முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/7. பொய்ப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரறிவினோன் இனிது வாழாமை பொய்.
2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.
3. கள் ளுண்போன் சோர்வின்மை பொய்.
4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
5. மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்.
6. உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய்.
7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
9. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்.
10. வாலியன் அல்லாதோன் தவம்செய்தல் பொய்.
- கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்களுக்குள், உயர்ந்த பெரிய அறிவாளர் இனிமையாய் வாழ்வதில்லை என்பது பொய்; அவர் உள்ளம் இனியதாகவே இருக்கும்.
- மிகப் பெரிய செல்வமும், செல்வாக்கும் பெற்றவன் பிறரிடம் சினம் (கோபம்) காட்ட மாட்டான் என்பது பொய். செருக்கினால் அவன் சுடுமுகம் காட்டலாம்.
- கள் உண்பவன் எதிலும் சோர்வடையான் - தாழ்வடையான் என்பது பொய்.
- செய்ய வேண்டிய செயலை உரிய காலம் அறிந்து செய்யாதவனுக்குச் செயல் கைகூடி வரும் என்பது பொய்.
- எதிர் காலத்தில் நேரக் கூடியதை நுனித்துணர்ந்து (உத்தேசமாகவாவது அறிந்து) அதற்கு ஏற்ப முன் கூட்டி நடந்து கொள்ளாதவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது பொய்.
- உற்ற செயலைக் காய்ந்து வெறுத்துச் செய்யாதவன் உயர்வு பெறுதல் இயலாது.
- எதையும் பொறுத்து அடக்கமாய் இல்லாதவன், பெருமையை வேண்டிப் பெறுதல் இயலாது.
- தனக்குப் பெருமை வேண்டாதவன், - அதாவது-தற்பெருமையை விரும்பாதவன் சிறுமை அடைதல் இல்லை.
- பொருளின்மேல் பேரவாக் கொள்பவன், முறையாகப் பொருள் ஈட்டுவான் என்பது பொய்.
- தூய்மையான உள்ளத்தான் அல்லாதவன், உயர்ந்த தவம் செய்வான் என்பது பொய்.