முஸ்லீம்களும் தமிழகமும்/தில்லியும் தமிழ்நாடும்

12

தில்லியும் தமிழ்நாடும்


பாண்டியப் பேரரசை தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த முதலாவது மாறவர்மன் குல சேகர பாண்டியன் கி.பி. 1310ல் அவனது மக்களால் கொலையுண்டான். மதுரை, கொங்கு ஆகிய பகுதிகளில் முழு உரிமையுடன் ஆட்சி புரிந்த பாண்டிய இளவல்கள், பேரரசு கட்டிலில் அமருவதற்கு போட்டியும் பூசலும் விளைவித்தனர். தமது குறிக்கோளை எய்துவதற்கு அந்நியர் தலையீட்டையும் உதவியையும் எதிர்பார்த்தனர். இன்றைய கருநாடாகப் பகுதியான துவார சமுத்திரத்தில் ஆட்சி புரிந்த ஹொய்சாள மன்னன் மூன்றாவது வீர பல்லாளனது நட்பை, வீரபாண்டியன் நாடினான். இன்னொரு இளவலான சுந்தர பாண்டியன், தில்லியில் அரசாண்ட அலாவுதீன் கில்ஜியின் உதவியைக் கோரினான். இதனைத் தஞ்சை மாவட்ட திருக்களர் கல்வெட்டு "முன்னால் ராசராசன் சுந்தர பாண்டியன் துலுக்கருடன் வந்த நாளிலே, ஒக்கருடையாரும் இவருடைய தம்பிமாரும் அனைவரும் அடியாரும் செத்தும் கெட்டும் போய் அவரது ஊரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாய் இருக்கிற அளவிலே ... ... ... ... " என்று விவரிக்கிறது.[1] முடிவு பாண்டியர்கள் தங்களது ஒற்றுமைக் குறைவாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் சிறுகச் சிறுக அழிந்தார்கள்.

இவர்களது பூசலில் தலையிட்ட தில்லி தளபதி மாலிக்காபூர், அவர்களது பலவீனத்தைப் புரிந்து கொண்டு, அவர்களைப் புறக்கணித்தவனாக இராமேஸ்வரம் வரை ஊடுருவிச் சென்று தமிழகத்தில் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய கோயில்களில் கொள்ளைப் பொருட்களுடன் கி.பி. 1311 ல் தில்லி திரும்பினான். அப்பொழுது அவனது சிறிய படையணி யொன்று மதுரையில் தளம் கொண்டிருந்தது.[2] ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம். மீண்டும் கி.பி. 1318ல், தளபதி குஸ்ராகான் தலைமையில் தில்லிப் படையொன்று தமிழகத்தை சூறையாட வந்தது. பாண்டிய நாட்டுப் பெருநகரான பத்தனி (பவித்திர மாணிக்கப்பட்டினத் தி)லிருந்து பாண்டியனும் அவனது ராஜகுருவும் பயந்து பட்டினத்தை விட்டு மறை இடங்களுக்கு ஓடினர். அப்பொழுது பாண்டியனது அமைச்சராக இருந்த பெரு வணிகர் சுல்தான் விராஜ் தக்யுதீன் மட்டும் கொள்ளைக்காரன் குஸ்ராகானுக்கு அஞ்சாமல் பத்தனில் இருந்தார். அவர் ஒரு அராபிய முஸ்லீம் என்பதைக் கூட கருதாமல் கொடியோன் குஸ்ரு அவரை கைது செய்து அவரது பெருஞ் செல்வத்தை கொள்ளை கொண்டான். பிறகு அந்தக் கல்நெஞ்சன் அவரைக் கொலை செய்து விட்டான் என வரலாற்று ஆசிரியர் சாகிருத்தீன் பர்னி குறித்துள்ளார்,[3] ஆனால் இன்னொரு வரலாற்று ஆசிரியரான அபீர் குஸ்ருவின் குறிப்புகளில் கொள்ளையன், சுல்தான் ஸிராஜுதீனது அழகிய மகளைத் தனக்கு மணமுடித்து தருமாறு கட்டாயப் படுத்தினான் எனவும், அதனால் மனமுடைந்த சுல்தானும், அவரது அழகு மகளும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர் எனவும் வரையப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் வந்த பாரசீகக் கவிஞர் இஷமி, இந்த சோக நிகழ்ச்சியை ஒரு சிற்றிலக்கியமாகவே பாடியுள்ளார்.[4]

