முஸ்லீம்களும் தமிழகமும்/ராவுத்தர்

5

ராவுத்தர்


பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்து, பதினொன்றாம் நூற்றாண்டில் பரந்துவிரிந்த, சோழப் பேரரசின் நெருக்கம் காரணமாக தென்னகத்திற்கும் அராபிய நாடுகளுக்குமிடையே நிகழ்ந்த பண்டமாற்று அதுவரை இல்லாத அளவிற்கு விறுவிறுப்பை எட்டியது. அராபிய பாரசீக நாட்டுக் குதிரைகள் அதில் பிரதான இறக்குமதியாக இருந்தது. கடைச்சங்க நூலான பட்டினப்பாலை, "நீரின் வந்த நிமிர் பரிப்புரவி" நிறைந்த பூம்புகார் துறையைச் சித்தரிக்கிறது.[1]

“விழுமிய நாவாய் பெரு நீரோச்சுநர்
     நனைந்தவை தேஎத்து நன்கலனுய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்
     வைகறொறும் வழி வழி சிறப்பு ... ...”

என்று மதுரை காஞ்சி, புரவிகள் வந்த வழியை சிறப்பித்து சொல்கிறது.”[2]

“தறுகண் ஆண்மைய, தாமரை நிறத்தன, தகை சால்
     மறுவில்லான் குளம் புடையவன் ... ...”

என்றும்,

“பீள மா மயிலெருத் தன்னப் பெருவனப்புடையன
மாலை மா ராட்டத் தகத்தன வளரிளங் கிளியே
போது மேனிய ... .... ....”

[3]


எனக் குதிரையின் அழகில் மனதை பறிகொடுத்துப் பாடுகிறார் சிவகசிந்தாமணி ஆசிரியர்.

குதிரைகள், தமிழ்நாட்டிற்குப் புதுமையானவை அல்ல. குதிரைகளின் வண்ணம், வடிவு, தன்மை ஆகிய இயல்புகளைக் கொண்டு அவைகளுக்கு, பாடலம், கோடகம், இவுளி, வண்ணி, பரி, கந்துகம், புரவி, கனவட்டம், துரகம், கற்கி, அச்சுவம், துரங்கம், யவனம், குரகதம், வையாளி என பல பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் அவைகளின் உடற்கூறு இலக்கணங்களையும் வரையறுத்து பல நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பரஞ்சோதி முனிவர், தமது பெருநூலான திருவிளையாடற் புராணத்தில் பல வகையான பரிகளையும், அவைகளின் இயல்புகளையும் அவைகள் எந்தெந்த நாடுகளைக் சார்ந்தவை என்பதையும் விவரமாகக் குறிப்பிடுவதுடன், "யவனம்" என்ற வகைப் புரவி மக்கத்தில் உள்ளவை என பாகுபடுத்தி பாடியுள்ளார். கடம்பர்களும் பல்லவர்களும் தங்களது ஆட்சியில் குதிரைகளை நம்பி இருந்ததாக பேராசிரியர் நீலகண்டசாஸ்திரிகள் வரைந்துள்ளார்.[4] தொன்றுதொட்டு, தமிழ்நாட்டின் நால்வகைப் படைப் பகுப்பில் குதிரைப்படையும் ஒரு பிரிவாக இருந்து வந்துள்ளதை யாவரும் அறிவர். அறுபத்து நான்கு கலைகளில் குதிரைஏற்றமும் ஒன்றாக இருந்தது. போரில் குதிரையின் மறத்தைப் பற்றிப் பாடுவதற்கான துறையொன்று வகுக்பட்டிருந்ததை புறப்பொருள் வெண்பாமாலை சுட்டுகின்றது. பத்தாவது நூற்றாண்டில், சோழப் பேரரசுப் பெருக்கத்திற்கு' குதிரைகள் பெருமளவில் தேவைப்பட்டன. இந்த உண்மையை அந்தக் காலத்து இலக்கியங்களான கலிங்கத்துப்பரணி, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், மூவருலா, முத்தொள்ளாயிரம் ஆகிய இலக்கியங்களில் சோழர்களின் வெற்றியுடன் குதிரைகள் பற்றிய புகழ்ச்சியும் புனைந்து ஆங்காங்கே குறிப்பிடப்படுகிறது. பாரசீக, அரபுநாடுகளில் இருந்து, சோழநாட்டில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது அரபிய முஸ்லீம்களும் தமிழகத்திற்கு உடன் வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. தொடக்கத்தில், குதிரைகள் பெரும்பாலும் கொங்கண, கேரளக்கரைப் பட்டினங்களில் கரை இறக்கப்பட்டு, கொங்கு நாட்டு வழியாக சோழ நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இன்னும், கோழிக்கோடு நகரில் குதிரை வட்டம் என்ற பகுதியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் குதிரைப்பாளையம் என்ற ஊரும் இருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இத்தகைய வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை “குதிரைச் செட்டிகள்” என கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.[5]

