முதுமொழிக்காஞ்சி, 1919/எளிய பத்து

VIII. எளிய பத்து.

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
  புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா டெளிது.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழு நாடு பெறுதல் எளிது.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம்—மக்கள் எல்லாருள்ளும், புகழ்—கீர்த்தியை, வெய்யோர்க்கு—விரும்பினோர்க்கு, புத்தேள் நாடு—தேவலோக மடைதல், எளிது—எளிதாம்.

புகழை விரும்பி அறஞ் செய்தாரைத் தேவர்கள் தாமே வந்து உபசரித் தழைத்துப் போவர். ஆதலால், அறஞ் செய்தார் ‘சுவர்க்கம் புகுதல் எளிதே’ என்பதாம்.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
 வலவ னேவா வான வூர்தி
 எய்துப வென்பதம் செய்வினை முடித்து.”—புறம்

“நிலவரை நீள்புக ழாற்றின் புலவரைப்
 போற்றாது புத்தே ளுலகு”—திருக்குறள்.

2. உறழ்வெய் யோருக் குறுசெரு வெளிது.

(ப-பொ.) பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செரு எளிது

(ப-ரை) உறழ்—கலகத்தை, வெய்யோருக்கு—விரும்புவோருக்கு, உறு செரு—மிக்க போர், எளிது—எளிதாம்.

கலகப் பிரியருக்குப் பெரும் போர் எளிதில் நேரும் என்பதாம்.

உறழ்—முதனிலைத் தொழிற் பெயர் உறு—உரிச் சொல்.

3. ஈரமவெய் யோர்க்கு நசைகொடை யெளிது.

(ப-பொ.) மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப் பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது.

(ப-ரை.) ஈரம்—அன்புடைமையை, வெய்யோர்க்கு—விரும்பியிருப்பார்க்கு, நசை கொடை—பிறருக்கு விருப்பமாகிய பொருளைக் கொடுப்பது, எளிது—எளிதாம்.

பிறரிடம் அன்புள்ளவர் அவர் எதை விரும்பிக் கேட்டாலும் எளிதிற் கொடுப்பர்.

“ஈரமுடைமை ஈகையி ன்றிப” (II—பத்து ) என இந்நூலில் வருகின்றது.

“அன்பிலா ரெல்லாம் தமக்குரியர்: அன்புடையார்
என்பும் உரியர் பிறாக்கு.”—திருக்குறள்.

“நாமம் வெய்யோர்க்கு நசைகொடை எளிது”—“நாமம் வெய்யோர்க்கு நசைகுலை வெளிது”-பாடபேதங்கள்.

4. குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது.

(ப-பொ.) குறளைச் சொல்லை விரும்புவார்க்கு, ஒருவன் மறையச் செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரை யறிவித்தல் எளிது.

(ப-ரை.) குறளை—கோட்சொல்லை, வெய்யோர்க்கு—விரும்பினோருக்கு, மறை விரி—இரகசியத்தை வெளிப்படுத்தல், எளிது—எளிதாம்.

கோட்சொல்லும் இயல்புடையோர், பிறருடைய இரகசியங்களை எளிதில் வெளியிடுவர்.

குறளை—புறங் கூறுதல். மறை—மறைவானது; இரகசியம். விரி—(விரித்தல்—)முதனிலைத் தொழிற் பெயர்: பரப்புதல்; பலர் அறியச் செய்தல்.

5. துன்பம் வெய்யோர்க் கின்ப மெளிது.

(ப-பொ.) ஒன்றனை முயன்று வரும் துன்பத்தை வெறாதார்க்கு, இன்பமெய்தல் எளிது.

(ப-ரை.) துன்பம்—ஒரு காரியத்தை மேற்கொண்டு முயற்சி செய்வதால் உண்டாகும் துன்பத்தை, வெய்யோர்க்கு—விரும்பிப் பொறுத்தவருக்கு, இன்பம்—அக்காரியம் நன்கு முடிதலால் உண்டாகும் இன்பம், எளிது —எளிதாம்.

ஒரு காரியத்தைச் செய்வதில் உண்டாகும் துன்பத்தை வெறுக்காதவர், அந்தக் காரியம் கடை போகக் கண்டு இன்பமடைவர்.