பாண்டிய நாட்டில் எழுந்த சீரழிவு, குழப்பம் ஆகியவைகளின் பின்னணியில் தமிழகம் தில்லிப் பேரரசுடன் கி.பி. 1323ல் இணைக்கப்பட்டது.[5] தில்லிப்படையின் ஒரு அணி தொடர்ந்து மதுரையில் செயல்பட்டு வந்தது. அன்றைய கால நிலையில் மதுரை தில்லியுடன் தொடர்பு கொள்ள பத்து மாதங்கள ஆகின. கி.பி. 1320ல் ஆட்சிக்கு வந்த கியாஸுதீன் துக்ளக் ஆட்சி நீடிக்கவில்லை. அவரது வாரிசான முகம்மது பின் துக்ளக் கி.பி. 1323ல் பதவி ஏற்றபொழுது, மாபார் என அரபிய வணிகர்களால் அழைக்கப்பட்ட தமிழகம் தில்லிப் பேரரசின் இருபத்து மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்து வந்தது. அவருடைய குழப்பமான அரசியல் முடிவுகளும், மக்களது மனநிலையைப் பிரதிபலிக்காத அவரது நடைமுறைக்கொள்கைகளும், தில்லித் தலைநகரை மாற்றும் திட்டமும், அவருக்கு பல புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்தன. சில அரசியல்வாதிகள் இதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு வடக்கே இருந்த தில்லிப் பேரரசின் மாநிலங்களான காம்பிளி, திலாங் ஆகியவைகள் தில்லி பேரரசில் இருந்து விடுபட்டு தன்னாதிக்கம் பெற்றன. இதனால் மாபார் தில்லியில் இருந்து துண்டிக்கப்பட்டது. அவரது ஆட்சி முறையை எதிர்த்தனர். அவர்களில் ஒருவராக அவரது உறவினரும் மதுரை ஆளுநருமான செய்யத் ஜலாலுதீன் அஸன் தன்னாட்சி பெற்ற தனி மன்னராக, மாபாரின் சுல்தானாக கி.பி. 1333ல் மதுரையில் ஆட்சி பீடமேறினார்.[6] அவரைத் தொடர்ந்து எட்டு சுல்தான்கள் மதுரை மன்னர்களாக கி.பி. 1378 வரை ஆட்சி புரிந்தனர். அவர்களின் பெயர்களும், ஆட்சிக்காலமும்.

1. ஜலாலுத்தின் அஷன்ஸா கி.பி. 1333–1340 வரை
2. அலாவுதீன் உத்தொஜி கி.பி. 1340–1341 வரை
3. குத்புதீன் கி.பி. 1341 (நாற்பது நாட்கள்)
4. கியாஸுத்தீன் தமகானி கி.பி. 1341–1344 வரை
5. நஸிருத்தீன் கி.பி. 1344–1355 வரை
6. அதில் ஷா கி.பி. 1356–1358 வரை
7. பக்ருத்தீன் முபாரக்ஷா கி.பி. 1359–1371 வரை
8. அலாவுதின் சிக்கந்தர்ஷா கி.பி. 1372–1378 வரை
இவர்கள் வெளியிட்ட வெள்ளி, செம்பு நாணயங்களின் நிழல்படம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை மதுரை, பெரிய
மதுரை சுல்தான்கள் நாணயங்கள்
பட்டினம், அழகன்குளம், ஏர்வாடி ஆகிய ஊர்களில் அகழ்ந்து எடுக்கப்பட்டவை. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையூர், ராங்கியம் ஆகிய ஊர்களில் கி.பி. 1332, 1341 களிலும் வருட ஆட்சிக்கால கல்வெட்டுக்களிலும் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் திருக்கோலக்குடி, கண்டதேவி ஆகிய ஊர்களில் கி பி. 1358, 1368 வருட ஆட்சிக்கால நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன.[7] இவைகளைத் தவிர இந்த சுல்தான்களின் ஆட்சி விவரங்களை அறிவிக்கக்கூடிய வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை. அத்துடன் மதுரை சுல்தான்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி பற்றிய சரியான விவரங்களும் இல்லை. எனினும் சுல்தான்களது ஆட்சியை அகற்றிய குமாரகம்பணனது மனைவி கங்காதேவியின் மதுரை விஜயம்! என்ற நூலில் இருந்து, சிதம்பரத்திற்கு தெற்கே உள்ள தமிழகம் முழுவதும் மதுரைக்கு உட்பட்டு இருந்தது என்ற குறிப்பு கிடைக்கிறது.[8] சோழ மண்டலக் கரையையொட்டிய தஞ்சை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், திருநெல்வேலி,சீமைகளுடன் மதுரையும், தென்ஆற்காட்டில் ஒருபகுதியும் இணைந்த பகுதி என டாக்டர் ஹூசேனி கருத்து தெரிவித்து இருக்கிறார்.[9] சுல்தான் கியாஸுதீன் தமகானி ஆட்சியின் பொழுது மதுரைக்கு கி.பி. 1344ல் விஜயம் செய்த துணிவதிய நாட்டுப் பயணியான இபுனு பதூதாவின் பயணக் குறிப்புகள் ஒரு சில விவரங்களைத் தருகின்றன. மதுரை சுல்தான் ஈவு இரக்கம் இல்லாமல் தனது எதிரிகளை அழித்து ஒழித்த கொடுஞ் செயல்கள், கண்ணனூர் கொப்பம்போர், அங்கு சிறைபிடிக்கப் பட்ட ஹொய்சள நாட்டு மன்னன் (வீர பல்லாளா) கொல்லப்பட்டது. தில்லிநகர அமைப்பில் மதுரை நகரம் அமைக்கப்பட்டு இருப்பது ஆகியவை பற்றிய விபரங்கள் அவை.