அரபுக்குடா நாட்டுக் குதிரைகளின் நடமாட்டமும் வணிகமும், பிற்காலப் பாண்டிய பேரரசு காலத்திலும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆண்டுதோறும், பதினாயிரம் குதிரைகள் பாண்டிய நாட்டுப் பெருந்துறைகளான காயல்பட்டினம், தேவிபட்டினம், ஆகிய துறைகளில் கரை இறக்கப்பட்டன.[6] அங்கிருந்து, அவை முறையே நெல்லைக்கும் மதுரைக்கும் நடத்தி, கடத்திச் செல்லப்பட்டன. அந்த வழிகளில் ஒன்று இன்னும் முதுகுளத்துார் வட்டத்தில் “குதிரை வழிக்காடு” என்று வழங்கப்படுகிறது. அந்த வழியைத் தொடர்நது திருச்செந்தூர் பரமன்குறிச்சியில், “குதிரை வழிக்குளம்” இருந்து வருவது ஆராயத்தக்கது. இந்தக் குதிரைகளை பாண்டியனுக்காகப் பெற்றுவரச் சென்ற வாதவூரர், திருப்பெருந்துறையில் திருப்பணி செய்து தீட்சை, பெற்று மாணிக்கவாசகரான கதையை திருப் பெருந்துறைப்புராணம், “கோட்டமிலா மாணிக்கவாசகர் முன் குதிரை ராவுத்தனாக” இறைவன் வந்து" நின்றதாகக் குறிப்பிடுகிறது.[7] அந்த திருப்பெருந்துறையில் உள்ள ஆலயத்தின் முகப்பு மண்டபம், குதிரை வீரர் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பதுடன், “ராவுத்தர் மண்டபம்” என வழங்கப்படுதலும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. மதுரை திருவிளையாடல் புராணத்தில், பரஞ்சோதி முனிவர், குதிரை வணிகராக வந்த கூடல்மாநகர இறைவனை,

“இன்னைறி மன்னர் மன்னர்

இனிமை கர்ந்து இராவுத்தற்கு”

நன்மை கூர் வரிசைத் தூசு
நல்குமென்று ... ..." எனவும்,

பெரும்பற்றப்புலியூரார்

“துய்ய பேரூலஇற் கெல்லாம் துலங்கிய ராவுத்தராயன்” எனவும் பாடுகின்றார்.[8] பதினைந்து நூற்றாண்டு இலக்கியங்களான கலிவெண்பாவிலும், கந்தர் அலங்காரத்திலும் அருணகிரிநாதர் தாம் வழிபடும் முருகவேளை,

“சூர்க்கொன்ற ராவுத்தனே! .... .... ....”
“மாமயிலேறும் ராவுத்தனே! .... .... ....”

என குதிரை ராவுத்தனாகவே கற்பனை செய்து பாடியுள்ளார்.[9] பாரசீகக் குடா நாடுகளான, கிஷ், ஹெர்முஸ், குரோஷான், காத்திப், லஹ்ஸா ஆகிய இடங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு ஐயாயிரம் முதல் பதினாயிரம் குதிரைகள் பாண்டியப் பேரரசனால் தரவழைக்கப்பட்டன வென்றும் ஒவ்வொரு குதிரைக்கும் இருநூற்று இருபது தினார் (செம்பொன்) வழங்கப்பட்டதென்றும் வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் வரைந்துள்ளார்.[10]

