முத்தம்/அத்தியாயம் 2
2
ஆமாம். ஏன் அப்படி இருக்கக் கூடாது? கல்யாணமே செய்து கொள்ளாமல், ஆண்களோடு உறவு கொள்ளாமலே வாழ முடியாதா என்ன? எனக்கு அது சுத்தமாப் பிடிக்கவேயில்லை. கல்யாணம், குடும்பம், பிள்ளை பெறுவது… ஒரு பிள்ளை பிறகு ஒரு பிள்ளை… பிறகு, திரும்ப, மீண்டும்—பிள்ளை, பிள்ளை, பிள்ளையோ பிள்ளை. இதற்குத்தானா பெண் ஜன்மம்? அப்படியென்றால், கல்லூரிப் படிப்பு எதற்கு? தாலி கட்டப்படுவதும், குடும்ப அலுவல்களையெல்லாம் கவனிக்கும் பணிப்பெண்ணாக மாறுவதும், கணவன் இஷ்டம் போலெல்லாம் இயங்கி வாழ்வதும்-அது ஒரு வாழ்வா! அர்த்தமற்ற பொம்மலாட்டம், 'வாழையடி வாழையாக' அப்படித் தான் வாழ்ந்து வருகிறார்கள்; அது தான் தர்மம் என்று சொன்னால், அவர்களுக்கு வாழத் தெரியவில்லை என்று தான் அர்த்தம், அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் பெண்கள் இப்படியா வாழ்கிறார்கள்? இங்கு தான் தங்கள் வாழ்வையும், சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டு.....
அது மாதிரி வாழ நான் தயாராக யில்லை. கல்யாணமும் வேண்டாம்; காடாத்தும் வேண்டாம். ஒரு கருமாதியும் வேண்டாம் போ! வாழ்விலே புதுமை இருக்கணும், செக்கு மாடு மாதிரி தடம் விழுந்த பாதையிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு....... ஹூம்!'
இவ்விதம் அடிக்கடி எண்ணிக்கொண்டாள் பத்மா. அவள் கலாசாலையில் படிப்பவள். 'ஒரு மாதிரி' என்பது அவளைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் குண எடை. அதாவது ஸ்குரூ கொஞ்சம் லூஸ்! என்ன புஸ்தகம் கிடைச்சாலும் உயிரைக் கொடுத்துப் படிக்கத் தொடங்கி விடுவாள். சதா கற்பனையும் கனவும் தான். தெருவிலும் கல்லூரியிலும் நம் நடுவிலும் அவள் நடமாடினாலும், அவள் உள்ளம் சதா வேறு எங்கோ தான் பறந்து கொண்டிருக்கும். கவைக் குதவாத கனவும், வாழ்வுக்கு ஒத்துவராத கற்பனையும் அவளுக்கு நிலாச்சோறு மாதிரி. அத்தகைய விஷயங்களை வைத்துக்கொண்டு. பேச ஆரம்பித்தாளோ-அவ்வளவுதான். பன்னாப் பன்னாயென்று பஞ்சு வெட்டுறது, கொட்டை நூற்கிறது என்று சொல்வார்களே சிலர் பேச்சைப் பற்றி அந்த ரகம்தான். விரிவாக ஆராயப்போனால், இவ்வித விளக்கஉரை கிடைக்கும் அவளது தோழிகளிடமிருந்து!
மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்கிற கவலையே பத்மாவுக்குக் கிடையாது. அவள் மனம் பகற் கனவிலே பறந்து கொண்டிருக்கும். அவள் கற்பனை இன்பமயமான எதிர்காலம் என்கிற பசுஞ்சோலையிலே வட்டமிட்டு மயங்கும். லட்சியக் கனவுகளைச் சித்திரித்துக்கொண்டிருக்கும் சிந்தனை. ஆகவே, தன் வாழ்வில் புரட்சிகரமான புதுமை வேண்டும் என அவள் எண்ணியதில் வியப்பில்லை. லட்சியக் கொள்கைகளே-நடைமுறையில் சாத்தியமா; அனுபவ சாத்தியமாகலா மெனினும் நீண்டநாள் வெற்றி தருமா என்றெல்லாம் கவலைப் படுவானேன் என எண்ணி-தீவிரமாக எதிர்த்திருக்கும் ஞானி பிளாட்டோவின் கருத்துக்கள் அவளுக்குப் பிடித்துவிட்டன.
