முல்லைக்காடு/பழைய நினைப்பு

பழய நினைப்பு

நேற்றவன் சேவகனாம்—இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே—உச்சி
ஏறி மிதித்தாண்டி!
சேற்று நிலத்தினிலே—ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்
தோற்றி மணியடித்தான்—அந்தத்
தொல்லை மணி ஓசை.
பழைய சேவகனின்—காதிற்
பட்டதும் வண்டி என்றே
பழய ஞாபகத்தில்—செல்லும்
பாதை குறிப்பதற்கு,
முழுதும் கைதூக்க—அவன்
முக்கரணம் போட்டு
விழுந்துவிட்டாண்டி!—அவன்
வீணிற் கிணற்றினிலே!