“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
 துன்ப முறுத லிலன்.”—திருக்குறள்.

6. இன்பம்வெய் யோர்க்குத் துன்ப மெளிது.

(ப-பொ.) முயன்று வரும் தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும் துன்பம் எளிது.

(ப-ரை.) இன்பம் வெய்யோர்க்கு—ஒருகாரியத்தை மேலிட்டுக் கொண்டு முயற்சி செய்தலால் உண்டாகும் இன்பத்தை விரும்புவாருக்கு, துன்பம்—வறுமை முதலியவற்றால் உண்டாகும் துன்பம், எளிது—எளிதாம்.

முயற்சியால் உண்டாகும் இன்பத்தை விரும்புவோருக்கு, வறுமையால் உண்டாகும் துன்பம் ஒரு பொருட்டாகத் தோன்றாது.

7. உண்டி வெய்யோர்க்குறு பிணி யெளிது.

(ப-பொ.) உண்டி மிக விரும்பினார்க்கு மிக்க பிணி எளிது.

(ப-ரை.) உண்டி—உணவை, வெய்யோர்க்கு—மிகுதியும் விரும்பினார்க்கு, உறு பிணி—மிக்க நோய், எளிது—எளிதில் வந்தடையும்.

“மீதூண் விரும்பேல்” என்பதாம்.

“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
 கழிபே ரிரையான்கண் நோய்.”

“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
 நோயள வின்றிப் படும்.”—திருக்குறள்.

8. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி யெளிது.

(ப-பொ.) பெண்டிரை மிக விரும்பினார்க்கு உண்டாகும் பழி எளிது.

“பெண்டிரை விரும்பி அவர் சொல்வழி வருவார்க்குப் படும்பழி எளிது”—பிரதிபேதம்.

(ப-ரை.) பெண்டிர்—பெண்டிரை, வெய்யோர்க்கு—மிக விரும்பினோருக்கு, படு—உண்டாகும், பழி—நிந்தை, எளிது—எளிதாம்.

காம மிக்கவர் எளிதில் நிந்தையடைவர். காம மிகுதியால் பெண் வழிச் சேறலும், பிறன் மனை விழைதலும் ஆகிய ஒழுக்கத் தவறுகள் உண்டாகும்; உண்டானால், உலகத்தில் அபவாதம் மிகும். “மனை விழைவார் மாண்பய னெய்தார்”.

“எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
 விளியாது நிற்கும் பழி.”—திருக்குறள்.

9. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூ ணெளிது.

(ப-பொ.) பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப் பகுத்துண்டல் எளிது.

“பெருமையை விரும்பினார்க்கு” என்றும் பிரதிபேதம் உண்டு.

(ப-ரை.) பாரம் வெய்யோர்க்கு—பிறருடைய பாரத்தைத் தாம் தாங்க விரும்பினோருக்கு, பாத்தூண்—தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்களுக்குப் பகுத்துண்ணுதல், எளிது—எளிதாம்.

பாத்தூண்—(பாத்து+உண். பாத்து—பகுத்து). பாத்து என்பதில் பகு என்பதன் மரூஉவாகிய பா பகுதி.

“தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
 வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் —நன்னெறி.

ஆதலால், பகுத்துண்டல் அவர்க்கு எளிதென்பதாம்.

10. சார்பி லோருக் குறுகொலை யெளிது.

(ப-பொ.) நன்னட்பைச் சாராதோர்க்குப் பொருந்திய கொலைத் தொழில் செய்தல் எளிது.

“சால்பில்லோருக் குறுகொலையெளிது” என்று பாடங் கொண்டு, “அமைந்த குணம் இல்லாதார்க்கு மிகவும் உயிர்க்கொலை எளிது” என்றுரைக்கின்றது ஒரு பிரதி.

(ப-ரை.) சார்பு இலோருக்கு—நல்ல நட்பாகிய சார்பு இல்லாதவர்க்கு, உறு கொலை—பொருந்தியு கொலைத் தொழில் செய்தல், எளிது—எளிதாம்.

“மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும், இனந்தூய்மை தூவா வரும்.” (திருக்குறள்) ஆதலால், நற்சார்பு இல்லார் கொலை முதலிய தீச்செயல்களை எளிதிற் செய்வர். Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".