முத்தம்/அத்தியாயம் 3

3

சக மாணவிகளே கிண்டல் செய்து, மகிழ்ந்து போகிற போது, மாணவர்கள் தூங்கவா செய்வார்கள்! ‘பிளட்டானிக் லவ்வி’—‘பிளட்டானிக் காதல் காரி—போறா பாரு’… அமர லோக அற்புத, அபாரக் காதல்டா தம்பி! எல்லாரும் தெய்வீகக் காதல் வளர்த்து, பத்மா புகழ் பாடுவோமாக… என்றெல்லாம் ‘கோட்டா’ செய்து கும்மாளமிடுவர்.

‘வழக்கமான காதல் என்றால்தான், இப்படி இப்படிப் பேசணும், பழகணும் என்று புத்தகங்கள், சினிமாக்கள் எல்லாம் கற்றுக் கொடுக்கின்றன. உன்னதமான புனிதக் காதல் பயில, இது வரை, யாரும் சொல்லிக் கொடுத்ததாகத் தெரியவில்லையே. பத்மா தேவி அதற்கு உரிய டியூஷன் கற்றுக் கொடுக்கலாம். நேரடி உபதேசத்துக்காக உடனே டியூட்டோரில் காலேஜ் தொடங்கலாம் என்று சிபாரிசு செய்தார்கள் சிலர்.

'ஷெல்லி பாட்டையே திருத்திவிட வேண்டியது தான். வானம் கடலை முத்தமிடுகிறதாம்! ஒளி பெரு வெளியை முத்துகிறதாம். அது இதை முத்தி மிடுது, இது அதை முத்த மிடுது. எது எதையெல்லாமோ முத்தமிடுது. நான் ஏனடி உன்னை முத்த மிடக் கூடாது? இப்படி என்ன எழவோ பாடி விருக்கிறானே. திருத்து அதை. உடனே திருத்து!' என்று உத்திரவிட்டார் ஒரு ஜாலி பிரதர். 'திருத்தாமல் போனால் பத்மா அம்மையார் பதறப் போகிறார்கள். பாயப் போகிறார்கள்!'

வெள்ளி முழு நிலவை
—கண்ணம்மா !
துள்ளும் கடல் அலைகள்
கண்டு மகிழலையோ?
வெள்ளைப் பனி வரையும்
—கண்ணம்மா !
வியன் வானைப் பார்க்கலையோ?
பார்த்து நிற்கலையோ?
மின்னும் ஒளிதானும்
—கண்ணம்மா !
வண்ண வில் வளைவை
கண்டு நிற்கலையோ ?
வண்ணப் பூக்க ளெலாம்
—கண்ணம்மா!
என்னத்தை முத்தமிடும்?
தனியாய் திகழலையோ?

அபிநவக் கவி நீண்டகுரலில் பாடத் தொடங்கினார். ஜாலி பிரதர்_அவர் மண்டையில் தட்டி 'ஏய்! நிறுத்து ! இந்தமாதிரிப் பாட்டு நமக்கு சரிப்படாது.

ஆணோடு பெண்ணும்
கூடிடில் தனியே
ஆபாச நினைவுகள்
ஏனோ பிறக்கணும் ?
அண்ணன் பிளாட்டோ
சும்மாவா சொன்னான் ?
கண்ணே மணியே !
காண்போம் பேசுவோம்
மண்ணும் விண்ணும்
போலவே நாமும்
விலகியே இருப்போம்!
அதுவே காதல்!


இப்படி ஏதாவது பாடுவியா! கவிதைன்னாலும் ஸிம்ப்ளா, ஜோரா, சுவையா........’

கவிராயர் சீறிச் சிணுங்கியபடி போனார்.

பத்மாவின் பாலிஸிப் பிரகடனம், அனைவருக்கும் ஆரவாரிப்புக்குரிய ஆனந்தமே அளித்தது. ஒன்றிரண்டு பேர்வழிகள் உற்சாகம் மீறியவர்களாய், ‘உங்கள் புதிய காதல் தத்துவத்தின்படி, உங்களோடு காதல் சம்பாஷணை செய்யவும், கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன் அதற்கு அத்தியாவசியமான முதல் பாடத்தை அறிவிக்கும்படி வேண்டுகிறேன்’ என்று கடிதம் கூட எழுதி அனுப்பி விட்டார்கள்.

பத்மாவுக்கு மனக் கஷ்டமாகத்தான் இருந்தது. ‘மடையர்கள்! மிருகங்கள்!’ என்று ஏச வேண்டும் என்கிற துடிப்பு பிறந்தது. அவளது பண்பு மிகுந்த உள்ளம் ‘போகிறார்கள்! என்ன இருந்தாலும் இவர்கள் மனித ஜந்துக்களிடையே வாழ்ந்து திரியும் மனிதப் பிராணிகள்தானே! அதிமனிதர்கள் ஆகி விடவில்லையல்லவா? இவர்களிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!' என்று சமாதானப்படுத்தும்.

