முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/3. பழியாப் பத்து
3. பழியாப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பிலோரை இயல்பு குணம் பழியார்.
2. மீப்பிலோரை மீக்குணம் பழியார்.
3. பெருமை உடையதன் அருமை பழியார்.
4. அருமை உடையதன் பெருமை பழியார்.
5. நிறையச் செய்யாக் குறைவினைப் பழியார்.
6. முறையில் அரசர்நாட்டு இருந்து பழியார்.
7. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்.
8. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்.
9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
- கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவரது இயற்கையான தாழ் குணத்தைப் பழிப்பதில் பயனில்லை.
- பெருந் தன்மையில்லாத அற்பர்கள் தம்மைத் தாமே பெருமைப் படுத்திக் கொள்வதைப் பழிப்பதில் பயனில்லை.
- மிக்க பெருமைக்கு உரிய செயல், செய்வதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக நொந்து (பழித்து) விட்டு விடலாகாது.
- ஒரு செயல் முடிப்பதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக அதன் உயர்வினைப் புறக்கணிக்கக் கூடாது.
- ஒருவர் ஒரு செயலை நிறைவு பெற முடிக்காமல் குறையாய் விட்டிருப்பின், அதற்காக அவரைப் பழிக்கலாகாது; பின்னர் தொடர்ந்து முடிக்கலாம்.
- செங்கோல் முறை தவறிய அரசனது நாட்டில் இருந்து கொண்டு, அறிஞர்கள் அவனைப் பழித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.
- உதவி செய்ய வேண்டிய உரிய சுற்றத்தார் உதவி செய்யாராயின், அதற்காக உயர்ந்தவர்கள் அவர்களைப் பழிக்காமல் பொறுத்துக் கொள்வர்.
- முன்பின் அறியாத புதிய நாட்டிற்குச் சென்றால், அங்கே உள்ள பழக்க வழக்கங்களின் மாறுதலைக் கண்டு உயர்ந்தவர்கள் பழித்துரையார்.
- வறியவன் வள்ளல் போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.
- கீழ் மக்களின் இழி செயல்களைக் கண்டு, சிறந்த பெரியவர்கள் பழிக்காமல் - கண்டும் காணாமல் விலகி விடுவர்.