முஸ்லீம்களும் தமிழகமும்/சோனகர்

4

சோனகர்


இவ்விதம் தமிழகம் போந்த இஸ்லாமிய அரபுகளை துருக்கர் என அழைப்பதுடன் சோனகர் என அழைக்கும் வழக்கமும் வந்தது. வில்லியம் லோகான் என்ற ஆங்கில நூலாசிரியர், யவனக என்ற சொல்தான் சோனகராகி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.[1] “யோனா” என்ற பிராகிருதச் சொல்லின் மூலமாக பிறந்தது சோன என்றும், அத்துடன் தமிழ் “க” விகுதி சேர்ந்து “சோனக” என தமிழ் வடிவம் பெற்றுள்ளது என தமிழக தொல்பொருள் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.[2] ஆனால் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் இருந்த சோனகர் என்ற பெளத்த பிக்குவின் குறிப்பை மகாவம்சத்தில் படிக்கும்பொழுது, பாலி மொழி இந்தச் சொல்லுக்கு மூலமாக இருக்கலாம் என்பதும் சிந்திக்கத்தக்கதாக உள்ளது.[3] ஆதியில் இந்தச் சொல் எட்டாவது நூற்றாண்டு முதல் இசுலாமிய அரபியர்களைத் தான் குறித்து வந்துள்ளது. பொன்னுக்கு “சோன” (சொர்ண) என்ற பெயரும் உண்டு. “பொன்னொடு வந்து கறியோடு பெயரும்” பண்ட மாற்று முறையில் பொன்னைக் கொண்டுவந்து, தமிழக கை வினைப் பொருட்களை பெற்றுச் சென்ற காரணத்தினாலும் அவர்கள் சோனகர் என வழங்கப்பட்டு இருக்கலாம். பதினொன்றாவது நூற்றாண்டு முதல், இந்தச்சொல் தமிழ் வழக்கில் இருந்ததை ராஜராஜ தேவனது தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன, “சோனகன் சாவூர்” என்பவரும் “சோனக சிடுக்கு” என்ற அணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] மற்றும், அந்த மன்னனது பதினைந்தாவது ஆட்சியாண்டு கல்வெட்டு "சோனக வரி" பற்றிய குறிப்பைத் தருகிறது.[5] இந்த மாமன்னனது மைந்தனான இராஜேந்திர சோழனது கோலார் கல்வெட்டில், “திருமந்திர ஓலை நாயகன் கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ்ய வித்தியாதரப் பெருந்தெரு சோனகன் சாவூர்” என்பவரை குறிப்பிடுகிறது. மதுரைப் பாண்டியரது வாரிசுப் போரில் பராக்கிரம பாண்டியனுக்கு உதவ வந்த சிங்களப் படையினை, இராமநாதபுரம் மாவட்டம் செம்பொன்மாரி அருகில், கி.பி. 1170ல், பரிசுப் பொருட்களுடன் அங்கிருந்த சோனகர் வரவேற்று மகிழ்ந்ததாக இலங்கை வரலாற்று நூலான மகாவம்சத்தை மேற்கோள்காட்டி பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் வரைந்துள்ளார்.[6] இந்தச் செம்பொன்மாரிக்கு அண்மையில் அரபிகளது அஞ்சுவண்ணம் அமைந்திருந்ததை ஒருவாறு ஊகிக்க முடிகிறது.

பாண்டியர் கல்வெட்டுக்களில் இருந்தும், தமிழகத்தில் சோனகர் பற்றிய விவரங்கள் தெரிய வருகின்றன. பாண்டியரது மெய்க்கீர்த்திகளில், பல நாட்டவர்களில் ஒருவராக, சோனகர் சொல்லப்பட்டு இருக்கின்றனர்.

"குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்
வச்சிரரும் காசியரும் மாகதரும்
அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய ... ...”