சிறிது காலம் கழித்து இபுனு பதூதா மீண்டும் பத்தனுக்கு வந்து அங்கிருந்து ஏமன் நாட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த எட்டுக் கப்பல்களில் ஒன்றில் பயணமாகி கொல்லம் போய்ச் சேர்ந்தார், என்றாலும் இந்த சுல்தான்களின் ஆட்சி, தமிழகத்தில் எந்தவிதமான புதிய சாதனையும் ஏற்படுத்த இயலவில்லை என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. அன்றைய கால கட்டத்தில் தமிழக அரசியலில் நிலவிய பிரிவினை சக்திகளின் ஒரு அங்கமாகவே தனிமையுற்று அந்த ஆட்சி தோற்றமளித்தது. காரணம் மதுரை அரசை எந்த சந்தர்ப்பத்திலும் கைப்பற்றி தங்கள் அரசுடன் இணைப்பதற்கு மதுரை சுல்தான்களின் எதிரிகள் தயாராக இருந்தனர். வடக்கே தொண்டை மண்டலத்தை ஆண்ட ராஜ கம்பீரச் சம்புவரயர்கள், வடமேற்கே கொப்பத்தையும் அடுத்து திருவண்ணாமலையும் கோநகர்களாகக் கொண்டு ஆட்சி செய்த ஹொய்சாள மன்னர்கள். திருவிதாங்ரில் ஆட்சி செய்த மன்னர் ரவிவர்ம குலசேகரன் ஆகியோர் மற்றும் ஆங்காங்கு சில பகுதிகளில் ஆட்சி செய்த பாண்டிய இளவல்கள் இவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி "இந்து ராஜ்யம்" என்ற சமயப் பூச்சில் தென்னகம் முழுவதையும் ஆந்திர ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்றான் குமார கம்பண்ணன். இந்த இக்கட்டான சூழ்நிலையை, மதுரயிைல் மலர்ந்த இசுலாமியரின் புரட்சி அரசு, சமாளித்து நின்றது. கி. பி. 1342ல் மதுரை சுல்தான் மூன்றாவது விரபல்லாளனைக் கொப்பம் போரில் முறியடித்தார். [10]தெற்கே தனது கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த குமார கம்பண்ணன் ஹொய்சாள அரசு வீழ்ச்சியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொண்டை நாட்டு சம்புவரையர்களை கி.பி. 1347ல் வென்றான். அடுத்து அவனது படைகள் குழப்பத்திலிருந்த தமிழகத்தை ஊடுருவி சேது மூலம் வரை சென்று திரும்பின. இந்தப் படையெடுப்பிற்கான நியாயத்தை அவனது மனைவி கங்காதேவி ஸமஸ்கிருதத்தில் எழுதிய கம்பராயன சரித்திரம் அல்லது "மதுரை விஜயம்" என்ற கற்பனைக் காவியத்தில் குறிப்பிடுகின்றார்.[11]

