முத்தம்/அத்தியாயம் 1

முத்தம்
1

‘தென்னம்பாளை பிளந்து, சிந்திடும் சிரிப்புக்காரி’ பத்மா புன்னகை பூத்தப்படி, சொன்னாள் ‘அதெல்லாம் என்னிடம் நடக்காதடியம்மா! என் கிட்டே நடக்காது, தெரியுமா?’ என்று.

‘நீ என்ன பெரிய சிங்கியோ?’ என்று குறும்பாகச் சொன்னாள் காந்திமதி.

‘பத்மா, நீ ஸர்க்கஸ்வாலி என்று பெயர் வைத்துக் கொண்டு, சிங்கங்களை அடக்கும் பயிற்சியில் ஈடுபடலாம். ஜானகி வாத்தியாரம்மா. தேவகி டாக்டரம்மா. காந்திமதி. என்னவோ ஆகப் போகிறாளாமே!’ என்று இழுத்து, பேச்சுக்கேற்ப நாட்டியமாடி நெளிந்து நின்றாள் பச்சை மயில் போன்ற புஷ்பா.

ஜானகி கலகலச் சிரிப்போடு கத்தினாள்: ‘தெரியாதா? ஒரு சினிமாப் படத்திலே வந்துதே—‘மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப் பெண்ணாகணும்’னு. அது மாதிரி!……’

‘போடி!’ என்று பொய்க் கோபம் காட்டினாள் காந்திமதி.

‘நம்ம கோஷ்டியிலே சினிமா ஸ்டார் ஆக வேணும்னு யாரும் ஆசைப்படலே போலிருக்கு. ஏண்டி புஷ்பா! அந்தக் குறையிருப்பானேன்? நீ வந்து’……

பத்மா பேசி முடிக்கவில்லை. அதற்குள் புஷ்பா கத்தினாள்: 'அது சரி பத்மு. உனக்கு ஏன் இந்தக் கோளாறான கருத்து? எல்லோரையும் போல........

'அதிலே என்ன சிறப்பு இருக்கு? ஆயிரத்தோடு ஆயிரத்தொண்ணு என்று எல்லாரும் வாழப் போய்க் தான் இந்த ஆண்கள் சூரப்புலிகள் மாதிரி ஜம்பம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். என்னை மாதிரிப் பலபேர் தேவை' என்று உறுதியாக மொழித்தாள் பத்மா.

'உன்னை மாதிரிப் பெண்களே நினைவில் நிறுத்தித் தான் நீட்ஷே சொல்லியிருப்பான் போலிருக்கு -பெண்களை அணுகும் போது கையிலே சவுக்கு, எடுத்துக்கொண்டு போ என்றானாம். பெண்களுக்கு, கசையடி தான் தேவையாம். இதைச் சொல்லி விட்டு கிண்கிணிச் சிரிப்பைக் காற்றில் கலக்க விட்டாள் புஷ்பா.

'அவன் கெட்டான் பைத்தியக்காரன். அவன் திமிரை ஒடுக்க ஒரு நீட்ஷி இல்லாமல் போனாள் போலும்!

'நீட்ஷியா ராட்க்ஷஸியாடீ?'

'கிடக்கிறது பத்மா. காதலைப் பற்றி நீ என்ன தான் நினைக்கிறாய்? காதல் என்பதிலேயே உனக்கு நம்பிக்கை கிடையாதா?’ என்று வினவினாள் தேவகி.

பத்மா கர்வமாகத் தலை நிமிர்த்தி 'காதலாவது ஹூம்ப்' என்று முகத்தைச் சுழித்தாள். காதல் கீதல் என்கிறதெல்லாம் இந்த ஆண்களின் பைத்தியக்காரத்தனம், அசட்டுத்தனம், மனக்கோளாறு, வெறித்தனங்களை மூடி மறைக்க உபயோகப்படுகிற கவித்வமான ஒரு போர்வை. அவ்வளவுதான். வெறும் கதைப்புகள்தான் எல்லாம். புரிஞ்சுதா? என்று அறிவித்தாள்.

'அப்படீன்னா ஆண்கள் எல்லோரும் பைத்தியங்கள், அசடுகள் என்று சொல்கிறாய்?’

'சொல்வதென்ன! அது தானே உண்மை. லட்சியக் காதலுக்கு எடுத்துக்காட்டு என்று பிரமாதப்படுகிறதே லைலாமஜ்னு கதை. அதில் ஒரு உண்மை உங்களுக்குத் தெரியுமோ? லைலா அழகியில்லையாம். கோர சொரூபியாம். பார்க்கவே அருவருப்பு தரும் விகார ரூபம் பெற்றவள். உதடும், மூக்கும்-ஐய்ய! அத்தகைய அவலட்சணம் தான் பூமியிலே சொர்க்க இனிமை அளிக்கக் கூடியவள்; அவள் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்று திரிந்தானே பைத்தியக்காரன்!அதுமாதிரித்தான் பெரும்பாலானவர்கள்........'