இவைகளில், பாரசீக நாட்டில் இருந்து வரப்பெற்ற குதிரைகள் “பரி” என்றும், துருக்கி நாட்டுக் குதிரைகள் "துரகம்" என்றும், மத்திய ஆசியா கொராஸன் பகுதி குதிரைகள் “கோரம்” என்றும் வழங்கப்பட்டன.[11] இவைகளிலும், சேரமன்னர் குதிரை "பாடலம்" என்றும் சோழனது குதிரை "கோரம்" என்றும் பாண்டியது பரி "கனவட்டம்" என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. "கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானை ...” என்பது கவியரசர் ஒட்டக்கத்தர்

“அரபு நாட்டுக் குதிரைகள்

பதிநான்காம் நூற்றாண்டில் தமிழகம் வருதல்”

(திருப்பிடைமருதுார் கோயில் கோபுர வண்ண ஒவியம்)
வாக்கு.[12] குதிரையைக் குறிக்கும் “பரி” என்ற சொல்லும் FAR என்ற பாரசீகச் சொல்தான். இந்த திசை சொற்களை ஒட்டி குதிரை சம்பந்தமான சேணம் (Cenam), லகான் (Lakan) சவுக்கு (Cavukka) சவாரி (Safary) என்ற பாரசீக சொற்கள் தமிழில் கலந்து தமிழாகவே வழக்கில் உள்ளன. இன்னும் கடிவாளம், மொக்கனி என்பன இத்தகு தொடர்புடைய தமிழ் வழக்காகும்.

அரபு நாட்டுக்குதிரைகளும் அரபியரும் பெரும் மரக்கலங்களில் நமது கடற்கரைக்கு வந்து சேரும் நிகழ்ச்சியை வண்ண ஒவியமாக திருப்புடை மருதூர் கோபுரதளத்தில் தீட்டப்பட்டுள்ளது.[13] அந்த ஒவியத்தை உற்று நோக்கியபின் இந்தப்பாடலைப் படித்துப்பாருங்கள்’’.

          “இருங்கழிச் செறுலின் தீம்புளி வெள்ளுப்பு
          பரந்தோங்கு வரைப்பின் வன்னகத் திமிலர்
          கொழுமீன் குறைகிய துடிக்கட் ருணியல்
          விழுமிய நாவாய் பெருநீரோச் சுநர்
          நனந்தலை தேஎத்து நன்கல னுய்ம்மார்
          புணர்ந்துடன் கொணர்ந்த புரவி யோடனைத்தும்...”

— மதுரை காஞ்சி 8–16:26

இதனை ஒருமுறை மீண்டும் படித்து விட்டு ஓவியத்தை உற்று நோக்குங்கள், இந்தப் பாடலை அப்படியே தூரிகையால் திட்டப்பட்டுள்ளது போன்று தெரியவரும். இந்த ஓவியம் பதினாம்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்தக் குதிரை வணிகம் இரு நாடுகளின் உறவு நிலையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், தமிழகத்தில் பல்லாயிரம் அராபிய இல்லாமியர் வந்து தங்குவதற்கான பொன்னான வாய்ப்பும் வாழ்க்கை நிலையையும் உதவின. தமிழ் மண்ணில் வந்து இறங்கிய அரபிக் குதிரைகளைப் பழக்கி, தமிழ்நாட்டு முறையில் பயிற்சி அளித்து வரவும், அவைகளுக்கு ஏற்ற உணவு வகைகளை கொடுத்துப் பராமரிக்கவும், வைத்திய உதவி வழங்கவும், அரபிகளது பணி தேவைப்பட்டது. குதிரை வளர்ப்பில் பழக்கமும் திறமையும் மிக்கவர்கள் அன்றைய தமிழகத்தில் அரிதாக இருந்தனர்.[14] பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த இந்த வணிகத்தைப் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள் விவரமாக வரைந்துள்ளனர். இந்த நூற்றாண்டு இறுதியில் பாரசீக நாட்டில் இருந்து குதிரை வியாபாரிகளாக வந்த சுல்தான் குலி என்பவர் கி.பி. 1518ல் ஐதராபாத் சமஸ்தானத்தில் (ஆந்திராவில்) குதுப் ஷாஉறி பரம்பரை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.[15] அத்துடன் இந்தக் குதிரை வணிகத்தால் தமிழ்நாட்டு அரசு வருவாய் இனங்களில் மூன்று புதிய இனங்கள் ஏற்பட்டன. அவை, குதிரை வரி, குதிரைக் காணிக்கை, குதிரைப் பந்தி என்பவையாகும்.[16] பாண்டியர்களது ஆட்சியின் முடிவு வரை அமுலில் இருந்ததை பல கல்வெட்டுக்களில் இருந்தும் செப்பேடுகளில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றும் நாயக்கர்களது, ஆட்சியின் பொழுது "குதிரைக் கொடை" என்ற சிறப்பும் வழக்கில் இருந்தது, தெரியவருகிறது.[17] இவ்விதம் ஒரு கால கட்டத்தில் தமிழக அரசியலில் பிரதான அங்கமான அரபு நாட்டுக் குதிரைகள் விளங்கியதுடன் அதனைக் கொணர்ந்து பழக்கி, பேணி, தமிழ் மன்னர்களுக்குப் பயன்படச் செய்து அரபிகள், ராவுத்தர்களென பெயர் பெற்றதும் தமிழர்களுடன் மண உறவு கொண்டு தமிழ்க் குடிகளாகவே மாறிவிட்டது, நமது வரலாற்றில் சிறப்பான அம்சமாகும்.

