முதுமொழிக்காஞ்சி, 1919/நல்கூர்ந்த பத்து
IX. நல்கூர்ந்த பத்து.
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையி லாசனாடு நல்கூர்ந் தன்று.
(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும், முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.
(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம்—மனிதரெல்லார்க்கும், முறை இல்—நீதி முறை இல்லாத, அரசன் நாடு— அரசனது நாடானது, நல்கூர்ந்தன்று—வறுமையுடையதாம்.
“இயல்புளி கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.”
“முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.”
“நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறு நாடு கெடும்.”—திருக்குறள்.
2. மிகமூத் தோன்காம நல்கூர்ந் தன்று.
(ப-பொ.) மிக மூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சி வறுமையுறும்.
(ப-ரை.) மிக மூத்தோன்—வயது மிகவும் மூத்தவன், காமம்—நுகரும் காமவின்பம், நல்கூர்ந்தன்று—வறுமையுடையதாம்.
யௌவனன் நுகரும் காமவின்பம் போல், வயோதிகன் நுகரும் காமவின்பம் சிறவாது.
3. செற்றுட னுறைவோனைச் சேர்தனல் கூர்ந்தன்று.
(ப-பொ.) தன்னைச் செறுத்தொழுகுலானைச் சென்றடைதல் வறுமையுறும்.
(ப-ரை.) செற்று—உட்பகை கொண்டு, உடன் உறைவோனை—உடன் வசிப்பவனை, சேர்தல்—நண்பனாகக்கொண்டு ஒழுகுதல், நல்கூர்ந்தன்று—வறுமை யுடையதாம்.
செற்று (செறு—கோபி, லெறு )—கோபித்து—பகை கொண்டு.
உட்பகை யுடையாரை உண்மை நண்பராகக் கொண்டொழுகுதல் கேட்டை உண்டாக்கும்.
“உடன்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று.”—திருக்குறள்.
4. பிணிகிடந் தோன்பெற்ற வின்பநல் கூர்ந்தன்று.
(ப-பொ.) பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும் காமவின்பம் வறுமையுறும்.
“உடம்பை யுடையா னுகக்கும்”—பிரதிபேதம்.
(ப-ரை.) பிணி கிடந்தோன்—வியாதியடைந்து மெலிந்த சரீரத்தையுடையவன், பெற்ற இன்பம்—நுகரும் காமவின்பம், நல்கூர்ந்தன்று—வறுமையுடையதாம்.
நோயாளி நுகரும் காமவின்பம் கேட்டைத் தருவதாம்.
5. தற்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று.
(ப-பொ.) தன் மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவி வறுமையுறும்.
(ப-ரை.) தன் போற்றாவழி—தன் மேல் அன்புள்ளவனாய்த் தன்னை ஒருவன் பாதுகாவாத விடத்து, புலவி—பிணங்குதல், நல்கூர்ந்தன்று—வறுமையுடையதாம்.
அன்புடையார் மேல் பிணக்கங் கொண்டால், அவர் பரிகாரம் செய்வர்: அன்பிலார் மேல் கொண்டால், அவர் பரிகாரம் செய்யார். ஆதலால், அப்பிணக்கு ஒருவருக்குக் கேட்டை உண்டாக்கும்.
அன்புடையாரிடம் கொண்ட புலவியால், இன்பம் சிறக்கும்; அன்பிலாரிடம் அதனால் இன்பம் சிறவாது. “நீரும் நிழல தினிதே புலவியும், வீழுநர் கண்ணே இனிது.” (திருக்குறள்) என்று கொள்வதுமாம்.
6. முதிர்வுடை யோன்மேனி யணிநல்கூர்ந் தன்று.
(ப-பொ.) மூத்த உடம்பினை யுடையான் அணியுமணி வறுமையுறும்.
(ப-ரை.) முதிர்வு உடையோன்—கிழப்பருவமடைந்தவன், மேனி அணி—உடம்பில் அணியும் ஆபாணம், நல்கூர்ந்தன்று—அழகு செய்யாது.
யௌவனர் அணியும் ஆபரணம் செய்கையழகைத் தந்து சிறக்கும்; வயோதிகர் அணியும் ஆபரணம் சிறவாமல் விகாரத்தை உண்டாக்கும்.
7. சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று.
(ப-பொ.) தன் சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல் வறுமையுறும்.
(ப-ரை) சொல்—தன் சொல், செல்லாவழி—செல்லாத விடத்து, சொலவு—ஒன்றைச் சொல்லுதல், நல்கூர்ந்தன்று—பயனற்றதாம்.
சொற் செல்லா வழி—தன் சொல்லை ஏற்பாரில்லாத விடத்து, சொலவு—(என்பதில் அ சாரியை) தொழிற் பெயர்.
தன் வார்த்தையை மதியாதவரிடம், சொல்லிக் கொண்ட குறை பயன்படாது என்பதாம்.
8. அகம்வறி யோனண்ண னல்கூர்ந் தன்று.
(ப-பொ.) மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச் சென்று நண்ணுதல் வறுமையுறும்.
(ப-ரை.) அகம் வறியோன்—மனத்தில் நன்மை யாதொன்றும் இல்லாதவனை, கண்ணல்—-சென்றடைதல், நல்கூர்ந்தன்று—வறுமையுடையதாம்.
அகம் வறியோன்—மனத்தில் ஒன்றுமில்லாதவன்—அன்பு, அருள் முதலிய நன்மை யாதொன்றுமின்றிச் சூனியமான மனத்தையுடையவன்—அறிவில்லாதவன், நண்ணல்—கிட்டுதல்.
“அகமறியோன்” என்ற பாடத்துக்கு, தன் மனத்தின் இயல்பை அறியாதவன் என்பது பொருள்.
9. உட்கில் வழிச்சின நல்கூர்ந் தன்று.
(ப-பொ.) மதியாதார் முன் வெகுளும் வெகுட்சி வறுமையுறும்.
உட்கு —அச்சம்; பிறர் அஞ்சத்தக்க மதிப்பு.
(ப-ரை.) உட்கு இல்வழி—மதிப்பில்லாவிடத்து, சினம்—கொள்ளும் கோபம், நல்கூர்ந்தன்று—பயனற்றதாம்.
மதிப்பில்லாதவன் பிறர் மேல் கொண்ட கோபம் பயனற்றதாகும்.
10. நட்பில் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.
(ப- பொ.) தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசை, வறுமையுறும்.
(ப-ரை.) நட்பு இல்வழி—ஒருவரோடு நட்பு இல்லாத விடத்து, சேறல்—(ஓருதவியை வேண்டி) அவரை அடைதல், நல்கூர்ந்தன்று—பயனற்றதாம்.
சினேக மில்லாதவரிடம், தான் விரும்பிய ஒன்றைப் பெறுமாறு செல்வது பயனற்றதாம்.
“நட்பில் வழிச் சொலவு”—பாடபேதம்.