காந்திமதிக்கு இயல்பான சந்தேகம் எழுந்தது. எல்லோர் உள்ள்த்திலும் பிறந்ததுதான். அதை ஒலிபரப்பினாள் அவள்: 'அது சரி, பத்மா. கல்யாணம் செய்துகொள்ளாமல். ஆண்வாடையே வேண் டாக அல்லிராணியாக, வாழ்ந்து விடலாம்; வாழ முடியும் என்று நம்புகிறாயா?'

'ஆமாம். ஏன் முடியாது? பிளாட்டோ சொல்லியிருக்கிறானே. அந்த லட்சிய நிலையை உலகிலே அமுலுக்குக் கொண்டுவர முயன்றால் என்ன? பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும், ஆண்களின் ஆசையைத் தணிக்கும் கருவிகளாகவும் உபயோகித்து, பெண்களின் வாழ்வைப் பாழாக்குவதோடு, பெண்களையே எப்போதும் பழித்துக் கொண்டு திரியும் போக்கை தடுக்க அவ்வப்போது என்னைப் போன்ற சிலராவது முன்வரவேண்டும. பெண்கள் தனித்தியங்க முடியாது என்றால், பவித்திரமான நட்பு முறையிலே கலந்து பழகட்டுமே!’

அவள் உற்சாகமாகத் தான் பேசினாள். ஆனால் தோழிகளுக்கு சுவை குன்றி விட்டது. முதலில் சும்மா வம்பளப்பாகத் தொடங்கினார்கள். பத்மா இட்சிய விளக்கப் பிரசங்கத்தில் இறங்கவும், இவள் லெக்சரடிக்க ஆரம்பித்தால், லேசிலா முடிவு காண்பாள்' என்று பட்டது.பொழுது போக்குப் பேச்சை தொணதொணப்பாக்கிக் கொள்வதை எப்படி சகிக்க முடியும்?.

'அந்த லட்சியக் காதல்-பிளட்டானிக் லவ்-எல்லாம் பேச்சுக்கும் கனவு காணவும் தான் லாயக்கு. நடைமுறையில் படுதோல்விதான் அடையும்' என்று தேவகி கூறினாள். 'நீ தான் இப்போ இவ்விதம் பேசுகிறாய். எப்பவும் இதே மாதிரியா இருந்துவிடப் பேசறே? பார்க்கலாமே!'

அதற்குத்தான் பத்மா சொன்னாள் என்னிடம் அதெல்லாம் நடக்காது’ என்று.

பேச்சை நிறுத்துவதற்கு சுலபமானவழி கண்டுபிடித்தாள் குறும்புக்காரி புஷ்பா. வளைகள் கலகலக்கும் தன் கரங்களை மாலை போல் பத்மாவின் கழுத்தில் கோர்த்து, அருகணைந்து, இவ்வளவு அழகும் வீணாகவா போகணும்? கவிகள் சொல்வதுபோல இளம்பிறை நெற்றி, வில்புருவம், கருவண்டுக் கண்கள், சம்பங்கிப்பூ மூக்கு, ரோஜா உதடுகள், மாம்பழக் கன்னங்கள்...த்ஸொ த்ஸொ!..இவ்வளவும் பாழாகவா பயனற்றா போகணும் என்கிறாய் பத்மு? அடி என் பத்மு' என்று கொஞ்சிக் கேலிசெய்தாள்.

பத்மாவுக்கோ எரிச்சல், அவள் ஆத்திரத்தை அதிகமாக்கியது ஜானகியின் பேச்சு.'கவலைப்படாதே புஷ்பா!அவளே தானாக காயுதே...பாலு போல நிலவு வீணாகக் காயுதே என்று பாடிப் பெருமூச் செறிந்து ஜோடி தேட ஆரம்பித்துவிடுவாள்.... கண்ணாடிக் கோப்பைகளைக் கீழே போட்டதும் எழுதுவது போல், தெறித்து ஒலித்தது பெண்களின் சிரிப்பு. பத்மாவின் முகம் சிவந்தது. ‘போங்களடி… வேலையற்றுப் போய்…’ என்று முனங்கினாள்.

புஷ்பா லேசில் போக விடுவாளா அவளை! ‘என்ன இருந்தாலும் நீ பெண்தான் பத்மா. பிரமாதமாகப் பேசினாய். ஆனால், வெட்கம் உன் மூஞ்சியில்…’ என்றாள்.

‘சரி சரி! உன் கிட்டேதான் கேட்டாங்க’ என்று எரிந்து விழுந்து, அவளை உதறி விட்டு நகர்ந்தாள் பத்மா.

தோழிகளின் உல்லாசச் சிரிப்பு, அருவி நீர் போல் துள்ளிக் குதித்துக் கலகலத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_1&oldid=1663344" இலிருந்து மீள்விக்கப்பட்டது