தொன்மைக் காலங்களில், தமிழக இஸ்லாமிய அரபிகளுக்கு இந்த சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. நாளடைவில் குதிரை வணிகம் மட்டுமல்லாமல், அரசு சேவையில் குதிரை வீரராகவும், குதிரை அணியின் தளபதியாக விளங்கியவர்களைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்பட்டுள்ளது. திருப்பெருந்துறையில், குதிரை வணிகராக வந்து, தனது துயர்களைந்த இறைவனை, "துய்ய பேருலகிற்கெல்லாம் துலங்கிய ராவுத்த ராயன்" என வாயார, வாழ்த்துகிறார் வாதவூர் அடிகள். இராமப்பையன் அம்மானை குதிரையணி தளபதியை “ராவுத்த கர்த்தன்” என குறிப்பிடுகிறது,[18] “ராவுத்தராயன்” “ராவுத்தகர்த்தன்” என்ற வழக்குகளும் இஸ்லாமியத் தமிழர்களைச் சுட்டுவதற்காக எழுந்த சொற்களாகும். இந்தச் சொற்களுக்கான வேர். எந்த மொழியில் ஒட்டியுள்ளது என்பது ஆய்வுக்குரிய தொன்றாகும். ராபித்தூ என்ற அரபிச் சொல். தமிழில் விகாரமடைந்த “ராவுத்த” என்ற வழக்கு பெற்று இருப்பதாக சிலர் கருதுகின்றனர். எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன் என்பதே ராபித்துள். தமிழில் மட்டுமல்லாமல், “ராவுத்தர்” தெலுங்கு மொழியிலும் “ராவுத்” எனச் சற்று குறுகலான வடிவில் வழக்கில் இருந்து வருகிறது. குதிரை வீரன் என்ற பொருளில், “இம்மாடி ராகுத்தராயன” “ராகுத்தராயன் சிங்கப்ப நாயக்கன்” போன்ற தெலுங்கு மன்னர்களது பெயர்கள் திருப்பதி – திருமலை கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.[19] ஈரோடு கல்வெட்டு ஒன்று, தெலுங்கு ஆளுநரான “பர்வத ராகுத்தன்” என்பவரைக் குறிப்பிடுகிறது.[20] ராஜராஜ சோழனது விருதுகளில், “ராகுத்தமிண்டன்” என்ற சொல்லும் வழங்கி வந்துள்ளது,வடஆற்காடு மாவட்டம், காவேரிப்பாக்கம் கல்வெட்டுக்களில் கி. பி. 1509ல் சிங்கய ராவுத்தன் தங்கல் என்ற கிராமமும் கி. பி. 1530ல் காமாட்சி ராவுத்தன் தங்கல் என்ற கிராமம் குறிப்பிடப்பட்டுள்ளன.[21] சேலம் மாவட்டம் ஆறகழுர் கல்வெட்டு ஒன்றில் ஹொய்சாள ராமதேவரது பதின்மூன்றாவது ஆட்சியாண்டில், நாட்ட மங்கலம் என்ற கிராமம் ராகுத்த ராயன் இறையிலி தேவதானமாக" வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[22] மதுரை சொக்கேசர் ஆலயத்திருப்பணி செய்தவர்களில் திம்மு ராவுத்தர் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.[23]அவரது காலம் கி. பி. 1564 என்றும் தெரிய வருகிறது. அவரைத் “தண்டமிழ்க் கச்சி வளம்பதி வாழுஞ் சதுரன்” என்றும் “திண்டருங் கீர்த்தி மிக்க சுவப் பையன் திம்மு ராவுத்தனே” என்றும் புகழ்ந்து உரைப்பவை திருப்பணி மாலையில் உள்ள தொடர்கள். பெரும்பாலான முஸ்லீம்கள், இன்றும் “ராவுத்தர்” என்ற விகுதியை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வது போல தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்களில் சிறு ஒரு பிரிவினர் தங்கள் பெயருடன் “ரவத்” என்ற விகுதியையும் இணைத்து வழங்குகின்றனர். தென்னகத்தில் நிலவும் சாதிகளையும் குடிகளையும் முழுமையாக ஆய்வு செய்து பல தொகுதிகளாக தமது ஆய்வினை வெளியிட்டுள்ள ஆசிரியர் எட்கார் தர்ஸ்டன், ராவுத்தர் என்பவர்கள், இஸ்லாமிய மக்களான லெப்பை, மரக்காயர், மற்றும் சோனகர் பயன்படுத்தும் விருதுப்பெயர் என்றே குறிப்பிட்டுள்ளார்.[24] பிற்கால இலக்கியமான பிரபந்த திரட்டு, தமிழகத்தில் வசித்து வரும் பல்வேறு சாதிகளில் ராவுத்தரும் ஒரு பிரிவினர் என தொகுத்துள்ளது.[25]