என்பது சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1258 - 71) மெய்கீர்த்தியின் ஒரு பகுதியாகும்.[7] பாண்டியன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனது கல்வெட்டு ஒன்றில் “சோனகற்கு சீவிதமாக அடைந்த நாளில்” என அவர்கள் பாண்டிய நாட்டில் புகலிடம் பெற்றதைக் குறிப்பிடுகிறது.[8] பாண்டியன் கோனேரின்மை கொண்டனாது திருப்புல்லானிக் கோயில் கல்வெட்டு, “பவுத்திர மாணிக்கப் பட்டினத்து சோனக சாமந்தப் பள்ளிக்கு” சில ஊர்களை இறையிலியாக வழங்கப்பட்ட ஆணையைத் தெரிவிக்கிறது.[9]

இதனை, அந்தந்த நூற்றாண்டுகளில் எழுந்த தமிழ் இலக்கியக் குறிப்புகளும், உறுதிப்படுத்துகின்றன. பதினைந்தாவது நூற்றாண்டு இஸ்லாமிய இலக்கியமான பல்சந்தமாலை, சோனகர் தமிழக வாணிபத்தில் வளர்ந்தோங்கி விளங்கியதுடன், தமிழ் மண்ணுக்குரிய தண்ணளியிலும், தாளாண்மையிலும் மிக்கு நின்றதைச் சுட்டிக் காட்டுகிறது.

“வானது நாணக் கொடையாலுலகை வளர்த் தருளும்
சோனகர் வாழும் செழும்பொழில் .... ....”

என ஈதலற்த்திற்கு இலக்கணமான மாரியை நாணுமாறு இஸ்லாமியரது கொடை வாழ்க்கை அமைந்து இருந்ததைக் கோடிடுகிறது.[10] இத்தகு செழுமையான சமுதாயத்தில், பிற்காலத்தில் ஈய்ந்து சிவந்த இருகரத்து சீதக்காதி வள்ளல் தோன்றியதில் வியப்பு இல்லைதான். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான பெரும்பற்றப் புலியூரார் தமது திருவாலவாயுடையார் புராணத்தில் சோனகரை குறிப்பிட்டுள்ளார்.[11] பதின்மூன்றாவது நூற்றாண்டு பேரிலக்கியமான இராமாயணம் - சுந்தரகாண்டம் ஊர்தேடு படலத்தில் சோனகர் மனை பற்றிய குறிப்பு உள்ளது.[12] பதினான்காவது நூற்றாண்டு உரை ஆசிரியரான நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டில் யவனர் என்ற சொல்லுக்கு சோனகர் என்றே பொருள் பிரித்துள்ளார். இவரை அடுத்து வாழ்ந்த பரஞ்சோதியாரும் நமது திருவிளையாடல் புராணத்தில் திருமணப்படலத்தில் சோனகர் பற்றி பாடியுள்ளார்.[13] அதே காலவரையில் படைக்கப்பட்டுள்ள சூடாமணி, திவாகர நிகண்டுகளில் சோனகருக்கு விளக்கம் வரையப்பெற்றுள்ளது. தமிழ்மொழி வழங்கிய பதினெட்டு தேசங்களில் சோனகமும் ஒன்று என நன்னூலில் ஆசிரியர் பவணந்தியார் குறித்துள்ளார். இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சென்னை பல்கலைக்கழக பேரரகராதியான லெக்ஷிகன் “சோனகம்” இந்திய துணைக் கண்டத்திற்கு மேற்கே உள்ள அரேபியா, பாரசீகம் நாடுகள் என தெளிவுபடுத்தியுள்ளது. சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார், பழந்தமிழ்நாட்டில், குரவைக்கூத்து, ஆய்ச்சியர் கூத்து போன்று, “சோனக கூத்து” என ஒருவகைக் கூத்து நடிக்கப்பட்டதை தமது உரையில் வரைந்துள்ளார். அதனை “துஞ்சாத அம்மைப் பூச் சோனக மஞ்சரி” எனக் குறிப்பிட்டுள்ளார். கடற்கரைப் பட்டினங்களான தொண்டி, மண்டபம், வேதாளை, கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டினம், கடலூர் ஆகிய ஊர்களில் வழக்கில் உள்ள “சோனகர் தெரு”, என்ற பகுதிகள், பழந்தமிழர்களது குடியிருப்புக்களினின்றும் இவர்களது மனைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே எழுந்தவையாகும். அவை போன்றே, அவர்களது குடியிருப்புகளில் சில, அவர்களது தொன்மையைச் சுட்டும் வகையில் “சோனகன் பேட்டை” (இராமநாதபுரம் மாவட்டம்) “சோனகன் விளை” (நெல்லை மாவட்டம்) என்ற பழம்பெயர்களுடன் இன்றும் வழங்கி வருகின்றன. இதனை "நெய்தல் சார்ந்த மருதத்தில் நேர்வார் துலுக்கர், சோனகராம்” என பிரபந்த திரட்டு சுட்டியுள்ளது.[14] அதே நூலில் இன்னொரு பாடல், பச்சைமலை, கருப்பாறு, வச்சிர வளநாடு, காயல்பட்டினம், ஊர் மாலை, குங்குமம், பசும்புரவி, வெள்ளையானை, சிங்க கொடி ஆகியவை சோனகருக்கு உரியன என்பதாகக் குறிப்பிடுகிறது.[15]

