கும் உதவாமல், தான் மாத்திரமே இன்புற்றிருப்பவன், பொருளில்லாமையால் தனித்துண்ணும் தரித்திரனுக்குச் சமானமாவதன்றி, வேறாகான்.

ஒன்றுமில்லாதவன் இரந்து பெற்றதைத் தனியாக உண்பான், ஆதலால், அவன் வறுமையைத் தனிமையென்று உபசரித்தார்.

“இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
 தாமே தமிய ருணல்.—திருக்குறள்.”

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".