தங்களது தொன்மையை இவ்விதம் நினைவு கூறும் வகையில் தமிழக ராவுத்தர் இன்றும் மணவிழாக்களில் பொழுது, மணமகனை நன்கு அலங்கரித்து குதிரைமீது ஏற்றி வைத்து, மணமகள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தப்பழக்கம், தமிழக இஸ்லாமியர்களிடையே நானூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்து வந்தது என்பதை பெரும் புலவர் உமறுவின் பாடல்களில் இருந்து புலப்படுகிறது. இறைமறையை வெளிப்படுத்தி இஸ்லாத்தைப் பரப்பிய ஏந்தல் நபி நாயகம் அவர்களது வாழ்க்கையை விவரிக்கும் சீறாப்புராண காவியம், தமிழ் நாட்டில் இயற்கைப் பின்னணி, பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவைகளை உள்ளடக்கியதாக புனையப்பட்டு உள்ளது. மணமகனாகிய முகம்மதுநபி (ஸல்) அவர்கள் மணக்கோலத்துடன் பரியில் அமர்ந்து பவனியாக மணமகள் இல்லம் சென்றதை,

        “ தாவிய பரி மேற் சேனைத் தளத் தொடும் வீதி வாயின்
          மேவிய வள்ளலார் தம் மெய் எழில் நோக்கி ... ...”

        “ கடுநடைப் புரவி மேலாய் கவிகை மாநிழற்ற வந்த
          வடிவுடை முகம்மதின் தன் வனப்பலால் வனப்பு மில்லை .... ..”


 “திரையின்றி பிறந்த மொழியார் செழுமனித் தீபங் களேந்த
 இருபுற நெருங்கி அயினிநீர் சுழற்ற வெண்ணில ஆலத்தி எடுப்ப
 பாவையின் மறையில் குரவையுஞ் சிலம்ப பரியை விட்டிரங்கின என்றே.”

எனவும் அவர் பாடியுள்ளார்.[26] பாய் பரியினரான இஸ்லாமியரைப் போன்று தமிழகத்தில் “நகரத்தார்” “நாட்டுக் கோட்டையார்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்ற செட்டி மக்களது மணவினையில் முதல்அங்கமாக, இவுளி மீது மணமகன் இவர்ந்து மணமகள் இல்லம் சென்று மணவினை மேற்கொள்வது இன்றளவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்திய நாட்டின் பிற மாநிலங்களான காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களிடமும் இந்த பழக்கம் இருந்து வருகிறது. இதனை, அங்கு “பராத்” (பவனி) யென அழைக்கின்றனர். இன்னும் விஞ்ஞானத்தில் மிகமிக வளர்ச்சியுற்ற சோவியத் யூனியனில் கூட காஜகிஸ்தானில் மணமகன், மணமகளைத் தனது குதிரையில் ஏற்றிக்கொண்டு ஊருங்கிளையும் உடன்வர, மணவினைப் பதிவு அலுவலகத்திற்குச் செல்வது இன்றளவு வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்விதம், தமிழகத்தில் அரபிக் குதிரைகளுடன் வந்து தங்கி நிலைத்த தமிழக இசுலாமியரான ராவுத்தர்களது உறைவிடம், “ராவுத்தர்” என்ற விகுதியுடன் பல ஊர்கள் அமைந்து உள்ளன. அவைகளில் சில :