பாண்டிய நாட்டு ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறவில்லை. தாம்பிரபரணி ஆறு, பசுக்களின் இரத்தஆறாக ஓடியது. தமிழ்நாடு அடுக்களைகளில் சமைக்கப்படும் இறைச்சியின் மனம் எங்கும் பரந்து வீசியது. முந்தைய பாண்டியர்களுக்கு அகத்திய முனிவரால் வழங்கப்பட்ட வீரவாள் மூலையில் கிடந்தது. அதனை சுமங்கலியான பெண் ஒருத்தி கம்பனனிடம் கொடுத்து துலுக்கர்களை வெற்றி கொள்ளுமாறு வேண்டினாள்". . . . . . இங்கனம் தொடர்கிறது அந்த கற்பனைக்காவியம்! கணவனைப் புகழ்ந்து பாடும் மனைவியின் பாடல்கள் வேறு எப்படி இருக்கும்? இசுலாமியர்களுக்கு எதிராக இதைவிட மோசமான கற்பனையை அந்த அம்மையார் செய்ய இயலாது! இது ஒருதலைப்பட்சமான மிகைப்படுத்தப்பட்ட வர்ணனை இதனை உறுதி செய்யும் வேறு ஆதாரம் எதுவும் கிடைக்க வில்லையென்றாலும், மதுரை மீதான குமார கம்பனனது மின்னல் தாக்குதல் கற்பனையல்ல. இந்த தாக்குதலுக்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், மதுரை சுல்தான்களது ஆட்சி தொடர்ந்ததை வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் மதுரையிலும், பெரிய பட்டினத்திலும், கிடைத்த மதுரை சுல்தான்களது காசுகள் அவர்களது ஆட்சிக்கால வரம்பை தெளிவாக தெரிவிப்பனவாக உள்ளன.[12]தொடர்ந்து குமார கம்பனது வெற்றி தென்னகத்திலும் விஜயநகரப் பேரரசு உருவாகும் ஒரு புதிய திருப்பத்தின் முன்னறிவிப்பாக அமைந்தது.

பாமர மக்களின் மத உணர்வுகளை கூர்மைப்படுத்தி அந்நியர்களாக, தமது மத விரோதிகளாக, மதுரை சுல்தான்களைத் தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களைத் தனிமைப்படுத்தி. முடிவில் அவர்களது அரசை கி.பி. 1378 ல் கம்பணன் அகற்றினான். ஆனால், தலைமுறை தலைமுறையாக தென்னகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களது. தமிழ்வேந்தர்களது வழித் தோன்றல்களிடம் இந்த மன்னர்களிடம் அவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் கொடுக்கவில்லை. மாறாக தமிழ் மண்ணில் வடுகரது பாளையப்பட்டு ஆட்சியும், தல, தேச, திசை காவல் முறைகளும் அவர்களது கலாச்சாரமும், ஆந்திர நாட்டிற்கு தெற்கே தமிழகம் முழுவதும் அரசியல் மூலமாக பரவுவதற்கு வழி வகுத்தன. வெகு தொலைவில் உள்ள தில்லியுடன் இணைக்கப்பட்டிருந்ததற்க்குப் பதிலாக அதைவிட குறைவான தொலைவில் உள்ள விஜயநகரத்துடன் மதுரை இணைக்கப்பட்டது. இசுலாமிய ஆள வந்தார்களுக்குப் பதில் வடுகர், தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியிலும், அடுத்து, அவர்களது ஆளுநர்களால் துவக்கப்பட்ட மதுரை, மைசூர், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களது பரம்பரை ஆட்சியிலும் ஏறக்குறைய முன்னுாறு ஆண்டுகள் தமிழகம் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டது.

இவர்களது ஆட்சியின் விளைவு என்ன என்பதைப் பற்றிய பலதிறப்பட்ட கருத்துக்கள், வரலாற்று ஆசிரியர்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவைகளில்,

"அந்த அரசின் செல்வமும் சிந்தனையும் ஆலயங்களாகவும் சிற்பங்களாகவும் வெளிப்படுத்தப்பட்டன. அத்த அரசு தனது முழுவளத்தையும் மக்களுக்குச் செலவிடச் சித்தமாக இருந்ததை அப்பொழுது நிறைவு செய்யப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் எண்ணிக்கையையும் இயல்பையும் கொண்டும், மனநிறைவு பெற்று மலர்ச்சியடைந்த மக்களைக் கொண்டும் உணரலாம்.” என்பது திருநெல்வேலி மாவட்ட மானுவல் நாலாசிரியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட்டின் கணிப்பு ஆகும்.[13] ஆனால் அவருக்கு காலத்தால் முற்பட்ட மதுரைச் சீமை வரலாற்று ஆசிரியர் நெல்சனோ