மற்றும் “சோனக வாளை”, “சோனக கெளுத்தி” என்ற மீன் வகைகளைப் பற்றிய விவரங்கள் பேரகராதியான லெக்சிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.[16] இன்னும் “சோனகச் சிடுக்கு” என்றதொரு அணியும் தமிழ் மகளிரது அணிகலன்களில் ஒன்றாக இருந்ததை தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.[17] இவைகளும், இவை போன்ற ஏனைய வரலாற்று, இலக்கியத் தடயங்களும், வணிகத்திற்காக அரபு நாடுகளில் இருந்து தமிழகம் போந்த இஸ்லாமியர் இந்த மண்ணின் நல்ல மரபுகளுக்கு இயைந்து இஸ்லாமியத் தமிழர்களாகி, துலுக்கராகி, பின்னர் சோனகர் என்ற புதுச் சொல்லாலும் வழங்கப்பட்டு வந்தனர் என்பதை ஒருமுகப்படுத்தி உறுதி சொல்வதற்கு உதவுகின்றன. இவ்விதம் சோனகர் தமிழ்ச்சமுதாயத்தின் பல துறைகளிலும் கலந்து தமிழர்களாகவே மாறிவிட்ட பொழுதிலும் ஆந்திர மாநிலத்தில் ராஜராஜ சோழனது ஆட்சிப்பகுதியான திருக்காளத்தியில் நிலைத்து இருந்த சோனகர்களிடமிருந்து “சோனகவரி” வசூலிக்கப்பட்ட செய்தியும் நமது வரலாற்றில் உள்ளது.

  1. William Logan - Malabar Manual (1881)
  2. Nagasamy, Dr. R. South Indian Studies Vol. I. (1978)
  3. Mahavamse—Dr. Geiger (Colombo. 1960) Chap. V. page : 114
  4. நாகசாமி Dr. இரா–தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் (1962) பக்கங்கள் 232, 237, 255
  5. AR-172/1903 (திருக்காளத்தி)
  6. Krishnasami Iyangar Dr. S. - South India and her an Invaders (1921) p. 6. சதாசிவ பண்டாரத்தார் - தொ. மு. பாண்டியர் வரலாறு (1950) பக். 216
  7. AR 455 / 1903 (மாறமங்கலம்)
  8. AR 402 / 1903 (திருப்புல்லாணி)
  9. களவியற் காரிகை - வையாபுரிப்பிள்ளை (பதிப்பு) 1931
  10. திருவாலவாயுடையார் புராணம்-டாக்டர் உ.வே. சாமிநாதஐயர் பதிப்பு (1972) பகு : 206
  11. இராமவதாரம் – (ராஜம் கம்பெனி பதிப்பு) சுந்தரகாண்டம் ஊர் தேடும் படலம் – (பாடல் எண் 110)
  12. திருவிளையாடல் புராணம் – திருமணப்படலம் (பாடல் - 74)
  13. பிரபந்த திரட்டு – (சென்னை 1982) பாடல் 325
  14. பிரபந்த திரட்டு - (சென்னை 1982) பாடல் 325
  15. பிரபந்த திரட்டு, (சென்னை 1982) பாடல் 326
  16. லெக்ஷகன் பேரகராதி (சென்னை 1932) பக் 3395
  17. நாகசாமி இரா - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள் தொகுதி 1. (1962) பக்கம் 42