1. ராவுத்த நல்லூனர்  கள்ளக்குறிச்சி வட்டம்
2. ராவுத்த நல்லூர்  காஞ்சிபுரம் வட்டம்
3. ராவுத்தன்பட்டி  குளித்தலை வட்டம்
4. ராவுத்தன்பட்டி  திருமங்கலம் வட்டம்
5. ராவுத்தன் வயல்  பட்டுக்கோட்டை வட்டம்


|- | 6. || ராவுத்தர் பாளையம் |||| திருநெல்வேலி வட்டம் |- | 7. || ராவுத்தர் சாயபு தர்கா |||| அறந்தாங்கி வட்டம் |- | 8. || ராவுத்த ராயன் குப்பம் |||| திருக்கோயிலூர் வட்டம் |- | 9. || ராகுத்த ராய நல்லூர் |||| ஈரோடு வட்டம் |}

இவை அனைத்தும் இஸ்லாமியத் தமிழர்களது தொன்மையான இருப்பிடங்கள் என்பதில் ஐயமில்லை. மேலும், ராவுத்தருக்கும் குதிரைக்கும் உள்ள சம்பந்தத்தை தெரிவிக்கும் வழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் “குதிரைக்காக ராவுத்தர். கொக்காகப் பறந்தார்” என்பது இன்றும் வழக்கில் உள்ளது. ஆனால் தமிழகமெங்கும் உள்ள ராவுத்தர் வழியினரிடம் இன்று குதிரையும் இல்லை; குதிரைச் சேவகமும் தொழிலாக இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.

  1. உருத்திரங்கண்ணனார் - பட்டினப்பாலை
  2. மதுரைக்காஞ்சி - பாடல் எண். 8-16 28
  3. திருத்தக்க தேவர்-சீவகசிந்தாமணி (மணமகள் சிலம்பகம்) பாடல் எண் 158.6
  4. Nilakamta Sastri. K.A. Foreign Notices of South India(1972) Introduction.
  5. A R. 556/1904
  6. கமால் – டாக்டர் எஸ்.எம் - இராமனாதபுர மாவட்ட வரலாற்று குறிப்புகள். (1984) பக்கம் 71-72
  7. திருவாதவூரர் – திருப்பெருத்துறைப்புராணம்
  8. பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம்.
    பெரும்பற்றப் புலியவர் நம்பி - திருவாலவுடையார்
    திருவிளையாடல் புராணம் (நரிகுதிரையான படலம்)
    பாடல் எண் : 83.
  9. அருணகிரி நாதர் - கந்தர் அலங்காரம்
  10. Elliott and Dowson - History of India (vol. III)
  11. Sethu Pillai R.P. - Words and their Signifigance p. 22
  12. ஒட்டக் கூத்தர்-தனிப்பாடல் இரட்டு
  13. Hariharan S. South Indian Studies vol II p. 173 – 174.
  14. Nilakanta Sastri K. A–Foreign Notices of s. India – p. 173
  15. Syed Yousuff-Guide to Hydrabad anp Golconda Fort-p.14.
  16. Tirumalai - Tirupathi Inscription - T. T. 164, G. T. 11, 40>
  17. A. S. S. I. VOL. IV (1886) p. 107
  18. இராமய்யன் அம்மானை (1958)
  19. A.R. 442/1906 – கோபி செட்டிபாளையம்
  20. A.R. 169/1910 – விஜயமங்கலம்
  21. A.R. 367/1912 – காவேரிப்பாக்கம்
  22. A.R. 414/1913 – ஆறகழுர்
  23. மதுரை திருப்பணி மாலை (பாடல் எண்)
  24. Edgar Thurston-Castes and Tribes in South India (1909) vol. 5. p. 247
  25. பிரபந்த திரட்டு (1982) பாடல் எண் :362
  26. உமறுப்புலவர் - சீறாப்புராணம் - மணம்புரி படலம் பாடல்கள் 58, 73