'உடல்நலம் நிறைந்த நாட்டிலே, இனிய காட்சிகளும் இன்னொலிகளும் மிகுந்த சூழலில், அனைத்திலும் உறையும் நலனையும் எழிலையும் நுகரக் கூடியவர்களாக வாழவேண்டும் இளம்பிராயத்தினர் எல்லோரும். புனித வெளியிலிருந்து பாடிவரும் தென்றல் போல அழகு, நலமளிக்கும் அழகு, ம்க்களுக்கு ஆத்ம இன்பம் தந்து, அறிவின்பத்திற்குத் துணை புரியட்டும் ... இனிமையான பூரணத்துவத்தைக் காதலிக்கலாம். அழகு நிறைந்த ஆன்மாவும் அழகு மிகுந்த உருவமும் ஒன்றும் போது, விளைவு கண்களுக்கும் அறிவுக்கும் விருந்து. ஆனால் இன்ப வேட்கை அதிகமானால், மனிதன் துயரினால் தன் பண்புகளிலிருந்து வழுவி விட நேர்வது போலவே, 'மனிதம்' இழந்து விடுகிறான். நல்ல குணங்கள், பண்புகள், உயர் பண்புகளை யெல்லாம் துரத்தி மனிதனை மிருகமாக்கி விடுகிறது காமம். அது வெறித்தனமானது.ஆனால் புனிதமான காதல்மகத்தான அன்பு-ஒன்று உண்டு. அழகு,அமைதி-,அறிவு-,அடக்கம்-, இவை அதன் நிறைழவுகள்.அத்தகைய உண்மையான-தெய்வீகமான -காதல் முன்னிலையில் வெறித்தனமும் புலன் அடக்கமின்மையும் எட்டிப் பார்க்கவே கூடாது. காதலன் காதலிகளிடையே இவை தலை காட்டவே கூடாது. உண்மையான, உயர்ந்த, காதல் எனில் உடலுறவுக்குத்தான் என்ன அவசியம்? ஆணும் பெண்ணும் நட்பு முறை கொண்டாடட்டும். அவர்களிடம் அன்பு பூக்கட்டும். ஆனால், பெற்றோர் மக்களிடம் காட்டுவது போன்ற களங்கமற்ற அன்பாக இருக்கட்டும்'. பிளாட்டோ கூறி யிருப்பது நியாயமானது; புனிதமான கருத்து: உயர்ந்த லட்சியம் என்று நம்பினாள் பத்மா. அம் முறையை ஏன் பின்பற்றக் கூடாது? ஒரு சிலராவது அழகுக்காக, கலை உயர் வுக்காக, மனநலனுக்காக, உடல் நன்மைக்காக, ஆன்ம எழிலுக்காக இந்த விதமான காதலை வளர்த்துவந்தால், மனித சமுதாயம் மிருக நிலையிலிருந்து உயர்ந்துவிட வழி பிறக்காமலா போகும்? வாழ்க்கை கவலைகளை வளர்க்கும் பாழ்ப் பண்ணையாகவா இருக்கும்! ஆனந்தம் பூத்துக் குலுங்கும் இனிய சோலையாகத் திகழாதா என்ன! இப்படி நினைத்தாள் அழகி பத்மா.
