முத்தம்/அத்தியாயம் 4

4

பத்மா கிழவியல்ல. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் குமரிதான். பல பள்ளி மாணவிகளைப் போல, கூனல் முதுகுடையவளுமல்ல. குனிந்து நிலம் நோக்கி நடக்கும் குட்டைப் பெண்ணுமல்ல. அருமையான ஜாதிக் குதிரை மாதிரி, காம்பீர்ய நடை நடந்து, கண்ணாடி வளைக் கலகலப்பையும், சலங்கைச் சிரிப்பையும் காற்றிலே புரள விட்டு, ஒயிலாகத் திரியும் எழிலி அவள். அவளுக்கு வயது அதிகமாகி விடவில்லை. முல்லைப் பல்லின் முறுவல் அழகுச் சிறு குழி சித்திரிக்க அமைந்த பளபளப்பான கண்ணாடிக் கன்னமும், குறுகுறு விழிகள் சுழலும் இளமுகமும் சொல்லும் அவள் வயதால், பண்பால், குணத்தால் முதிரா இளஞ் சிறுமிதான் என்று. ‘பால் வடியும் வதனம்’ என்பார்களே, அத்தகைய முகத் தோற்றம், அந்த அழகி சொன்னாள் ‘வாழ்க்கை முழுவதும் கன்னியாக வாழ்வேன்’ என்று.

இன்றைய நாகரிகத்தின் கோளாறுகளிலே இதுவுமொன்று என்று ‘அமுத்தல்’ சிரிப்பு உதித்தார்கள் அனுபவஸ்தர்கள். வயது வந்த ஆண்களும், பெண்களும் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என ஜம்பமடித்துக் கொள்வதை பெருமை என்று கருதுகிறார்கள் போலும்! போகப் போக, அவர்கள் வாழ்வு மலர்ச்சி எப்படியமையினும், ஆரம்பத்தில் மிகத் தீவிரமாகச் சொல்லி விடுகிறார்கள் என்று விளக்கம் கூறிக் கொள்வதும் உண்டு.

'தாவாச் சிறு மான்; மோவா அரும்பு' போன்ற பத்மா ஆர்வமாகச் சொன்னாளா புதுக் கருத்தை! 'அதிசயம்!' என்று வியந்தார்கள் சிலர். 'அதிகப் படிப்பின் வினை' எனப் புகன்றார்கள் பலர். 'கன்னி யொருத்தி ஆண்களுடன் தாராளமாகப் பழகிப் பேசிச் சிரித்து, அன்பன் ஒருவனோடு புனிதநட்பு வளர்த்து வாழ்ந்தாலும், சதைப் பசி வளர்க்காமல், தெய்வவாழ்வு பயிலமுடியும் என்கிறாள். அவ்விதம் செய்வேன் என்று சூளுரைக்கிறாள். மூளையிலே கோளாறு தான். வேறு என்ன? ரொம்பப் படித்துப் படித்து, பித்தம் சிரசுக்கு ஏறி விட்டது' என்று பத்திரம் வழங்கினார்கள்.

பத்மா தவக் கோலம் பூணவில்லை. திரிசடைக் தனங்கள் பயிலவில்லை. மொட்டையோ முக்காடோ கொள்ளவில்லை! முகமூடி மட்டுமோ, முழுத் திரைத்துணையோ தேடவில்லை! அவள் அழகு நிலா. அதன் குளுமை எங்கும் சிதறிச் சிரித்தது. அவள் வனப்பின் நாண்மலர். அதன் மணம் எங்கும் பரவியது. அவள் இளமையின் அருவி. அதன் சலசல நாதம் எங்கும் இனிய கீதமாகத் தள்ளிக் குதித்தது. அவளது மின்கொடி மேனியை பெங்கால் ஸில்க்கும், பாலிஷ் பட்டாடைகளும் தான் அணி செய்தன. தைலம் நீவிக் கறுமை பூண்டு நெளி நெளியாய்த் துவளவிட்ட கூந்தல் ஒற்றைத் தனிச் சடையாய் முதுகிலே புரளும். சில சமயம் இரட்டைப் பின்னலாக மின்னும்.தனிச் சடை கழுத்தை அணைத்து தோளில் துவண்டு முன்வந்து படிந்து மார்பிடைத் தூங்கும். சிரிக்கும் கண்கள் சிரிப்போடிப் பேசும் உதடுகளின் அசைவுகளுக் கேற்பத் தனியொளி காட்டி உணர்வு நடம்பயிலும். அவள் எதிரே வரும் போது எல்லோர் கண்களையும் இழுக்கும் புஷ்பம். போகும் போதோ எதிர்ப்பட்டுத் தாண்டிச் செல் வோரை நின்று திரும்பிக் கண்ணெறியத் தூண்டும் காந்தம். அவள் உலவும் கவிதை.

அவள் சொன்னாள், 'கல்யாணம் செய்யமாட்டேன். கல்யாணமின்றித் தனி வாழ்வு வாழலாம். வாழ்விலே குளுமைகாண, கலை நயம் தெரிக்க அன்பன் ஒருவன் தேர்ந்து அவனுடன் புனித அன்பு-களங்கத்துக்கு இடமில்லாத நட்பு-முறையிலே பழகி வாழலாம்; வாழ்ந்து காட்டுவேன்' என்று.

'பச்சைக் குழந்தை. உலகம் என்ன வென்று தெரியாது. வயசாக ஆகத் தானே புரிந்துகொள்வாள்' என்றார்கள் பலர்.

'உலகம் சரியான பாதையிலே போகவில்லை, வாழ்ந்து வழிகாட்டுவேன்' என்றாள் பத்மா.

'என்னவோ பார்க்கலாமே. அவளெங்கே போகப் போறா! நாம் தான் எங்கே போய்விடப் போறோம்!' என்று நினைத்தார்கள் அவளுடன் பழகியவர்கள்.

தான் பலரது கவனத்துக்கும் இலக்காகிவிட்ட முக்கியப் புள்ளி என்ற நினைவு பத்மாவுக்கு மகிழ்வையும் கர்வத்தையும் கொடுத்தது. இந்தப் பேச்சுக்கே இவ்விதம் என்றால், தனிமுறையிலே வாழ்ந்து காட்டிவிட்டாலோ!...அம்மா! எல்லாரும் அசந்து போகமாட்டார்களா அசத்து! பத்மா, அவ பெரிய ஆளு. கைகாரியடி என்று தானே புஷ்பாவும் தேவகியும் அவளும் இவளும் கருதுவர். அப்பொழுதெல்லாம் அவர்கள் முகத்தைப் பார்க்க வேணும். எனக்குச் சிரிப்பாகப் பொங்கி வரும்.....

இதை எண்ணும் போதே அவள் சிரித்தாள். தோழிகளின் முகங்களை கற்பனை செய்து பார்த்து அதிகம் சிரித்தாள். தானாகவே சிரித்துக் கொண்டாள். அவளுக்கு ஆடிப் பாடத் தெரியாது. தெரிந்திருந்தால், ‘ஆனந்தமென் சொல்வேனே!’ என்றோ, வேறு எப்படியோ, கத்திக் கூத்தாடியிருப்பாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_4&oldid=1663350" இலிருந்து மீள்விக்கப்பட்டது