முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/5. அல்ல பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
3. ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று.
4. சோராக் கையன் சொல்மலை அல்லன்.
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
6. நேராமல் கற்றது கல்வி அன்று.
7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
8. அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று.
9. திறத்தாற்றின் நோலாதது நோன்பு அன்று.
10. மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று.
- கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், நல்ல கணவனது இயல்பு அறிந்து ஒழுகாதவள் நல்ல மனைவியாகாள்.
- மனைவியிடம் நல்ல மாட்சிமை - மாண்பு இல்லையெனில், அவளிருக்கும் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்புடையதாகாது.
- ஒருவர்க்கு ஒருவர் குளிர்ந்த அன்பின்றிக் கொள்ளும் தொடர்பு, உறவும் ஆகாது - நட்பும் ஆகாது.
- பிறர்க்கு ஒன்றும் உதவாத கையையுடைய கருமி, புகழாகிய மலைக்கு - மலையத்தனைப் புகழுக்கு உரியவன் ஆகான்.
- ஒன்று கலந்து பொருந்தாத உள்ளம் உடையவன், உயர்ந்த நண்பனாகக் கருதப்படான்.
- ஆசிரியர்க்கு ஓருதவியும் செய்யாமல், வஞ்சித்துக் கற்கும் கல்வி உண்மையான கல்வியாகாது.
- தான் வளத்துடன் வாழாவிடினும், பிறர் அவ்வாறு வாழ முடியாமையைக் கண்டு வருந்தும் வருத்தம், உண்மையான வருத்தமாகாது.
- அறவழியில் ஈட்டிய பொருளை நன்முறையில் - நல்லதற்குக் கொடாத கொடை உண்மைக் கொடையாகாது.
- உரிய முறையில் நோற்காத நோன்பு (தவம்) உண்மை நோன்பு ஆகாது.
- மறுபிறப்பு என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றபடி ஒழுகாமல், ஆண்டில் மட்டும் மூத்த மூப்பு, உண்மையான பயனுள்ள மூப்பாகாது.