தன் தோழிகளிடம் தனது அபிப்பிராயத்தை அறிவித்தபோது அவர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். 'அபத்தமடி பத்மா, அத்தனையும் அபத்தம்.... சொத்தைக் கருத்துகளடி,தோழி! ஊத்துக்கு நிற்காது...எழுத்திலும் பேச்சிலும் இனியது நன்று. ஆனால் வாழ்க்கைக்குக் சுட்டி வராது...' என்று கொக்கலித்தார்கள்.
போக்கிரிப் பெண் புஷ்பா ஒரு போடு போட்டாள். பிளாட்டோ போதை மயக்கிலே உகுத்த கஞ்சாக் கனவு அது. பூலோக மக்களுக்குச் சரிப்படக்கூடிய போதனையல்ல!' என்று.
'போங்களடி! உங்களுக்கு அடக்கமும் அறிவும் இருந்தால்தானே. வெறும் ஜடங்கள் நீங்கள். உலகச் சாக்கடையில் நெளிவதில் இன்பம் காணும் உயிர்க்கிருமிகள்' என்று பத்மா சீறினாள்.
புஷ்பா சும்மா போவாளா! 'அம்மா புனிதவதி! பிளாட்டோவின் பிரதம சீடையே....அடி தேவகி, சீடனுக்குப் பெண்பால் என்னடி? சீடையோ? சீடியோ? ஒரு எழவும் தெரியலையம்மா எனக்கு நான் ஜடம்தானே. போகுது. பத்மாதேவி! இந்தப் பூலோகத்திலே-பிரசங்கிகள் சொல்வது மாதிரி - பூலோகக் குட்டையில் ஊறிய மட்டைகளான அடியேங்களுக்கு ஞான ஒளிகாட்டி, நல்வழி வகுத்து அருள் புரிய வேண்டும். எங்களுக்கும் தெய்வீக விவகாரங்களுக்கும் ரொம்ப தூரம். காதல் என்றால் நாவல், சினிமாக்களில் வரும் காதல்தான் புரியும். சந்திரனும் குளிர்காற்றும் பூ வாசனையும் நிறைந்த காதல்............'
மற்றப் பெண்கள் எல்லோரும் 'சிரியோ சிரி' என்று சிரித்தார்கள் பத்மா தயங்கவில்லை.
'என்னால் முடியும், நான் வாழ்ந்து காட்டுகிறேன், பாருங்கள்' என்றாள்,
'ஓ!' என்றனர் சிலர்.
'நீ வெற்றி பெற்று விட்டால், பத்மாவுக்கு ஜே என்று கோஷமிட்டு, கொடிகட்டிக்கொண்டு கிளம்பிவிட மாட்டேனா உன் லட்சியக் கொள்கைகளை ஊரெங்கும் பரப்ப' என்று சொன்னாள் புஷ்பா.
ஒடுங்க முயன்று கொண்டிருந்த கொண்டிருந்த சிரிப்பு மறுபடியும் கனத்து ஒலித்தது. ஆனால், பத்மா மனம் தளர்ந்து விடவில்லை. ‘இதுகளுக்கு வேறென்ன தெரியும் மண்டூகங்கள்!’ என நெஞ்சொடு புலம்பினாள்.
யார் சிரித்தால் என்ன! எவர் எப்படிக் கேலி செய்தால்தானென்ன? தான் எண்ணியபடியே, தன் வாழ்வை அமைப்பது என்று உறுதி செய்திருந்தாள் பத்மா.
அவள் கொள்கை விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, மாணவிகள், மாணவர்கள் எல்லோருக்கும் தெரிய வந்தது அதனால், அவள் நடந்து சென்றாலே, மற்றவர்கள் விசித்திரப் பிறவி எதையோ வேடிக்கை பார்ப்பது போல, அவளை கவனித்தார்கள். அவர்கள் சிரிப்போ, கேலிக் குறிப்போ தன்னை எதுவும் செய்ய முடியாது என்று மௌனமாக—ஆனால், திடமாக சுட்டிக் காட்டுவது போல, தலை நிமிர்ந்து கர்வ நடை நடப்பாள் அவள்.