"நாயக்கர் ஆட்சியின் முடிவு மதுரைக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். காரணம் அந்த ஆட்சி எல்லாவிதமான முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தததுடன், பல திறப்பட்ட மக்களது - செல்வந்தர், ஏழை - உயர்ந்தவர் தாழ்ந் தவர் - ஆகிய அனைவருக்கும் உண்மையான மகிழ்ச்சியைத் தந்தது" என மிகவும் தெளிவாக தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.[14] நெல்லை மாவட்ட வரலாற்று ஆசிரியரான புனித தந்தை கால்ட்வெல்,

"மேலைநாட்டு நாகரிக முறைப்படி, அல்லது, நல்லது கெட்டிது என முடிவு செய்யப்படும் முறை அல்லது இந்து இசுலாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் கூட நாயக்க மன்னர்கள், தங்களது கடமையில் இருந்து நழுவியுள்ளனர் என்றே முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அவர்களது ஆட்சி, விபச்சாரம், பாதகங்கள், கொள்ளை, கொடுமைகள், கொலைகள், பொது மக்களுக்கு எதிரான செயல்களின் பட்டியலாக இழி செயல்களின் பதிவுகளுமாக இருந்தது. அர்ச்சகர்களுக்கும் ஆலயங்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கியதின் மூலம் அவர்களுக்கு சாதகமாக விளம்பரம் செய்யுமாறு செய்து பொதுமக்களை அவர்களது அக்கிரம ஆட்சியில் வாயடைத்துப் போகுமாறு செய்தனர்”. என தமது திருநெல்வேலி சீமை வரலாற்றில் கருத்து தெரிவித்துள்ளார்.[15]

இந்தகாலக்கட்டத்தில் வடுகர் ஆந்திரமாநிலத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் பெயர்ந்து வந்தனர். தமிழகத்தில் வேலூர், செஞ்சி, தஞ்சை மதுரை நாயக்க அரசுப்பகுதியில் நிலையாகக் குடியேறினர். ஆங்காங்கு அவர்களுக்கு பாளையப்பட்டுக்களில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் சிறுபான்மையரான அவர்களுக்கு சிறப்பான சலுகைகள் அளிக்கப்பட்டன அரசுப் பணிகளிலும் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. மொழி, கலை, பண்பாடு, இனம் ஆகியவைகளில் தம்மோடு இணக்கமுள்ள குடிகளுக்கு அந்த அரசு அரசியல் ஊக்குவிப்புகள் அளித்தது இயல்புதான்! ஆனால், எந்தக்குடி மக்களது நலனுக்காக கோலோச்சியதாக பெருமைப்பட்டார்களோ அந்தக் குடிமக்களது, தமிழர்களது மொழி, கலை ஆகிய முன்னேற்றத்திற்கு எவ்வித முனைப்பும் கொள்ளவில்லை என்பது வரலாறு, அவர்களது ஆட்சிக்காலங்கள் கி.பி. 1736 வரை இந்த அரசர்களது அவையில் எந்த தமிழ்ப்புலவர்களும் பாராட்டப்படவில்லை. இந்த நெஞ்சை நெருடும் நிலையை, "கனத்த சிராப்பள்ளிதனில் வடுகர் கூத்து கட்டியாளுவதாச்சு, தஞ்சாவூரோ, முனைத்த மராட்டிய காடு மிஞ்சிப் போச்சு ... ...” என்ற தனிப்பாடல் தெளிவாகச் சுட்டுகிறது.

  1. A. R. 642/1902 (திருக்களர்)
  2. Srinivasa Ayyangar Dr. S. -South India and her Mohammedan Invaders (1921) p. 123
  3. Elliot and Dows son-History of India - vol. III p. 219.
  4. Futa-hu-Saltin (Madras) p. 369, 70.
  5. S.A.O. Hussaini-History of Pandya Country (1962) p. 74
  6. Venkataramayya Dr. Journal of Madras University vol. XI-1 p. 44,47.
  7. Krishnaswamy Ayyangar South India and Her. Mohammedan Invaders 225-229.
  8. Journal of Madras University -Vol XI No : 1 P.56
  9. Hussaini Dr. S.A.O - History of Pandiya Country (1962) P. 194.
  10. Krishnasami Iyangar Dr. S — South India and her Mohammedan Invaders (1921) PP 167, 168.
  11. Madura Vijayam (Annamalai University Publication) 1957
  12. கமால் எஸ்.எம் தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு(1979) பக் 312
  13. Stuart A.J. — Tinnevely Manual (1928)
  14. Alexander Nelsonn-Manual of Madura Country (1868)
  15. Caldwell Fr. — Political and Physical History of Tirunelveli Dist.