பத்மா வழக்கம்போல் தான் உண்டு, தன் கொள்கைகள் உண்டு என்ற தன்மையில் இயங்கிவந்தாள்.

'ஆமடி பத்மா, நீ சொல்றது சரி. ஆனால் எனக்கொரு சந்தேகம், வாழ்க்கை பூராவும் ஒரு பெண் இப்படியே இருந்து விட முடியுமோ? ஆண்களின் நிலைமையும் அப்படித்தானே கல்யாணமே செய்து கொள்ளாமல்......'

அவள் வாயைக் கிளறிவிட வேண்டுமென்று எவளாவது ஒருத்தி ஆரம்பிப்பாள். முதலில் பத்மா விரிவாக விளக்குவது உண்டு. அதில் அவளுக்கு மகிழ்வு. ஆனால், மற்றவர்கள் புரியாத காரணத்தால் சந்தேகத் தெளிவுக்காகக் கேட்கவில்லை வம்பளந்து ரகளை செய்யவே விசாரிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாள். அதனால் யாராவது கேட்டால், 'உங்களுக்கெல்லாம் சொன்னால் புரியாது. இருக்க முடியுமா முடியாதா, அப்படி நான் வாழ்த்து காட்டுகிறேனா இல்லையா என்பதைக் கவனித்துக்கொண்டே வாருங்கள்' என்று சொல்லி பேச்சை ஒடுக்கி விடுவாள்.

அவளிடம் யாரும் கேட்கவில்லை ஒரு பெரிய சந்தேகத்தை. மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசிச் சிரித்து அமர்க்களப் படுத்திக் கொள்வார்கள். 'ஒரு விஷயமல்லவா பிரதர்! பத்மா சொல்றது போல்......' என்று தொடங்குவார் ஒருவர்.

உடனே 'வெட்டு' வந்து விழும், 'பத்மா புதுசாக் கண்டுபிடித்து விட்டாளா என்ன! ஏக கிறிஸ்து காலத்துக்கு முன்னாலேயே, பிளாட்டோ எழுதி வைத்ததுதானே. அதை அனுஷ்டிக்கணும்னு எத்தனையோ பேரு சொன்னாங்க. இப்ப பத்மாவும் சொல்கிறா. இதிலே என்ன தப்பு?' 'தப்பு ஒண்ணுமில்லை மிஸ்டர் ஆனால் ஒரு சின்னச் சந்தேகம்'

'சின்னச் சந்தேகம் தானே? சொல்லுமேன் ஐயா!' என்று ஒரு கனைப்பு எழும்.

'ஆனா பெரிய பிரச்னை!'

'பயமுறுத்தாமல் விஷயத்துக்கு வாருங்காணும் அளக்கிறீரே சும்மா....'

'விஷயம் என்னவென்றால், பிளட்டானிக் லவ் என்கிறார்களே, அந்த உன்னதக் காதல் முறையை-அது தான் உங்களுக்குத் தெரியுமே! உடல் உறவு தவிர்க்கப்பட்ட வெறும் அன்புப் பரிவர்த்தனை-எல்லோரும் கையாள்வதானால் உலகம் என்னாகும்? உதாரணமாக, இந்தத் தலைமுறை அதை அப்படியே அனுஷ்டிப்பதானால்......"

'நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் அது.'

'அட, பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே! அப்படியே வைராக்யத்தோடு அமுலுக்குக்கொண்டு வந்து விட்டால், அப்புறம் புதிய தலைமுறைகள் பிறக்கவே வழிகிடையாதே! மனிதவர்க்கம் நசித்துப் போக வேண்டியது தானே. அப்புறம் உலகம் உயர் வழியிலே உருப்படுவது ஏது? இதை பிளாட்டோவோ பத்மாவோ ஏன் எண்ணிப்பார்க்க வில்லை?' என்று கேட்டார் மிஸ்டர் சந்தேகம்.

'பெரிய பிரச்னை தான் ஐயா! ரொம்பப் பெரிய விஷயம் தான். பத்மாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது' என்றார் ஒருவர்.

'பத்மா சும்மா ஆர்வத்திலே பேசுகிறாள். அவள் என்ன கிழவியா! பிஞ்சிலே வெம்பி விட்டவளா? குளுகுளுன்னு மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறா. அவளாவது, தனியாகவாவது வாழ்க்கை பூராகவாவது, வாழ்ந்து விடுகிறதாவது! அவள்தான் பிதற்றுகிறாள் என்றாலும், நமக்கெல்லாம் மூளை இல்லாமலா போச்சு! ஹஹ்ஹஹ!’ என்று கனைத்தார் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_3&oldid=1663348" இலிருந்து மீள்விக்கப்பட்டது